Translate

இன்னும் சில கவிதைகள்

டிராபிக் சிக்னல் கவிதைகள் -4 தவறில்லாமல் போதல்


மிகத் தொலைவில் அடுத்த சிக்னல் 

செல்லும் வழி நிற்கும்  

வண்டிகளால் மௌனமாய் அடைபட்டிருக்கிறது 


காலியாய் கிடந்த  எதிர்த் திசையில் 

முதலில் நான் சென்றேன்


என்னைத் தொடர்ந்தது இரண்டு வூலு வந்தது

பின்னர் பல ஈருறுளிகள்

முடிவில் இரு கார்கள்


காவலர் அந்தப் பக்கம் திரும்பி 

போனை காதில் வைத்தார் 

தவறெல்லாம் சரியாகிப் போனது.     


நட்சத்திரங்களும் பூக்களும் 


எழுதியதை வைத்துக் கொண்டு 

என்ன செய்வது என்று தெரியவில்லை


யார் படித்தார்கள் என்று 

மறுபடியும் பார்க்கிறேன்


பின்னர் எழுந்து எழுதியதையெல்லாம்    

சாளரத்திலன்  வழியே வானில் வீசினேன் 


சில நட்சத்திரங்களாய் மேலே ஒட்டின 

சில பூக்களாய் என் காலடியில் விழுந்தன


டிராபிக் சிக்னல் கவிதைகள் -6


பறக்கும் ரயில் ஓட  

இன்னும் சில வருடங்களெடுத்தால்தான் என்ன 

பரவாயில்லை


அதன் கீழே சாலையில் 

மே மாத வெயிலில்

நிழலிலேயே மெதுவாய் ஓரமாய்

வண்டி ஓட்டலாம் 


டிராபிக் சிக்னல் கவிதைகள் -7 இன்ஸ்டன்ட் டெலிவரி


அந்த இன்ஸ்டன்ட் டெலிவரி  என்ற 

மேல்சட்டை போட்டிருந்த மனிதர்


யாருக்கு என்ன பசியோ

இருப்பாரோ மரிப்பாரோ  

செல்ல வேண்டும் சீக்கிரமாய்


ஒரு நின்ற  காரை   

இடிக்குமாறு ஒட்டிக் கடந்தார் 


ஒரு நாலெழுத்து வார்த்தையை 

சட்டையின் மேலே வாங்கினார் 


மேலே போலீஸ் ஸ்டேஷன் 

வளாகத்தினுள் நுழைந்து 

மீண்டும் ரோட்டில் இறங்கினார் 

அவர் முன்  போக முற்பட்டவர் முன்னே 


ஒரு நாலெழுத்து வார்த்தையை 

சட்டையின் மேலே வாங்கினார் 


ரோட்டை மறித்து தன் 

கட்டிட வாகனங்களுக்கு மட்டும் 

வழி அமைத்துக் கொடுத்த 

காவலரை மீறிச் சென்றார் 


ஒரு நாலெழுத்து வார்த்தையை 

சட்டையின் மேலே வாங்கினார்


நின்றிருந்த நெரிசலின் விளிம்பில் 

வழிந்து லாவகமாய் சிறு தூரம் சென்றார் 

எதிரே வந்தவர் இடை நிறுத்தினார்    


ஒரு நாலெழுத்து வார்த்தையை 

சட்டையின் மேலே வாங்கினார்


நேரே சிகப்பும் வலத்தில் பச்சையும் 

எரிந்த இடத்தில் வலம் போய் 

திரும்ப நேரே வந்தார்

கோபமாய்ப்  பார்க்க மட்டுமே முடிந்த  பலர் 


பல நாலெழுத்து வார்த்தைகளை  

சட்டையின் மேலே வாங்கினார்


எல்லாம் கடந்து  தனக்காக

நின்ற இன்னொரு இன்ஸ்டன்ட் டெலிவரி 

மனிதரிடம் தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார் 


இருவரும் ஒரு கணம் சிரித்துப் பின் மறைந்தனர். 


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2