கடந்த சில தினங்களாக கம்ப ராமாயணம் வாசிக்கும் ஒரு குழுவின் வழியாக ராமாயணப் பாடல்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாரம் ஒரு முறை சில பாடல்கள். இப்போது மீண்டும் இரண்டாவது முறை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள். ஒரு வாரத்தில் பத்துப் பாடல்கள் என்றால் படித்து முடிக்க இருபது வருடங்கள் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டார்கள். நமக்கு வேலை ஒய்வு வந்திருக்கும் , இப்பிறவி வாழ்வில் ஓய்வு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.
ஆகவே இதைக் கடந்து போய்ப்பார்க்கலாம் என்று சிலபஸில் வராததை படித்துப் பார்க்கிறேன். இதன் முன் நாய் நுகர்வது போல் அங்கங்கு வாடை பிடித்துப் போய் கொஞ்சம் படித்திருக்கிறேன். இம்முறையாவது உருப்படும் என நினைக்கிறேன். கம்பர் கவிதை எழுத அவையடக்கம் என்று ஏழு பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார். அதில் தான் எழுத வந்ததை ஒரு பூனை 'ஓசை பெற்ற உயர் பாற்கடல் , முற்றவும் நக்குபு புக்கவும் ' என்று சொல்லிக்கொள்கிறார். படிப்பதற்கே நமக்கு இதற்கு மேலும் , இன்னமும் 'நீங்கலா அலகிலா விளையாட்டுடையவர் ' அருள் வேண்டும். விக்ரமாதித்யன் 'சங்கம் படித்திருந்தால் சீரிய கவிஞன் ஆகலாம் / சிலம்பு படித்திருந்தால் செந்தமிழ் கைக்குள்/' என்று வரிசையில் கம்ப ராமாயணத்தை ஏனோ விட்டுவிட்டார்.
ஆக இந்தப் பாடல்கள் படிக்கும் பொழுது , அதை எடுத்து நம் வாழ்வில் போடுவது எனக்குத் தவிர்க்க முடியவில்லை. அயோத்தியின் மழை வளமும் , சரயுவின் வெள்ளப் பெருக்கும் கடந்த பத்து நாள்களாக பெய்யும் மழையை இன்னும் உற்று நோக்க வைக்கின்றன. பூமியில் இருக்கும் கடல் மேலெழுந்த வண்ணமே ஊர் இருக்கிறது. இரவில் சாளரத்தில் இருந்து பார்த்தால் வெண்ணீறு பூசிய மேகங்கள் பார்க்கலாம். பின்னர் பகல் பொழுதெல்லாம் கார்வண்ணனின் உருவத்திலேயே உயரப் பறந்து கொண்டிருக்கின்றன. வெள்ளப் பெருக்கும் பாடல்களில் பொருந்திப் போவதாய் இருக்கிறது. அதவாது நகை முரணாய். இல்லையென்றால் நமக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறதா தெரியவில்லை.
நேற்று வாழ்வில் முதல் முறையாக ஒகேனேக்கல் செல்லும்படி ஆனது. வைதேகி காத்திருந்தாள் 'மேகம் கருக்கையிலே' பாட்டின் நினைப்போடு வண்டியில் சென்று கொண்டிருந்தேன். இதில் பாட்டைப் பாடி ஆடுபவர் காமெடி நடிகர்களின் கூட்டத்தில் ஒருவராய் வருபவர். கவுண்டமணிக்கு கரகாட்டக்காரனில் உறுமி அடிப்பவர் இவர் என நினைக்கிறேன். இவர் கையை உயர்த்தி , அரைவட்டம் போடுவதும், பின்னர் கையை மாற்றி இன்னொரு அரைவட்டம் போடுவதும், பின்னர் ஒரு காதை மூடி இன்னொரு அரைவட்டம் போடுவதும், ரேவதியின் பரிசல் நடிப்பை இன்னும் உயர்திக் காட்டும். பரிசலில் அமர்ந்து எடுக்கப்பட்ட கமெரா காட்சிகள் , நம்மையும் சேர்த்துச் சுழற்றும்.
கூகிள் மேப்பை நம்பி ஓட்டும்போது ஒரு பத்து இருபது மைல்களுக்கு 'செந்தாழம்பூவில் வண்டாடும் தென்றல்' போன்ற வளைந்து நெளிந்து போகும் பாதை. எத்தனை எதிர் வரும் வண்டிகளுக்கு அவர் நிறுத்தினரோ தெரியவில்லை.
ஒகேனக்கல் ஊரில் இறங்கி மீன் உணவகங்கள் வழியே நடந்தால் ஓரிடத்தில் பரிசல் பிடிக்கும் வழியும் , அருவிக்குப் போகும் வழியும் இரண்டாகப் பிரிகின்றன. மீன் கருவாடுகளுக்கிடையே நிறைய போளி விற்கும் கடைகள். ஒரு அம்மாள் பாதையில் கரி அடுப்பில் போளி செய்து அடுக்கிவிட்டு, விறகை தணித்து கால் நீட்டி அமர்ந்திருந்தார். எல்லாம் கடந்து போனால் ஒரு ஏணிப்பாதையில் நின்று ஒருபக்கம் அருவியும் , இன்னோர் பக்கம் கண்ணை விரிக்கும் நீர்ப் பரப்பையும் , அதில் தாமரை மலரும் இலையும் போல் அங்கங்கே மிதக்கும் பரிசல்கள், அதனுள் தெரியும் தலைகள் , அதற்கெல்லாம் பின் காலாதீதமாய் நிற்கும் மலை எல்லாம் தெரியும் .
சரயு ஆற்றை பலவகையில் வர்ணிக்கும் கம்பர் , மயிலும், பொன்னும் ,மயில்தழைப் பீலியும், யானைத் தந்தமும் ,அகிலும் சந்தனமும் ,பூக்களும் அதன் தாதுக்களும் மிதக்கும், பொன் அளாவி, தேன் அளாவி எல்லாம் சேர்ந்து வானவில் போல் காட்சியளித்தது என்கிறார்.
ஒகேனக்கல் ஆற்றின் வழியில் எங்கெங்கும் என் கண்ணில் பட்டது புடவைகள். நீர்ப்பாலத்தின் அடியில் சிக்கி, புனை வழிபடத் துடிக்கும் ஓர் சேலை , நீரின் ஆழத்தில் தன் மேலே செல்லும் ஓசைக்கடல் அடியில் மௌனமாய் தனக்கென ஓரிடத்தில் மீன் போல் நிலை நிற்கும் ஒரு புடவை , நீரின் போக்கில் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெர்முடாஸ், எங்கெங்கும் துணிகள் தான் கண்ணில் விழுந்தன. ஒருமுறை குற்றாலத்தில் துணிக்கடைக்காரர் , நாம் குளித்து கழற்றிப் போடும் துணிகளை மீண்டும் எடுத்து காய்ந்த பின் விற்பார்கள் என்றார்.
வெள்ளம் வருவதை கம்பர் குடிகாரர்களுடன் ஒப்பிடுகிறார். அவர்கள் குடித்து வரும்போது வாயில் மொய்க்கும் வண்டுகள் போல் ஆற்றில் வண்டுகள் மொய்த்தன. கரையை மதிக்காது, முட்டி மோதி வரம்பு கடந்து வரும் வெள்ளமும் குடிபோதையில் தான் இருக்கிறது. உண்மையில் எங்கு திரும்பினாலும் குடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் (சோறு, குழம்பு , மீன் வாங்கி), குடித்துக் குளித்துக் கொண்டிருப்பவர்கள், குளித்து வெளியேறி இன்னமும் தள்ளாடிக் கொண்டிருப்பவர்கள், தள்ளாடுபவர்களை கைத்தாங்கலாய் கொண்டு போகும் தள்ளாடாதவர்கள், இல்லை தள்ளாடி முடித்தவர்கள், நிதானமாய் குடித்து பின் வேலை பார்க்கும் சில பரிசல் ஓட்டிகள் என்று கம்பர் சொல் இன்னும் இன்று உண்மையை நெருங்கி இருக்கிறது.
மலைப்பெண்கள் இடித்த சுண்ணம் , குங்குமம், ஏலம், சிந்தூரம், நரந்தம், புண்ணை போன்ற பூக்களும் , நறுமணப் பொருள்களோடு அகிலும் சேர்ந்து ஆறு நாறும். இதுபோன்ற எல்லா திணைப் பொருள்களெல்லாம் ஒன்றாய்க் கலந்து விட்டதால் குறிஞ்சி முல்லையாகவும், முல்லை மருதமாகவும், மருதம் நெய்தலுமாய் செல்லுறு திசையில் செல்லும் வினை போல் ஆகின.
இமய மலையில் தோன்றி கடலில் கலக்கும் முன் பலவாறு பிரிந்து பின் மீண்டும் சேர்வது வேதமும் சொல்லற்கரிய நாம ரூபம் பலவானாலும் பரம்பொருள் ஒன்றே என்ற கருத்தைச் சொல்வதாக பாடுகிறார் - 'பொங்கு பல சமயமெனும் நதிகளெல்லாம் /புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே'. சரயுவின் வெள்ளம் சோலை, பொய்கை, காடு எல்லாம் பாய்ந்து, புதுமணல் தடங்கள் தாண்டி, பூ வனம் தாண்டி , நெல்வயலில் பாய்ந்தது ஒரே உயிர் பல உடல்களில் உலாவவுவது போல் என்று சொல்லி முடிக்கிறார்.
கோசல நாட்டின் வளத்தை சொல்லும் கம்பர் பாடலுக்குப் பாடல் 'அட' என்று சொல்லவைக்கிறார். நம்மைப்போன்ற ஆச்சரிய படுவது எப்படி என்று தெரியாதவர்கள் ஓஹோ என்று சேர்ப்பார்கள். வரப்பில் முத்துக்கள், நீர்க்கரையில் செம்பொன், எருமை படிகின்ற குட்டைகளெல்லாம் தாமரை மலர்கள், நெற்பயிர்களெல்லாம் அன்னங்கள் , பரந்த பால் வெளிகளில் பவளங்கள், ஆறு பாயும் அரவம், உழவர்கள் உழுவதால் எழும் அமலை, கரும்பாலை சாறு பாயும் ஓசை, சங்கின் வாய் பாயும் ஓசை, காளை பாயும் தமரம் , நீரில் எருமை பாயும் ஓசை ; சோலையில் மயில்கள் ஆட , தாமரை விளக்குகள் ஏந்த , மேகம் மத்தளம் ஒலிக்க , குவளை மலர்கள் கண்விழித்து நோக்க , மகர யாழ் மீட்டி வண்டுகள் பாட , மருத நாயகி வீற்றிருந்தாள்.
இவ்வளவு எழுதிய பத்தியில் கம்பநாட்டாரின் ஒரு முழுப் பாட்டையாவது பார்த்து எழுதாவிட்டால் நன்றாய் இருக்காது.
நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு;தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை;துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்;பொழிலிடை உறங்கும் தோகை
நாடு அவ்வளவு வளமாக இருக்கும்போது எல்லோரும் நிம்மதியாய் தூங்கலாம். ஒரு பாட்டில் குப்பையில் சேவல் கோழி கிளரும்போது பிரண்டு வரும் மணியை , பறவைகள் உணவென நினைத்து கூட்டில் வைக்கும் என்கிறார். பருந்தின் அதன் நிழலும் போல் பாடுபவர்களும் அதைக் கேட்பவர்களும் இருந்தால் , எல்லோரும் முடிவில் உறங்கத்தான் வேண்டும். எங்கும் பரவியுள்ள பேரிருள் இரண்டாய்ப் பிளந்து சண்டையிட்டது போல் எருமைக் கடாக்கள் தெருவில் சண்டை போடுகின்றன.
ஆக லட்சுமி தாமரை மலரில் உறங்குகிறாள், அவ்வளவு சுபிட்சம். இதைப் படிப்பதில் உள்ள விஷயம் இதை வாழ்வில் பொருத்திப் பார்ப்பது. கம்பர் இவ்வாறு எழுதும்போது எங்காவது சலிப்பும் கசப்பும் வருகிறதா என்று பார்த்தால் , இதைக் காண முடியாது. ஆனால் நமக்கு கண்ணில் விழுவது உலகியல் தான் பெரும்பாலும். அந்த உலகில் இருந்து இறங்கி நடமாட வேண்டியிருக்கிறது. இதைப் படித்த ஹாங் ஓவர் இல்லாமல் இருக்குமா?
இந்த ஹாங் ஓவருடன் KPN சூப்பர் மார்க்கெட் போக வேண்டியது இருந்தது. இதைப் பற்றி ஏற்கனவே ஒரு கதை பண்ணியிருக்கிறேன். சுருக்கமாக இது ஒரு மிடில் கிளாஸ் கடை. மிடில் க்ளாஸ் என்பது ஒரு நினைப்புத்தான். பணக்காரர் எல்லாம் இருந்தும் தன்னை இன்னும் மிடில் க்ளாஸ் என்று நினைக்கலாம். இல்லாதவரும் தன்னை மிடில் க்ளாஸ் என்று உள்ளூர நினைத்துக் கொள்ளலாம். பரம்பொருளை எப்படி விளக்க முடியாதோ அதைப் போல் மிடில் கிளாஸ் சொல்லில் அடங்காது. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்.. இவர்களை எல்லாம் பார்க்கக் கிடைக்கும் இடம் இது. வண்டி வண்டியாக தள்ளி கணவனும், மனைவியும் , நிற்க மாமியாரோ, மாமனாரோ இன்னும் போய் பில் கவுண்டர் முன்னால் வந்த பின்னரும் இன்னும் வாங்கி வண்டியில் போடுவார்கள். கடைசி பணம் கட்டி முடியும் வரை இது நடக்கும். சனி ஞாயிறு என்பதால் இந்த அவசரம் சொல்லி மாளாது.
இப்படி இருக்கும்போது மூன்று கவுண்டரில் முதலாவதில் வந்து இரண்டாவதாக, கையில் கூடையுடன் இணைந்தேன். இரண்டாவதில் நான் போன பத்தியில் சொன்னவர் கடைக்குள் ஒரு கூட்ஸ் ட்ரைனுடன் இருந்தார். என் கவுண்டரில் எனக்கு முன் என்னைவிட உலகாயதம் கம்மி என்று சொல்லக்கூடிய ஒருவர். என்னைவிட வயது அதிகம் இருக்க வேண்டும். அவர் கம்ப்யூட்டரை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் நான் அதை இன்னும் வலுக்கூட்டி பார்த்தேன். ப்ரொஃரெஸ் பார் கொடி வீசுவது போல் காற்றில் வீசி ஆடிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பிக்கை போய் விட்டது. சுற்றிப் பார்த்தேன், மற்ற இரண்டில் இடம் இல்லை. வரிசைக்கு வால் வீங்கி விட்டது, எனக்குப் பின்னாலும் ஒருவர் வந்துவிட்டார்.
விஷயம் எனக்கு முன்னால் இருப்பவர் பற்றி. பின்னால் இருப்பவர் எப்படி இருந்தால் நமக்கென்ன. கைக்கூடையில் இரண்டு MTR குலாப் ஜாமூன் மிக்ஸ் பாக்கெட்கள். ஒரு பெயரில்லாத சர்க்கரைப் பொட்டலம்., ஒரு உருளைக் கிழங்குப் பொட்டலம்,, ஒரு தயிர் பாக்கெட், இவைதான் இப்போது நினைவில் நிற்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒரு மனக்கணக்கு போட்டு என்ன பில் என்று கணித்த பின்னர் தான் வரிசையில் நின்றிருப்பார்.ஆகவே பில் நானூற்றி ஐந்து என்று காட்டியவுடன் அவருக்கு திகைப்பாகி விட்டது. ஜாமூன் மிக்ஸ் பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று நினைத்திருக்கிறார். இவர் கேட்ட விதம் அந்த அம்மாவுக்கு புரியவில்லை. இவருக்கு நாக்கு மேலுதட்டில் ஒட்டிக்கொண்ட பின் தான் ஒலி வெளியே வந்தது. கல்கத்தா பக்கம் இப்படிப் பேசுவார்கள் என்று எனது புரிதல். நான் பை ஒன் கெட் ஒன் கேட்கிறார் என்றேன். அம்மா கணிப்பொறியைத் தட்டி இல்லை என்று பதில் சொன்னார். நம்மவர் அதை பில்லில் இருந்து அழித்து விடுமாறு சொன்னார்.
ஜாமூனை அளித்துவிட்டு பாக்கெட்டுகளை அடியில் போட்டுவிட்டார். ஜாமூனை வைத்து அன்று என்ன திட்டம் வைத்திருந்திருப்பாரோ தெரியவில்லை.
ஜாமூனை அழித்ததும் பில் 245 என்று காட்டியது. இப்போது பர்ஸைத் திறந்து ஒரு நூறு ரூபாய், ஒரு ஐம்பது, ஒரு பத்து எடுத்து அந்த அம்மாள் கையில் கொடுத்தார். பர்ஸில் மேல் பர்த்தில் எங்காவது ரூபாய் நோட்டு இருக்கிறதா என்று பார்த்தேன், பழுப்பு நிற வெல்வெட் உள்பக்கம் மட்டும் தான் தெரிந்தது, அடுத்த வரிசையில் ஒரு இரண்டு பேப்பர் , அந்த இடத்தில் கையில் இருந்த ஐந்து ரூபாய் நாணயம் விழுந்தது, பர்ஸின் வாசல் கேட்டில் இருந்து உருவி ஒரு கார்டை அந்த அம்மாளிடம் கொடுத்தார். அந்த அம்மாள் இதை சிஸ்டம் ஏற்காது என்றார். ஒரு பாதி கார்டு, ஒரு பாதி நோட்டு ஆகாது. ரூபாயை அவர் கையில் திரும்பக் கொடுத்து கார்டில் முழுப்பணத்தையும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். நம்மவர் கார்டில் 245 இல்லை என்று சொன்னார். அந்த அம்மாளுக்கு தலை நோவு வந்துவிட்டது. அடுத்த அம்மாளிடம் ஏன் எனக்கு மட்டும் இப்படி அமைகிறது என்று கேட்டார். இவருக்கும் என்ன செய்யவென்று தெரியவில்லை, இந்த மௌனப் பரிபாஷை ஒரு சில நிமிடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
நான் இப்போது அந்த அம்மாவை இரண்டு பில் ஆக்கச் சொன்னேன். சக்கரையை அளித்து மற்றதை ரசீது போட்டார், நூற்றி அறுபது ரூபாய். என்பது ரூபாய் சர்க்கரையை கார்டில் வாங்கினார்.
இப்போது செய்யாள் அவர் கார்டினுள் இருக்கும் மீதியில் தான் உறங்குகிறாள்.
Comments
Post a Comment