பின் பார்த்த கண்ணாடி
மது இவனிடம் இதை இப்போது மூன்று தினங்களாய் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாள். இவன் ஏனோ அதைச் செய்யாமல் ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தான். மதுவின் பின்னால் இருந்து அவளுடைய ஒன்றுவிட்ட அக்காவுடைய துரத்தல் அவளுக்கு. காலையும் மாலையும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆயிற்று என்று கேட்கிறாள். அக்கணத்தில் அவளுக்கு அழைப்பு மீண்டும் வந்திருந்தது.
இவனுக்கிருந்த தயக்கம் பாலாஜியிடம் பேசியே பல வருடங்கள் ஆகியிருந்தன. இவனும் அவனும் பன்னிரண்டாவது வகுப்பில் சேர்ந்து படித்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இவனது கிழக்கிலிருந்து மூன்றாவது, அவனது வீடு மேற்கிலிருந்து முதலாவது. நினைவில் இருப்பதெல்லாம் அவனுடைய பதின் பருவத்து முகம் மட்டுமே. இப்போது அவன் முகம் எப்படி இருக்கும் என்று இவனுக்கு கற்பனை செய்ய முடியவில்லை. அப்போதே பாலாஜி சற்றுக் கூனியே நடப்பான். ஒரு கித்தான் பையில் புத்தகங்கள், மஞ்சப்பையில் இரண்டடுக்கு டிப்பன் கேரியர். இரண்டடுக்கு கேரியர் திறந்து நடுவில் கிடையாய் கிடக்கும் கரண்டி பூட்டைக் கழற்றி சாப்பிடுவான். இவனைப் போலன்றி தினமும் இரண்டு வகை உண்வு, இரண்டுக்கும் மேல் தனித் தனியாய் தொடுகை இருக்கும்.
'என்னங்க, இன்னிக்காவது இந்த வேலையைச் செய்யக்கூடாதா?' மது போனை கேட் செய்து நேரே வந்தாள்.இனிமேல் கஷ்டம்.
'சரி, போன எடு' .
'இந்த பொண்ணுக்கும், என்னோட பிரண்டுக்கும் என்ன ரிலேஷன்?'
'அவரோட அண்ணன் ஒய்ப்க்கு , அக்காவோட முதல் பொண்ணு'
'இந்தப் பையன் யாரு, என்ன வேலை'
'ஒன்னு விட்ட அக்காவோட எங்கயோ சொந்தம், பையன் பயோ கான் ல ரெசெர்ச் என்ஜினீயர்'
மனதில் ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு தொலைபேசியில் எண்ணைத் தேடினான். இதைப் போலவே என்றோ ஒரு நாள், எதோ ஒரு பேச்சில் , நினைவாய் நழுவிக்கொண்டிருக்கும் மற்றொருவர் தொடர்பில் இருந்து அவனுடைய தொலைபேசி எண்ணை வாங்கியிருந்தான். கையால் எழுதியிருந்தால் முகவரி தொலைக்கலாம், எழுத்து நீர் பட்டு அழியலாம், புத்தகத்தை செல் அரிக்கலாம் . தொலைபேசி முகவரி எளிதில் தொலைப்பதில்லை. இந்த வாய்ப்பை விட்டால், இதுவும் சில எழுத்தாய் , உதிரி நினைவாய் சுருங்கி விடலாம்.
முதல் இரண்டு ரிங்கிலேயே போன் மறுமுனையில் எடுக்கப்பட்டது. மாறாக இவன் நினைத்தது மிஸ்ட் கால் ஆகும் என்றுதான் .
'பேசுறது யாருன்னு தெரியுதாப்பா?' இவன் ஆரம்பித்தான்.
ஒரு நொடி மௌனத்தின் பின் , 'ரவி , உன் குரலை கண்டுபிடிக்க மாட்டேனா ' என்றான். இவனுக்கு ஆச்சரியம். அவன் ட்ரு காலர் வைத்து பார்த்துவிட்டு சொல்லும் வகையில்லை. மேலும் இவன் பெயர் ட்ரு காலரில் ரவியென்று வருவதில்லை. அலுவலகப் பெயரே வரும். இவனுக்கு அவனுடைய குரல் அதே பழைய குரல், அவனுடைய அப்பாவின் குரல். ஆனால் மிக சன்னமாய் ஒலித்தது. அவன் அப்பா இறந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. அம்மாவும் காலமாகியிருந்தார்கள்.இருவரும் ஆசிரியர்கள் .அவனும் அவன் அண்ணனும் தான் இப்போது.
அப்போதைய முதல் கல்வி பாலி டெக்னிக் என்று இருந்த காலம். முதல் மாணவர்கள் எப்போதும் அங்கேயே செல்வார்கள். இரண்டாம் வருடத்தில் உறை போட்ட துப்பாக்கி போன்று ஒன்றை தினமும் எடுத்துச் செல்வார்கள். சிவில் என்ஜினீயர்கள் மொட்டை வெய்யிலில் ரோட்டில் ஒரு உயர்ந்த முக்காலியை வைத்து அடிக்கடி ஒரு கண்ணால் பார்த்து நாள் முழுதும் நோட்டில் குறித்தபடி இருப்பார்கள். மூன்று வருட முடிவில் பெரும்பாலும் எல்லோரும் வேலையில் இருப்பார்கள். சிலர் நேரே சில வருடங்கள் வேலை பார்த்து இன்ஜினியரிங் ரெண்டாம் வருடம் நுழைவார்கள். வேலை பார்ப்பவர்கள் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் வந்துவிடும். பர்ஸ் வாங்கிவிடுவார்கள். ரப்பர் செருப்பு மாறி தோல் செருப்பு வந்துவிடும். நிறைய நைட் ஷோ சினிமா போவார்கள். பாலாஜியும் இந்த வழியே வந்தவன் தான். பி.இ எலக்ட்ரிகல் என்ஜினீயர். ஊரிலேயே வேலை பார்த்தான் என்றுதான் சொன்னார்கள்.
இவன் படிப்பில் பின் தங்கி மேல் படிப்பு நுழைய வேண்டியதாகியது. திட்டம் போட்டு செய்தான் என்று எதையும் சொல்வதற்கில்லை. அதுவாய் நடந்தது. புதுயுகத்தின் விளிம்பில் , விதியின் வசமாய் சென்னையில் நுழைந்த லட்சோப லட்சம் பேர்களில் இவனும் ஒருவன். பின்னர் இங்கிலிஷ் பேப்பரும் , வாய்ப்பாடும் படித்தவர்களுக்கெல்லாம் ஒரு யோகம் வந்தது. அந்த சந்தியில் இவன் சரியாக அங்கே இருந்தான். ஆனால் அவனோ முந்தைய யுகத்தின் உச்சியில் தான் நின்று கொண்டிருந்தான். யுகம் நகர்ந்தால் யார் தான் என்ன செய்வது? ஆனால் மனிதர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் தாவ முடியுமா? எதாவது சரியான துருப்புச் சீட்டு இருக்கிறதா? ஏன் கையில் இல்லாதது வேண்டியிருக்கிறது?. தெரியவில்லை.
'குரலக் கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சுப்பா, நீ எங்க மெட்ராசில்ல? எத்தனை குழந்தைங்க?'
'ஆமாப்பா , பதினைஞ்சு வருஷம் மேல ஆச்சு, ஒரு பொண்ணு ஒரு பையன், ஏழாவது ஒன்னு, நாலாவது ஒன்னு. ' - இவன் அவனை அந்த நீண்ட பழைய வீட்டின் , சுவரில் முதுகு சாய்த்து, வேட்டியை உள்மடித்து, உட்கார்ந்து பேசுவதாய் கற்பனை செய்துகொண்டான்.
தயக்கத்திற்குப் பின் கேட்டு விட்டான்.
'நீ ராஜபாளையம் மில்ஸ்-ல தான் இல்ல?'
'ஒரு காலத்தில ஆமா ..இப்போ வேலைய விட்டுட்டேன் ரவி..'
'அப்போ..'
'ஒரு பிள்ளையார் கோவில் கைல இருக்கு...தினமும் ரெண்டு வேள திறந்து வச்சு மணியடிக்கணும்...தாத்தா தொட்டு விட்ட பாக்கி...எனக்கும் வேண்டிருக்கு...வீட்ட விட்டுக் கொஞ்ச நேரம் பிச்சிட்டு வந்திறலாம் பாரு... '
என்ன கிடைக்கும் என்று இவன் கேட்க நினைத்தான்.
'பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கிற கோவில் இல்ல?'
'மேல் கொண்டு ஜோசியம் படிச்சேன்..ஊர்ல எல்லாருக்கும் நாள் கிழமைன்னா நம்ம தான்...நிறைய ஆளுங்க நம்மட்டதான் ஜாதகம் பார்ப்பாங்க..'
ஜோசியம் பார்ப்பவனாக அவனை இவனுக்கு கற்பனை செய்ய முடியவில்லை. அவனால் சிரிக்காமல் இருக்க முடியாது. யாரோ ஒருவரிடம் சிரித்தாலும் எல்லாம் போய்விடுமே.
'ஊர்ல நம்ம செட்ல நீ மட்டுந்தான் இப்ப இல்ல?'
'மத்த எல்லாம் வந்தா வருவாங்க...நீ இப்பக்குள்ள வரல இல்ல...போன் பண்ணது சந்தோசம்...எவ்வளவு சேட்டைகள் செஞ்ச நாட்கள்..எப்பவாவது நினைப்பேன்...காத்திருக்க நேரமில்லை படம் ஒனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..'
அன்றெல்லாம் வார நாட்களில் காலை ஷோ பொதுவாய் யாரும் பார்க்க மாட்டார்கள். உள்ளே வெளியூர் வியாபாரிகள் போன்று பொழுதை வலுக்கட்டாயமாக போக்குபவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவனும் இதில் ஏற்கனவே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். டிக்கெட் கொடுப்பவர் அடையாளம் கண்டு கொண்டார். சரியாய் அதே சீட்டில் அமர்வான். ரொம்பப் பின்னால சீட்டுகள் கிழிந்திருக்கும் என்பான். உடனே கொண்டுவந்த காலை உணவை உண்பான். அன்று ரவை உப்புமா.
'சிவரஞ்சனி கார்த்திக் டூயட் பாட்டு ஒன்னு வரும்...அப்ப மட்டும் என்ன எழுப்பு...நீ பாரு..படம் நல்லா இருக்கும்'.
அன்று சனிக்கிழமை , அரை நாளே பள்ளி. இல்லையென்றால் இன்னொரு ஷோ பார்த்தால் தான் ஆறு மணி ஆகும் என்றான்.
'வீட்ல எப்படிப்பா சமாளிப்ப?'
'அம்மா பிரச்சினையில்ல...அப்பா வைவாரு கவலையில்லை...அண்ணன்தான் பிரச்சனை..அடிப்பான், வலிக்கும்..பல்ல கடிச்சுக்கிடுவேன் ..நமக்கு ஒரு நாள் வரும்ல...'

Comments
Post a Comment