Skip to main content

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ...



சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ...

சென்ற வாரம் இருந்த மாலை நேர சந்திப்பால் சைக்கிளை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வீடு வர வேண்டியதாகிவிட்டது. திரும்ப வந்து இன்னும் கொஞ்சம் இழுவல் இருப்பதால் பொட்டல் கடந்து, புழுதி கடந்து, தரிசு கடந்து வந்து சேர நேரமாகிவிடும். கார் ஆட்டோ என்றால் பரவாயில்லை. சரி ,  இதுவும்  சில நாள்களில் நடப்பதுண்டு.  

ஆனால் திரும்ப வாகனம் இல்லாமலே அடுத்த  நாள் சென்று, சைக்கிளை எடுத்து மாமூலாக்க வேண்டும். காலையில் பொதுவாக ஆட்டோ , கார் கிடைக்காது. இன்றும் அப்படித்தான்.  வீட்டில் இருந்து  கொஞ்சம் நடந்து சென்று MG ரோடு செல்லும் புதிதான வோல்வோ பஸ் பிடித்து , வழியெல்லாம் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படித்து, மாயோ ஹால் வந்ததும் இறங்கி , அங்கிருந்து கப்பன் பார்க் ஓரமாய் ஒரு அழகிய காலை நடை நடந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. காதல் தேசம் அப்பாஸ், வினீத் போல , கல்லூரி சாலை  என்று ஒரு நோட்டு மட்டும் இருந்தால் , வானில் சுழற்றி கீழே வரும் போது பிடித்து நடக்கலாம். (இன்றைய நிலவரம் யார் எப்படி எனத் தெரியவில்லை.  இன்றைய கல்லூரி ட்ரெண்ட் கப்பன் பார்க் உள்ளே பார்க்கக் கிடைக்கும் என்றே நினைக்கிறேன் .) நடந்தது என்னவோ வேறு.

நடந்து  கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்து சாலை முனையை அடைந்த போது ஒரு Volvo AC G-2 வண்டி சீட்டுகள் காலியாக போய்க்கொண்டிருந்தது.  ஒரு விசாலமான டிராபிக். சிறிது ஓடினால் நிறுத்துவாரோ என நினைத்தேன். வண்டி எனக்கு முன்னால் சில அடிகளில் போய்க்கொண்டே இருந்தது. நானும் நபிக்கையுடன் பின் சென்றேன். முடிவில் சிக்னல் வந்துவிட்டது. பஸ் போய் விட்டது. 

சிக்னல் கீழே இந்த இடத்தில் புதிதாய் ஒரு பஸ் நிறுத்தம்.  ஆட்கள் நின்று கொண்டே இருந்தால் பஸ் நிறுத்தம் ஆகி விடுகிறது. நடப்பவர் முதலா, பாதை முதலா என்றால் நடப்பவர் தான் முதலில், பின்னர் பாதையில் தான் பஸ் வர முடியும். இங்கு ஒரு கூட்டம் , எல்லோரும் நாம் போகும் வண்டியில் ஏற இருப்பதாக ஒரு  நினைப்பு வந்து விடுகிறது. சட்டென்று கே ஆர்  புரம் வழி , மெட்ரோவில் சென்றால் என்ன என்று தோன்றியது. வெளிச் சுற்று சாலை பக்கம் கால் நகர்ந்தது. Will of the people இங்கும் செல்லும். ஒரு ஐம்பது பேர் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று , ஒரு கணத்தில் சிக்னல் இல்லாத போதே கடப்பார்கள். யாரும் ஒரு வார்த்தை பேச வேண்டியதில்லை , கோஷங்கள் , ஆள் திரட்டல், தலைவர்  தேவையில்லை. 

பேருந்தில் ஏறியதும் உட்கார இடம் கிடைத்தது. பெண் நடத்துனர் அருகில் வந்து POTS மெசின் வைத்து டிக்கெட் போட்டார். சரியாக இறங்கும் இடம் அடித்து , கடைசி விசையை அழுத்தி, பிரின்டரில் பேப்பர் காலி என்றார். பின்னர் எதோ செய்து , இரு முறை பேஜாராகிதே என்று சொல்லி , ஒரு லைன் என்ட்ரியை திரையில் எனக்குக் காட்டி , ஏதோ என்னிடம்  சொன்னார்.  பின்னர் ஒரு பால் பாயிண்ட் பேனாவில் ஒரு வெள்ளைப் பேப்பரில் டிக்கெட் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். எனக்குள்ள அந்த ஒரு வரி எங்கோ காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு நாலைந்து பேர் என்னருகே வந்து அமர்ந்தார்கள். எல்லோரும் யூடூப்பில் இழுத்து விட்ட வண்ணம் வந்தார்கள். நானும் அதை கொஞ்சம் பார்த்த வண்ணம் வந்தேன். ஒரு டிராக்டர் ஒரு நீருள்ள கழனியில் இருந்து , மேடாய் இருந்த மற்றொரு கழனிக்கு குதிரையைப்போல் தாவியது. பின் வாங்கி விழும் எனவே நினைத்தேன். விழுந்தால் அது இங்கு மீம் ஆகாது.

இங்கிருந்து இரண்டு ரயில் பாதைகள் செல்வது எனக்கு தெரியாது. டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம் வந்து வழக்கம் போல் திசைதெரியாமல் ஆனது. ஒரு அம்மாவைக் கேட்டேன், வழி காட்டினார்.  பறக்கும் ரயில் பாதை, பார்த்த ஊர் , பார்க்காத கோணங்கள் காணக் கிடைக்கும். சல்லகட்டா என்று எழுதி ஒரு புகைவண்டி வந்தது. முதல் முறை காதில்படும் பெயர் , ஒரு நிமிடம் மீண்டும் நிற்கும் இடம்  சரிதானா என நினைத்தேன். மீண்டும் ஒரு முறை கேட்டு முடித்து உள்ளேறினேன். சில்லென மெல்லிய குளிர் காற்று சருமத்தில் பட்டது. புது  ஈர மணம் நாசியில் நுழைந்தது. இனி தினமும் இவ்வாறு ரயிலில் வந்தால் என்ன என்று தோன்றியது. ஒரே ஒருவர் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார், இன்னொரு பெண் நின்று படித்துக் கொண்டிருந்தார் . பெரும்பாலும் எல்லாம் மொபைல் பார்த்துக்  கொண்டிருந்தார்கள். ஒரு பையன் பார்த்துக்கொண்டிருந்த காணொளியில் காற்றில் பறக்கும் வண்ணத்  திரையாய் , மெல்லிய அருவிச்  சாரல்   படர்ந்துகொண்டிருந்தது. ஓங்கிய மலைமுகத்தின் ஒடுங்கிய பாதையில் ஒரு ஆணும் பெண்ணும் அருவி நோக்கி செல்வது தெரிந்தது. சென்ற வாரம் குற்றாலம் போனது நினைவில் வந்தது. ஏ சி காற்று மீண்டும் தோலில் பட்டதை உணர்ந்தேன். பென்னிகனஹள்ளி என்ற நிறுத்தத்தை இரு பெண்மணிகள் ஒலிபெருக்கியில் கூறினர். இதுவும் முதல் முறை காதில் படும் ஊரின் பெயர், இந்தப்பகுதி நமக்கு பரிச்சயம். ஆனால் இப்படி ஒரு இடம்? சரி இறங்கிவிடலாம் என நினைத்தேன்.  திசை மாறி வண்டியில் ஏறுவது நமக்குப்  புதிதல்ல.  ஒரு முறை மேலே இருந்த வரைபடம் பார்த்துத் தெளிந்தேன்.  

அல்சூர் முருகன் கோவில் கோபுரம்,  கொடிமரம், மைய மைதானம் எல்லாம் ஒரு திரை விலக்கி மூடிய வண்ணம் தோன்றி மறைந்தன. நீலவான முகட்டில் மொத்த ஊரும் ஒரு மின்விசிறி மெதுவாய் சுற்றுவது போல் சுற்றிக்கொண்டிருந்தது. நொடியில் ஒரு பெரிய அடுக்குமனை விசிறியில் சிக்குகிறது. மின்வண்டி அதை வெட்டி முன் சென்றது. இப்போது , நீல வானம் கடலாய் தோன்றியது , ஊரே நீரும் அலையுமாய். சென்று மறைந்த பழுப்புக்  குடிசைகள் , அலைக்குமிழில் ஒட்டிய மண் துகள்கள். சோமநாதர் கோவில் தெரிகிறதா பார்த்தேன், ஸ்டேஷன் மூடிவிட்டது.மீண்டும் வண்டி உள்ளே பார்த்தேன். வளைந்த பாதையாய் வண்டி, கடைசிவரை சங்கிலிக் கம்பிகளை பற்றிய கைகள்.

கப்பன் பூங்காவில் இறங்கியதும் , நேராக மேலே அலுவலகம். இருக்கையில் அமர்ந்ததும் , கண்ணாடி வெளியே காலைக்கதிர்கள். கண்ணாடியின் வெம்மை தோலில் விழுந்தது. சுற்றிலும் பருந்துகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. புதிய மின்னஞ்சல்கள், புதிய நாள்கட்டியின் சமிக்கைகள் ஒலித்தன. 

மாலை ஒரு வழியாக புறப்பாடு ஆகும் போது மறுபடியும் மெட்ரோ ரயில் நினைவு வந்தது. அப்புறம் பின் பார்க்காமல் லிப்ட்  ஸ்விட்சை சைக்கிள் பார்க்கிங் தளத்திற்கு அழுத்தினேன். முதல் மிதி , அப்புறம் பின் ஓட்டம் எளிது. 

பாதி வழி கடக்கையில் , முன் சென்ற ஒருவர், 'சார், ஹவா கம் கை'  என்றார். அவர் கண் போன திசை பார்த்து , டயரைப் பார்த்தேன், ஏறத்தாழ சப்பையாய் தெரிந்தது. முன்னில்லாவிட்டாலும், இப்போது, எல்லாக் கற்களும் டயரில் ஓங்கிக்  குத்துவது போல் பட்டது. இறங்கித் தொட்டுப்பார்தேன். பாதிக்கு மேல் காற்று இருக்க வேண்டும். சிக்கிய இடம் , நான் முன்னால் சொன்ன அகரா ஏரிக்கு மேல் உள்ள , ஒரு சிறு பாழ் நிலம் (கடைகள் இல்லாத). அதற்க்கு முன்னால் ஒரு சிறு பஞ்சர் கடையும், ஒட்டி ஒரு தேநீர்க்  கடை இருப்பது நினைவில் வந்தது. காற்று அடிக்க வேண்டும் என்றேன். அவர் தான் கடைக்காரர் இல்லை என்றார். எல்லோரும் சேர்ந்து கடைக்காரரைத் தேடினார்கள். அவர் அங்கு இல்லை. தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் என்னையே அடித்துக் கொள்ளச் சொன்னார். குழாயைக் கழற்றி வண்டியின் டயரில் அழுத்திப் பிடுத்தேன். சத்தத்துடன் காற்று உள்ளே செல்வதாகத் தான் நினைத்தேன்.  டயரை தொட்டுப் பார்த்தேன், புலப்படவில்லை. பின் அதையே இரண்டு மூன்று முறை செய்தேன். காற்று இறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் முயற்சி செய்ததில் மொத்ததும் இறங்கி , டயர் தரையில் படுத்து உருள ஆரம்பித்தது. வெள்ளைப் பெயிண்டில் எழுதியிருந்த அவர் நம்பருக்கு போன் செய்தேன். வெளியில் இருப்பதாகவும் இன்னும் அரைமணி ஆகும் என்றார். இரண்டு கீமீ , உருட்டி நடக்க முடிவு செய்தேன். 

இந்த வழியெல்லாம் இடைவிடாது நர்சரிகள். மஞ்சள் , செம்மஞ்சள் கேந்திப் பூக்கள் வைக்கப்பட்ட பூத் தொட்டிகள். கண்மூடி அமர்ந்திருந்த புத்தர் சிலைகள். அவர் பின் நீந்தும் அன்னங்கள். கால்கள் மடக்கி  முதுகில் பெட்டியுடன் அமர்ந்திருந்த ஒட்டகங்கள். வேலை முடிந்து நிறுத்தப் பட்டிருந்த நாற்  சக்கர மிதிவண்டிகள். அருகில் இரவுச் சமையல், விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டொரு பெண்கள் , ஆண்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். காற்றடிக்கும் பம்ப் இருக்குமா என்று கேட்டேன். ஆணொருவர் இல்லை என்றார், பெண் ஹிந்தியில் ஏதோ கேட்டு என்னை நிற்கச்சொன்னார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து  இல்லை என்றனர், நான் முன்னால் நடந்தேன்.  அடுத்த இடத்தில இரண்டு பையன்கள் தேநீர் காய்ச்சி கொண்டிருந்தனர். ஒரு வயதானவர் சேரில் அமர்ந்திருந்தார். காற்றடிக்கும் பம்பு இருக்கிறதா என விசாரித்தேன். உள்ளே சென்று எடுத்துவந்தார். வளர்ப்பு நாய் கால் சுற்றி மோந்து பார்த்தது. இது அந்தக்கால நட்டு உள்ள பம்ப். ஒரு ஸ்க்ரூ போல் வால்ட்யூபில் மாட்ட வேண்டும். நம் சைக்கிளில் வேறு மாதிரி. பரிதாபத்துடன் திரும்ப வாங்கிக்கொண்டார். டீ குடிக்கச் சொன்னார். நன்றி சொல்லி முன் நடந்தேன், பெட்ரோல் பங்கில் பிடிக்கலாம் என்றார்.

பெட்ரோல் பங்க் பஞ்சர் கடையில் ஒரு மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தனர். வாயெல்லாம் கறை , கையெல்லாம் டயரின் நிறம். ஒருவர் பஞ்சர் என்றார். இவர் இல்லை என்றார். ஒரு தாய் போல், வால்ட்யூபை சேர்த்துப் பிடித்து, டயரை கால்களுக்குள் இடுக்கி காற்றை செலுத்தினார். இருபது ரூபாய் நோட்டு தான் இருந்தது. வாங்க மறுத்து விட்டார். மற்றொருமுறை கேட்டேன், பலனில்லை.      

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...