தாழ்வது, தாழ்வு இல் கனக் கரியான் கை...
நேற்று கிருபானந்த வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டபடி வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வாரியார் சொன்ன கம்பனின் ஒரு உவமை தலையில் இருந்தது. கற்பனை செய்து பார்க்கவே கிளர்ச்சியாய் இருந்தது.
வாமனன் மூன்றடி மண் அளக்க ஆரம்பித்து அவன் , முதலில் உயர்ந்தான். அவன் எப்படி உயர்ந்தான் ?
'உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே' , உயர்ந்தவர் ஒருவருக்கு செய்த உதவி போல் வாமனன் உயர்ந்தான்.
இதைக் கேட்டு நான் வேள்விப் படலம் வாசித்துப், பின் அதை எழுத வந்த உந்தலை எழுதும் முன் வாரியார் பேச்சு இப்போது இடையில் தடுக்கிறது. அதற்குள் போய் வெளியேறுவோம்.
இளையான்குடி மாறனார் கதையை சொல்லிக்கொண்டு வந்தார். பேசும்போது சிவனடியார்களுக்கு விருந்தோம்புவது வந்தது. மாறனார் வீட்டு சமையலை அப்படி விவரித்தார். பலாப்பழ பாயாசம், அன்னாச்சிப் பழ மோர்க்குழம்பு பின்னர் வாழ்வில் வறியவரானதும் கேப்பைக் களி , காசினிக் கீரை கூட்டு. புளித்த கீரை என்பார்கள், கீரையை மசித்து பெருங்காயமிட்ட தாளிதம் , இதற்குப் புளி கூட தேவையில்லை என்றார். கொஞ்சம் விழுதாக இருக்கும் என்றார், களிக்கு சேர்த்து விழுங்க சரியாக இருக்கும் என்றார். இன்னொரு இடத்தில் முன்பொரு முறை இருட்டான கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது டார்ச் லைட் ஒளி வந்தது என்றும், என்ன என்று பார்த்தால் ஒருவருடைய கை மோதிரக் கல் ஒளி என்று சொன்னார். எவ்வளவு வசதியானவர் என்று சொல்ல இப்படிச் சொல்லி, அவர் சைவரானார். ஆனபின் எவ்வளவு கோழிகள் பிழைத்தது என்று சொன்னார். வாரத்திற்கு ஐந்து கோழி, மாதத்தில் இருபது என்று கணக்குப் போட்டுச் சொல்லி, இங்கு நீங்கள் எல்லோரும் சைவர்கள், ஒன்றிரண்டு பேர் அசைவர்கள் இருந்தால் எனவே மாறி விடுங்கள் என்று சொன்னார்.
மாறனார் வீட்டில் சாப்பிட்ட சிவனடியார்களின் கணக்குச் சொல்ல பாண்டவர்களின் பெரும்பயணம் பற்றிச் சொன்னார். பெரும்பயணம் என்பது போய்க்கொண்டே இருப்பது. திரும்பாமல் செல்லும் பயணம். ஒரு வழியில் கடைசிப் பயணம். நடந்துகொண்டே இருப்பது என்பது இங்கு ஒரு குறியீடு. பெருவழி என்பது சொர்க்கம் , கைவல்யத்தை குறிப்பது. யோகத்தில் எட்டாவது படிநிலை. முதல் ஏழும் எளிதென்பதல்ல இதன் அர்த்தம்.முதலில் நடக்க முடியாமல் விழுவது திரௌபதி. அவர் விழுந்ததும் தருமரை நோக்கி தம்பிகள் அண்ணா என்கிறார்கள். அண்ணனுக்கு பற்றில்லை, துறந்து விட்டார். முன்னால் போய்க்கொண்டே இருக்கிறார். திரௌபதி எப்பேற்பட்டவள் என்பதை , அவள் வீட்டில் தினமும் லட்சம் அடியார்களுக்கு உணவிட்டாள் என்றார். ஒரு அடியாருக்கு கவனிக்க மூன்று பணியாள்கள். சாதாரணமானவளா, இல்லை. அவள் ஏற முடியாமல் போனதன் காரணம், அவளுக்கு அர்ஜுனன் மேலிருந்த கூடுதல் பற்று.
நகுலன் பற்றிச் சொல்லும்போது அவன் பெரும் ஜோசியன் என்று கோடிட்டுக் காட்டி, அவனும் ஊழ் என்ற ஒன்றை மீற முடியாது என்று கண்ணனிடமே சொல்வதை அழகாக எடுத்துக் கூறினார். அவனிடம் கண்ணன் பாரதப்போர் நடக்குமா என்று கேட்கிறான். அதற்கு அவன் மாட்டு வண்டியில் மாடு எப்போது பூட்டப்படும் என்று மாட்டுக்குத் தெரியுமா? அதை எப்போது பூட்டுவது என்று கேட்டு அனுமதி வாங்கி வண்டிக்காரன் பூட்டுவானா ? கயிற்றைப் பிடித்து பூட்டினால் உள்ளே நுழைய வேண்டியது தான், வேறு வழிகிடையாது. சரி,பூட்டிய பின் அதற்க்கு எங்கு போகிறோம் என்று தெரியுமா? வண்டிக்காரன் ஊர் தான் அது செல்லும் ஊர். அதைத் தீர்மானிக்கவும் அதனால் முடியாது. அதனால் , நகுலன் சொன்ன பதில், கிருஷ்ணனே நீயே அறிவாய் என்பது. சொர்க்கம் புகாமல் அவனும் இரண்டாவதாக வீழ்ந்தான். காரணம் வித்யா கர்வம் என்று சொன்னார். வித்தை கற்றவன் கர்வப்படக் கூடாது என்று சொன்னார். அர்ஜுனன் வீழ்ந்தது , போர் மூன்றுநாளில் முடியும் என்று சொன்ன சொல் காக்க முடியாமையால். வீமன் இன்சொல் சொல்லாததால். கடைசியில் தருமன் மனிதனாய் நாயுடன் சொர்க்கம் புகுந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ராமாயணம் அன்பைச் சொல்லும் நூல், பாரதம் அறத்தைச் சொலவ்து, பெரிய புராணம் அருளைச் சொல்லும் நூல் என்றார்.
மாறனார் வீட்டுக் கஷ்டத்தைச் சொல்லும் போது, வீட்டில் எறும்புக்கும் ஏகாதசி என்றார். கடன் கொடுத்தவன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று ஒரு கதை சொன்னார். முன்னூறு ரூபாய் கடன் கொடுத்தவன் போய்க் கேட்கும்போது , இந்த முன்னூரை நம்பியா நீ பொழப்பு நடத்துகிறாய்? காலையில் உனக்கு வேற வேலை இல்லையா? நான் இந்த முன்னூரை திருப்பிக் கொடுத்தாலும் , வேறு ஒருவனிடம் தானே திருப்பிக் கொடுப்பாய்? இதற்கு என்னிடம் இருந்தால் தான் என்ன?
இராமாயணத்தில் மாய மானைத் தேடிச் சென்ற கதையைச் சொல்லி, விதி வலியது என்று கூறினார். சீதைக்கு இல்லாத பொன்னா , பொருளா? அவள் அரண்மனையில் பார்க்காததா? இவை எல்லாவற்றையும் உதறி பதினான்கு வருடம் காட்டிற்கு வந்தவள் இல்லையா? ஒன்றுமே வேண்டாம் என்று வந்தவள், மாய மானை மட்டும் ஏன் கேட்க வேண்டும்? ராமனுக்கும் வேற வேலை எதுவும் இல்லையா? ஏன் இதை இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்? இதையெல்லாம் சொல்லி விதி வலியது என்றார்.
கொடுக்கும் போது எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. யாருக்குக் கொடுக்கிறோம் என்பதை வைத்தே கொடுப்பதின் மகத்துவம் அமைகிறது. நூறு நாய்க்கு உணவிடுவதை விட ஒரு அடியார்க்கு உணவிடுவது உயர்ந்தது. இதை இன்னும் அழுத்தமாகச் சொல்ல, கம்பனில் வாமனனின் கதைக்குத் தாவினார். மாபலி வாமனனைப் பார்த்து ' உன் கால் மொத்தமே முக்கால் இஞ்சு தான் , மூணு முக்கால் ஒண்ணே கால்...மூணு ஊரு கேளு ..குடுக்கறேன்...' என்கிறான். வாமனனுக்கு தாரை வார்க்க யானையில் நீர் வருகிறது.
வாமனனின் உயரம் சொல்ல குறள் என்ற சொல்லை கம்பர் பயன்படுத்துகிறார்.
நீலநிறத்து நெடுமால் பெரிய ஆலமரம் சிறிய விதையின் உருவாய் இருப்பது போல் அருங்குறள் வடிவாய் ஆனான்.
'நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.'
வேதம் ஓதி ஓதி அவியிட்டு அதனால் அனல் சிவந்த கையினன் , வேத வித்தையே சொல்லும் நாவைக் கொண்டவன். அவனைப் பார்த்ததும் மாவலி எழுந்து வந்து வரவேற்கிறான்.'உன்னைவிட வேறு யார் இங்கு அந்தணர் ? நீ இங்கு வந்ததால் என்னை விட புகழுடையவர் இனி யாருளர்?' என்று கேட்கிறான்.
“நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?
உன்னிடம் வந்தவரே மாண்புடையவர். பிறிதொருவர் மாண்பிலார் என்று வாமனன் சொல்கிறான். 'உனக்கு என்ன செய்ய முடியும் என்னால்?' என்று மறுமொழி சொல்கிறான். இருந்தால், முடிந்தால் மூன்றடி மண் கொடு என்று கேட்கிறான்.
“மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்”
இதைக் கேட்ட சுக்கிராச்சாரியார் அவனுடைய குறளுருவம் கண்டு ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறான். வந்தவன் முன்பொருநாள் அண்டமும் பேரண்டமும் வாயால் உண்டவன் என்கிறார். அடுத்த பல பாடல்களை கம்பர் மாவலி சுக்கிராச்சாரியார் இதைச் சொன்னதற்காக மாவலி காய்ச்சி எடுத்ததைக் காட்டச் செலவளிக்கிறார்.
சரியாக வசைக்கு ஆறு பாடல்கள். மொத்த வாமன அவதாரத்தைச் சொல்ல பத்தொன்பது பாடல்கள். வந்தவர் யார் என்று அவனுக்கு தெரிந்தும் இருக்கிறது. பூமிக்குள் புதைவதும் தெரியுமோ என்னவோ? ஆனால் அவன் சொல்லும் வரிகள் நெஞ்சக் கனகல்லையும் கரைப்பவை.
'சுக்கிரா, நீ நினைத்துத் தான் பேசுகிறாயா? வந்திருப்பவன் நெடுமால் என்றால், என் கை உயர்ந்து , தாழ்வே இல்லாத கரிய அவன் கை தாழ , கேட்டதை கொடுப்பதை விட எனக்கு என்ன பேறு இருக்க முடியும்?
'...என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?”.
வேண்டியவர், வேண்டாதவர் என்று பாராமல் கற்றவன் வித்தை தெரிந்து மட்டும் கொடு என்று நல்ல நூலறிவு வாய்ந்த பெரியார்கள் சொல்லியிருக்கிறார்களே ? இது இவரிடத்தில் செல்லாமல் யாரிடத்தில் செல்லும்?
மேன்மைக் குணம் உடையவர்கள், வள்ளல் தன்மையுடையவர்கள் , உயிரையும் கேட்டால் கொடுப்பார்களே இல்லாமல் , தீச்சொல் சொல்வார்களா? பெறுவதிலும் , கொடுத்தால் உயர்வில்லையா?
கொடுத்தவனைக் காட்டிலும் இங்கு வாழ்ந்தவன் எவன் இருக்கிறான் ? இறந்தாலும் கொடுத்தவன் இறப்பானா ?
”மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?"
சண்டையில் கொன்று அழிக்க நிற்பவன் பகைவன் இல்லை. தகுதியுள்ளவனுக்கு கொடுக்காதே என்று தடுப்பவன் பகைவன். என்னை மட்டும் நீ கெடுக்கவில்லை. உன்னையும் சேர்த்துக் கெடுத்துக் கொள்கிறாய்.
இருக்கும் போதே பிறருக்குக் கொடுத்து புகழ் பெற்று அறம் தேடிக் கொள்வர் அறவாணர்கள். கொடாமை பெரிய மனச்சிக்கல், மனதை அழிக்கும் .
அதனால், இருப்பதை எடுத்து ஒருவர்க்கு கொடுப்பதன் முன்னம் தடுப்பது உனக்கு அழகா? கொடுப்பதை விலக்கி , உன் சொந்தத்தையும், சுற்றத்தையும் அல்லவா உண்பதும் உடுப்பதும் இல்லாமல் தள்ளப் போகிறாய்?
இதையெல்லாம் சொல்லி , வாமனனிடம் திரும்பி,
“அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க” என,
இதைக்கேட்ட, குறளன் ஆகி நிற்கும் நெடிய மால், தாரை நீரில் தன் சிறு கையை கையை நீட்டினான்.
கையில் நீர் பட்டதும் விஸ்வ ரூபம் வளர்ந்தது. எப்படி, உயர்ந்தவருக்கு உதவிய உதவி போல்.
"பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே"
நின்ற கால் பூமியில் பட வேறு இடமே இல்லாமல் பரவிற்று, உலகமே சிறிதென, அப்புறம் இடமில்லாமல் பாவவில்லை.
வானத்தை வென்ற காலானது , வானத்தை சிறிதாக்கி தனக்குள் ஒடுக்குமாறு அடக்கி, இடமில்லாமல் மீண்டது.
அலகு இல்லாத மூன்றாவது அடிக்கு அன்பன் மெய் அது ஆம் !!

Comments
Post a Comment