Skip to main content

சைக்கிள் பதிவுகள் -4 - வசந்த ராணி



















இன்று திங்கள் கிழமை, கொஞ்சம் கடினமான நாள். எழுந்தவுடன் வேலையைப் பற்றிய நினைப்பு வந்து மனதை மிரட்டும். அடுத்து சரியாக தூங்கி முடித்தோமா என்ற கவலை. ஒன்பதரை மணிக்கு மீட்டிங், அப்போ எவ்வளவு முன்னால் கிளம்ப வேண்டும், அதற்குப் பின் நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தலகாணியிலேயே துவங்கி விடும். ஜன்னல் வழி நூலாய் வர ஆரம்பிக்கும் பகலாகும் இருட்டைப் பார்த்து , இது இன்னமும் கொஞ்சம் நீளாதா என்றே நினைக்கத்  தோன்றும். அன்றைய தினம் உங்கள் தலையணை அடியில் உங்களுக்காக மடித்து வைக்கப் பட்டுள்ளது, இன்று புதிதாய் பிறந்தோம் போன்ற சிந்தனைகள் வரவே வராது.

இப்படி இன்றைய நினைப்பு போய்க் கொண்டு இருக்கும் போதுதான், 1000-ம் மணி படிப்புக்காக புத்தகத்தை எடுக்கச்  சென்றேன். (தினம் ஒரு மணி காலைப் படிப்பு முயற்சி). ஸ்ரீ தனது படுக்கையில் இருந்து புரண்டு இருந்தான் . இரவில் இவன் தூங்குவதற்கு எல்லோரையும் அமட்டுவது என் வேலை. நேற்றும் அவ்வாறே நடந்தது . அம்மாவும் , அக்காவும், சிரித்து அவனை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இவனும் தலையைத்  தூக்கிப்  பார்த்த வண்ணம் இருந்தான். பொதுவாக முகம் இழுத்து போர்த்தியிருக்கும் இவன் முகம் தெரிந்தது. தூங்குகிறானா, விழித்திருக்கிறானா என்று  பார்த்தால் தெரியவில்லை. நான் அவனை கண்ணை முழித்து பார்த்தேன். அவன் வெள்ளைக் கண் திரையும், வெள்ளைப் போர்வையும், பெரிய இரு வெள்ளை முன் பற்களும் தெரிய ஆரம்பித்தன. எனக்கு ஒரு கணம் இரண்டு பற்களும் இரண்டு  வெள்ளைப் பூக்கள் போல் தோன்றின . 

அப்போது தான் அவன் விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

'இதுக்குள்ளவா  எந்திருச்சுட்ட?' என்றேன். 'அப்பா, நல்லா ஏமாந்த !! ' என்று படுக்கையில் எழுந்து இருந்து கீழே குதித்தான். ஹால் நோக்கி ஓடினான். அம்மாவிடம் நான் ஏமார்ந்ததைச் சொல்லி மீண்டும் ஒருமுறை சிரித்தான். கீழே கிடந்த புட்பால் - ஐ இரு கால்கள் நடுவே கிள்ளி மெதுவாய் கன்னத்தில் தட்டும் விதம் தட்டி வீடு பூரா ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று திரும்பவும் அதே இடத்தில விட்டான்.    இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறு இருந்த  எனக்கும் உற்சாகம் பிறந்தது.

இப்போது பெங்களூரில் வசந்த காலம். குளிரும் வெம்மையும் சேர்ந்து முயங்கும் காலம். அதிகாலையில் வீட்டிற்குள் வெம்மையாகவும், வெளியே குளிர்ந்தும் இருக்கும். ஊரே பூக்களால் நிறைந்து இருக்கிறது.

நான் செல்லும் வழியெங்கும் மரங்கள் நிறைந்திருக்கும். சில கிலோமீட்டர்கள் மர நிழலில் செல்ல முடியும் . இன்று அண்ணாந்து பார்த்தவாறு சென்றேன்.

jarul அல்லது  trumpet எனும் வசந்த ராணிப் பூக்கள், இளஞ்சிவப்பு பூக்கள் மட்டுமே இருக்கும் மரத்தில், அதன் மடி எல்லாம் பூக்கள். ஒரு கொப்பில் உள்ள பூக்கள் சேர்ந்து அழகிய சிறு பந்து போல் தோன்றின.

சில நீல வண்ணத்திலும் , மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இம்மரங்கள் தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு லால்பாக்கில் நடப்பட்டன என்று படித்தேன் . ஏன் பூக்கள் மனித மனதிற்கு  இவ்வளவு முக்கியமாய் இருக்கின்றன?.

இரண்டு பருந்துகள் வட்டமிட்டவாறு, விலகி , தன் இறகுகளால்  மோதி, மீண்டும் விலகின. ஒன்றின் கீழ் ஒன்று பறந்து, இடித்த பின் , திரும்பவும் ஒரு நொடி தலை கீழாய்ப்  பறந்து, விழும் முன் , நடு வானத்திலேயே புரண்டு எழுந்தது.

இன்னும் பூக்கள். ஒரு குட்டித் தூரிகை போல் இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும் மழை மரங்கள். வெள்ளையிலும் , இளஞ்சிவப்பிலும் காகிதப் பூக்கள்.

சில மரங்கள் இலைகளை உதிர்க்கத் தயாராய் பழுக்க ஆரம்பித்து இருந்தன. மரங்களின் இலைகள் ஒன்றொன்றாய் கழுவித் துடைத்த வண்ணம் ஒளிர்ந்தன, அப்போது  எண்ணெய் தடவி வாரப்பட்ட தலை போல . பல முறை சைக்கிளை நிறுத்தி நின்று பார்த்தேன். ஆனாலும் ஆபீஸ் போய்ச்சேர வேண்டி இருந்தது. வழியில் வரும் cubbon park -ல் நுழையலாமா என்று நினைத்தேன், இன்று இல்லை. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...