Skip to main content

அசோகமித்திரனின் சைக்கிள்

அசோகமித்திரனின் சைக்கிள்

இந்த மாத விஷ்ணுபுரம் சொல்லாழி  கூடுகைக்கு முன் 18வது அட்சக்கோடு வாசித்தேன். அசோகமித்திரன் சைக்கிளில் போகும் பிம்பம் ஏனோ என் மனதில் வந்துகொண்டே இருந்தது. அசோகமித்திரன் பிற கதைகளில் வரும் சைக்கிள்களை தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இது ஏனென்றால் நானும் ஒரு ஏழு வருடங்களாக, இங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலை நினைத்து தினமும்  போவதும் வருவதும் பதட்டமாகி உள்ளே பொறுமுவதை விட, சைக்கிளில் சென்று பார்க்கலாம் என்று ஒரு நாள் தோன்றியது. அலுவலகத்திற்கு சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் 15 கிமீ.  முதலில் மணி நேர உடற்பயிற்சி என்று நினைத்தேன். பின்னர் சில வாரங்களில் மனம் போட்டியில்லாததால் அமைதியடைய ஆரம்பித்தது என நினைத்தேன். பின்னர் அதில் ஏறினால் சிந்தனை ஒன்று படுவது போல் தோன்றியது. பின்னர் தெருவில் வேடிக்கை பார்த்து ஒரு சிறு விளையாட்டும் ஆனது. பின்னர் இந்த சைக்கிள் அனுபவங்களை எழுதிப் பார்த்திருக்கிறேன் சாம்பிள்கள் சில).  

கடந்த ஞாயிறு கூடுகைக்குப் பின், நேற்று அசோகமித்திரனை மீண்டும் தேடிப் படித்தேன். சாகித்திய அகாடெமி காணொளியில் லான்சர் பார்க் வீடு வந்தது. ஒரு கடைத் தெருவில் நின்று ரெபியூஜி கேம்ப் இருந்த இடத்தைக் காட்டினார். ஹுசைன் சாகர் ஏரி முன்னால் நின்று 18வது அட்சக்கோடின் சிலவரிகள் படித்தார்.  

இதன் பின்னர் சாருவின் காணொளி கிடைத்தது (https://www.youtube.com/watch?v=V1CX_MAuHB0). சாரு உரையை பெங்களூரில் கேட்டிருக்கிறேன். புத்தகத்தை ஒலி மேடையில் வைத்திருப்பார். ஏராளமான வண்ண வண்ண  புக்மார்க்குகள் உள்ளிருக்கும், விசிறி போல், மயிற்பீலி போல்.  எதோ ஒரு இடத்தில் புக்மார்க்கை விரித்துப் பேசுவார். இந்தப் பேச்சில் பல புத்தகங்கள் ஒலி பெருக்கியின் முன்னே, இடையிடையே நூலை விரித்து சில வரிகள் படித்துப் பின் பேசிக்கொண்டே பேசினார். ஒரு முறை கண் கலங்கினார்.  

உலகில் தான் படித்த எழுத்தாளர்களில் ஆறு பேரில் ஒருவர் என்றார். ஆறில் தாந்தே முதலில். டால்ஸ்டாய் , டாஸ்டாவ்ஸ்க்கி இவருக்குப் பின்னே என்றார். அவர் காணொளி உரை கரைந்த நிழல்கள், தண்ணீர் மற்றும் ஒரு நேர்காணலைச்  சுற்றி அமைந்திருந்தது. மாதா, பிதா , குரு , தெய்வம் தனக்கு அசோகமித்திரன் என்றார். தி.ஜா , ல.சா.ரா இருவரும் தனக்கு உடல் எனும் எழுத்தை, நடையைக் கொடுத்தவர்கள். அசோகரமித்திரன் தன் எழுத்துக்கு ஆன்மா, உயிரைக் கொடுத்தவர் என்று சொன்னார். தன்னைக் கட்டியெழுப்ப மறுத்தவர் என்றார். அவரைப் புகழ்ந்த சாருவை பைத்தியம் என்று அழகியசிங்காரிடம் தன் எதிரேயே சொல்லியிருக்கிறார். பாரதியார் இறுதி ஊர்வலத்தில் 8 பேர், ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து அசோகமித்திரனின் இறுதி யாத்திரையில் 24 பேர். 100 ஆண்டுகளில் மூன்று மடங்கு கூட்டம் கூடியிருக்கிறது என்று கூறினார். அவரை எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் என்று வகைப் படுத்தினார். 

எனக்கு மனசில் ஓடிக்கொண்டிருந்த ஒரு இடத்தை சாருவின் உரையில் தொட்டு அவரே படித்தவுடன், எனக்கும் கண்ணில் நீர் கோர்த்தது.

அதை இந்த நீண்ட ஆலாபனைக்குக் கீழே தந்திருக்கிறேன்.

இதற்க்கு முன் பலமுறை சைக்கிள் வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடியிருக்கிறேன். பிரபஞ்சன் எழுதிய சைக்கிள் என்ற கதையைப் படித்திருக்கிறேன். 'கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள். வலது கைப்பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு, கன்றுக்குட்டி பார்ப்பது போலவே மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.' என்று கதை ஆரம்பிக்கும். மாமா சனிக்கிழமை தானும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்கும் முன்  , சைக்கிளுக்குத் துடைத்து எண்ணெய் போடுவார். பிறகு ஊறிக் குளித்துவிட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடுவார். கதை இறுதியில் அவருக்கு சைக்கிளின் மேல் வெறுப்பு வந்து விடும். 

ஜெயமோகன் எழுதிய  சிறகு என்று ஒரு கதை படித்திருக்கிறேன். ஆனந்தவல்லிக்கு அந்த சைக்கிள் வேலியை உடைத்து வெளியே வந்து பறக்க உதவிய சிறகு.

18-வது அட்சக்கோடிலும் சைக்கிள், சந்திரசேகரன் கூடவே கதை முழுதும் வருகிறது. செகந்தராபாத்தில் இருக்கும் வீட்டில் இருந்து கல்லூரி சைக்கிளில். வேடிக்கை பார்த்த வண்ணம் செல்கிறான். ஏரியைப் பார்க்கிறான். புதிதாய்த் தோன்றிய ரெபியூஜிகளைப் பார்க்கிறான். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ராஜாக்கர்களை 'ஒரு ஐம்பது பேர் ஒல்லி, பருமன், நெட்டை, குட்டை, வயதானவர்கள், இளைஞர்கள், ஷேர்வானி , பைஜாமா, சட்டை, பாண்ட் என்று பல்வேறு உடைகளில் , துப்பாக்கியாக நினைத்து கம்பை சாய்த்து வைத்து' பார்க்கிறான். சைக்கிளை ஓட்டிக்கொண்டே யோசிக்கிறான். சைக்கிளில் அமர்ந்தவுடன் நினைவுகள் முன்னும் பின்னும் செல்கின்றன. 

சைக்கிள் ஓட்டுவது தான் அவனுக்கு அந்த நிதானத்தையும், வேடிக்கை பார்ப்பதையும், சிந்திப்பதையும்  சொல்லிக் கொடுக்கிறது என்று நினைத்தேன். 

கதையில் ராஜாக்கர்களால் முதல் முறை தாக்கப்பட்டதும் எழுந்து நிதானமாக சந்திரசேகரன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடக்கிறான். அடித்தவர்கள் ரெபியூஜிஸ் ஆகஇருக்க முடியாது என நினைக்கிறான். பொந்துகளில் வாழ்பவர்களா அடிப்பார்கள்?. சையது மாமா வீட்டிற்கு சைக்கிள், மாட்டுக்குப் புல் வாங்க சைக்கிள். ரத்தக் கையெழுத்து போட்டு விட்டு, கல்லூரிக்குள் போக முடியாமல், சைக்கிளுடன் சுற்றி வந்து , கல்லூரியில் உள்ளே இருக்கும் பெண்களையெல்லாம் நினைத்து , 'பார்க்கில் எல்லோரையும் போல் உட்கார்ந்து, படுத்து, கடைசியில் உறங்கிப் போகிறான்'. ஊரடங்கு என்றால் எப்படியிருக்கும், என்ன நடக்கும் , பார்க்க  சைக்கிளை விடுகிறான்.  அப்பா எங்காவது போயிருந்தால் , அம்மா கூப்பிடச் சொன்னால், சைக்கிளை எடுக்கிறான். வழியில் சைக்கிள் முழுதும் யோசனை பற்றிக்கொள்கிறது.  

அசோகமித்திரனுடைய  சிறுகதை தொகுப்பை  சிலவற்றை சைக்கிள் தேடிப் படித்தேன். கொடியேற்றம், பைசா, இரு நண்பர்கள் என்று  மேலும் சைக்கிள்கள் தென்பட ஆரம்பித்தன. (பைசாவில் உடன் படிக்கும் தெலுங்குத் தோழர் தினமும் மதியம் சாப்பிட இவர் சைக்கிளை இரவல் வாங்கிச் செல்கிறார்.  சிமெண்ட் ரோட்டிலும் அடிக்கடி பஞ்சர் செய்து விடுவார். வசதியான ஜமீன் வீட்டு தத்துப் பையன். அவருக்கு ஏன் சைக்கிள் இல்லை என்றால் அவர் தாத்தாவுக்கு சைக்கிள் பிடிக்காது. இது ஏனென்றால், அப்போதெல்லாம் தந்தி சைக்கிளில் வரும், தந்தியில் கெட்ட செய்தி வரும். எனவே இவர் சைக்கிள் அவரைச் சுமந்தது என்று எழுதியிருக்கிறார். அவன் யாராலோ கொல்லப் படுகிறான். இறந்தபின் சைக்கிளை உருட்டிக் கொண்டு அவன் வீட்டிற்குப் போய் என்ன ஆனது என்று நண்பனின் சமையல்காரனிடம் கேட்கிறான். தாத்தா சொத்திற்காகக இவனை யாரோ கொன்று விட்டார்கள். 'பைசா ரொம்பக் கெட்டது...யாராவது சொத்துக் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லு '  என்று  சமையல்காரன் சொல்கிறான்.)  

இவ்வாறு தேடிப் படித்துக்கொண்டிருக்கும் போது, காணொளியில் கரைந்த நிழல்களில் சாரு உரக்கப் படித்த பகுதி  இடையில் வந்தது. ராஜகோபால் நான்கு மாதம் வேலை இல்லாமல் , காலையில் சாப்பிடாமல், வேலை கிடைக்குமா என்று சாஹினி ஸ்டுடியோ பார்த்து சைக்கிளில் கிளம்பும் பகுதி. கடைசியில் அந்த நாளின் சாப்பாடு மட்டும் தேடும் கதையாகி முடிகிறது. 

சைக்கிளுக்கு செயின் கவர் கிடையாது. பெல் பாட்டம் கால் சட்டைக்கு கிளிப் இருந்திருக்கிறது.

"பல்லைக் கடித்துக் கொண்டு சைக்கிளை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மிதித்துக் கொண்டு போனான்.கோடம்பாக்கம் மேம்பாலம் அரக்கன் போல் நிமிர்ந்து கிடந்தது. ஒரு வழியாக மூச்சைப் பிடித்து மேடு ஏறி முடித்த பிறகு நிம்மதி தரும் அரை நினைவில் இறக்கத்தில் உருண்டோடும் சைக்கிள் மீது அசைவற்று உட்கார்ந்திருந்தான்.இரு சக்கரங்களின் சிறுசிறு நெளிவு கோணல்கள் கூட அப்போது உணர முடிந்தது. பின் சக்கர ப்ரீ வீலில் இருந்து 'ஒய் ஒய் ' என்ற சத்தம் அடிக்கு அடி துரிதமாகிக் கொண்டிருந்தது. அபூர்வமான லயங்கொண்ட அந்தச் சங்கீதம் சில விநாடிகள் நீடித்தது. வேறு ஒரு சுருதியில் அந்நிய ஒலி கிளம்பி மற்றெல்லாவற்றையும் அமுக்கியது. கவலையுடன் ராஜகோபால் சைக்கிளை நிறுத்தி முன் சக்கரத்தை அழுத்திப் பார்த்தான். அரை நிமிட காலத்துக்குள் அந்தச் சக்கரத்தின் ட்யூப் காற்றெல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தது."   

படிக்கையில் இவர் சொல்லும் சங்கீதம் எனக்குக் காதில்  கேட்க முடிந்தது. எனக்கு சைக்கிளில் நெடுநாட்களாய் ஒரு பால்ரஸ் குண்டு உள்ளே எங்கேயோ உருண்டு கொண்டிருக்கிறது. முதலில் அது சென்று தகரத்தில் முட்டுவது போல் விட்டு விட்டு ஆரம்பிக்கும். நீர்த்துளி சொட்டுவது போல். பின்னர் ஒவ்வொரு மிதிக்கும் லயம் கூடும், பின் மழை போல் ஒரே ஒலியாகும். விளையாட்டாய் , மிதியை வைத்து இந்த லயத்தை சுருதி கூட்டவோ  குறைக்கவோ செய்யலாம். 

மற்றுமொரு இடத்தில் - மரணச் சக்கிரம் என்ற கட்டுரை -  அசோகமித்திரன் இரு சக்கர வாகனங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். கால்களின் விஸ்தரிப்பே சக்கரம். தூரம் என்ற சொல் நம் பிரஞையில் எப்படி மாறி விட்டது என்று குறிப்பிடுகிறார். காலால் நடப்பது தூரம் என்றிருந்தது, சைக்கிள், மாட்டு வண்டி தூரம் என்று மாறி,  பஸ் ஆகி விட்டது என்று சொல்கிறார். கடைசியில் இரு சக்கர மோட்டார் சைக்கிள்களை 'ஆண்மை, அதிகாரம், வீரம், சாகசம்' ஆகியவற்றின் குறியீடு என்று எழுதியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது சைக்கிளை கருணையின் குறியீடு என்று நினைக்கத்  தோன்றுகிறது.   

எப்போதும் போல் நன்றாய் இருந்த கூடுகை. நண்பர் ராஜசேகர் சொல்லிய இந்த விஷயம் முக்கியமாய்ப் பட்டது. அசோகமித்திரன் எங்கெல்லாம் மேலே தூக்கி உச்சம் காட்டுகிறாரோ அங்கெல்லாம் அடுத்த வரியில் ஒரு சாதாரணம்(mundane/absurdity)   வந்துவிடுகிறது. வீட்டில் வந்ததும் அவர் உச்சம் காட்டும் இடத்தை அடுத்து,  மீண்டும் அவரே கலைப்பது பார்க்கக் கிடைத்தது. சாரு அவர்களும் இதை காணொளியில் சொல்லியிருக்கிறார்.



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...