Skip to main content

கீழ் நோக்கி வளர்தல்

கீழ் நோக்கி வளர்தல் 



மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ  எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது  . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை.  எங்காவது வெளியில் சென்று வருவது  என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன். 

வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம்  ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி பொழுதைக் கழித்தேன். இருட்டும் முன் பார்க்குகளை மூடி விடுகிறார்கள். நகரில் உட்கார இடம் கிடைப்பது சிரமம். காபி டே போன்ற இடங்கள் இந்த இடைவெளி நிரப்பத் தான், இவை பற்றி மேலே சொல்ல வேண்டியதில்லை. நமக்கே உட்கார இடம் இல்லாத வேளையில், நடு  ஊரில் ஆல மரத்துக்கு இடம் கிடைக்குமா?   

இதற்கு முன் பல முறை இந்தச் சிறிய கோவிலுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆல மரம் கண்ணில் படவில்லை. ஆலமரம் கண்டே சில வருடங்கள் இருக்கலாம். இதற்கு முன் குஞ்சூர் செல்லும் வழியில் அல்லி பூக்கும் சிறு குட்டை மேல் ஒரு சிறிய ஆலமரம் பார்த்த ஞாபகம்.

இவ்வளவு பெரிய ஆல மரத்தைக்  கோவிலின் உள்ளே கண்டதும் என் மனம் எழுச்சி கொண்டது. கோவிலுனுள் ஒரு பெரிய யானையைப் போல் நின்று இருந்தது. ஒரு மாதிரி மரத்தின் போக்கை அட்ஜஸ்ட் செய்து காம்பௌண்ட் சுவருக்குள் அடக்கியிருந்தார்கள். தரையெல்லாம் சிறு இரும்புத்தூண்கள் போல் விழுதுகள். நாகங்கள் போல் இன்னமும் மண்ணில் இடம் தேடி நெளியும் விழுதுகள். சுவருக்கு அப்பால் ஒரு கால் வைத்தவாறு ஒரு பெரிய விழுது வேர் கொண்டிருந்தது. 

எப்போதும் ஆலமரத்தை நினைத்தபின் மனதில் தோன்றுவது ஏனோ மனித மூளையின் படமே. ஒரு பெரிதாக்கப்பட்ட broccoli போலே, கைப்பிடியில் ஒரு ஆலமரம்.  

இந்த ஆலமரம் இன்னும் இங்கே ஊரின் நடுவில் இருப்பதற்கு காரணம் , இது மேல்நோக்கி வளரும் ஒவ்வொரு கணமும் அதனால் கீழ் நோக்கி வளரமுடிவதுமே ஆகும். வேர், தண்டாய்  , இலையாய்  , காயாய் , கனியாய் , விதையாய்  ஆகும் போது, ஏதோ ஒன்று மீண்டும் வேர் நோக்கிச் செல்கிறது. 

மரம் வேர் ஆகிறது..வேரும் மரமாகிறது... 

கணிணியில் search algorithm  என்று ஒன்று உண்டு . தரவுகளை ஸ்டோர் செய்து பின்னர் வேண்டியபோது எடுத்துக்கொள்ள கையாள வேண்டிய வழிமுறை. இதில் ஒன்று மரமாக உருவகப் படுத்துவது. இலைகளை தரவுகள் என்று கொண்டால் , கிளைகளின்  வழியாக எப்படி இலையை விரைவாக  அடைவது. இதில் எங்கு தரவு இருக்கிறது என்பதைப் பொறுத்தும், எவ்வளவு இலை, கிளைகள் இருக்கின்றன என்பதை பொறுத்தும் , தரவைக் கண்டுபிடிக்கும் நேரம் கூடும்.  இதில் recursive(மறுநிகழ்வு) ப்ரோக்ராம் என்று ஒன்று உண்டு. ஒரு நுனியை அடைந்தும் கண்டடைய முடியவில்லையானால், அடுத்த கிளையில் தேட ஆரம்பிக்க வேண்டும். முழு மரத்தையும் ஒரு எறும்பு ஊர்ந்து தேடுவது போல். இதில் recursive(மறுநிகழ்வு) ப்ரோக்ராம் என்று ஒன்று உண்டு.  இதில் கண்டு பிடித்து முடியும் வரை ஓயாத முடிவில்லாத் தேடல் ஒளிந்துள்ளது. தேடும் எறும்பு எல்லா நுனிகளையும் காணும் வரை.  

"The power of recursion evidently lies in the possibility of defining an infinite set of objects by a finite statement. In the same manner, an infinite number of computations can be described by a finite recursive program, even if this program contains no explicit repetitions.  "  - — Niklaus Wirth, Algorithms + Data Structures = Programs,

நம் கண்முன் இருக்கும் முடிவிலியின் தோற்றம் தான் ஆலமரம் என்று தோன்றியது. 

வீட்டில் சென்றவுடன் வெண்முரசின் சொல்வளர்காடு எடுத்துக் படித்தேன். பாண்டவர்கள் சூதில் தோற்று காடேரும் பொது போகும் இரண்டாவது காடாக சுனகம் என்னும் காடு வருகிறது. சௌனகர் குருநிலை, ஆலின் கீழ் அமர்ந்து அவர் சொல்வதாக வரும் வரிகள் இவை:

"இதன் வேர் விண்ணில் விரிந்துள்ளது. கிளைகளோ மண்ணில் பரக்கின்றன. இதன் விழுதுகள் மரங்களாகின்றன. மரங்கள் விழுதுகளாகின்றன. தனிமரமே காடானது. இதற்கு இறப்பே இல்லை. 

"பார், இதோ சூழ்ந்திருக்கும் காட்டின் ஒவ்வொரு இலையும் விண்ணை நோக்கி இறைஞ்சுகிறது. நீர், விண்நீர் என. காற்று, இன்காற்று என. ஒளி, மேலும் ஒளி என. இறைஞ்சுதல் உயிர்களின் அறம் என்றுணர்க! தான் என்று உணர்ந்த அணு மறுகணம் விழைவைச் சூடுகிறது. உயிரை அளிக்கக் கோருகிறது. அன்னத்தைக் கோரிப்பெற்று உடல் சமைக்கிறது. மூச்சை அள்ளிக்கொள்கிறது. வெளிவந்ததும் மொழியை பற்றிக்கொள்கிறது. விழைவின்றி உயிர்கள் இல்லை. விழைவின் புலன் அறியும் வடிவையே உயிர் என்கிறோம்.”

“ஆகவே விழைக! வாழ்வை, வெற்றியை, புகழை, அறத்தை, வீடுபேற்றை. விழைவை வேண்டுதலாக்குக”

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...