Skip to main content

ஒரு வாசிக்கப்படாத ராமாயணம்

ஒரு வாசிக்கப்படாத ராமாயணம்

8 Ancient Places from Ramayana in Modern-Day India

நான் அன்று வீட்டின் உள்ளே நுழையும் போதே தொப்பலாக நனைந்திருந்தேன். கால் சட்டை வழியே நீர் ஊறி கால்கள் வழியே கீழே ஒழுகிக் கொண்டிருந்தது. நனைந்த பையை ஒரு கையில் பிடித்திருந்தேன். இன்னொரு கையில் இன்னொரு பலகாரப் பை இருந்தது. நேராக பாத்ரூம் சென்று உடையைக் கழற்றலாம் என்று , வரவேற்பறையைக் கடக்கும் பொழுது முதலில் ஒரு கால் வழுக்கியது. சமாளிக்க கைகள் இல்லை. பின்னர் இரண்டாவதும் வழுக்கியது. மல்லாந்து விழுந்த சத்தம் கேட்டு எல்லோரும் வந்து பார்த்தார்கள். 

அது ஆடி மாதம் ஆரம்பம் . தென் மேற்குப் பருவமழை, சரமாய் மலர் தொடுத்தாற்போல் பெய்து கொண்டிருந்தது. மேலிருந்து கீழ் வரும் அமைதியான வற்றாத நதி போல. இந்த மழை எளிதில் நிற்காது. மழையென்றும் பாராமல் அதனாலேயே கிளம்பியிருந்தேன். 

சரியாக அப்போது போன் அடித்தது. பெரியம்மாவிடம் இருந்து போன் அடித்தது. ஆபிசில் இருக்கும் போதே இரண்டு முறை போன் செய்திருந்தார்.வேலையில் இருந்ததால் எடுக்கத் தோதில்லை. பெரியம்மா அந்தக் காலத்து மனுஷி. ஒரு ஐந்தாறு முறையாவது முயற்சி செய்துதான் போனை நிறுத்துவார்.

'முத்தையா , ஏன்டா போனே எடுக்கல ..'

'வேலையா இருந்திருச்சு பெரியம்மா..வீட்டுக்கு வந்து பண்ணலான்னு இருந்தேன்...இப்பதான் நுழையறேன்'

கள்ளப் பயக, எரப்பாளி... எல்லாம் பொய் என்று மனதில் பெரியம்மா சொல்லியிருப்பாள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய வேலையில் கூட என்னை யாரும் இப்படி எளிதில் பாலோ அப் செய்வதில்லை. என்னுடைய பார்முலாவும் இவர்களைப் போல் அம்மாக்களிடம் கற்றது. ஆக வேண்டியதை என்ன ஆச்சு என்று கேட்டபடி இருப்பது.

' எல்லாம் சரி..இப்போம் எடுத்தியே .....கவசம் டிவி என்ன ஆச்சுன்னு விசாரிச்சியா...'

'இப்போ போன் போட்டுக் கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன் இரு...' என்று சொல்லி நிறுத்தினேன்.

பெரியம்மா அம்மாவின் அக்கா. பாட்டியின் மூன்று பெண்களில் தலைமகள், அம்மா இரண்டாவது. மூன்றாவது இருப்பவர் பெரும்பாலும் பார்வையாளர், அவ்வளவே. பாட்டி தாத்தா இல்லாமல் முப்பத்திரண்டு வருடங்கள் தனியாளாய் இருந்தவர். பாட்டி, முதலிரு பெண்கள் மூன்று பேரையும் ஒரு மூன்று தட்டுத் தராசில் நிறுத்தால் மூன்றும் சமமாய் இருக்கும். நூறை சமமாய் வகுத்தால் மூணு முப்பத்திமூணு. அந்த மிச்சம் இருக்கும் எடையைக் கீழிழுக்கும் புள்ளி பெரியம்மாவின் புள்ளி. ஒன்று கொழுந்தாய் எரியும் நெருப்பென்றால், இன்னொன்று அதை ஓங்கி வீசி எரியவைக்கும் காற்று. மற்றொன்று எல்லாமும் உண்டு செரிக்கும் பொருள். மூவரில் யார் எப்போது நெருப்பு , காற்று, நிலம் என்பது இடத்தைப் பொறுத்தது. ஆனால் உக்கிரமும் , விசையும் ஒன்று தான். யானையும், காளையும் போடும் விளையாட்டுச் சண்டை போல விசை. முதலில் சத்தம், பொருந்திய பின்னர் சமநிலையில் நிற்கும் பலம். 

பெரியம்மா சமையல் நன்றாய்ச் செய்வார். இல்லை நன்றாய்ச் செய்ய வைப்பார். சிறு வயதில் விடுமுறைக்கு செல்லும் காலங்களில் இந்த பார்முலாவை புரிந்து கொண்டேன். 

முதலில் தன் பெரிய உடம்புடன் நடு வீட்டில் உட்கார்ந்து விடுவார். 

'ஏலே , பாத்ரூம் கிட்ட ஒரு முத்துன தேங்காய உடைச்சு , தண்ணிய டம்ளர்ல பிடிச்சு தனியா எடுத்து சாமிகிட்ட வச்சுட்டு,..அந்த தேங்காத் துருவியையும் தேங்காயும் அம்மாகிட்ட கொண்டாந்து குடு..' என்று தான் ஆரம்பிப்பார். மனதில் ஒருமுகமாக ஏற்றி கட்டளை முடிந்த அடுத்த நொடியில்,  'கும்பால ஒரு அஞ்சு ரூவா எடுத்துட்டு போயி சாஹிபு கடைல அவியல் காய் ஒரு பூட்டுன்னு கேட்டு வாங்கிட்டு...கொத்தமல்லி மொளகா தனியா வாங்கணும்..அம்மா துருவதுக்குள்ள போய்ட்டு ஓடி வரணும்...'. எனக்கு அவியல் காய் என்றால் விளங்கவில்லை. 'நான் கேட்டேன்னு கேளு..' என்றார் மீண்டும். சாஹிபு உடம்பில் எல்லாம் கருமயிருடன் , பவுடர் கலந்த மார்பு, கட்டை மீசையுடன் வெள்ளையாய்ச் சிரிப்பார். எல்லா கிழங்கிலும் ஒன்று இரண்டு , வெள்ளைப் பூசணி, கத்தரி என்று எல்லாம் சேர்த்து ஒரு பொட்டலம் போட்டுத் தருவார். 

சரியாய் உள்ளே நுழைந்ததும், 'குக்கர் விசில் வரும் , மூணு விசிலில் அணைச்சுட்டு வா..வரும்போது அருவாமனை எடுத்துட்டு, பாத்திரத்தில தண்ணி புடிச்சி எடுத்துட்டு, கையயோட ஒரு தட்டையும் கொண்டா..' என்று சொல்லுவார். காயை நறுக்கும் போது வெளியே வேறு 'தேங்கா  அறுக்க எப்ப வருவீங்கன்னு' டெம்போ ஆட்டோக்காரர்ட்ட கேட்டுட்டு வா' என்பார். இன்றும்  டுவயதில் எதாவது பட்டியல் போட்டு யாருக்காவது வேலை கொடுப்பது அவருக்கு இயற்கையில் இறைவன் கொடுத்தது. அவருக்கு வேலை எல்லாம் முக்கால் வாசி தலைக்குள்ளே மட்டுமே நிகழ்வது. தலையில் நடந்தபின் வெளியில் உலகத்தில் நடத்துவது சுலபம், அதற்க்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒருமுறை என் காதில் விழ இப்படிப் பேசினார்கள் அம்மாவும் பெரியம்மாவும். 


'உன் பையனுக்கு என்னதாண்டி வேல'

'மேனேஜர்ங்கறான்..'

'ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறான்,..பேசுறதுல பாதி புரியாது..இவன் யார மேனேஜ் பண்றது'

உடனே அம்மா என்னைப்போல் பேசிக் காண்பித்தாள். இருவரும் குலுங்கிச் சிரித்தார்கள். நான் சிரிப்பு முடிந்து தான் உள்ளே நுழைந்தேன்.

இப்போது கவசம் டிவிக்கு தேடி போன் போட்டேன். விஷயம் இதுதான். கேரளா கன்னியாகுமரியில் ஆடிமாதம் ராமாயண மாதம். கூடி ராமாயணம் கதை படிப்பார்கள். மழைக்குண்டான கார்கிடக மாதத்தில் ராமாயணம் படிப்பது ஐதீகம். இது இருளின் மாதம், மழையின் மாதம், காற்றின் மாதம். ராமாயணம் படித்து முடிப்பது பெரிய சங்கல்பம். மனவுறுதி இல்லாமல் முடியாதது. எனக்குத் தெரியும் கம்பராமாயணம் ஒருமுறை வாசிப்பது மாரத்தான் கடப்பது, மலையேறுவது போன்று கடினமானது. ஆனால் அதுதான் சிலரில் உள்ளிருப்பதை  உசுப்பி எழுப்புகிறது. பெரியம்மா இம்முறை ஆடிக்கு புதிய ராமாயணம் ஒன்றை படிக்க ஆசைப்பட்டார்.

இந்தப் புத்தகம் கிடைப்பது அரிது. டிவியில் சொற்பொழிவு ஆற்றும் உவேசா வழியில் வந்தவர் எழுதிய உரை. 'நம்ம வீட்ல  நீ புஸ்தகம் படிக்கிற பய...தேடி அம்மாக்கு வாங்கி குடுக்கிறியா...இந்த ஆடிக்கு அதப் படிச்சு முடிக்கணும் போல தோணுது...புஸ்தகம் பேர சொல்றேன்  ' என்று ஒரு நாளில் போன் போட்டுச் சொன்னார். அதை அமேசானில் தேடினேன். ஐந்து பெரிய புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு. இந்த மாதிரி பல தொகுப்புகள் வாங்கி வாழ்நாளில் படிக்க முடியுமா என்ற மலைப்பும் , குற்ற உணர்ச்சியும் சேர, நான் வாங்கிய அத்தகைய புத்தகங்களை நிமிர்ந்து பார்த்தேன். கம்பராமாயணம் எட்டு வால்யூமில் முதலாவதில் பாதி, மற்றொரு 26 வால்யூம் , இன்னொன்று 21 என்று கண்ணில் பட்டது. 26 வால்யூமை ஒருவர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படித்து இரண்டு வருடத்தில் படித்தேன் என்று சொன்னது நினைவில் வந்தது.   

நான் இதையெல்லாம் பார்த்து குற்றவுணர்வு வருகையில், இறக்கும் முன் இதையெல்லாம் படித்துவிட மாட்டமோ என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொள்வதுண்டு. அது மட்டுமே வழி. இல்லையென்றால் இவர்களைப் போல் நோன்பென்ற கடுமுயற்சி.

இந்த ஐந்து புத்தகத்தை ஒரு மாதத்தில் படிப்பதும் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் புத்தகம் கிடைத்தபாடு இல்லை.

கவசம் டீவிதான் இந்தப் புத்தகத்தை வாங்கி விற்பனை செய்வதாக அவரே கண்டுபிடித்து ஒரு நாள் சொன்னார். ஒரு எண்ணை தொடர்புக்கு கொடுத்தார். பத்து நம்பரில் பதினொன்றாக சேர்த்து ஒன்றை அடித்து விட்டார். அவரே கண்டுபிடித்து மீண்டும் ஒருமுறை கொடுத்தார்.

எனக்கும் ஆடி மாத ராமாயண வாசிப்பின் தீவிரம் படவில்லை. ஓரிருநாள் வேலைமிகுதியில் இதைச் செய்ய மறந்திருந்தேன்.

பின்னர் ஒரு நாள் பாலோ அப் செய்தார். 'நேரா அய்யா அட்ரஸ் போட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லு..நீ வாங்கி அனுப்ப நேரம் இல்ல..'. கொஞ்சம் வயதாகமல் , வேலை பார்த்து , கல்யாணம் தள்ளி பிள்ளை குட்டிகளுடன் இருப்பதால் இந்த சொல் நாகரிகம். பழைய ஆளாய் இருந்தால், 'எத்தன மட்டம் சொன்னா ஒரு காரியம் செய்வ...இல்ல தெரியாம தான் கேக்கறேன்...இன்னும் எத்தன பாக்கி இருக்கு ..சொல்லு ..எல்லாம் சேர்த்து இப்பவே சொல்றேன்..' என்றே சொல்லியிருப்பார். 

அன்று கவசம் டிவி எண் தொடர்பில் சிக்கியது. உடனே அந்த அம்மாள் புத்தகக் குறிப்பையும் , ஸ்கேன்னரையும் அனுப்பினார். நான் முகவரி கொடுத்து அனுப்பப் சொன்னேன்.

சிக்கலே இதன் பின்னர் தான் ஆரம்பமானது. புத்தகம் ஸ்பீட் பார்ஸலில் போகும் என்றார். ரேஸ் குதிரை ரெடியாக நின்றும் கதவு திறக்கப்படவே இல்லை. பெரியம்மா ஓரிரு நாளுக்கு ஒரு முறை பாலோ அப் செய்தார். போனில் பேசும்போது குழந்தை போல் குதூகலத்துடன் பேசுவார். ஒரே மழை , என்னவோ செஞ்சது ..ஆசுபத்திரி போயிட்டு வந்தேன்...பிளட் டெஸ்ட்ல உப்பு கம்மின்னு சொன்னார் டாக்டர் ..ரெண்டு நா வச்சு பாக்கணுனாரு..இப்போதான் வந்தேன் என்பார்...'. அப்பாவிற்கும் இப்படி உப்புக் குறைந்து கனவும் நினைவும் குழம்பியது நினைவில் வந்தது, அப்படித்தான் பேசிக்கொண்டார்கள். என்னுடைய ஆரோக்கியத்தின் அடையாளம் கூறும் இரண்டு கேள்விகள் கேட்பேன். 'மத்தியானம் சாப்பிட்டாயா ...? ' என்று கேட்பேன். 'நல்லாச் சாப்பிட்டேன்' என்பார் . 'நல்லா பசிக்குதா' என்பேன், ' ஆமா ஒரே பசி ' என்பார்.  என் பையனைப் பற்றி விசாரிப்பார். அம்மாவை தனியாக விடாதே என்பார். எல்லாமும் கடைசியில் குத்தும் அந்தக் கவசம் டிவி.

அந்த கவசம் டிவி அம்மாள் வழுகிக் கொண்டே சென்றார். 'நிறைய ஆர்டெர்ஸ் சார்..கட்டிக் கொண்டு பொய் போஸ்ட் ஆபீஸ்ல போட்டாச்சு...அவங்க எப்ப ஷிப் பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது...நாளைக்கு தெளிவா சொல்றேன் ''என்று சொல்லி வைத்து விடுவார். கறாராக சனி ஞாயிறு ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னக் கூடியே சொல்லிவிடுவார். நாலு  மணிக்கு மேலே கேட்டால் 'நாளைக்கு ஆபீஸ் போய் ட்ராக் பண்ணி கண்டிப்பா சொல்றேன் என்பார். நாலு மணிக்கு முன்னர் 'போஸ்ட் ஆபீஸ் ஆள் போயிருக்கு..வந்ததும் சொல்றேன் ' என்பார். என்னைச் சரியாய் புரிந்து கொள்ள ஆரம்பித்தார். இவர் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.

அம்மாவும் ஒரு முறை இதைப் பற்றி விசாரித்தார். கவசம் டிவிக்கு அன்றும் போன் போட்டேன். தீம் சுவைத் தேன் பாயும் அதே குரல். இது எதாவது மெஷினா என்று கூட சந்தேகம் வந்தது. இந்த முறை அனுப்பினால் குறுஞ்செய்தி வருண் என்று புதுத் தகவல் சொன்னார். கொடுத்த எண் என்னுடையது அல்ல. 'அய்யாக்கு மெசேஜ் பாக்கத் தெரியாது..அவருக்கு ஏன் அனுப்புதான்..நல்லா விசாரிக்கச் சொல்லு என்றார்.

பெரியம்மா நம்பிக்கை இழந்து விட்டாரா என்று தெரியவில்லை. என்னிடம் இப்போதெல்லாம் ரூவாய  திருப்பி வாங்கிரு , ஏமாத்துக்கார பயலுக...'ஒரு பய நல்லவன் இல்ல என்றார்.


சுத்தரகாண்டமும், வால்மீகி ராமாயணமும் படித்தவர் போதாதா? வரிசையில் இன்னும் ஒன்று எதற்கு. அன்று போன் செய்தேன். கவசம் டிவி இன்று போய் நாளை வா என்றது. 


இதன் நடுவில் மற்றொருமுறை ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொன்னார். வயிற்றில் நீர்ப்போக்கு என்று சொன்னார். வழக்கமாய் கேட்கும் அந்த இரண்டு கேள்விகளையே கேட்டேன். இரண்டுக்கும் அதே பதிலே கூறினார்.


ஒரு நாள் எங்கிருந்தோ தோன்றி சென்னையில் யாராவது வந்தால் கையில் கொடுக்க ஆகுமா என்று கவசம் டீவியிடம் கேட்டேன், அது உடனே  ஒப்புக் கொண்டது. எதுவும் பொய் இல்லை என்பது எனக்கு ஆசுவாசமாக இருந்தது.

பெரியம்மா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து விட்டதாக போன் செய்தார். கயிலாயம் போன்ற அந்தப் படிகளைக் கடந்து மாடி ஏறியதைக் குழந்தைபோல் பெருமிதத்துடன் கூறினார். 'கீழ் உட்கார்ந்து அப்புறம் மேல வந்தா என்ன பெரியம்மா ' என்று எப்போதும் போல் கேட்டேன். 'அதே வேகத்துல ஏரலேனா அப்புறம் முடியாது' என்றார். இதுவும் வழக்கமான பதில். லிப்ட் வைக்கணும் என்பார் , பின்னர் மீண்டும் அதே கதை.

கடைசியில் ஆடி மாதம் இன்னும் முடியவில்லை, அந்த  ராமாயணம் வாசிக்க காத்திருப்பதாகச் சொன்னார்.

இடையில் நாங்கள் புது வீடு மாற வேண்டியிருந்தது. வீடு மாற்றுபவர்கள் என் புத்தகங்கள் தான் மிகுந்த சுமை என்றார்கள். ஐந்தாறு பெரிய பெட்டிகளை அதுவே அடைந்திருந்தது, இறக்கி எல்லாம் இடம் அமைந்ததும் , புத்தகங்கள் கூடு சேராமல் பெட்டிகளில் அடைபட்டுக் கிடந்தன.

நானும் படிக்காத அந்த இருபத்தியாறு  வால்யூம் புத்தக வரிசையையும் , எட்டு  வால்யூம் புத்தக வரிசையையும் இன்னொரு முறை பார்த்தேன். எட்டு வால்யூம் புத்தகத்தை வாரம் பத்துப் பாடலாய் படித்தால் இருபது வருடங்களில் முடிக்கலாம், உங்களுக்கு வாழ்வில் எத்தனை வருடம் மிச்சம் இருக்கிறது' என்று ஒருவர் கேட்டது நினைவுக்கு வந்தது.

பெரியம்மா அன்று காலை இறந்து விட்டதாக செய்தி வந்தது. உலகில் படிக்கப் காத்திருக்கும் இன்னுமொரு புத்தகம். புத்தகம் கொலை வாளோ என்று தோன்றியது.


நார்மடிப் புடைவைகள் - காளிதாஸ் 

----------------------------------------

நாமகிரிப் பாட்டிக்கு எப்போதும் 

மூன்று நார்மடிப் புடைவை 


உபயோகத்தில் உடம்பில் ஒன்று 

இரண்டாவது துவைத்து மூங்கில்கொடியில் 

உலர்ந்த மற்றொன்று ஓலையாய்ச் சுருக்கப்பட்டு 

வைக்கோல் பிரிபோல் கொடி ஓரம். 


பழம் நார்மடிப் புடவைகளும் பாட்டியிடம் 

சணக்கு இருக்கும் கிழித்தாலும் எறியமாட்டாள்


ஆங்காங்கு மரவட்டைத் தையல் அவளே தைத்து வைப்பாள் 

ஊசியில் நூல்மட்டும் பேத்திகள் கோத்துத் தரவேண்டும் 

ரொம்ப பழசானாலும் விடமாட்டாள் 

மடித்துமடித்து அழகாய் எங்கள் படுக்கையில் விரிப்பாள் 

அருகில் அவளும் தூங்குவாள். 

பாட்டி போல் பூலை உடம்பு நார்மடி விரிப்பு


மெத்துமெத்தென்று பாட்டியின் நிறழும் 

நார்மடிப் புடைவைகள் நிறமும் ஒன்று 

நார்மடிப் புடைவைகள் ஒவ்வொன்றாய் இல்லாமல் போகும் காலம் 

இனி பாட்டிக்கு நேற்று தசாஸ்து.



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...