Skip to main content

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 - நூல் அமைப்பு

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 -  நூல் அமைப்பு 



கீதையில் 18 அத்தியாயங்கள். இதில் ஒரு கட்டமைப்பு உள்ளது என்று இதற்க்கு உரை எழுதிய எல்லா முக்கியமான ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவது நூலைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். கீழே வருவது சித்பவானந்தர், நித்ய சைதன்ய யதி, குரு முனி பிரசாத் மற்றும் அவர் வழி வந்தவர்களின் உரைகளில் படித்தது.

சித்பவானந்தர் கீதை சொல்வதை ஞானயோகம் , பக்தியோகம் , கர்மயோகம்  என்ற மூன்றாய் வகுக்கலாம் என்கிறார். கீதை பறவை என்றால் ஞானயோகமும் பக்தியோகமும் அதன் இரு சிறகுகள். பறப்பதற்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் வாலும் ஆகும். ஒரு பட்டத்தின் வாலும் , கயிறும் போல. பறவையின் வாலே அதை நிலையாய் விண்ணில் பறக்க வைக்கிறது. அதன் பறக்கும் திசை அதை நம்பியே இருக்கிறது. ஞானமும், பக்தியும் சிறகுகளென்றால் , கர்மயோகமே அதன் வால். உலகில் ஆற்றும் செயலே கீதை என்ற பறவையின் வாலென்றாகும். எந்த ஒரு இடத்திலும் செயலை நிறுத்து என்று கீதை சொல்லவில்லை. யோகநிலையில் இருந்து தீவிரமாக செயலாற்றவே சொல்கிறது. இகத்துக்கும் , பரத்துக்கும் உரிய இடத்தை அளிக்கிறது. இவை ஒன்றோடொன்று முரண்படுவதாக எண்ணக்கூடாது. அத்தியாயங்கள் ஒரு சரியில் இருந்து மற்றொரு சரியை நோக்கியே பயணிக்கின்றனவே அன்றி , ஒன்றை ஒன்று தூக்கியோ இறக்கியோ பொருள் கொள்ளல் ஆகாது. 

நித்ய சைதன்ய யதி கீதையின் பதினெட்டு அத்தியாயங்கள் ஒரு வில் வடிவ பாலம்  போல் அமைத்திருப்பதாகச் சொல்கிறார். மேலே வானம், கீழே பூமி , இடையில் பதினெட்டு கம்பிகளால் இணைக்கப்பட்ட அரைவளையம் . இதை ஒரு கணித வரைபடமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். கிடைமட்ட X  அச்சு  அன்றாட உலகத்தைக் குறிக்கிறது. செங்குத்தான Y  அச்சு முழு அறிவைக் குறிக்கிறது. முதல் அத்தியாயம்  உலகியல் புள்ளியில் (இதை 1,1 என்று கொள்ளலாம், ஒரு வசதிக்காக ) ஊன்றி நிற்கிறது. இது அர்ஜுன விஷாத யோகம், அவனது உலகியல் பிரச்சனைகளை பேசுகிறது. அடுத்து வரும் சாங்கிய யோகம் உலகியலில் இருந்து அறிவு நோக்கி மெதுவாக நகர்கிறது (2,2). மேல்நோக்கி முதல்படி. இங்கு முதல் பாதியில் உலகியலில் இருந்து கேள்விகளுக்கு விடை சொல்லப் படுகிறது. இருமைகளைத் தாண்டி முழுமையென்னும் யோகம் நோக்கி அர்ஜுனனை கிருஷ்ணன் நகர்த்துகிறார். இவ்வாறு பின்வரும்  ஒவ்வொரு அத்தியாயமும் தூய அறிவு நோக்கி ஒரு ஒரு புள்ளியாய் மேலே ஏறுகிறது. 


 


ஒன்பதாவதும் , பத்தாவதும் ஆன அத்தியாயங்கள் இதன் இரு உச்சப் புள்ளிகள். என்றும் அழியாததும் , எல்லாமாய் இருப்பதும், புலன்களால் அறிய முடியாததும், யாராலும் விளக்க முடியாததுமான பர ஞானம் சொல்லப்படுகிறது. இது யாவருக்கும் உரியது. இங்குள்ள எல்லா உயிர்களும் பிரம்மத்திலேயே தோன்றி அதிலேயே மறைந்து பின் மீண்டும் தோன்றுகின்றன. பிரக்ருதியில் இருந்து சுதந்திரம் இல்லாத இவ்வுயிர்களை தாமே மீண்டும் மீண்டும் படைப்பதாக பிரம்மமே சொல்வதாக உள்ளது. தாமே தாய், தந்தை , பாட்டன் , மழை , வெய்யில், அழுக்கு , தூய்மை, நால் வேதம், சாகாமை , சாவு , உண்மை, தோற்றம் எல்லாம். யாரை வணங்கினாலும் தம்மையே வணங்குகிறார்கள். பத்தாவது அத்தியாயம் விபூதி யோகம். விபூதி என்ற சொல்லுக்கு வெளிப்பாடு என்று பொருள். தான் ஒவ்வொரு உயிரிலும் எவ்வாறு வெளிப்படுவதாக இங்கு சொல்கிறார். பிரம்மா முதல் எல்லாக் கடவுளும் தனது வெளிப்பாடே என்கிறார். அவையும் பிரளயத்தில் தோன்றி மறையும். உயிர்களில் உள்ள எல்லா குணங்களும் தம் குணங்களே. மலைகளில் மேரு, பாம்புகளில் வாசுகி, பசுக்களில் காமதேனு, யானைகளில் ஐராவதம், முனிவருள் கபிலன், மக்களுள் அரசன். ஆகவே பிரம்மமே உயர்ந்த இருப்பிடம்.

பதினோராவது அத்தியாயத்திலிருந்து மீண்டும் கீழ் நோக்கி இறங்குகிறது. முதல் பாதியை கீதையின் தியரி என்று சொன்னால், இரண்டாவது பாதியை applied தியரி என்று சொல்லலாம். விஸ்வரூப யோகத்தில் தானும், தன் எதிரிகளும் மற்ற உலகின் உயிர்கள் எல்லாம் ஒரே உடம்பில் தெரியும் விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனன் காண்கிறான்.  இது ஒரு முக்கியமான இடம் என்றே நினைக்கிறேன். பிரம்மத்தை மனதில்  கற்பனை செய்ய ஒரு பிரம்மாண்ட உருவமே சிறந்தது. ஒரு திரட்சி  மீனின் வயிற்றில் இருக்கும் பல்லாயிரம் சிறு மீன்கள் போல. அன்று ஒரு காணொளியில்  வெள்ளை அணுக்கள், உடலில் புகுந்த வைரஸ்களை சேர்ந்து விரட்டும் காட்சியை கண்டேன். 1000x ஜூம் செய்யப்பட்டது, ஆனால் இன்று மத்திய ஆசியாவில் நடக்கும் போரை 1000x ஜூம் அவுட் செய்து விண்ணில் இருந்து பார்த்தாலும் அவ்வாறே இருக்கும். ஒன்று நம் உடலில் மற்றொன்று பூமியின் உடலில். 


அடுத்த அத்தியாயங்களில் பிரம்மத்தை அடையும் வழிகள் சொல்லப்படுகின்றன. அருவமான அதை , ஒரு  உருவம் வைத்து மனதில் கொண்டு வரும் பக்தியும் தியானமும் சொல்லப்படுகின்றன. தனக்குள்ளும் இருக்கும் பிரம்மத்தை அறிதல் பற்றி உரைக்கப்படுகிறது. உடல் மற்றும் அதனுள் உறையும் உடலறிபவன் , இரண்டும் கண்ணாடியும் அதன் பிரதிபலிப்புமேயாகும்.

14-17 அத்தியாயங்கள் கபிலர் இயற்றிய சாங்கியத்தை விளக்குவதாக அமைந்துள்ளன. முக்குணங்கள் எவ்வாறு தோன்றின, அவை உயிரில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன, அவற்றால் வரும் சிக்கல்கள், துன்பங்கள் , அவற்றை ஒடுக்கி, பழக்கி மேம்படுத்தும் வழிகள் சொல்லப்படுகின்றன . அந்தக்கரணங்கள், மனதை அறியும் வழிகள் , உணவு, நல்ல மற்றும் அலைக்கழிக்கும் குணங்கள் என்னென்ன என்று வருகிறது.

பதினெட்டாவது அத்தியாயம் , கிருஷ்ணன் இதுவரை சொன்னதையெல்லாம் , மீண்டும் ஒருமுறை சுருங்கச் சொல்கிறார். மேற்கொண்டு மனதில் பட்டதை செய்யச் சொல்கிறார். அர்ஜுனன்  தன் மயக்கம் தீர்ந்தது , ஐயங்கள் அகன்றன. அவர் சொல்லியவிதம் செய்வதாக சொல்ல முடிகிறது.        

ஆக இந்த வரைபடம் மேலேறி திரும்பவும் கீழே இறங்குகிறது. இதைப் போல நமது அன்றாடமும் உலகியலுக்கும் , முழு அறிவுக்கும் நடுவே நிகழும் இடைவிடாத சமரசப் போராட்டமே. க்ராபில் மேலே இருப்பது உத்தமம், ஆனால் செயலால், புலன்களால் வரைபடத்தின் கீழே இழுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். கீழே வராமல் பூமியில் நல்வாழ்வு இல்லை. மேலே இருக்கும்தோறும் கவலை இல்லை. இடைவிடாமல் ஒரு நாளில் இரண்டையும் இணைக்கும் சமரசப்புள்ளியில் இருப்பதே உத்தமம். ரயிலின் மேல் பர்த் போல, வேலை முடிந்ததும் மீண்டும் மேலே ஏறிவிடுவது போல; மேல் சீட்டிலும் கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சுத்த அறிவே சிவம்.
 
மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனை அறிவு என்று சொல்கிறார். மெய்ஞ்ஞானமும் அவனே; (பொய்யானவையெல்லாம்) தோற்றமாய் தெரிவதும் அவனே; அறியாமையைப் போக்கும் அறிவும் அவனே; 

"வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே"

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...