Skip to main content

ஒரு இடமாற்றம்

ஒரு இடமாற்றம் 



நாங்கள் பெங்களூர் வந்து சிலமுறையே  வீடு மாறியிருக்கிறோம். ஆனால் தற்போது பழைய இடமாகியிருக்கும் அந்த  இடத்தில் ஏறக்குறைய பதினைந்து வருட வாசம். அந்த இடத்திற்கு முதலில் குடி பெயர்ந்த போது , உள்புற சுற்றுச் சாலை மற்றுமே இருந்தது. வெளிப்புற சுற்றுச் சாலை போட்டிருக்கவில்லை.இன்று ரிங் ரோடில் இருக்கும் பெரும்பான்மையான கம்பெனிகள், மேம்பாலங்கள் எதுவும் இருக்கவில்லை. அப்பொழுது மால்கள் புது போக்காக இருந்தன. அங்கிருந்த டோடல் மால் பிரபலம். ஒரு முறை சென்றிருந்தது நினைவு. மற்றபடி அப்பகுதி என் நினைவில் இல்லாத பகுதி. அப்போது அதை ஊருக்கு வெளியே என்று சொல்வார்கள். ஓசூர் சாலையையும் , திருப்பதி/வேலூர் சாலையையும் , ஹைதராபாத் , மற்றும் இதர கர்நாடகப் பகுதிகளையும் இணைக்கும் சாலை. அன்று சொன்னால் யாரும் ஒப்ப மாட்டார்கள். அன்று என்றால் என்றோ இல்லை, பதினைந்து வருடம் முன்னால் அவ்வளவே.  இன்று அந்த வழி எல்லாம் கம்பெனிகள் கோலோச்சுகின்றன. ஹெப்பால் மேம்பாலம் தாண்டியும் நெருக்கடி.இந்தப் பக்கம் சில்க் போர்டு என்ற அடையாளம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அடுக்கு மேம்பாலங்கள், ரயில் பாதைகள் என்று இன்னும் வளர்ச்சி முடிந்தபாடில்லை. 

சாலையில் நடப்பதே சிரமமாய் இருக்கிறது. தைரியமாய் எல்லோரும் எதிர் ரோட்டை ஆக்கிரமிக்கிறார்கள். யார் முதலில் ரோடில் இடம் பிடிக்கிறாரோ அவரே ஜெயிக்கிறார் என்று ஆகி விட்டது. எதிரும் புதிருமாய் நிற்பது சகஜமாகி விட்டது. எதிர்பார்ப்பு இப்படி என்பதால் சண்டையும் இல்லை. முன்னெல்லாம் எங்கோ ஒருவர், எதிர்ப்பைக் காட்டுவார். இப்பொழுது அவரும் கைவிடப்பட்டிருக்கிறார். விதிகள் பெரும்பான்மையை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.  இதுவும் இல்லை என்றால் , நாம் வண்டியிலோ , நடந்தோ வரும்பொழுது ஒரு ஒரு ஐம்பது வண்டிகள் ஒன்று ரிவெர்ஸ் வரும். இல்லையென்றால் , நம்மை வெட்டிக் கொண்டு நிற்கும் , எவராவது ஒருவர் நிறுத்துவார், மற்றொருவர் எடுப்பார். மனிதர்கள் சேரும்போது  இச்சைகள், காரணங்கள், வெளிப்படும் காரியங்கள் வரையறுக்க முடியாதவை ஆகின்றன,

காலை ,மாலை, அந்தி , நள்ளிரவு போல் எந்த பாகுபாடும் கிடையாது,  எந்த நேரமும் ஹாரன் சத்தம் கேட்கலாம். அதிகாலையில் கண் விழிக்கும் பொழுது ஒன்றிரண்டு உதிர்ந்த ஹாரன் தனியே ஒலிக்கும், போகப் போக ஒன்று கூடி அடை மழைத் தவளையாக , தலையினுள் பிரிக்க முடியாத ஒலியாகி விடும். 

நாங்கள் அப்பகுதியில் குடி வந்தபோது ஒரு கடை இருந்தது. இரண்டாவது கடைக்கு மெயின் ரோடுக்குச் செல்ல வேண்டும். இல்லை என்றால் அந்த மேல்குறிப்பிட்ட டோட்டல் மாலுக்குச் செல்ல வேண்டும். ஒரு தேநீர்க் கடை இருக்கவில்லை. இப்போது ஒன்றோ இரண்டோ இருக்கிறது. ஆனால் இரண்டு உயர்தர காபி கடைகள் வந்துவிட்டன. இரண்டு வங்கிகள் உள்ளன. ஒரு பப் , MRP , இரண்டு மூன்று உயர்தர  மதுச்சாலைகள். இரண்டு குழந்தைகளுள் ஒன்றுக்கு ஒரு வயதுக்கு சற்றுக்கீழ். மற்றவர் இவ்வுலகில் அப்போது இல்லை. வேறு எல்லாம் போலவே அவர்களும் வளர்ந்து விட்டிருக்கிறார்கள். புதன் கிழமைகளில் நடப்பதே சிரமமாகி விட்டது. இரண்டு மணி ஒதுக்கியே எங்கும் போய் வர முடிகிறது. இந்த நெரிசல்களைக் கடந்து வந்தால் இருக்கும் அந்தக்  குடியிருப்புப் பகுதி மிக அழகானது. அங்கிருக்கும் ராணுவ முகாம் , அதனால் இன்னும் பச்சையாய் இருக்கும் பல கிலோமீட்டர் பரந்த காடு போல் இருக்கும் அப்பகுதி, அதன் வெளிமுனையில் அவர்களே தோண்டிய அந்த  ஏரி.  எங்கெங்கு காணினும் பச்சை, கண்ணைப் பறிக்கும் கோடிப் பச்சை. ஒரு சில சந்தன மரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பார்த்த ஒரு வெட்டப்பட்ட சந்தன மரம் இருந்தது, வெட்டப்படும் வரை , பாதையில் இருந்தது சந்தன மரம் எனத் தெரியாது. ஒரு அரை நெல்லி மரம் உண்டு. பல நாவல் மரங்கள். கொன்றை, குல்மோகர். எல்லாவற்றையும் சுற்றி வைத்து ஏரியின் நடுவில் ஒங்கி உயர்ந்து பட்டுபோய் பல வருடங்களாய் நிற்கும் அந்தப் பட்ட மரம். அதன் உச்சானிக் கொம்பில் தான் பருந்துகள் அமரும். அவ்வப்போது மயில்கள் அமரும்.

வாழ்வில் எல்லாம் முடிந்து அடையும் இடத்தை வீடு என்று சொல்லியிருக்கிறார்கள். வீடு, வீடுபேறு என்று சென்று சேரும் இடத்தைக் குறிக்கும் வார்த்தைகள் உண்டு. இந்த உச்சமான இடத்தை அடையும் பெரிய வழியாக சொல்லப்படுவது 'விடுதல்' என்ற வினைச் சொல். இதுவும் வீடு என்ற சொல்லிலேயே தோன்றியிருக்க வேண்டும். ஒரு வீட்டை விட்டு மற்றொரு வீடை அடைவது. 

நம் மெய்யியல் நமது உடலையும் நாம்  வசிக்கும் வீடு என்று சொல்கிறது. இந்த வீடு தாண்டி, இதற்கெல்லாம் காரணமாய் உள்ளே இருக்கும் ஒரு பெருவிசையை தவமிருந்து அறியச் சொல்வது நம் மரபு. வீடு என்பதற்கு நம் மரபில் இருக்கும் பொருள் மிக ஆழமானது.  விட்டு விடுதல், விட்டு விலகியிருத்தல் போன்ற வீடை அடையும் வழிகள் எளிதல்ல என்பது தெரியும்.

பசு, பதி, பாசம் என்று சொல்வார்கள். பசு என்றால் மனிதன். பதி என்பது இறுதியில் அடையும் வீடுபேறைக் குறிக்கும். பாசம் என்பது விடுபட வேண்டியது. தளர வேண்டிய கட்டுகள் , தளைகள். தானாய் கட்டு தளர்ந்து அவிழ்ந்தால் வலியில்லை. வலுக்கட்டாயமாய்ச் அறுத்தால் ரணமாகியே அறுக்கமுடியும் .இதனாலேயே என்னவோ மனிதனுக்கு இடம் விட்டு இடம் பெயர்வது அவ்வளவு சிக்கலாகியிருக்கிறது. தனிமையில் இருந்தாலும் பரவாயில்லை , வசித்த இடத்தை , ஊரை வீட்டை விட்டு எளிதில் வெளியேற முடிவதில்லை.

ஸ்ரீக்கு நண்பர்களை விடுவது இழப்பாகி விட்டது. அவனுடைய நண்பர்கள் கண்ணீர் சிந்தி வழியனுப்பினார்கள். எனக்கு முதலில் ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் புது இடத்தில் இருந்து வேலைக்கு எப்படிப் போகிறோம் என்ற ஒரே எண்ணம். இரண்டு மூன்று நாள் முன்னதாக வேலைகளுக்கு நடுவில்  எதோ ஒரு  மெல்லிய சோகம் என்னையும் பற்றிக்கொண்டது. உடனே எல்லா செயல்களையும் புது இடத்தில் எப்படி நிகழும் என்று பொருத்திப் பார்த்து ஒரு விடையை மனது தேடிக்கொண்டே இருந்தது. உதாரணமாக பள்ளிப் பேருந்துக்கு நிற்கையில், அங்கு எப்படி வரும் , எப்படிச் செல்வார்கள் போன்ற கேள்விகள். பாலை இங்கு  நிறுத்த வேண்டும், அங்கு ஆரம்பிக்க வேண்டும். நான் செய்தது மிகக் குறைவு. ஆனால் எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. நீலாவுக்கும் பழகிய கூட்டத்தை பிரிவது கடினமாகி விட்டது. பக்கத்து வீட்டு சிநேகிதி  அழுக ஆரம்பித்தார். பீறிட்டு வந்துகொண்டே இருந்தது. அம்மாவைப் பார்த்து பிள்ளை அழுகை, இவர் அவர் பிள்ளைகள் எல்லாம் கண்ணீர். இடையில் ஒரு சில கிலோமீட்டர்கள் என்றாலும் மனம் ஏற்கவில்லை. 

வீட்டின் பாரம் ஏற்றிய அந்த லாரியை பின் தொடரும் போது , வாழ்வில் மற்றுமொரு முறை முற்றும் தனியனாய் உணர்ந்தேன். மனிதன் வெற்றி கொள்ள வேண்டியது, இல்லை, கடக்க வேண்டியது கடைசியில் தனிமையை மட்டுமே. இந்த எளிய மனதிற்கு அது இன்னும்  ஏகாந்தம் அல்ல அன்று தெரியும். அது அன்று அந்த ஒரு கணம் உணர்ந்தது  முற்றிலும் தனிமையே. 

வண்டியில் புது வீடு நோக்கிச் செல்லும்போது தொற்றியிருந்த மெல்லிய சோகம் KFC ல் நிறுத்தி பர்கரை வாங்கிச் சாப்பிட்டவுடன் ஸ்ரீக்கு சரியாகி விட்டது. ஒரு நாளில் ஒரு பறவை கிளைவிட்டு கிளை அமர்வது எண்ணிலா முறையல்லவா என நினைத்தேன். மனிதனை விட்டால் எந்த  விலங்கும்  ஒரு இடத்தில் இருப்பதில்லை. இன்னொரு வகையில் சென்றுகொண்டே இருப்பவர்களுக்கு வீடில்லை. மனிதர்களில் துறவிகளே  அத்தகையவர்கள்.

இந்தப் புது இடத்தை இன்னும் ஊருக்கு வெளியே என்று சொல்லலாம். ஒரு ஊர் என்பது சரியாக எந்த இடம் என்பது பெரிய கேள்வியே. சில தினம் முன் ஒரு போர்டில் பெங்களூர் இருபத்திரண்டு கீமீ , மெஜஸ்டிக் பதினாறு கீமீ என்று எழுதியிருந்தது. அப்போதுவரை பெங்களூர் என்றால் மெஜஸ்டிக் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதைப் போல இதை பெங்களூர் என்று சொல்வதா தெரியவில்லை. தேடிப் பார்த்ததில் இந்த ஊர் பெங்களூர் நகர மாவட்டத்தின் கீழேயே வருகிறது. ஆக எல்லாமும் பெங்களூருக்குள் வந்துவிட்டிருக்கிறது. இன்னும் உள்ளே வர ஒன்றும் இல்லை. ஏனென்றால் இதற்கு வெளியே தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது.

சர்ஜாபூர் , அத்திப்பள்ளி, ஆனேக்கல் எல்லையில் இருக்கும் ஊர்கள். இவ்வூர்களை குறுக்கும் நெடுக்கும் சாலைகள் இருக்கின்றன, இடையில் ஊர்கள் இருக்கின்றன. சர்ஜாபூர் சாலையை ஆனேக்கல்லை குறுக்கே இணைக்கும் பாதையில் நடுவில் இருக்கும் ஊர் என்று சொல்லலாம். 

நிலக்காட்சி எப்படி மாறுகிறது என்பது சாதாரணமாய் விளக்க முடியாது. கடந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களில் பெரிய கண்ணாடிக் கட்டிடத்தையே  பார்க்கவில்லை என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் வழியில் இரண்டு பெரிய குலை தள்ளும் வாழைத் தோப்புகள், ஒரு சில கிண்றுள்ள பாசனங்கள், (பம்புசெட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), , காலையில் மாடு கையில் பிடித்து குளிப்பாட்ட செல்லும் பெரியவர்கள், ஒன்று விடாமல் எல்லாமும் வெள்ளை உறை போட்டுக் கட்டி  பழங்கள் காய்த்துத் தொங்கும் ஒரு கொய்யாத் தோட்டம், ஒரு சிவப்பு ரோஜாத் தோட்டம்,  கோஸ் , காலிப்ளவர் தோட்டங்கள் இரண்டு என்று எல்லாம் பார்த்தபின்னரே அந்த குறுக்கே கடக்கும் ஓசூர் நெடுஞ்சாலையில் ஏற முடியும். 




ஒரு புறம் சந்தபுரா , மற்றொரு முனை சர்ஜாபூர். இரண்டும் இன்றைய வளர்ச்சியின் இரு நுனிகள். கூரிய வாளின் இரு முனைகள். பளபளக்கும் அச்சுறுத்தும் கூர்மை, வேகம். இரண்டுக்கும் நடுவிலிருப்பது அழுத்தமான மையப் பகுதி. கூர் நுனி போலல்லாமல் செயலதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டு மட்டும் இருப்பது.  இடையிலிருப்பவை இன்றைய எழுந்து வரும் நகரங்களைக் கை கட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் கிராமங்கள். இந்தப் புதுக்குடியிருப்பின் கிழக்கே  இருப்பது கோபசந்திரா என்ற கிராமம். தென்புறம் முத்தநல்லூர். வடமேற்கே இருப்பது நாராயண கட்டா. கட்டா என்றால் கரை என்று பொருள். சந்திரா என்றால் ஏரி , குளம்  என்று பொருள் வரும். ஏரியும் குளமும் கோயிலும் சேர்ந்த விவசாய நிலம். நாராயண கட்டா என்ற பெரிய ஏரி ராஜ ராஜ சோழனால் வெட்டப்பட்ட ஏரி என்று சொல்கிறார்கள். நாராயணகட்டா ஏரி பலசதுர கிலோமீட்டர்கள் பரந்த ஏரி , பத்தாம் நூற்றாண்டில் இப்பகுதி சோழர் ஆளுகையின் கீழ் இருந்தபோது வெட்டப்பட்டது. இங்கிருக்கும் கோவில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது முதலில் வரதராஜப் பெருமாள் கோவிலாக இருந்ததாகவும் , பின்னர் இன்று இருக்கும் ராமர் கோவிலாக வழங்கப்பட்டதாகவும் வரலாறு இருக்கிறது. 

இது சிறிய அழகான கோயில். இங்கிருக்கும் துவாரபாலகர் சிற்பம் மிகத் தத்ரூபமானது.அர்த்த மண்டபமும் , கருவறையும் , அதை ஒட்டிய ஒரே பிரகாரம். இக்கோயிலை ஒட்டி இன்னொரு சிவன் ஆலயம் உள்ளது. நான் செல்லும்போது அங்கிருந்த ஊர்க்காரர்கள் பாரதத்தை நாடகமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்ணன் துயிலில் இருக்கிறான். துரியோதனனும், அர்ஜுனனும் அவனை எழுப்பி போருக்கு உதவச் சொல்கிறார்கள். கையில் ஒரு சவுக்குக் கட்டையுடன் துரியோதனன் பாடி நடித்தார். ஒரு அம்மா தன் பையனுக்கு இது ஒரு வீண் வேலை என்று நீலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வேலை முடிந்து நேராக இங்கு வந்து விடுவதாகவும், இன்னும் மூன்று மாதம் அரங்கேறும் வரை இது ஓயாது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.





இந்தக் கிராமங்கள் ஊடாக நடந்தால் பரபரப்பு , வேகம் தானாக குறைந்து விடும். நீண்ட குறுகிய வீடுகள். என்ன கடை என்றே விளக்க முடியாத, ஆல் இன் ஆல் கடைகள் , வீட்டை ஒட்டி. வீட்டுக்காரரும், கடைக்காரரும் ஒருவரே.  எறும்புக்கு இருக்கும் வாழ்வைப்போல் நத்தைக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது.

வீட்டில் கொண்டுவந்து கொடுக்கும் கடைக்காரர்களைத் தவிர நாலைந்து கடைகள் இருக்கலாம். ஒரு பலசரக்குக் கடை. ஒரே ஒரு பேக்கரி. ஒரு புனேரி தேநீர், ஒன்றிரண்டு காய்கறிக் கடைகள். இங்கு கிடைப்பதை வைத்தே இங்கிருப்பவர்கள் பெரும்பாலோர் வாழ்கிறார்கள்.
 
இதை எழுத ஆரம்பிக்கையில் ஒரு தையல் குருவி ஓயாமல் கத்திக் கொண்டிருந்தது. இப்பொழுது வெளியே மழை. ஒவ்வொரு துளியும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. துளிகள் சேர்ந்து தாரையாய் விழுந்து ஓடுவது கேட்கிறது. கார் போகும் சத்தம் கேட்டு சில மணிகள் இருக்கும்.

நங்கள் இங்கு  தினமும் நடை போகும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் ஒரு நத்தை கடக்கிறது. ஒரே நத்தையைத்தான் தினமும் பார்க்கிறோமோ என நினைக்கிறேன். எங்கும் வேகத்தை மட்டுமே பார்க்க முடிந்தால் அதுவே மனதில் படிகிறது. விரைந்து செல்லும் காரைப் பார்க்கும் மனமும் , ஊர்ந்து  செல்லும் நத்தையைப் பார்க்கும் மனமும் அதுவாகவே ஆகிறது.

இயற்கையின் திருமுன் 
-----------------------------

அருவி
அங்கேயேதான் விழுந்துகொண்டிருக்கிறது
ஆறு
அப்படியேதான் ஓடிக்கொண்டிருக்கிறது
(அபூர்வமாய் 
பாதை மாறுவது வேறு)
கடல்
அன்று கண்டது போலவே
காடுகள்
அந்தந்த இடத்திலேயே
மலைகள்
அப்படியப்படியேதாம்
(ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பான
கதை தனி)

மனிதர்கள் வீடு மாறுகிறார்கள்
ஊர் மாறுகிறார்கள்
வேலை மாறுகிறார்கள்
மனம் மாறுகிறார்கள்
குடிபெயர்கிறார்கள்
புலம் பெயர்கிறார்கள்

என்ன சொல்ல
வருகிறாய் விக்கி
இயற்கையே
பெரிதென்றுதான் அமர்

இயற்கையின் சந்நிதானத்தில்
மானுடம் சிறிதென்றுதான் பூர்ணா
 
 ஜனவரி 2008

Vikramadithyan; விக்ரமதித்யன். ஆழித்தேர் : Azhither (விக்ரமாதித்யன் கவிதைகள் Book 11) (Tamil Edition)

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...