Skip to main content

தொடக்கம் , அ.முத்துலிங்கம் சிறுகதை



பெங்களூர்- ஹைதராபாத் சாலையிலோ அல்லது பெங்களூர் -கிருஷ்ணகிரி சாலையிலோ இருக்கும் ஒரு பீடபூமியை  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நெடுஞ்சாலையின் மிக உயரமான மேடு தெரியும் வண்ணம் கேமரா நிற்கிறது. இப்போது மாதவன் ஒரு ஸ்ப்ளெண்டர் மோட்டார் வண்டியில் , கண்ணளவே உள்ள கறுப்புக் கண்ணாடியுடன் , நீல நிற டெனிம் சட்டை ,  காதுகளில் இயர் போனுடன் பிரேமுக்குள் நுழைகிறார். காதுகளுக்குள் ஒலிக்கும் இசை அவர் முகபாவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உதடு இரண்டும் குவிகிறது, பின் பல் காட்டி சிரிக்கிறது. நமக்கு கேட்குமாறு என்றென்றும் புன்னகை என்று பாடல் ஒலிக்கிறது . அடிக்கடி அவர் முகம் பிரேமில் இருந்து மறைந்து மீண்டும் உள்ளே வருகிறது. கேமரா நின்ற இடத்திலே நிற்கிறது. கானல் பிம்பம் தெரிவது போல் பிசுபிசுத்து மீண்டும் தெளிவாகிறது. நடுநடுவே டைட்டில் கார்டுகள் வந்து விழுகின்றன. இது மணி ரத்தினத்தின் ஒரு படத்துவக்கம். இவ்வாறு இன்றும் நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் கணக்கற்றவர்களின் கூட்டு உழைப்பால், மிகுந்த பொருள் செலவில் உருவாகும் ஒரு திரைப்படம், முதல் சில மணித்துளிகளில் , ஒரு ஸ்குரோல் செய்து தாண்டிச் செல்வது போல் கடந்து செல்லப்படலாம். 

ஒரு நல்ல புத்தகத்தை முன்னுரை காட்டிக் கொடுப்பது போல. நல்ல முன்னுரை வாங்கி விட்டால் ,  புத்தகம் பாதி வென்று  முன் செல்கிறது. பெருங்காவியம் படைத்த கம்பர்  , முதலில் இறைவணக்கம் சொல்லி ஒவ்வொரு படலத்தையும் ஆரம்பிக்கிறார். இன்றும் நினைவு கூறப்படும் இறைவணக்கப் பாடல்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன. கம்பரும் இந்த இடத்தில் மெனெக்கட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு எளிய போற்றி வகை இறை பாடல்களாய் இல்லாமல், அன்றிருந்த இறை தத்துவத்தை பாட்டில் சொல்ல முயன்றிருக்கிறார்.

"உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார்"


ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்; 'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;

'அன்றே' என்னின், அன்றே ஆம்; 'ஆமே' என்று உரைக்கின், ஆமே ஆம்;

'இன்றே' என்னின், இன்றே ஆம்; 'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;

வாழ்க்கையிலும், சொல்லும் முன்னே  எண்ணி எண்ணி, சொல் கோர்த்து சொல்ல வேண்டிய தருணங்கள் நிறைய ஏற்படுகின்றன. நம்முடன் நெருங்கி இருப்பவர்கள் தாம் வழி என்ற ஒன்றை தேர்ந்தேடுத்து , நாம் அவர்களை நம் வழி மாற்ற என்னும் போது சொல்லும் சொற்கள் இவ்வாறு அல்லவா ? தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணி மீண்டவர்களிடம் முன்னும் பின்னும் சொல்லிக் கேட்ட  சொற்கள் நினைவில் எழுகின்றன. 

நாம் என்ன தான் நன்றாய் வேலை பார்த்தாலும் , வேலையைப் பற்றி அடுத்தவருக்கு  எடுத்துச் சொல்வது இன்னும் முக்கியமாகிறது. மேலே இருப்பவர்களுக்கு கடிதம் எழுதுவதோ , அவர்கள் வரும் வேளையில் ஸ்லைடுகளை அடுக்கி விளம்புவதோ நாம் நினைப்பது போல் எளிதல்ல. பொதுவாக முக்கியமான நிர்வாகிகள் படை பரிவாரங்களுடனே வருவார்கள். பரிவாரங்களையும் சமாளிக்கத் தெரிய வேண்டும். அதில் யாருக்கும் யாருக்கும் ஆகாது , யார் பக்கம் சாயலாம் , எங்கு சாயக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டும். பெரியவருக்கு எந்தக் கை வலது கை , எது இடது எனத் தெரிய வேண்டும். 

ஸ்லைடுகளை தயார் செய்வது ஒரு திருவிழா கொடிகட்டுவது  போல் பத்து நாள் முன்னரே ஆரம்பமாகி , தினமும் செய்தாலும் ,கடைசிவரை  முடியாது. தினமும் சரிபார்த்தல் என்ற சடங்கு. வரிக்கு வரி மாற்றச் சொல்லுவார்கள். நீங்கள் உரை நிகழ்த்துபவராக இருந்தால் குழப்பமே மிஞ்சும். எப்படி ஆரம்பிப்பது, எங்கு என்ன சொல்வது, எவர் என்ன கேட்பார், கேள்விக்கு நம் பத்தி என்ன, அந்தக் கேள்விக்கு மறு கேள்வி என்னவாக இருக்கலாம்.  இதற்க்கு நடுவில் வேறு வேலையே  நமக்கிருக்காதா?   இவை எல்லாம் எண்ணி , எண்ணி புகை விட்டு யோசிக்கும் சிவாஜி போல் செய்துகொண்டிருக்கும் போது முகூர்த்த நாள் வந்து விடும். எழுதி இருப்பதை வரிக்கு வரி உரக்கப் படித்துவிட்டு உட்காரவேண்டியது தான். முடிந்தவுடன் ஒரு ஆழ்ந்த நிசப்தம் என்றால் , வண்டி மாடு மேட்டில் படுத்தது என்று பொருள். சேக்கிழார் பெரியபுராணத்துத் தொடக்கத்தை இறைவனே கனவில் வந்து 'உலகெலாம்' என்று எடுத்துக்கொடுத்ததாக படித்திருக்கிறேன். அதன் பின் அவர் மழையாய் பொழிந்திருக்கிறார். இந்த வரம் எல்லோருக்கும் கிடைக்காது. நாம் முதல் சொல்கிடைக்க படும் பாடு திருவிளையாடல் தருமிக்கு கொஞ்சமும் இளைத்ததல்ல. எப்படியோ கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி சொல்ல ஒரு இறையனார் இருந்தாலும் , நாம் சபையில் பாடும் போது பொருட்குற்றம் காண , ஒன்றல்ல , பல நக்கீரர்கள் இருப்பார்கள். நெற்றிக்கண்கள் நம்மை நோக்கி பல திசைகளில் இருந்து சுட வாய்ப்புள்ளது, நாம் காட்ட வாய்ப்பு குறைவு.    

அ. முத்துலிங்கம் அவர்களால் இந்த ப்ரெசென்ட்டேஷன் செய்யும் முன் ஏற்படும் கஷ்டத்தை ஒரு அழகான கதையாக்க முடிந்திருக்கிறது.  29 வது மாடியில் இருந்து வேலைபார்ப்பதன் வசதிகளை , கதைசொல்பவர் வர்ணிப்பதில் கதை ஆரம்பம். உலகை ஆளும் ராஜா போல் எண்ண வைக்கிறது என்கிறார். எனக்கும்  9-வது மாடி வேலை , கீழே இருசக்கர வண்டியில் செல்பவர்கள் எறும்புபோல் தோன்றுவார்கள். மற்றொன்று பறவைகளை பக்கத்தில் பார்க்கலாம் என்கிறார். ஓயாமல் வட்டமிடும் பருந்துகள் என் நினைவில் ஓடின. பருந்துகளே இந்த உயரத்தில் பறக்க முடியும். திறந்து இருக்கும் இவர் அலுவலக ஜன்னலில் சிறகடித்து உள்ளே வந்து , ஒரு கணம்  உட்கார்ந்து பின் விண்ணெழும் என்கிறார்.  

ஆனால் இவர் இருப்பது ஒரு இக்கட்டில். இறங்கும் நிலையில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் பார்க்கும் அவருடைய நிறுவனம் , ஒரு தவறான முதலீட்டில் பணம் இழந்து மூடும் தருவாயில் , முதலீட்டாளர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்க வேண்டும். இவர் பார்வையில் எல்லாமும் கூட்டி கழித்தால் சரிதான், அடுத்ததைப் பாப்போம் : "முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தவர்களுக்கு இது சொர்க்கம். அவர்கள் பணம் எல்லாம் வெள்ளாவி வைத்து (money laundering) வெளியே வந்தது. மீண்டும் புரண்டது. இப்படி இந்த நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.ஆனால் சமீபத்தில் ஒரு மதலை கம்பனியை வாங்கியபோது ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டது. அது இந்த நிறுவனத்தை அதல பாதாளத்துக்கு இழுத்துச் சென்றது.

கருங்குழி (blackhole) என்று சொல்வார்களே, அதுதான். போட்ட முதலீடெல்லாம் போன இடம் தெரியவில்லை. இருந்ததையும் அடித்துக்கொண்டு போனது இந்த பால்குடி மறவாத கம்பனி.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற கதைதான்.."

இவர் சிந்தனையெல்லாம் அன்றைக்கு என்ன சொல்லி வருபவர்களை சரிக் கட்டுவது என்பதிலேயே இருக்கிறது. ‘உண்மை எப்போதும் வெல்லும், உன் பக்கம் திறமையான வக்கீல் இருந்தால்’ என்பது தெரிந்ததே.  


எல்லோரும் கண்முன் தெரிகிறார்கள். சொந்த ஜெட்டில் வருபவர், ஒரே கேள்வியில் எல்லாவற்றையும் நொறுக்குபவர், நிதானமாக ஆறுதலாக பேசுபவர், ஒரு மணி சொல்லவேண்டியதை ஒரு நிமிடத்தில் சொல்பவர் என எல்லோரையும் நினைத்து கவலையில் உட்கார்ந்து இருக்கும் போது தான்,  அந்தப் பருந்து ஐம்பது மைல் வேகத்தில் கண்ணாடியில் மோதி விழுகிறது. 'பூ இதழ்கள் உதிர்வதுபோல அதன் இறகுகள் உதிர்ந்தன.'  பறவையின் துடிப்பு இறங்கி உஷ்ணம் குறைய ஆரம்பித்தது. உதவியாளருடன் பறவையை கீழிறங்கி புதைக்கிறார். அதன் கால்களில் ஒரு வளையத்தைப் பார்க்கிறார். வலசைப் பறவை. எல்லோரும் இவருக்காக காத்திருக்க இவர் அந்த பறவையை பற்றி தேடி அறிகிறார். கடைசியில் பிரசங்கம் செய்யும் இடத்திற்கு வந்து பின்வருமாறு தொடங்குகிறார். இது அவர் மொழி :


"என் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பேனென்று சிலர் எதிர்பார்த் தார்கள். சீமாட்டிகளே, சீமான்களே’ என்று வழக்கமான சம்பிரதாயத் துடன் பேச்சை ஆரம்பிப்பேன் என்று சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் காலை வணக்கம் கூறுவேன் என்று காத்திருந்தார்கள்.

மாறாக நான் ஒன்றுமே செய்யவில்லை. பேச்சு மேடையில் அஞ்சலி செய்வதுபோல சில விநாடிகள் அசையாது நின்றேன். விரித்த சிறகுடன் வேகமாக வந்து கண்ணாடியில் மோதி இறந்து போன அந்தப் பறவையே என் ஞாபகத்திற்கு வந்தது. என் உரையைத் தொடக்கினேன்.

‘ஒரு பறவை இன்று வழி தவறிவிட்டது. சில நிமிடங்கள் முன்பு. வெறும் வெளி என்று நினைத்து அது என் ஜன்னல் கண்ணாடியில் வந்து ஐம்பது மைல் வேகத்தில் மோதியது. தட்சணமே உயிர் பிரிந்துவிட்டது.

‘அதை இப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்.

‘வளைந்த மூக்கும் வெள்ளைத் தலையும் கொண்ட பறவை. சாம்பல் நிறமான செட்டைகள் யாரையும் வசீகரிக்கும் தன்மை உடையவை. இந்தக் கைகளில் விரிந்து அனாதரவாகக் கிடந்தது. அதன் உடம்புச் சூடு ஆறுமுன்பே அது அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

‘இந்த நிறுவனத்தின் தோட்டத்தில், ஒரு அடி ஆழத்தில், அது உறங்குகிறது. ரோஜாப் பதியனுக்கும், அந்தூரியத்திற்கும் இடையில் மரண வாசகம் எழுதாத ஒரு கல்லறையில் அது கிடக்கிறது.

‘இந்தப் பறவையை Saker Falcon என்பார்கள். ருஸ்யாவின் வடகிழக்கு மூலையில் இருந்து குளிர்கால ஆரம்பத்தில் இது புலம் பெயரும். தெற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் பறந்து வந்து வசந்தம் வரும் வேளைகளில் திரும்பிவிடும்.

‘ஐயாயிரம் மைல்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல. சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்துத் திசையறிந்து செல்லும். சரி கணக்காக வந்து கணக்காகத் திரும்பிவிடும்.

‘அப்பேர்ப்பட்ட வல்லமை படைத்த பறவை இன்று ஒரு சிறிய தவறு செய்தது. திரும்ப வேண்டிய ஒரு சிறு திருப்பத்தில் திரும்ப மறந்துவிட்டது. அதனால் அது இறக்க நேரிட்டது. இனி அது தனக்குச் சொந்தமான ருஸ்யா நாட்டின் வடபகுதிக்குத் திரும்பவே போவதில்லை.’

தொடக்க உரையை முடித்துவிட்டு அறிக்கையைக் கையில் எடுத்தேன். சபையோரின் முகங்களைப் பார்த்தேன். அந்த முகங்களை மறைத்த இருள் விலகுவதுபோல் பட்டது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவர்களுக்கு விளங்கியது போலவும் இருந்தது. நான் என்னுடைய உரையை இனிமேல் படிக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படித்தான் நினைக்கிறேன்."


 https://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...