Skip to main content

மறுபிறவி



ஏனோ இரன்டு நாட்களாக புனர்ஜன்மம் என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது.

இந்த வார்த்தை ஒரு கணம் தோன்றும் , புளகாங்கிதமாய் ஆகி, கொஞ்சம் நெஞ்சு கனத்தது போல் மறையும்.

ஆனால் இது இவ்வாறே முடியவேண்டியதாய் இருந்திருக்கிறது.

இவ் வார இறுதி நாட்கள் மதுரையில் . ஏனோ பெங்களூரை விட்டு வெளியே வந்தால், மக்கள் கஷ்டப் படுவது போலேயே தோன்றும். எல்லோரும் நன்றாகவே இருக்கிறார்கள் என்று உள்குரல் மட்டுப்படுத்தும். இந்தக் குரல் இல்லையென்றால் பை காலியாகிவிடும் . 

இன்று மாலை நேர ஒரு சிறு ஊர் சுற்றல்.  நிறுத்தம் 1 முதல் 8 வரை , வட்டப்பாதை. 

டீ பார்சல் வாங்கி கொண்டிருந்த இளைஞர்  மொபைல் போன் கடை வைத்து இருக்க வேண்டும். டீ மாஸ்டர் பத்தாயிரத்துக்குள் ஒப்போ  கிடைக்குமா என்றார். இளைஞர் உதட்டைப் பிதுக்கினார், ரியல் மீயாச்சும் வருமா என்றார். டீயை குடித்துவிட்டு கடையைக் கடந்து போகும் போது, ஒரு தாய் மடியில் குழந்தையுடன் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக இங்கு அனுமதிக்க மாட்டார்கள். குழந்தையின் இரு கால்களிலும் தடித்த மாவுக்கட்டு போட்டு கட்டப் பட்டிருந்தது.  குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 

அப்புறம் கொஞ்சம் நடந்து முடித்து , வாழைத்தண்டு சாறு குடித்தேன். இவர் அய்யா நம்மாழ்வார் தூண்டுதலினால் மூலிகை தேநீர் நடத்துகிறார். தினம் வாழைப்பூ வடை உண்பதற்க்கென்று ஒரு கூட்டம் உள்ளது. பல வருடங்களாக விலை உயர்த்தாமல் ஏனோ கடை நடத்துகிறார். 

இப்போது தான் எதிரே நின்று இருந்த மாருதி வேனை கவனித்தேன். ஒரு கட்டைக்குரல் தானியங்கி ஒலி, யாரும் அருகிலே செல்லவில்லை. 

டிரைவர் , கடைக்காரர் எல்லாம் அவரேதான். டிக்கியை திறந்து வைத்து, உள்ளே தலையைக் கொடுத்து ஏதோ செய்து கொண்டு இருந்தார்.

இந்தப் பக்கக் கதவருகில்  ஒரு பசுமாடு எதையோ வெறித்த வண்ணம் நின்றது. இப்போது ஒரு பெண் ஏதோ கேட்டார், உடனே நகர்ந்து விட்டார். சரவணாஸ் புதுப்பை பின்னால் தொங்கிக் கொண்டு இருந்தது. ஏதவாது விட்டதை வாங்க முயன்றிருக்கலாம். கடைக்காரருக்கு அதிர்ஷ்டம் இன்னும் இல்லை. ஆனால் ஏன் இவர் இரவில் இந்த இருட்டில் ஒதுக்குப் புறமாக விற்கிறார் என்று புரியவில்லை.

சூப் குடித்து முடித்த எனக்கு இவரின் மேல் பரிதாபம் வர ஆரம்பித்து விட்டிருந்தது. இப்போது எனக்கு காலை ஓட்டத்திற்கு ஒரு டீ-ஷர்ட் வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.  மனசு மாறும் முன் ரோட்டைக் கடந்து 'கருப்பு டி -ஷர்ட் இருக்கா ' என்றவாறு உள்ளே பார்த்தேன். 

இருக்கையே இல்லாமல், முழுவதும் துணிகளாலே நிறைந்து இருந்தது. ரோட்டில் எதிரில் இருக்கும் கடைகளின் ட்யூப்  லைட் வெளிச்சத்திலே இந்தக் கடை நடந்து கொண்டிருக்கிறது. மாடு நின்ற இடத்தில் இப்போது கடைக்காரர் இருந்தார். ஒரு கருப்பு , மற்ற எல்லாம் வேற கலர்கள், ஆரஞ்சு உள்பட. அவர் பேசவே இல்லை. எனக்கு இன்னும் பரிதாபம் அதிகரித்தது. 

அடுத்த நொடி  அவர் பேசினார் . 'இது எல்லாமே உங்களுக்கு நல்லா இருக்கும்'. அந்த கறுப்புச் சட்டையை வாங்கினேன். வேஷ்டி வேணுமா என்றார். அவர் காட்டியதை போர்வையோ இல்லை திரைசீலையோ என்றே நினைத்தேன். சட்டையை பையை சிறிது பிரித்து, துணி எவ்வாறு என்று செக் செய்தேன், திருப்தியே. ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார். ஐம்பது ரூபாய் என்றார். இவர் எல்லாம் ஏன் முன்னேற முடிவதில்லை என்று நினைத்தவாறு நடந்தேன். காய் இரண்டு வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். வழக்கமாக வாங்கும் காய்கறி கடைக்காரர். இவர் பை கொடுக்க மாட்டார். இங்கு வரும் போது நம்மிடம் எப்போதும் பை இருக்காது. மற்றொரு முறை கைப்பைக்காக சட்டை கடைக்காரரை நினைத்து காய்கறிகளை , டீ-ஷர்ட் மேல் வாங்கி கொட்டினேன்.

வீட்டிற்கு வந்ததும் சட்டையைப் பிரித்தேன். குண்டுசீயால் அட்டையில் குத்தி வைக்கப் பட்டிருந்தது. கழுத்தில் காலரின் கீழ் ஒரு பெயர். தொங்கிக் கொண்டிருந்த டேக்-ல் வேற ஒரு பெயர். முழுதும் பிரித்தேன், சரியாக  துவைக்காதது போல் தெரிந்தது. 

இப்போது புரிகிறது, எங்கோ அன்றுதான் ஒரு உடலில் இருந்து கழற்றப்  பட்டு, துவைக்கப்பட்டு, கொடியில் உலர்த்தப் பட்டு,  திருடப் பட்டு .....அல்லது அன்று பழைய துணியெல்லாம் வெள்ள நிவாரணத்திற்கு...

உயிருக்கு பல சட்டைகள் ; சட்டைக்கும் பல உடல்கள் , இல்லையா...

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...