Translate

சில கவிதைகள்

1. கடுமையான டிராபிக் ஜாமில் 

======================


கடுமையான டிராபிக் ஜாமில் 

என்ன செய்யலாம் 


நிறைய தண்ணீர் நிறைத்துவைத்து 

இடையிடை அருந்தலாம் 


யாருக்காவது போனை முடுக்கி 

வலியப்  பேசலாம் 


வண்டியை ஓரமாய் நிறுத்தி   

ஆசுவாசமாய் சிறுநீர் கழிக்கலாம் 


'துன்பம் நேர்கையில் யாழெடுத்து

நீ இன்பம் சேர்க்க' கேட்கலாம் 


இல்லை விக்ரமாதித்யனின் 

ஆழித்தேர் கவிதை படிக்கலாம் 


வீடு சேர்ந்ததும் வெந்நீரில் குளித்து 

எல்லாம் மறக்கலாம்


2. சமரசம் உலாவும் இடம் 

===================


சாம்பல் வெள்ளை சிவிகையில் (பென்ஸ்) செல்பவர்கள் 

நிரந்தர சல்லியர்கள் ரதம் ஓட்ட செல்பவர்கள் 

தேரையும் சல்லியர்களையம் சிறிது இரவல் வாங்கி செல்பவர்கள் 


குளிரூட்டப்பட்ட பெரிய வண்டியில் 

வெண்குடை சாமரங்களுடன் பலர் 

கையில் தட்டுத் தாம்பாளங்கள் மங்கலங்கள் 

வேதகோசமும் சாமகீதமும் விடாமல் ஒலிக்க 


தேர் யானை குதிரை காலாட்படைகள் 

எல்லாமும் விக்கித்து நிற்கின்றன 


ஒரே ஒரு அடி நகர்வும்  எழுப்பும் ஒலியால்

அடுத்தவர் உரைத்த உணர்ந்திலர் 

ஊமைகள் போல் நின்றார் 


'நெட்ஒர்க் இல்லை ' என்றார் சிலர் 

'இதோ பக்கத்தில் இருக்கிறேன் ' என்பார் சிலர் 

'நெடு நேரமாய் நிற்கிறேன்' என்றோர் பலர்  


படைவெள்ளம் கிளப்பிய தூசி 

விசும்பை முட்டி எண்திசை மூடி

கட்புலம் தீர்த்து நெடுங்கடல் சென்று போர்த்தது 


நோக்கிய திசைகள் எல்லாம் 

தன்னையே நோக்க 

சங்கும் கொம்பும் எக்காளமும் முழங்க 


மண்ணில் சூரியன் என்றோர் தலைவன்

எங்கிருந்தோ சுளுவாய்க் கடந்து போனான் 

இன்னுமோர் மேம்பாலம் திறக்க


3.BMTC  வோல்வோ 

==============

வெளியில் ஓயாத மழை

உள்ளே  எங்கெங்கும் மனிதத் தலைகள் 

இலை உதிர இடமில்லை 


உடைகள் எல்லாம் வெண்மேகம் 

மேல் பிடித்த கைகள் விரிகுடைகள்  

வளைந்து தொங்கும் கைப்பிடிகள் கொக்குகள்  


இடைகள் நெருக்க 

காதின் குழைகள் பாயும்  

அடுத்த புயம் தேடி  


சிந்தை என நில்லா 

பூமியில் நிற்காத  

குதிரைக் கால்கள் 

 

தோள்கள் தூண்கள்

பின்னிய தாமரைக் கால்கள்

தும்பி ஓடும் கண்கள்   

 

கைகள் எல்லாம் போன்கள்

மழையாய் ஷார்ட்ஸ்கள் 

நிலவாய் முகங்கள் 


மறைமதியும்  

முழுநிலவும்  


இரவும் 

பகலும்


4. Antique  

=========


இந்தப் பாதையில் போகும்போதெல்லாம்

சகடத்தில் போவதாய் எண்ணிக் கொள்கிறேன் 


பூமியின் எண்ணாயிரம் கண்களாய்  

விழித்துப் பார்க்கும் இந்தச் சரளைகள் 


ஓர் புறம் 

மென் துகிலாய் வெண் பனியாய் 

கிளம்பிப் படியும் கல்லின் புழுதி  


இன்னோர் புறம் 

பொன்துகளாய் செங்குருதியாய்  

எழும் செம்மண் புழுதி 


சுடலை ஓர் பாதி 

செங்கண்மால் மறுபாதி 

சங்கர நாராயனாய் 

முழுவில் நான்


5. சம்பிரதாயம்   

============


வந்தே பாரத் ரயிலில் வந்தவர்கள் 

சொந்தக் காரில் வந்தவர்கள் 

வாடகைக் காரில் வந்தவர்கள்


உள்ளூர் விமானம் ஏறி வந்தவர்கள்

பல வெளிநாடு விமானங்கள் ஏறி வந்தவர்கள்


மகன்கள் மகள்கள் 

தம்பிகள் தங்கைகள் 

பேரன்கள் பேத்திகள் 


லாட்ஜில் தங்கி வீட்டில் உண்டவர்கள் 

லாட்ஜில் தங்கி ஓட்டலில் உண்டவர்கள் 

வீட்டில் தங்கி வீட்டில் உண்டவர்கள் 


அதிகமாய் அழுதவர்கள் 

அவ்வப்போது அழுது சிரித்தவர்கள்

இடையிடையே பேசியவர்கள் 


டொனால்ட் டிரம்ப் என்றார் 

ஆப் சிந்தூர் என்றார் 


எல்லாம் மங்கலமாய் நடந்தது என்றார் 

இதற்கு மேல் வைத்தியம் பார்த்திருக்க முடியாது என்றார் 

எப்போ திரும்ப ரயில் என்றார் 

எஞ்சியிருக்கும் இவர்  என்ன செய்வார் என்றார் 


இப்போது அவர் சவமாய்க் கிடக்க   

இவரையும் தனியே விட்டு விடாதீர்கள்

என்றார் இறுதியில் 


வந்தே பாரத் 

சொந்தக்  கார் 

வாடகைக் கார்  

உள்ளூர் விமானம் 

வெளியூர் விமானம்   


சரியாய் பிடித்து அவரவர் 

வந்த வழி அவரவர் சென்றார்


6. கண்மூடி இளைப்பாறல்  

=================


தாயின் மடியில் 

தொங்கும் தொட்டிலில் 

மகிழ்ச்சியின் முடிவில்


கால்களின் களைப்பில் 

தகிக்கும் கனலில் 

முடிவிலா செயலிடை 

அவமானப் பட்டபின்  


எல்லாம் செய்தபின்

ஒன்றும் செய்யாமல் 

உடலெல்லாம் நோக


உடல்விட்டு வெளியேறி 

நாலுபேர் தூக்கி 

அந்தரீய வெளியில்


7. நடுவில் நிற்பவர்கள் ( அ ) போக வேண்டாம் சொன்னேன் 

=============================================


'super excited' என்பார் 

'awesome'  என்பார் 

'insane  ' என்பார் 


முதலில் சிறிய  

பொருள்வயின் பிரிவு  

என்றெண்ணியே சென்றார் 


பின்னர் இடையிடை வருகையில் 

ஏன் chaos pathetic corruption  என்பார் 

எல்லாம் super convenient என்பார்


உடல் மனம் அங்கே ஆன 

மற்றொருவரை  கரம் பிடிப்பார் 

உடனே 'சிட்டிசன்' ஒருவரை ஈன்றார் 


இங்கிருந்து அங்கு போன தாதியர்

திரும்பிய பின்  பொழுதோயாமல் 

மகாத்மியம் புராணங்கள் ஓம்பினர் 


kids are independent என்பார்

kids are pampered என்பார் 

ஆடுவார் என்பார் பாடுவார் என்பார்


தமிழும் கலையும் அங்கேயே வளருது என்பார்

வீடியோவில் வயலின் மீட்டுவார் பண் பாடுவார்

நாளெல்லாம் அமர்ந்து ஸ்ட்ரீமிங்லே எல்லாம்  காண்பார்


இங்கு வந்து காது குத்துவார் கயிறு கட்டுவார் 

டிசம்பர் ஒட்டி கல்யாணம் காட்சி என்றால்  வந்துபோவார் 

ICU ஆஸ்பத்திரி என்றால் எண்ணி  முடிவில் எப்போதாவது வருவார்


பிள்ளைக்கு நல்ல கல்லூரியில் இடம் வாங்க 

இடையில் ஒருமுறை தவறாமல் அரங்கேற்றம் செய்து  

விழா எடுத்து படம்பிடித்து ப்ரொபைல் செய்வார் 


சரியாய் சிலர் வந்து 

மைந்தர் பந்தம் பிடிக்க  கொள்ளி வைப்பார்

சிலர் பின்னர் வருவார் சிலர் வருத்தம் தெரிவிப்பார்   


எங்கோ ஒரு சாவோ படுக்கையோ உறுத்த 

உறக்கம் விழித்த  குதிரை போல் குலுக்கி விழித்தெழுவார் 


பெங்களூரோ மெட்றாசோ திரும்பி வந்து 

இங்கிருந்து  அங்கு வாழ்வார் 

 

'super excited' என்பார் 

'awesome'  என்பார் 

'insane  ' என்பார்


8.இருந்திருக்கலாம் தத்துவம் 

=====================


சொல்லாமலே  

செய்யாமலே 


பார்க்காமலே 

கேட்காமலே 


நினைக்காமலே 

மறக்காமலே  


கரையாமலே   

வெறுக்காமலே  


இன்று 

நேற்றாய் 


நேற்று 

முன்தினமாய் 


முன்னே 

முன்னே 


அந்தக் கருவறையில் 

பிறந்தும் பிறவாமலே


9. வாராந்திர ப்ராஜெக்ட் ரெவியூ 

======================

தோல் இழுத்துக் கட்டிய திண்ணெனும் 

சிறுபறை மத்தளம் முழவு முரசு 


குழையும் குழலும் பிளிறும் நாயனமும் 

வெண்சங்கும் எக்காளமிடும் துந்துபியும்  


மார்பிலே அமர்ந்து 

வயிற்றிலே நீளும் பேரியாழ்

  

ஏற்ற இசை அமைத்து 

நூலோர் நெறி பிறழாது 

இசைக்க கூத்தர் விறலியர் 


இன்று எப்படிக் கச்சேரி என்றார் தலைவர் 

தர்பாரில் கம்பீரத்தில் ஆரம்பிக்கலாம் என்றார் 

முகாரியும் இருக்கிறது என்றார் ஒருவர் எழுந்து 


அதெல்லாம் சரி 

துக்கடாவில் என்ன 

அதுவும்  முக்கியம் என்றார் 


எல்லாம் பாடி மங்களமாய் 

மலையில் தோன்றும் எல்லா ஆறுகளும் 

கடலிலே தான் சேரும்

மறக்க வேண்டாம்  என்றார்


10. அயோத்தி ராமனின் கோட்டை அகழி  

============================

பிள்ளை கேட்டது 


தீயவர் புகா 

திருமகள் எப்போதும்  குடியிருக்கும்

அயோத்தி ராமனின் 

கோட்டை அகழி 

எப்படியிருந்திருக்கும்  


நான் சொன்னேன் 


முடிவில்லா அறிவு போல்

விண்புகுவதால் தேவர் போல் 

பெருமையால் ஈசனைப் போல் 

விரிந்த கடல் போல் 


இன்னும் சுருக்கமாய் 

ட்ரம்பின் tariff போல்


11. மூன்று வேறு சாலைகள் 

====================


எப்போதும் போல் முதலாவதில் 

சென்டின் மணம் 

கையில் பூங்கொத்துகள் 

விரித்த தலைகள் 

பிதுங்கும் முலைகள்  

இதில் என்றும் திருவிழா 


இன்னொன்றில் 

கொட்டும் பறைகள்

ஆடிக் களைத்த 

குளறும் கால்கள் 

சொருகும் கண்கள் 

கணபதி பப்பா எவரோ சொல்ல 

'மோரியா ' மட்டுமே  

நாளெல்லாம் சொல்லும்  வாய்கள்

   

மூன்றாவதில் என்றும் போல் 

அந்த ஞாயிற்றுக்கிழமையில் 

உள்ளடைந்த கண்களும் 

ஒடுங்கிய வயிறுமாய் 


கையில் அடுத்த வார 

தக்காளியும் உருளைக்கிழங்கும் 

உருட்டிய கோதுமையுமாய் 

இருட்டில் நடக்கும் 

ஒரு மனிதச் சங்கிலி  


பறப்பன  

திரிவன  

கால காலமாய்  ஊர்வன

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2