Skip to main content

யுகாதி







இன்று யுகாதி , அப்பா யுகாதி அன்றுதான் பிறந்தார். இன்று கூடவே என்னுடைய பிறந்த நாளும் சேர்ந்து விழுகிறது.

சென்ற ஜனவரி 21 அப்பாவின் நினைவு நாள். இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.  அன்று வீட்டிலிருந்தே வேலை பார்த்தேன். அன்று பள்ளிக்கூடத்தை விட்டு வந்த ஸ்ரீ 'அப்பா இன்னைக்கு ஜனவரி 21, என்ன நாள்னு தெரியும்ல'  என்றபடி , பின்னால் புத்தகப் பை , ஒரு கையில் நீளமான உறுமி  மேளக்காரர்கள் சுமக்கிற மாதிரி ஒரு வகை  புட்பால் பையும், மறு கையில் சாப்பாட்டு பையோடு படியில் ஏறினான். 'ஆமாடா , ஞாபகம் இருக்கு' என்றேன். ' அன்னைக்கு நீ அழுகவே இல்ல...நான் வந்ததும் பாத்து சிரிச்ச...இன்னைக்கும் கன்ட்ரோல் பன்னிக்கோ.. ' . வேறு யாராவது அன்று அப்பாவைப் பற்றி வீட்டில் பேசினால்  உஷ் என்று கை காட்டி 'டோன்ட் மேக் ஹிம் க்ரை' என்று பல முறை சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு முறையேனும் நான் அழுவதை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறான். 

நான் அன்றிலிருந்தே அப்பாவைப் பற்றிய நினைவுகளை தொகுத்து எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். மேடமோர்போசிஸ்-ல் வருவது போல் , நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றிய நினைப்பது குறைந்த வண்ணம் இருக்கிறது. நினைக்காத ஒன்று நினைவில் இருந்து நழுவிய வண்ணம் உள்ளது.  அப்பா என்பது ஒரு position - ஸ்தானம், இடம் - என்றே நினைக்கிறேன். இருப்பது எல்லாம் பிள்ளையாவதும், அப்பாவதும் மட்டுமே என்றே தோன்றுகிறது. இன்று நடு வயதில் அப்பாவைப் பற்றி இனிய எண்ணங்களே நினைவில் நிற்கின்றன.   

அப்பா இல்லாதது முதல் ஓரிரு நாட்கள் எனக்கு பெரிதாக தெரியவில்லை. பின்னர் நினைவுகள் ஒரு விதம் மேலேறி, உக்கிரமாகி  கடப்பதற்கு பல மாதங்கள் பிடித்தது. எதாவது ஒரு பொருள் முதல் நினைவைச் தூண்டி ,அந்த ஒரு நினைவே பலவாகி, என்ன செய்ய ஆரம்பித்தோம் என்பதே நினைவில் வராது. அன்றொரு நாள், EB அட்டையில் அவர் கையெழுத்தைப் பார்த்தேன். உலகத்தில் யாராலும் காப்பி செய்ய முடியாது. ஆரம்பப் பள்ளியில் ரேங்க் கார்டில் அப்பா கையெழுத்தை நானே போட்டு கொடுத்து விட்டேன். சிக்கல் என்னவென்றால் மறுமுறை அட்டை கொடுக்கும் போது அதே தப்பைச் திருப்பி செய்ய வேண்டும். ஏதோ ஒரு தைரியத்தில் இம்முறை அவர் கையெழுத்துக்கு நீட்டினேன். 'இது ஏன் கையெழுத்தில்லையே' என்றவாறு முறைத்தபடி இருந்தார். பொதுவாக நான் அடிகள் வாங்கி கட்டுப்படியாகாதவரை பதில் சொல்ல மாட்டேன். இன்னும் முறைத்த படி இருந்தார். அப்பா (இதை விட)  ரொம்ப தீவிர தவறுகளுக்கே அடிப்பார். ' இன்னொரு தடவை செஞ்ச , தொலைச்சுப்  போடுவேன்' என்றார். 

உலகத்திலேயே இரண்டு கைகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் அடிக்கும் ஆள் அப்பாவாக தான் இருக்க வேண்டும். எனக்கு பலமுறை அடி வாங்கும் போது சிரிப்பு வந்து விடும். 

ஊரில் ஒரு சில வருடங்களில் பெரும் தண்ணீர்ப்  பஞ்சம் ஏற்பட்டுவிடும். அப்போது ஊருக்கெல்லாம் சேர்த்து ஒரே கிணறு என்பது இன்று எனக்கு அதிசயமாக தோன்றுகிறது. பெரிய வட்டக் கிணறு , பள்ளிக்குப் பக்கத்தில் இருந்தது. கோடை காலத்தில் ராட்டினம் போட இடம் பிடித்தாக வேண்டும். கிணற்றின் வெளியே பெரிய கற்களைக் குமித்து , கல் இடையில் ஒரு பெரிய கழியை சாய்த்து ஊன்றி , முனையில் ராட்டினம் கட்டியிருப்பார்கள். கிணறு எண்பது ஆடி ஆழம் இருக்கலாம். தாம்புக் கயிறு ஒன்று பத்தாது , இரண்டு கயிறை இணைத்து , முனையில் இரும்பு  வாளி கட்டி நீர் இரைத்து குடத்தில் விடுவார்கள். வட்டக் கிண்ணத்தில் முப்பது நாற்பது ஸ்ட்ரா போட்டு ஒரே நேரத்தில் உறிஞ்சினால் எப்படி இருக்குமோ. தண்ணீர் நோக்கி கட்டற்ற வேகத்துடன் இறங்கும் நீர்வாளிகள், மேல ஏற ஏற திணறி மூச்சு முட்டி அலைபாய்வதும், கடைசியில் மனிதக் கைகள் மீட்டு வெளியேற்றுவதையும் கிணற்றின் விளிம்பில் தலையைக் கவிழ்த்து பார்த்தபடி இருப்பேன். கடும் கோடையில் நீர் இரைப்பதும் , வீட்டில் சென்று ஊற்றி வருவதுவும் கடினமான வேலை.  வீட்டிற்கும் கிணற்றிற்கும் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். அம்மாவோ , அப்பாவோ நீர் இரைப்பார்கள்.  நானோ, அக்காவோ குடம் குடமாய் சுமந்து நிரப்ப வேண்டும். ஆனால் அப்பா இரு தோள்களிலும் இரண்டு குடங்களை எளிதாக தூக்கி வருவார். யாரிடமும் இடையில் மாற்றாமல் வீடு வரை நடந்து விடுவார்.


கீழராஜகுலராமனை ஒரு மாதிரி கிராமம் என்றே சொல்ல வேண்டும். ஊருக்கு வரும் சாலை தோறும் இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருக்கும். ரோட்டின் இடதுபுறம் எல்லாம் நெல் வயல்களாலும், வாழைத் தோட்டங்களாலும் நிறைந்து இருக்கும். நடு நடுவே கிணறுகளும் , ஒட்டி பம்பு செட்டுகளும் இருக்கும். நீரின் விசை என்பதை பம்பு செட்டில் தலையைக் கொடுத்தால் வாங்கலாம். நீரின் வேகம்  பிடரியில் அடித்து கீழே தள்ளிய வண்ணம் இருக்கும். தலை கவிழாமல் இருக்க மேலே நிமிர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் தலை தனியே ஆட ஆரம்பிக்கும், பின்  சிறு வலி வந்து தொங்க ஆரம்பிக்கும். இப்போது தலையை வெளியே எடுத்து, தோளில் நீரை விழச்செய்ய வேண்டும். நீர் இப்போது நம்மை மல்லாத்த முயற்சி செய்யும். மூச்சைப் பிடித்து நீருக்கு முன்னோக்கி நகர வேண்டும். கைகளை நீருக்கு நேரே காட்டினால், 'பிச்சு தனியா எடுக்க முடியாது, பொழச்சு போ ' என்றவுடன் கைகளை பழைய இடத்துக்கு மீட்க வேண்டும். நீர் விழுந்த முதுகு, விழுந்த விசையால் குளித்து வீட்டிற்கு சென்றவுடன் சிறிது அரிக்கும். இது ஒரு விளையாட்டு. அப்பா கிணற்றில் மேல் இருந்து குதித்துக் குளிப்பார். அப்பா வேலை முடித்து வந்த பின், கிணற்றில் மேல் இருந்து குதித்துக் குளிப்பார். எனக்கு நீச்சல் சொல்லித் தர பல முறை முயன்றார்.  சில நேரம்  வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் இரைத்து தலைவழியே மிக நீண்ட நேரம் குளிப்பார். குளித்த பின் நடுத்தெருவில் easy chair போட்டு நீண்ட நேரம் அமர்ந்து இருப்பார்.  அம்மா சொன்னால் , நடுவில் எழுந்து கடைக்குச் செல்வார். பொதுவாக மிக மெதுவாகவே பேசுவார். அம்மா படியில் அமர்ந்து பேசினால், 1 க்கு 100 என்ற கணக்கிலே அப்பா பதில் இருக்கும். தலையை மட்டும் ஆட்டுவார் . இப்போது இது ஒரு தியான நிலை போல் தோன்றுகிறது. 

ரோட்டின் வலது புறம் மிகப் பெரிய கண்மாய். இன்று பெங்களூரில் பார்க்கும் எந்த ஏரியையும் விடப் பெரியது. மூன்று கிலோமீட்டர் சுற்றளவாவது இருக்க வேண்டும்.  அதன் நடு எதிரில் குளம். குளம் முடிந்து ரோடு திரும்பும் வளைவில் ஊரின்  தெருக்கள் ஆரம்பம்.  குளத்தை ஒட்டி ராஜகோபால ஸ்வாமி - பெருமாள் - கோவில். ரோட்டின்  அப்புறம் இருளப்பன், அய்யனார் , குதிரை மேல் கருப்பசாமி , மேலே காவல் பூதம், எதிரில் ஒரு பிள்ளையார் கோவில். பின்புறம் மேல்நிலைப்  பள்ளிக்கூடம், ஒட்டி நூலகம். கோவில் பார்த்த தெருவின் இரு புறமும் வீடுகள். இதே ஊரில் இருந்திருந்தால் அப்பா இன்னும் சில நாள் இருந்திருக்கலாம். கடந்த இடத்தில் இருந்து பின்னால் பார்க்கும் போது வந்த வேகத்தில் பயன் இல்லாதது போல் தோன்றுகிறது. நேற்று scooty-ல் சென்று , முந்திச் செல்கையில் , பின் புறம் காரில் தள்ளப்பட்டு, முன்னால் வந்த காரில் வண்டியுடன் மோதி, தன் scooty-ன் கிடங்கிலேயே நழுவி விழுந்த அந்தப் பெண், அடி வாங்காமல் எவ்வளவு தூரம்  முன்னே சென்றிருப்பார். அந்த கார் ஓட்டி பின்னால் சென்றதால் எதை இழந்தார். தெரியவில்லை. நீர் போகும் போக்கில் , எல்லாவற்றையும் அடித்துச் செல்வது போல், ஒவ்வொரு வாழ்வும் இவ்வாறு பின்னித்தான் உள்ளது.   

தெருவில் இருந்த 60 வீடுகளில் ஒரு பத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அப்பா வேலை பார்த்த அதே கம்பெனியில் வேலை. திருவேங்கடம், அப்பா ஆபிசில் டிரைவர் ஆக இருந்தார். எனக்கு வண்டி ஓட்டுவதில் தீராத மோகம். திருவேங்கடத்தின் ஸ்டோர் லாரியில் அப்பா ஏற்றி விடுவார். இவர் கால்களையும் , கை ஓடுவதையும் பார்த்த வண்ணம் இருப்பேன். லாரியில் அமர்ந்து செல்வது யானையில் செல்வது போலே இருக்கும்.வேட்டியுடனே லாரி ஓட்டுவார்.  இவர் மட்டும் வேட்டியை மடித்துக் கட்டி, காக்கி சட்டையை வெளியே விட்டிருப்பார். 'அம்பி , நான் எந்திச்சுக்கிடுதேன், நீ ஓட்டுதயா', என்பார். சிரித்தால் , 'காலு வளரனும்' என்பார்.   'என்றாவது ஒரு நாள் லாரி ஓட்டிப் பார்த்து விட வேண்டும். 

சம்பளம் வந்த உடன், மாதத்திற்கு ஆகும் பஸ் செலவை நம் கையில் கொடுத்து விடுவார். பாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். கொடுக்க  வேண்டிய எல்லாத்தையும் கொடுத்து முதலில் முடித்து விடுவார். இப்போது எங்கோ ஒரு டயரியை எடுத்தாலும் ஒரே மாதக் கணக்காய் எழுதியது வரும். வெங்கடாசலபதி ரூ 1 என்று ஆரம்பிக்கும். இது எங்கு உள்ளதோ தெரியாது. சுழித்து , சுழித்து பக்கம் பூராம்  எழுதியிருப்பார்.  வரவு, கடன் பாக்கி, வட்டி என்று செல்லும். சில மாதங்களின் பக்கங்களை தொடர்ந்து படித்தால், பெயர்களும், எண்களும்,   ஒரு கதையாய் விரியும். இதனால் தான் என்னவோ என்னை கடன் வாங்க விட மாட்டார். எனக்கு கடன்காரர்களை சமாளிப்பது எளிது எனத் தோன்றும். பார்க்கும் போதெல்லாம் 'எவ்வளவு கட்டி இருக்க , எவ்வளவு பாக்கி , வட்டி எவ்வளவு, சீக்கிரம் கடன  கட்டி முடி' - ஒரு லூப்பில் போட்டு சொல்லிக் கொண்டே இருப்பார். 

ரொம்ப மெனக்கிடாதவர்களுக்கே லௌகீகம் வசப்படுகிறது என்று எண்ணுகிறேன். துரத்திப் பிடிக்க நினைப்பவர்களுக்கு கையில் சிக்காமல் பின் சென்று கொண்டே இருக்கிறது. ஒரு நாளும் பிள்ளைகள் படிப்பைப் பற்றியோ , எதிர் காலத்தில் எப்படி இருப்பேன் என்றோ அப்பா விசனப்பட்டதாக நினைவில்லை. காற்று, தண்ணீர் போல அதுவும் ஒழுகிச் சென்றபடி, மழையில் பெருகி, வெயிலில் காய்ந்து  இருக்கும் என நினைத்திருப்பாரோ என்னவோ.  இன்றைப் போல் திட்டமிடல்கள் அன்று இருந்ததில்லை. ஒரே ஒரு முறை, பத்தாம் பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னர் , ஸ்டடி லீவில் , கிரிக்கெட் விளையாடியதற்கு கோபித்திருக்கிறார். விளையாட்டு மும்முரத்தில் அப்பா எனக்கு கூப்பிட்டவாறு இருந்தது காதில் விழவில்லை. இடையில் ஒரு நூறு மீட்டராவது இருக்கும். கல்லை எடுத்து எரிய ஆரம்பித்தார். நண்பர்கள்  சொல்லி, கண்மாய் வழி வீடு சென்றேன். சாப்பாட்டிற்க்கு முன் என்பதால் கொஞ்சம் வசையே இருக்கும் . என் திட்டம் பேசாமல் சாப்பிட்டு எழுந்து விடுவது . சாப்பிடும் போது  நடுவில் ஒரு முறை 'கிரிக்கெட்டு உனக்கு சோறு போடாது ! படிப்பு தான் சோறு போடும் ' என்று ஒரு முறை சொல்வர். நான் இதற்கும் சத்தமில்லாமல் இருப்பதே செய்வேன்.  என் மண்டைக்குள் இவ்வளவு தூரம் அப்பா கல் ஏறிய முடியுமா என்பதே ஓடிக் கொண்டிருந்தது. நான் அவ்வப்போது  குளத்தில் இக்கரையில் இருந்து மறுகரை ரோட்டுக்கு கல் பிறக்கி எறிந்து கொண்டே இருப்பேன், கிரிக்கெட்டுக்கு பௌண்டரி லைன் துரோவில் உதவும் என்ற நினைப்புடன். அப்பா எறிந்த கல் தாண்டி இருக்குமா ?

கல்லூரியில் அட்மிசனுக்கு செல்லும் வழியில், 'அய்யா ரூவா பெரட்டிருவாயா, இல்லன்னா வேற குரூப் எடுத்துக்குறேன்' என்று கேட்ட பொழுது. 'நீ படிக்குற வேலய மட்டும் பாரு' என்றார். அம்மா  சொல்லிச் செய்த எதையும் வழியில் மாற்ற மாட்டார். டிவி போன்ற சொல்லாமல் செய்த ஒன்றிரண்டை அம்மா சொல்லியபடி இருப்பார்.    

நான் காரைக்குடியில் படித்து முடித்தபோது ஊருக்கு திரும்பி அங்கேயே இருப்பேன் என்றே நினைத்திருந்தார். நான் நேரே பெங்களூர் செல்கிறேன் என்றேன். 'சரி அங்கிருந்து எப்ப வருவ, வரும்போது பெட்டிய பாத்து , ஒன்னும் விற்றாம  கொண்டு வரணும் ' என்றார். வேலைக்குப்பின் என்று மனதில் நினைத்து, முழுங்கி , அமைதியாய் இருந்தேன்.  இது அப்பாவுக்கு விளங்கவேயில்லை. 

இது இடைவெளியின் துவக்கம் என்று அன்று எனக்குத் தெரியவில்லை. வேறு விதமாக எப்படி இருந்திருக்கும் என்றும் தெரியவில்லை. ஆகவே இது இப்படித்தான் இருந்திருக்க முடியும், ஊழ்  . 

அப்பாவின் கடைசி நாட்களில், ஒரு நாள் நான் இறந்து விட்டதாக நினைத்து ஒரே அரற்றுவதாக , அம்மா என்னை அப்பாவிடம் பேச சொன்னாள். உயிருடன் இருப்பதை போனில் எவ்வாறு சொல்வது. 'அய்யா , நான் தான் பேசுறேன்' என்றேன். 'சரிப்பா ஓன் குரல் கேக்குது, நீ இருக்கியா' என்று கேட்டார். 'ரெண்டு நாள் பொறு, நான் வந்துருவேன், ஒன்ன நேர்ல பாக்கேன் ' என்றேன்.  

இப்பொழுது எனக்கு இருப்பது , ஏற்கனவே இருந்த ஒருவரை  இப்போது இல்லை என்று எப்படிச் சொல்வது. இவ்வளவு நினைவுகளுக்கு மத்தியில் . 


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...