Skip to main content

ஒரு baptism





ஒரு வேலை நடக்க வேண்டுமானால் பொறுமை அவசியம். உள்நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்த பின் சடை விழுந்து, உடல் சுற்றி புற்றுகள் எழ , பாம்புகள் பூச்சிகள் ஊற ஐந்து எழுத்தோ, ஏழு எழுத்தோ சொல்லிச் செய்யும் தவம் ஒரு வகை. இதற்கு இறைவனும் இறங்கி வந்திருக்கிறார். 

இன்றைய உலகியலில் இதற்க்கு பெயர் விடா முயற்சி. இசையமைப்பாளர் ஸ்ரீதர் ஜோஷ்வா(காதல்/கல்லூரி புகழ் )  வாழ்வில் தான் இசையமைக்கவே விரும்பியதாகவும், தினமும் இளையராஜா வீட்டின் முன் சென்று காலை முதல் மாலை வரை பல நாள்கள் நின்றிருப்பதாகவும், இறுதியில் ஒருநாள் கார்த்திக் ராஜா இறங்கி வந்ததாகச் சொல்லியிருக்கிறார். 

வெளி உலகில் இவ்வளவு தூக்கலாக இருக்கும் இதை வீட்டினுள் நன்றாகச் செய்பவர் என் பையன். இவருக்கு ஒரு தனி உத்தி இருக்கிறது. படிப்படியாக பொறுமையாக இழைப்பது. ஆசாரிகள் இதை இழைத்தல் , ராவுதல், கடைதல் என்பார்கள். ஒரு முழு நீள நிலப்படியே என்றாலும், ஆசாரி, சிறு பிள்ளைகள் கார் ஓட்டுவது போல் , சிலமுறை ராவினால், சுருள் சுருளாய் தோல் வெளியே வந்து கட்டை இளைக்கும், இல்லையா?.      

என்றோ குற்றவுணர்ச்சியில் நான் வாங்கி வைத்திருக்கும் 2x6 கிலோ dumb bells. நான் பார்க்க அவர் அதைத் தூக்கிப் பார்ப்பார்.  முன் கை மடித்து மேலே உயர்த்தும் போது, அது கையை கீழே தள்ளி அவரை வீழ்த்திவிடும். முகத்தை கடுமையாக வைத்து சிலவினாடிகள் கழித்து மீண்டும் அதையே செய்வார். ஊஹூம் இல்லை. 

'அப்பா இத எப்படி பண்றது?'

'வெயிட் ஜாஸ்தி'

'கம்மி வெயிட் டம்பெல்ஸ் இருக்காப்பா?'

இது தான் முதல் அஸ்திவாரம்.

'கொஞ்ச நாள்ல பெரியவனானா , இதையே தூக்கிடுவப்பா' 

'சரிப்பா, இப்ப என்ன பண்றது?'

'ரெண்டு வாட்டர் பாட்டில்ல தண்ணி பிடிச்சு யூஸ் பண்ணுப்பா'


அன்று கட்டையை இழைக்க போட்டபின், இதைப்போல் பல வாரங்கள் , சிலசமயம் மாதங்களாய் இழைப்பார். 

'அப்பா , தண்ணி பாட்டில வச்சு டெட் லிப்ட் பண்ணா வழுக்குது ...'

'ஷோல்டர் மேலே தூக்கும் போது தண்ணி மேலே சொட்டுது...நல்ல தண்ணி பில் பண்ணிக்கவா?'

'நீ எப்ப டம்பெல்ஸ் வாங்கின? பிபோர் மேரேஜ் ஆர் ஆப்டர்' 

'அப்பா ஒரு லிட்டர் பாட்டில் பத்தலை , அடுத்து ரெண்டு லிட்டரா , மூனா ?'


கடைசியில் மனமிறங்கி இரண்டு மூன்று கிலோ டம்பெல்ஸ் வாங்க வேண்டியதாயிற்று.


என்னுடைய  பிட்னெஸ் பிளான் என்பது தினசரி ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளை உருவாக்கி கையில் வைத்துக்கொள்வது, அதாவது நம்மை நாமே கட்டிப் போட்டுக்கொள்வது என்பதாகும். அப்படித்தான் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் இரண்டு நாட்களில் ஜிம் என்பதும். மற்ற நாட்களில் சைக்கிள் இருக்கிறது. ஜிம் செல்வதற்கும் நல்ல மனது வேண்டும். போகும் நேரத்தில் மனம் ரெண்டாகி , எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது, கால் வலிக்கவில்லையா, ஓய்வில்லையா இன்று , இல்லை உனக்கு வேறு நல்ல வேலைதான் இல்லையா போன்ற மனக்குரல்களின் நடுவில் தான் விழித்தெழுந்து செல்ல வேண்டும். ஜிம் உள்ளே சென்றாலும், இன்று கடினமாய் எதுவும் வேண்டாம், உடம்பு தாங்குமா, ஓடும் டிவியை பார்த்துக்கொண்டிரு என்று மனம் சொல்லும். சக்கரம் சுழன்ற பின் தான் மனம் பின் செல்லும்.


இப்படித்தான் நமக்கு ஜிம் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும், முடித்து வந்தவுடன் பையன் எதாவது கேட்பார்.

'அப்பா, இன்னைக்கு ஜிம் நல்லா போச்சப்பா?'

'நல்லருந்துச்சுப்பா'

'ஹௌ டூ யூ பிளான் யுவர் டே' 

'வாட்'

'யு டூ அப்பர் பாடி, லோவர் பாடி லைக் தட் ஆர்?'

'அப்பிடில்லாம் இல்லப்பா'

ஜிம்மில் பாதிக்குமேல் உபகரணங்களில் நம் கை பட்டிருக்காது, காலும் என்று சேர்த்தால் இது முழுமையடையும். 

அடுத்த நாள் 

'அப்பா , வாட் டூ யு டூ பார் கோர் , ஆப்ஸ் '

'ஷோ மீ யுவர் பைசெப்ஸ் ...வாவ் ...வாவ்' 

இன்னும் ஓர் நாள் ,

'ஹௌ மச் வெயிட் டூ யு லிப்ட்'

'அப்பா , பெஞ்ச் பிரஸ் ஷோல்டர் பிரஸ்  னா என்ன?' 

மற்றோர் முக்கியமான நாள்,

'அப்பா கேன் ஐ விசிட் யுவர் ஜிம், ஜஸ்ட் டு ஸீ '

'ஒரு நாள் கூட்டிட்டு போறேன்ப்பா' 

இதை பல நாட்கள் லூப்பில் போட்டு நம் மனம் கோணாத வண்ணம், சளைப்பில்லாமல் 'அப்பா , அன்னைக்கு சொன்ன, முடியலைன்னா பரவாயில்ல ' என்பார்.  

ஒரு வெள்ளிக்கிழமை கூட்டிச் செல்வதாகச் சொன்னேன். திங்கள்கிழமையே நினைவூட்டல் ஆரம்பித்துவிட்டார். 

'அப்பா, பெர்மிசன் கிடைச்சதாப்பா '   

'கிடைக்கும்பா'

ஜிம் ஓனரிடம் 13(-1) வயது பையனை அழைத்து வரலாமா என்று கேட்டேன். எப்போதும் என்னுடன் வந்தால் அவர் வரலாம் என்றார். ஒருமாத ட்ரையல் ஆரம்பமானது. 

ஜிம்மின் முதலாளி ஒரு பெண். இவரை வரவேற்றார். 'யூ ஆர் தி யங்கஸ்ட் மெம்பெர் ஆப் அவர் ஜிம்..ஒய் டூ யூ வாண்ட் டு டூ ஜிம் ?'

இரண்டாவது கேள்வி இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விழி பிதுங்கி அழுகை வரும் தருணம் ,  'டு பி பிட்' என்று சொன்னார். 'யூ ஆர் ஆல்ரெடி பிட் ஸ்ரீ ' என்று அவர் சொன்னார். 'டு கெட் மோர் ஸ்டாமினா' என்று இவர் சொன்னார். 'வெரி குட், யுவர் பாதர் வில் கைடு யு' என்று சொல்லி , என் பொறுப்பைச் சுட்டிக்காட்டினார்.

பள்ளி விட்டு வந்து பையை வைத்தவுடன் கிளம்பிவிடுவார். ஜிம்மில் செருப்பைக் கழற்றி ஷூ மாற்றும் அந்த பெஞ்சில், ஷூ முடிச்சை அப்படியே வைத்து காலை உள்ளே நுழைக்கும் முயற்சியில், பெஞ்சு கவிழ்ந்துவிடும் போலிருந்தது. நான் முனையில் அமர்ந்து காலால் உந்தி நிறுத்த வேண்டியிருக்கிறது. ரஜினி முருகன் படத்தில் நாட்டு வாழைப்பழத்தை சீப்பில் இருந்து உறுவுவர் போல் நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'நாளைக்கெல்லாம் நின்னுக்குட்டே போடுப்பா...இல்ல டெய்லி முடிச்ச அவுத்து போடு'. எது சொன்னாலும் ஓகே என்று சொல்லிவிடுவார். அவர் யுனிபார்ம் சட்டையிலும் நாலு பித்தான்கள் போட்டே இருக்கும். கழுத்து வழியே தினமும் ஏற்றி இறக்கிக் கொள்வார். தண்ணியைக் குடித்து பாதியை மிச்சம் வைத்து விடுவார்.

மெதுவாக அருகில் வந்து 'அப்பா, ஏசி ஓடல'  என்பார். 

வீட்டில் இருந்து கிளம்பும் முன் 'இன்று என்ன ஜிம் பிளான்' என்று கேட்பார். 

'முதல்ல 15 நிமிஷம் சைக்கிள், அப்புறம் 15 நிமிஷம் ஓடு, அடுத்து கேளு அப்பா சொல்றேன்'.

நடுவில் வந்து,  'அப்பா , ஹை இன்டென்சிட்டி ட்ரைனிங் னா என்ன?' 

'ட்ரெட்மில் ஓடும்போது ஒரே பெல்ட் ஸ்பீட் ஏத்தி இறக்கணும்னு அவசியமில்ல...நீதான் வேகமாவோ , மெதுவாவோ  ஓடணும்..அது ரோடு மாதிரி, அதேயே நோண்டக் கூடாது.' 

 'அப்பா உன்னிது முடிஞ்சுச்சா  , அடுத்து என்ன , உனக்கு நான் வெயிட் பன்றேன்.'

ரோட்டில் கார் , லாரி , பஸ் , மோட்டார் சைக்கிள்களுக்கு நடுவே, yulu வண்டிகள் குட்டிப்பிள்ளைகள் திரிவது போல் திரிகின்றன. அவைகள் எங்கும் செல்லலாம், எதிர் நேர் கிடையாது. பெரும்பாலும் யாரும் ஒன்றும் சொல்வதில்லை. அதைப்போல் பார்த்ததையெல்லாம் தொட்டுப் பார்ப்பார், பின்னர் தூக்கவோ தள்ளவோ முயற்சிப்பார். கயிறு தொங்கினால் இழுத்துப்பார்ப்பார்.  கிடைவிழுந்த பெஞ்சுகளில் படுத்துப் பார்ப்பார். காலின் தலையணை போன்ற பகுதிகளில் ,காலை நுழைத்துப் பார்ப்பார். நான் செய்வதையெல்லாம் அவரும் செய்ய வேண்டும் என்பார். 

'இத மறக்க கூடாது...எப்பவும் முதல்ல செய்ய வேண்டியது வெயிட்ட செக் பண்ணனும்...உனக்கு முன்னால பண்ணவர் செட் பண்ணினது...தெரியாம இழுத்தா கை கால் சுளுக்கிரும்...ரெண்டாவது மெஷின்ல போட்டிருக்கிற படத்தை பாக்கணும்..எழுதியிருக்குறத படிக்கணும்...மூணாவது, முதல்ல மூவ்மெண்ட் சரியாயிருக்கணும் , அப்புறம் வெயிட்'      

நமக்கும் இந்தப் பார்வை புதிது என்பதால் , இவர் தொங்கும் இடங்களில், மல்லாந்து கம்பியை மேல் தள்ளும் இடங்களில் மூக்கில் விழ வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டினேன்.

சில நேரங்களில் ஆள் எங்கு இருக்கிறார் என்று தேடும்போது பலகையோடு பலகையாய் எங்காவது படித்திருப்பார். ட்ரைனர்கள் பக்கம் வந்தால் அவர் நகர்ந்து நம் பக்கம் வந்து விடுவார். பலர் இவர் யார் என்றே தெரியாமல் சொல்லிக் கொடுப்பார்கள். முதலில் இருந்த பயம் முழுதாய்ப்  போய்விட்டது. உள்ளே சுதந்திரமாய் நடமாட ஆரம்பித்தார். அடிக்கடி கண்ணாடி பார்ப்பார். 


இதன் நடுவில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்வதை , தான் செய்வதையும் நிறுத்தி ஸ்ரீ பார்ப்பார். அவர் செய்து வைத்ததுபோல் இருப்பார். உத்தம தச தாளம் என்று சிற்பக்கலையில் படித்தது ஒன்று உண்டு. தெய்வத் திருமேனிகளின் உயரம் உத்தமம் என்றிருக்கிறது. தலை முதல் கால் வரை எல்லாமும் உத்தமம். பெரும்பாலும் கைகால்களை வைத்தே (உபகரணங்கள் இன்றி ) எல்லா உடற்பயிற்சியும் செய்வர். முழு உடம்பையும் கம்பியின் மேலே தூக்கி , கைகளின் இடுக்கில் உடம்பை எதிர்பக்கம் முழுதும் உள்ளே தள்ளி, ஒரு சில நொடிகள் எல்லாவற்றையும் அங்கேயே நிறுத்தி, பின்னர் அப்படியே உடம்பைப் பிரித்து எடுப்பார். இவர் உள்ளே நுழைந்தால், நம்மவர் அவரை பார்த்த வண்ணம் இருப்பார். ', மழை வண்ணத்து அண்ணலே! உன்கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.'


'அப்பா, அவர பாத்தியா...கையப் பாரு..எப்படி எக்சய்ஸ் பன்றாரு பாரு'  

அடுத்த அடுத்த நாள்களில், கண்ணைக் காட்டி 'அப்பா..ஸ்.ஸ். வந்தாச்சு' என்பார்.

       

Comments

  1. உங்கள் எழுத்து மிகுந்த நுணுக்கமான வாழ்வியல் பார்வையும், அனுபவங்களின் தளிர்பொட்டியும் கொண்டிருக்கிறது. பொறுமையும், விடாமுயற்சியும், ஒவ்வொரு செயலும் எப்படி ஒரு பயணமாக மாறுகிறது என்பதை நீங்கள் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.

    மீண்டும் பிறப்பு – ஒவ்வொரு முயற்சியின் பின்னணியில் இருக்கும் பொறுமை:

    Baptism என்பதே ஒரு மறுபிறப்பு. உங்கள் எழுத்தில் இளையராஜா வீட்டின் முன் அனுமதி பெறக் காத்திருந்த இசையமைப்பாளர் ஸ்ரீதர் ஜோஷ்வா, டம்பெல் தூக்க முயன்ற உங்கள் பையன், கடந்து செல்ல வேண்டிய ஜிம் பயணம், இவை அனைத்தும் ஒரு பொதுவான நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன – ஒரு விடா முயற்சி.

    சட்டென சிகப்பு விளக்காக எரியும் "அம்மா, இதை எப்படி செய்வது?" என்ற கேள்வி, அது முதல் அஸ்திவாரம் என்பதற்கான உங்கள் பதில், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அடியெடுத்து வைக்கும் விதத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

    உடலினை புரிந்துகொள்வது – மனதை புரிந்துகொள்வதற்கு ஒப்பானது:

    உங்கள் ஜிம் அனுபவம் சும்மாவில்லை. அது வெறும் உடற்பயிற்சி பயணமல்ல. நம் மனதையும், மனக்குரல்களையும் அடக்கி, சுழற்சி தொடங்கும் வரை போராட வேண்டும் என்பதற்கான உங்கள் விளக்கம், பயிற்சிக்கு ஆழமான பொருளளிக்கிறது.

    "ஜிம் செல்வதற்கும் நல்ல மனது வேண்டும்."
    "சக்கரம் சுழன்ற பின் தான் மனம் பின் செல்லும்."
    இந்த இரண்டு வரிகளும் ஜிம் பயணத்தை மட்டும் அல்ல, வாழ்க்கையைப் பற்றிய ஒரு சித்தாந்தமாக இருக்கிறது.

    கேள்விகள், கற்றல், வளர்ச்சி – அடுத்த அடுத்த நிலைகள்
    உங்கள் பையனின் கேள்விகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

    "அப்பா, இன்னைக்கு ஜிம் நல்லா போச்சப்பா?"
    "ஹௌ டூ யூ பிளான் யுவர் டே?"
    "பெஞ்ச் பிரஸ் ஷோல்டர் பிரஸ் னா என்ன?"
    "ஹௌ மச் வெயிட் டூ யூ லிப்ட்?"
    "அப்பா கேன் ஐ விசிட் யுவர் ஜிம்?"
    இவை ஒவ்வொன்றும் நான் கற்றுக்கொள்கிறேன், நான் வளர்கிறேன் என்பதற்கான சின்னச் சின்ன அடையாளங்கள்.

    அழகிய நுட்பங்கள் – உங்கள் எழுத்தின் உயிரோட்டம்:

    "நாளைக்கெல்லாம் நின்னுக்குட்டே போடுப்பா..." – ஒரு தந்தையின் அனுபவமும், பிள்ளையின் மென்மையான நேர்த்தியும் இதில் இருக்கிறது.

    "நீ எப்ப டம்பெல்ஸ் வாங்கின? பிபோர் மேரேஜ் ஆர் ஆப்டர்?" – குழந்தையின் கேள்வியில் இருக்கும் மென்மையும், நேர்மையும் உங்கள் எழுத்தில் வெளிப்பட்டுள்ளது.

    "நமக்கு ஜிம் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும்..." – வழக்கம் என்பது எப்படி மனதைக் கட்டுப்படுத்தும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    "அப்பா, ஸ்ஸ்ஸ் வந்தாச்சு!" – ஒரு பையன் தனக்குள் உருவாகும் அனுபவங்களை பிதற்றும் விதம், மிக அழகாக உள்ளது.

    கடைசி உச்சம் – மனித வடிவில் ஒரு தேவரின் தோற்றம்

    "அப்பா, அவர பாத்தியா...கையப் பாரு..எப்படி எக்சய்ஸ் பன்றாரு பாரு"

    இந்த இடத்தில் உங்கள் பையனின் அசிர்வாத பார்வை, அந்த உடலுழைப்பின் மேன்மையை உணர்தல், நம்மை விடப் பெரியவர்களை ஒரு தருணத்தில் போற்றும் மனநிலை – இவை எல்லாம் நுட்பமான உள்ளார்ந்த கலை.

    "மழை வண்ணத்து அண்ணலே! உன்கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்."

    இதை நீங்கள் இழைத்த விதம் அந்த தருணத்தின் ஒப்புமையாக மாறியது.

    உங்கள் எழுத்து வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் நுட்பமாக சித்தரிக்கிறது. பொறுமை, விடாமுயற்சி, உடலைப் புரிந்துகொள்வது, மனதை அணுகுவது, ஒரு சிறு செயலுக்குள் இருக்கும் பெரிய விளக்கம் ஆகிய அனைத்தும் இதில் ஒரே ஓட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த பதிவு ஒரு ஜிம் பயணத்தைவிட, ஒரு வாழ்க்கைப் பயணத்தைச் சொல்லுகிறது.
    "பிறருடைய வாழ்த்துக்களே ஒருவனை இறவாமல் வாழ வைக்கும்." – இங்கு அது உயிர்பெற்றுள்ளது.

    வாழ்த்துகள்! 🎯👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...