அடிக்கடி காய்கறிக் கடைகளுக்குப் போகும்போது பில் போட கடைக்குப் புதிதாக வேலைக்கு வந்துள்ள மாணவிகளிடம் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. இன்று அப்படி ஆனது. நம்மைப் போல் ஒருவனை கடவுள் கண்டுபிடித்துக் கருணையுடன் அவர்கள் வழி அனுப்புகிறான் என்று எடுத்துக் கொள்கிறேன். ஒரு வெள்ளைக் கோட்டை மாட்டியிருந்தார். மொத்தம் நாலு பேர் உள்ள பில் கவுண்டர். எல்லாம் இளம்பெண்கள் , இவர் மூணாவது மெஷினை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரும் பில்லை அடித்துத் தள்ளினார்கள். .
நான் இந்த இடம் தேடி இப்போதெல்லாம் வருவதன் காரணம் நாளிதழில் வந்துகொண்டே இருக்கும் முழுப்பக்க விளம்பரம். இதைப் போலிருக்கும் வேறு கடைகளில் தனியாய் ஒருவர் நிறுப்பதற்கென்றே போட்டிருப்பார்கள். அவர் அதில் நிபுணர். காய்கறிகளை அதில் ஒவ்வொன்றாய் வைத்து , அதற்குள்ள எண்ணை நினைவில் கொண்டு வந்து , அதை அழுத்த வேண்டும். மெஷினுக்கு அந்தக் காய் என்பது அந்த நம்பர் தான் . ஒரு இடத்தில் நிறுத்து நிறுத்து அவர் கைகளே எண்ணை வரவழைக்கும். சில சமயம் வீட்டிலிருக்கும் அவரை போன் போட்டு முதலாளி நம்பர் கேட்பார்.
எனக்கு ஒரு நொடியில் இவர் தோதுப் பட மாட்டார் என்று தோன்றியது. என்னிடம் ஒரு கொஞ்சம் பெரிய ஷாப்பர் அளவுப் பை நிறைய காய்கறி இருந்தது. பையை இழுத்து அடுத்த இடம் போலாமா என்று கையை வைத்தேன். மெல்லியதாய் எதிரில் பிடித்து இழுத்து மறுத்தார்.
மூன்றாவதாக இருக்கும் இவருக்கு மூன்று சிக்கல்கள். ஒன்று கம்ப்யூட்டர், இரண்டு காய்கறிக்குள்ள உள்ளீட்டு எண், மூன்றாவது காய்கறிகளுக்குள்ள ஆங்கிலப் பெயர். செர்ரி டொமட்டோவை தூக்கி 'அக்கா நம்பர் ஏனு ?' என்றார். இரண்டு அக்காக்கள் இரண்டு வேறு நம்பர் சொன்னார்கள். முதலில் போட்ட நம்பர் உள்ளே இல்லை என்று தப்பு காட்டியது. கான்செல் அழுத்தாமல் போகாது. இவர் தொடுதிரையில் அதன் பின்னால் உள்ள அட்டவணையை அழுத்திய வண்ணம் இருந்தார். அது அதிர்ந்து கோபத்தை வெளிப்படுத்தியது. 'கான்செல் பிரஸ் மாடி' என்றேன். பின்னர் கொய்யாப்பழம் கண்டுபிடிக்க வேண்டும், நம்பர் கேட்டு உள்ளே அடித்தார். 421 கிராம் என்று எடைமுள் காட்டியது. இவர் அதே 421 ஐ உள்ளே அழுத்தினார். கணக்கிட்டுத் தெரிந்த கொய்யாப் பழ விலையைப் பார்த்து என் இதயம் அதிர்ந்தது - 41,679 . அது புள்ளி 421, முதலில் ஒரு புள்ளி வைக்கச் சொன்னேன். எனக்கும் சிலவற்றின் ஆங்கிலப் பெயர் தெரியவில்லை. பாதி வெட்டிய கருணைக் கிழங்கு மல்லாந்து படுத்து என்னைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது. அதனருகில் பூச்செண்டு போல் ஒன்று கட்டிக் கிடந்தது. பெயர் நினைவில் வரவில்லை , ஆம் லெட்டூஸ். அதன் பின் நீண்ட கத்தரிக்காய், அதன் பெயர்?
இதற்குள் சூப்பர்வைசர் வந்தார். எல்லா நம்பர்களும் கீழே பேப்பரில் இருப்பதைக் காண்பித்தார். 'பேக மாடு பேக்கு, ஜல்தி , ஜல்தி' என்று காதில் சொல்லிவிட்டுப் போனார்.
இப்போது நான் கீழே இருக்கும் தாளைப் பார்த்து ஒன்றொன்றாய் நம்பர் சொன்னேன். காதில் வாங்கி உள்ளே செலுத்தினார். சென்றமுறை பார்த்தவருக்கு இவர் பரவாயில்லை. பில் வெளியே வந்தது. கல்லூரி எல்லாம் படித்திருக்க வாய்ப்பில்லை. இவரும் வேலை பார்க்கிறாரென்றால், வீட்டின் நிலைமை என்னவோ? அண்ணன் , தம்பி உண்டோ? அவர் படிப்பாரா? இல்லை இவர்தான் அவர்களை படிக்க வைப்பாரோ ? அதெல்லாம் சரி , செர்ரி டொமட்டோ ஒரு முறையேனும் ஒரு பழம் எடுத்து வாயில் போட்டிருப்பாரா ?
எல்லாம் நிறுத்து முடித்தாயிற்றா என்று என்னிடம் கேட்டார். ஒரு சில பைகளை நிறுத்தவைகளுடன் வைத்திருந்தார். அவை இன்னும் ஆகவில்லை என்று சொன்னேன். மீண்டும் சில உள்ளீடல்கள்.
இங்கும் தவறுகள் செய்துகொண்டே இருந்தால் , வேலையில் இருந்து நிறுத்திவிடுவார்கள். மூவரில் ஒருவர் இவர் என்ன கேட்டும் பதில் சொல்லவே இல்லை என்பதை நினைத்தேன்.. ஆனால் , இவர் பிழைத்துக் கொள்வார். கண்ணில் அச்சமில்லை. ஆண்டவன் நம் போல் ஆட்களை இன்னும் சில நாட்கள் அனுப்புவான்.
வரிசையில் எனக்குப் பின்னால் இருந்தவர் ஒரு நேபாளி. அவருக்குப் பின்னால் யாரும் இல்லை.

Comments
Post a Comment