Skip to main content

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க !



கடந்த வார இறுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  மணிக்கணக்காய் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்தேன். வெள்ளிக்கிழமை பார்த்ததும் துணி கிழிவது தெரிந்துவிட்டது. வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். மீண்டும் மதியம் மூன்று மணி அளவில் ஆஸ்திரேலியா நுனியில் தொங்கிக்கொண்டிருந்தது. 

இது இரண்டுக்கும் இடைவெளியில் பண்டிட்டுகள் ட்வீட் விட ஆரம்பித்தார்கள். பும்ரா முதலில் கிழிந்தார். ஒரு கேப்டன்  முன்பொருமுறை மைக்குக்கு முன் வந்து டீமில் யார் உள்ளே யார்  வெளியே என்று சொல்லுமிடத்தில் பெயர் மறந்து போய் , கால்ச்சட்டைப் பையில் இருந்து பேப்பரை உருவி , பெயரைச் சொன்னார். இதை அசட்டை என்று சொல்லலாம். IPL டீமில் கேப்டன்களுக்கு எல்லார் பெயரும் தெரிய நியாயம் இல்லை. ஒரு ஊரே டீமில் இருக்கும்போது என்ன செய்ய முடியும். இதைப் போல் மறந்து போய் பும்ரா பேட்டிங் எடுத்து விட்டாரா தெரிய வில்லை. கடைசி நேரத்தில் வார்த்தை மாறி வந்து விழுந்து விட்டதா? வண்டி பழகிக்கொண்டு இருக்கும் போது ' ரோட்ல , டிவைடர் இருக்கு பாத்து'என்பார்கள் . நாம் அறியாமல் நம் வண்டி அங்கேயே செல்லும். சிலர் அதை முடிவில் இடித்து விடுவதும் உண்டு.   அப்படித்தான் பேட்டிங் எடுத்தாரோ என நினைத்தேன். முதல் முறை கேப்டன் வேறு. பிட்ச் நெல் வயலில் நடுவில் தெரியும் வரப்பு போல் இருந்தது. வரப்பு தான் , நடக்கலாம் தான் , ஆனால் கால் பழக்கம் வேண்டும். ஒரு கால் அந்தப்பக்கமோ இல்லை இந்தப் பக்கமோ போய் விழுந்தால் , மீண்டும் எழுந்து வரப்பில் ஏறி சமாளிக்கலாம். ஒரே நேரம் இரண்டு காலும் நீர் வரப்பில் சறுக்கினால் என்ன ஆவது?  பல கால்கள் வழுக்கி, மூலாதாரங்கள் அடி வாங்கிக்கொண்டிருந்தன. 

பாவமாய் இருந்தது, பல 'காரியர்கள்' முடிந்து விடும் என்று சொன்னார்கள். இதற்க்கு சில வாரங்கள் முன்னால் இந்தியாவில் இருந்து போன நியூஸிலாந்துக்காரர்கள் திரும்பி வந்து கோச் முதல் கேப்டன் வரை எல்லோரையும் கேள்விக்குறியாக்கி விட்டுச் சென்றார்கள். பல வருடங்கள் முன் என்னுடைய ஐரோப்பிய மேலாளர் , இந்தியர்களுக்கு எதிரி IUS (Indians in  US) என்று வேடிக்கைகையாகச்   சொன்னார். இது கிரிக்கெட்டில் வரும் காலத்தில் உலகமெங்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.  மூன்று நான்கு புதுமுகங்கள் வேறு. பாவம் படிக்கல் என்று நினைத்தேன்.

வழக்கம் போல கே எல்  ராகுல் லைப் லைன் வாங்கிவிட்டது முதல் இன்னிங்சிலேயே தெரிந்து விட்டது. கடைசி வரை மட்டையை பந்துக்கு காட்டவே இல்லை. எங்கே வடிவேலு வீச்சு அரிவாள் போல சட்டைக்குப் பின் சொருகி விட்டு , கை இரண்டும் பின்னால் கட்டி , நெஞ்சு நிமிர்த்தி  நின்று விடுவாரோ என்று நினைத்தேன். பந்தை மைக்ரோ செகண்ட் , நானோ செகண்டுகளுக்கு ஜட்ஜ் செய்து கடைசியில் கீப்பருக்கு விட்டார். நீங்கள் குறைந்த ரேட்டிங் குடுத்து PIP (Performance Improvement Plan ) போட்டாலும் , PIP ஆடத் தெரிந்தவர் வேலையை தக்க வைத்து விடுகிறார். கூட்டமாய் இருக்கும் பஸ்சில் படிக்கட்டு விளிம்பில் தொங்கிச் செல்வது சிலருக்கு த்ரில். அது போல கே.எல். ராகுல்,  படியில் தொங்க எப்போதும் கூட்டமான பஸ்ஸுக்கு காத்து இருப்பாரோ என்று தோன்றுகிறது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட்  போட்டி நடந்தால் பார்ப்பவரை உள்ளே இழுத்து விடுகிறது. படம் பளிச்சென்று தெரிகிறது. முன்பிலிருந்தே இப்படித்தான். 1992 உலகக் கோப்பையின் போது காலை 3 மணிக்கு ஒரு சில போட்டிகள் துவங்கும். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். எப்போதும் படிக்கிற பையன் கிரிக்கெட் நீண்ட நேரம் பார்க்க முடியாது. மூன்று மணிக்கு எழுந்து டிவி போடுவேன். போட்ட அடுத்த நொடியில் சத்தமில்லாமல் செய்வேன். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒளிப் பிரகாசம் என்பது தனி. சூரியன் முதலில் உதிக்கும் இடம் அல்லவா ? நம் கண்ணையும்  ஊடுருவி, தூங்கும் அப்பாவின் பிடரி வழியே கண்ணைத் தொடும். வேறு வழி கிடையாது. கொஞ்சம் அணைத்து குறட்டை ஒலி கேட்டதும் மறுபடி போட்டுக் கொள்வேன். நம் ஊரில் நடக்கும் போட்டிகளில் இந்த மாதிரி வெளிச்சம், தூய வானம் தெரிவதே இல்லை. 

இவர்கள் போடும் ரன்னிங் கமெண்டரியும் தனி. அப்போதெல்லாம் டெட் கார்பெட், ஹென்றி ப்ளோபெல்டு , ரிச்சி பானட், இயன் சேப்பல் ,கவாஸ்கர்  போன்றவர்கள். இப்போது மைக்கேல் வாகன், மார்க் நிகோலஸ் , மஞ்சரேக்கர், மாத்தியூ ஹெயிடன், பாண்டிங்  போன்றவர்கள் இருக்கிறார்கள்.  சுடச் சுட விளையாடி முடித்தவர்களும், நம்மவர்கள், வருகிறார்கள். 

பள்ளிக்கூடத்தில் நோட்டுப் புத்தகத்தில் எழுதும் போது சிக்கனம் பிடித்தால்  வாத்தியார்கள் 'நோட்டுல இப்புடி நுணுக்கினா எப்படி படிக்கிறது ? ' என்பார்கள். இந்த நுணுக்கம் இப்போது மைக்ரோ , நானோவெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. படிக்கல் அவுட் ஆகும்போது அவர் இடது முன்கால் தூக்கி , பின்கால் மட்டும் தரையில் படுவதே காரணம் என்று பேசிக் கொண்டார்கள். பிட்ச்சில் எங்கோ இருந்த விரிசல்களை திரையில் பிரம்மாண்டமாய் ஆக்கி , எல்லா நாட்களும் பேட்டிங் சிரமம் என்றார்கள். பிரண்ட் புட் இரண்டு முறை வந்தால், பாக் புட் போக வேண்டும் என்றனர். பின்னால் நின்றால் முன்னால் வரவே இல்லை என்று பேசினார்கள். டாஸ் ஜெயித்தால் என்ன செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் கூறினர். யாரைத் தேர்வு செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டனர். இதில் எல்லோரும் போக்குக்கு தகுந்தவாறே பதில் சொல்வார்கள். அப்போது ஜெயிக்கும் பக்கம் சேர்ந்து கொள்வது.

இதனிடையில் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாய் இருந்தது. ரோட்டில் கிராஸ் செய்ய ஆரம்பித்து நடுவில் வண்டிகளுக்கு இடையில்  மாட்டி விடும் சிலர், குறிப்பாய் தாய்மார்கள் , நாம் அவர்களை மோதி விடுவது உறுதியாய்த் தெரிந்தாலும் , அதுவரை நம்மையும், நம் வண்டியையும் பார்த்தவர்கள், சடக்கென்று வேறு  எங்கோ அல்லது எதிர்பக்கம் பார்க்க ஆரம்பித்து, இன்னும் வேகமாய் நடப்பார்கள். இந்த இடத்தில் அவர்களை இடிக்கக் கூடாத, அல்லது இடிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் வந்து விடுகிறது. நீங்களாய் பார்த்துச் செய்ய வேண்டும். பௌலரும் இப்படித்தான். வெளியில் ஓங்கி அடிக்கும் நோக்கம் தெரிந்தாலும், உள்முயற்சி இப்பவோ எப்பவோ என்பது உறுதி. பாதி வழி  சென்றபின் நமக்கு என்ன ஆகப் போகிறது.

இதன் நடுவில் என் பையனுக்கு டெஸ்ட் மேட்ச் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டியதாயிற்று. கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. 'ரெண்டு T20 மேட்ச் தொடர்ந்தா' என்று கேட்டான். 'இல்லப்பா , அஞ்சு நாளு மொத்தம்...ரெண்டு தடவ பேட்டிங்..விளாடி  முடிச்சி நாலு அஞ்சு நாள் கடைசில ரன்னு கணக்கு பார்க்கணும்..அப்புறமா யாரு ஜெயிச்சாங்கன்னு தெரியும் '  

'ப்ராக்கெட்ல இருக்குறது ரன்னா ...இல்ல பாலா?..'T20 ல இடம்  மாறி இருக்கும் ' என்று அவனாய்ச் சொன்னான்.

'இல்லப்பா இதுல வேகமா விளையாடக் கூடாதுப்பா.. அப்புறம் அஞ்சு நாள் என்ன பண்றது'

'...'

'ஸ்லோ சைக்கிளிங் மாதிரிப்பா ' என்று சொல்லிப் பார்த்தேன்.  

'ஸ்லோ சைக்கிளிங்னா என்னப்பா..?' எனக்கு இதை விளக்குவது இன்னும் சிக்கலாய் தோன்றியது.

'யாரு கால தரையில ஊனாம கடைசியில போறாங்களோ அவங்க வின்னர் ' என்றேன். 

'ஸ்லோவா போறவன் ஏம்ப்பா ஜெயிக்கணும் ?' 

'வண்டில போகாம நடந்து போற மாதிரி... ... இது மாரத்தான்...ஸ்ப்ரின்ட் இல்ல ... '

'...'

'நேரந்தான் இதுல விளையாட்டுப்பா...நேரத்த ஜெயிக்கிறதுக்கு நேரத்த நினைக்கவே கூடாதுப்பா...அடுத்த பந்து ஒண்ணுதான் கணக்கு   ' என்று எதோ சொன்னேன். எனக்கு மேற்கொண்டு சொல்லத் தெரியவில்லை.

அடுத்த நாள் கே எல் ராகுலும் ஜெய்ஸ்வாலும் இணைந்து கால சம்ஹார மூர்த்திகள் ஆகினர். அந்தப் பக்கம் இருந்து வந்த எந்தக் கணையும் எடுபடவில்லை. வர்ணனையாளர்கள் இதற்க்கு முன் பிட்ச் இவ்வாறு போக்கு மாறியதில்லை என்றனர். டாஸும் , ஆள் தேர்வும் சரியாய்ப் போனது. 50கள் , 100கள் மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டு , இன்னும் ஆழம் ஆழம் என்று போய் ரெகார்டுகள் ஆகின.

மீண்டும் பையன்  ஓடிவந்து IPL-ல்  ஷ்ரேயஸ் அய்யர் 27 கோடிக்கு ஏலம் போனதாகச் சொன்னான். அம்மா உள்ளே  இருந்து 'என்னது , இருவத்தேழு லட்சமா , யாருக்கு ' என்றார். இவர் உள்ளே சென்று பிழையை கூறி திருத்திவிட்டு வந்தார். இன்னும் யார் யாரோ இடம் மாறினார்கள், இன்னும் கோடிகள் புரண்டன. இவர் வந்து சொல்லிக்கொண்டே இருந்தார்.

மாட்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு ' இப்ப இதவிட்டாச்சு... இனிமே நாளைக்கு இந்நேரம் தான் அடுத்த வண்டி' என்று அங்கங்கே பெஞ்சுகளில் உட்கார படுக்க துண்டை விரிக்க ஆரம்பித்தனர். லாபுச்சான்(?) வேகப் பந்து வீசினார். ஒரு வழியாய் அடுத்த நாள் வண்டி வந்தது. 
   
நாள் இறுதியில் பும்ரா உள்ளே இருந்தார். ஒரு ரெண்டு மூணு பேரை இறக்கினால் வண்டி மேற்கொண்டு போகும் என்றார். வேறு வழி இல்லை. முன்பு ஒரு முறை மக்ராத் பௌன்சருக்கு சச்சின் டெண்டுல்கர் குனியப் போக, (ஏறத்தாழ கண்ணை மூடி படுக்கப் போய் என்று சொல்ல வேண்டும்), பந்து எழும்பாமல் கீழே படுத்தவரின் மேல் விழுந்தது. LBW கேட்டார்கள், நடுவர் ஸ்டீவ் பாக்னர் அவுட் கொடுத்தார். நம்மவர்கள் தோளில் விழுந்தால் LBW இல்லை என்று வாதிட்டனர்.  இதைப்போல இப்போது பும்ரா போட்டால் வேகமாய் உருட்டி விடுவது போல் பாவனை செய்து காலில் அடிவாங்குகிறார்கள். பௌலிங் மெஷினில் இருந்து பந்து துப்புவது போல் தெறித்து விழுந்து கொண்டே இருந்தது. பம்புசெட்டில் முதலில் தண்ணீர் வெளியே வரும்போது, வெளியூரில் இருந்து வரும் , முன்பின் பம்புசெட்டைப் பார்க்காதவர்கள் முதலில் திணறிப் போவார்கள். அப்படித்தான் இருந்தது. முதலில் செய்ய வேண்டியது , துண்டை இறுக்கிப் பிடித்துக் கொள்வது. போகப் போக பிடிபட்டது, ஆனால் குளிக்கவும் துவைக்கவும் முடியாமல் போனது.

பையன் திரும்ப வந்தான். 

'இந்தியா ஜெயிச்சுரும்பா'.  
'ஆமாம்பா'
'பும்ரா , T20 லயும் இருக்கார்...டெஸ்ட்லயும் இருக்கார்'
'ஆமாம்பா...ரெண்டும் விளையாட்டுதான்ப்பா..அவர் விளையாட பொறந்தவருப்பா'

இந்த நிலையில் ஆண்டர்சன் IPL ஆடுகிறார் என்று வந்தது. 42 வயது. கொஞ்ச நாள் முன்னர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பெயர்  BOWL  SLEEP REPEAT. ஆமாம் அதைத்தான் செய்ய வந்திருக்கிறார்.

" எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
 தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.  "  தி-மூ

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...