இந்த வாரம் மதுரை வாசம். வழக்கமான நடைக்குமுன் செய்யும் வாய் வழி (டீக் கோப்பை ) 'வார்ம் அப்பின்' போது , எதிரே தலை உயர்த்திப் பார்த்த போது இவர் கண்ணில் பட்டார். கண் தானாக நிலை கொண்டது. ஒரு கணம் P.H. பாண்டியன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அதுவும் ஒரு கடை முன்னே, இல்லை ஒரு மூடிய கடை முன்னே, இல்லை பல நாள் மூடிக்கிடக்கும் ஒரு கடை முன்னே. சென்ற வாரம் திருநெல்வேலி பக்கம் செல்லும்போது P.H. பாண்டியன் என்ற பெயர் ஒரு போஸ்டரில் கண்ணில் பட்டது. உள்ளே ஊறிக் கொண்டிருந்திருக்கிறது.
இது இந்தப் பகுதியின் பிரதான கடைப்பகுதி. ஒட்டுமொத்தமாக ஒரு layout என கற்பனை செய்யலாம். ஆனால் நகரப் பேருந்துகள் உள்ளே வரும். எட்டு நிறுத்தங்கள் மொத்தம். பிரதான சாலையில் இரண்டு, உள்ளே ஆறு. 4,6,7 -ல் வண்டி நிற்காது. மீதத்தை மூளை வேலையாக கொடுக்கிறேன். ஒரு பகுதியில் ஒன் வே இருக்கிறது. மக்கள் அதிகமாகும் போது வண்டிகள் ஒதுங்கியே சென்றாக வேண்டும். மக்கள் அதிகமானால், வேறென்ன, கடைகள். ஒரு மூன்று டீவி பழுதுபார்க்கும் கடைகள் உள்ளன. பகலில் ஒருவர் பின் பகுதியை கழற்றி வைத்து இன்னும் ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறார். என்ன கேட்டாலும் 'பக்கத்துல எலக்ட்ரிக்கல் கடேல கேளுங்க ...நம்மது எலக்ட்ரானிக்ஸ்' என்பார்.
இந்த மையப் பகுதியில் ஒரு மூடிய கடை. இரண்டு ஷட்டர் , நடுவில் ஒரு தூண் வைத்துப் பிரிக்கப் பட்டுள்ளது. இரண்டுக்கும் தனிப்படிகள். படிகள் ஏறி கடையில் நிற்கும் அளவு ஒரு இடை. இந்த படிகளில் தான் இவர் வாசம் செய்கிறார். யாரிடமும் கை நீட்டி கேட்பதாகத் தெரியவில்லை. எனக்கு புதிராக இருந்தது , இவர் கடையின் படிகளில் அடுக்கி வைத்திருக்கும் சாமான்கள். அஜித்- ஷாலினி ஜோடியாக ஒரு புகைப்படச் சட்டம். அது அழகாக ஒரு பிக் பாஸ்கெட் கூடையில் துணிகளின் மேல் , ஒரு கடிகாரத்தின் பின் வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின் ஒரு ஏழுமலையான் அபய கரம் அளித்து நிற்கும் ஒரு படம். அடுத்த நாள் அதைப் பார்க்க முடியவில்லை. இதற்கு மேல் ஒரு ரேடியோ காந்தம் வைத்து ஷட்டரில் மாட்டப்பட்ட ஒரு லலிதாசன விநாயகர், கீழே காலண்டர் . தேதி சரியாக கிழிக்கப் பட்டிருந்தது. அருகில் ஒரு சிவபெருமானின் செவ்வக குடும்பப் புகைப்படம்.
அடுத்த வரிசையில் இன்னும் சில பிக் பாஸ்கெட் கூடைகள். அதனுள் வேட்டி , சட்டை ,துணிமணிகள். ஒரு நாளும் அதே துணி அணிவதில்லை. முகம் பார்க்க ஒரு பைக் கண்ணாடியை வைத்திருந்தார். நான் காலையில் போகும் போது , ஒரு பக்கம் நகர் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களை விட பலமாக இவர் கூட்டித் தள்ளிக்கொண்டிருப்பார். எல்லா பிக் பாஸ்கெட் கூடைகளையும் துணியை வைத்து சுத்தம் செய்த பின் துடைப்பம் போட்டு படிகளை பெருக்கித் தள்ளுவார். பின் போட்டோக்களை துடைத்து வைப்பார். படிக்குக் கீழே ஸ்டாக் செய்திருக்கும் இன்னும் கடிகாரம் போன்ற பொருள்களை எடுத்து துடைத்து, பின் கீழே பெருக்கி மீண்டும் இடத்தில் வைப்பார். குப்பை இவ்வுலகை விட்டு எங்கும் செல்ல முடியாது. ஒருவரின் சுத்தம் மற்றொருவரின் குப்பையாகிறது. ஞானக்கூத்தன் கவிதை ஒன்றில் இலை ஒன்றிற்காக சண்டையிட்ட இரண்டு நாய்க்குரைப்பு, தெரு நாய்களின் குரைப்பாக மாறி, பக்கத்து தெருவெங்கும் பரவி, இறுதியில் நகரமே குரைப்பாக ஆகிவிடுகிறது. குப்பைக்கும் இது சரியே. குப்பை என்பது ஒரு குளோஸ்ட் லூப், நகற்றவே முடியும், அகற்ற முடியாது.
கூட்டி முடித்து சிறிது நேரம் பாரதியார் அட்டினாக்கால் போட்டு அமர்ந்திருப்பார். தெருவில் போவோர் யாரையும் விழியெடுத்து நோக்குவதில்லை. எங்கோ வெளியை நோக்கியே அவர் பார்வை இருக்கும். எதிர் கடையில் பல நூறு பேராவது வந்து போகும் வடைக்கடை. அடுப்பு எரிந்தபடியே இருக்கும். இவர் கண்கள் இங்கும் செல்லாது. இவர் வீட்டை ஒழித்து வந்தவரா? அப்புறம் ஏன் இந்த வீட்டிலிருக்கும் தோரணை? இல்லை விட்டு வந்து திரும்ப இடமில்லாமல் ஆனவரா? நேற்று திருப்பரங்குன்றம் கோவில் முன் அமர்ந்திருந்த யாசகர்களில் ஒருவர் அன்றைய செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அநேகமாக அனைவரும் ஒரு தோள்ப்பையை முன்னையோ , ஓரத்திலோ வைத்து அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் அன்றைய வேலை மட்டும் தான் செய்வதற்கு இருக்கிறது. ஆனால் இனிப்பா , புளிப்பா என்பதே கேள்வி.




Comments
Post a Comment