Translate

சில கவிதைகள்

அலுவலகத்தில் வரம் கேட்டல்


கீழிருந்து மேலே 

வேண்டியது ஒன்று 

கேட்டதும்  ஒன்று 

 

அவருக்கு மேலே 

வேண்டியது ஒன்று 

கேட்டது மூன்று 


அவர் அவருக்கு மேலே 

வேண்டியது இரண்டு 

கேட்பது இரண்டு  


அவர் அவர் அவருக்கு மேலே 

இருப்பதையும் திரும்பக் கொடுக்க முடியுமா? 

இது தலை போகும் வேலையா ?

எதாவது கடன் வாங்கிச் செய்ய முடியுமா?

சரி மீண்டும் பார்க்கலாம்



மீண்டும் கீழிருந்து மேலே 

சரி இப்போது வேண்டியது ஒன்று 

கேட்பது இரண்டு 


யாவர்க்குமாம் ஓர் கைப்பிடி

டம்ளர் தட்டு
கரண்டி கிண்ணம்

மேலே குறுக்கி  கீழே கூம்பாக்கு
அடிக்  கனத்தை சற்று  ஏற்று
சுற்றளவைச் சிறிதேனும் குறை
குழியைக் கொஞ்சம் மேடாக்கு

வட்டமானால் சிறிதாய் அழகாய் ஆகுமா
திடமானதை இன்னும் தளர விடு
தளர்ந்ததை சற்றேனும் நீராக்கு
எதையும் பூப்போல்  நெகிழ்வாய் ஆக்கு 

சிறிய கை உடையவராய் 
யாருக்கும் கொடுத்து அறியாதவரை  
வேலைக்கு வை

பாராமுகம் காட்டி நிற்பவராய் எதிரில் நிற்பவரை
இரப்பவர் போல் கூசச்  செய்பவராய்  இருந்தால் நல்லது

அடுத்த கிண்ணம் கேட்கும்போது தட்டை எட்டிப் பார்க்கச் சொல்
கிண்ணத்தின் முகவரி திருப்பிப் பார்க்கச் சொல்

விலையை மேலும் ஏற்று
அளவை மேலும் குறை

இரு மொழிகள் 
-------------------
துரித கணக்கிடப்பட தாக்குதல்
துரித கணக்கிடப்பட தாக்குதல் 
 
துரித கணக்கிடப்பட்ட எதிர்வினை 
துரித கணக்கிடப்பட்ட எதிர்வினை 

கட்டுப்பாட்டுடன் நடக்கிறோம் 
கட்டுப்பாட்டுடன் நடக்கிறோம் 

அமைதி அவர்கள் கையில் 
அமைதி அவர்கள் கையில் 

பொறுப்புடன் நடக்கிறோம் 
பொறுப்புடன் நடக்கிறோம் 

அவர்கள் யோசிக்க வேண்டும் 
அவர்கள் யோசிக்க வேண்டும் 

பிரம்மாஸ்திரம்- அதைப்பற்றி ஒன்றும் புதிதாய் சொல்லவில்லையே  ' 
பிரம்மாஸ்திரம்- அதைப்பற்றி ஒன்றும் புதிதாய் சொல்லவில்லையே '

அவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் , வெளியே செல்ல வேண்டியதும் அவர்களே; 
அவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் , வெளியே செல்ல வேண்டியதும் அவர்களே; 

நேற்றிரவு கூரை பிளந்தது
தரையில் பள்ளம் விழுந்தது
காலருகில் எரிந்து புகை வந்தது 
ஆண்டவன் கருணையில் தப்பினோம்

நேற்றிரவு கூரை பிளந்தது
தரையில் பள்ளம் விழுந்தது
காலருகில் எரிந்து புகை வந்தது 
ஆண்டவன் கருணையில் தப்பினோம்

டிராபிக் சிக்னல் கவிதைகள் -8 அரிப்பு 


வண்டி ஒட்டிச் செல்லும்போது 

அடுத்த வண்டியை  ஓட்டுபவர் 

போன் பார்த்த படி ஒட்டுகிறாரா 

சிரமத்துடன் எட்டிப் பார்க்கிறேன் 


ஆம் அவர் பார்வை போனில் இருக்கிறது 

கிளர்ந்து கண்ணாடிக்குள் இருந்து 

உரத்த வசைகளை மொழிகிறேன் 


இப்படியே ஒவ்வொரு வண்டியாய்


காலம் என்பது


'லைவ் கிரிக்கெட் என்றால் என்ன?' என்று 

என் சிறு பையனைக் கேட்டேன் 


'பார்வேர்ட் பண்ண முடியாது   

அது தான் லைவ் கிரிக்கெட்' என்றான் 


டிராபிக் சிக்னல் கவிதைகள் -9 - இறை இறங்கி வருதல் 


அந்த டிவைடர் இல்லாத சாலையில் 

இருபுறமும் நகர வழியில்லாமல் 

வாகனங்கள் மூச்சடைத்து நிற்கின்றன 


ஒரு பசுக் கூட்டம்

சாலையைக் கடக்கிறது


தாய்ப் பசு தலையைத் தூக்கி 

நடக்க இடமில்லாமல்

சில நொடிகள் காத்து நிற்கிறது   


சிறு வழி கிடைத்ததும் 

அடுத்த சில கார்களை 

திறமையாய்  தான் கடந்தது  


நடைபாதையில் சுற்றுச்சுவர் தாண்டி    

தனக்கென தாழ்ந்து இருக்கும்  

குல்மோஹர் மர இலைகளை 

நாவால்  வருடும் இளையபசுவை 

முன்சென்று திரும்பிப் பார்த்தது


உடனே அது கீழிறங்கி சாலையில் 

இளவலுடன் பின் இணைந்தது 


இளவல் பின்னால்  நிற்கும் 

மோரிஸ் கராஜ் முன்னர் 

மூத்திரம் பெய்ததைப் பார்த்தது

அடுத்த காரின் பின் நிற்கும் அதற்க்கு

ஒன்றுக்கும்  இரண்டுக்கும் சேர்ந்து வந்தது 


ஹைப்பர் மார்ட்டின் ப்ளூ ட்ரம்மில்

ஒரே நேரத்தில் தலைவிட்டு 

மூவரும் கொஞ்சம் உண்டனர்


முதல் இளவல் ஹைப்பர் மார்ட் 

உள்ளே செல்லும்  இளம்பெண்ணின் 

மஞ்சள் மேல்ச்சட்டையை நுகர நினைத்தது


மெல்லிய மழை சாலையை புதிதாக்கியது  

மேற்கில் வானம் பொன்னொளி காட்டியது

குல்மோஹர் இலைகள் படபடத்து  பொன்மஞ்சளாயின 

வெண் கொக்கு ஒன்று தாய்ப் பசுவின் மேல் 

பறந்து வந்து அமர்ந்தது      

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2