Skip to main content

'கண் இலான் பெற்று இழந்தான் '- பரங்குன்றம் சிட்டி சென்டர்

'கண் இலான்  பெற்று இழந்தான் '- பரங்குன்றம் சிட்டி சென்டர் 




மேலை நாடுகளில் சிட்டி சென்டர் அல்லது ஸ்கொயர் என்று ஊரில் ஒரு இடம் இருக்கும். ஊரின் மிகப் பெரிய சர்ச் , அதை ஒட்டிய கடைத் தெருக்கள் நாலாபுறமும் இருந்து அந்த பெரிய சதுர சதுக்கத்தில் முடியும். சதுக்கத்தில் நடுவில் நூற்றுக் கணக்கான புறாக்கள் சாட்டையை வீசியது போல ஒன்றாய் எழுந்து பறந்து மீண்டும் அமர்ந்து தத்தித் தத்தி  கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். சிலர் உள்ளங்கையில்  சோளத்தை வைத்துக் காட்டினால் , முழங்கையில் உட்கார்ந்து கொத்தி உண்ணும். ஆண்களும் பெண்களும் சதுக்கத்தை ஒட்டி அமைந்த பிஸ்சாரியாக்கள் , கஃபே , பார்களில் மணிக்கணக்காய் அமர்ந்து  வேடிக்கை  பார்த்திருப்பார்கள். சதுக்கத்தில் நடுவில் ஓவியம்  வரைபவர்கள், வயலின் வாசிப்பவர்கள் போன்று எவரையாவது பார்க்க முடியும்.  சதுக்கம் சுற்றி நாற்காலிகள் போட்டிருக்கும். துளி மண்ணைக் காண முடியாத , பாறைகளை பதித்துக் கட்டப்பட்ட கல்பாதைகள்.

இப்படி வேடிக்கை பார்க்க மதுரையில் சிட்டி சென்டர் என்று சொல்லத்தக்க பல இடங்கள் இருக்கின்றன. முதலில் வருவது அன்னை மீனாட்சியைச் சுற்றியிருக்கும் நான்கு கோபுர வாயில்களின் வெளியே ஓடும் நான்கு கோபுர வீதிகள். இப்போது கல்பதித்து, வண்டிகள் இல்லாமல் நன்றாய்த் தான் பராமரித்திருக்கிறார்கள். ஐம்பது , நூறு வருட பலகாரக் கடைகள் போர்டுகளில் வெள்ளை சாக்பீஸால் எழுதப் பட்ட விலைபட்டியலுடன் அங்கங்கே இன்னும் இருக்கின்றன. சிறிய நோட்டுப் புத்தகக் கடைகள்,  அடகுக் கடைகள் கோவிலின் சுவர் பார்த்து நின்றிருக்கும். மாலையில் நடந்தால் கோபுரங்களில் இருந்து தேவாரப் பாடல்கள் காதில் சன்னமாய் கேட்க முடியும். அவை ஏனோ மக்கள் போய் வரும் அன்றாட ஒலியில் பின்னொலி ஆகும் வண்ணம் , ஊன்றிக் கேட்டால் மட்டுமே காதில் விழுகும். சென்ற முறை சிவ வாக்கியரின் ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை / நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்தது. அன்று எனக்கு வாயெடுத்துப் பாடுவதில்  ஒரு வேகம் இருந்தது, நின்று கேட்டது நினைவில் இருக்கிறது.  

மதுரையில் இப்படி எனக்கு அணுக்கமான இன்னொரு சிட்டி சென்டர் திருப்பரங்குன்றம் முருகனின் கோயிலின் சரி முன்னே இருப்பது. நேராகத் தெரியும் வீதிக்கு சன்னதித் தெரு என்று பெயர். நேரே கீழே பார்த்தால் தெரிவது பதினாறு கால் மண்டபம். அதற்குப் பின்னே தொலைவில் தெரிவது நகர நுழைவு வாயில், அதன் கீழ் வலதுபுறம் மேம்பாலம் ஏறினால் அன்னை மீனாட்சியை நோக்கிய பயணம். இடது புறம் எந்த பேருந்தில் ஏறினாலும் , இரண்டாவது நிறுத்தத்தில் வீடு.

கோயிலுக்கு வெளியே நீள வாக்கில் ஓடும் வீதி பெரிய ரத வீதி. அதில் இரண்டு புறமும் இணையும் தெருக்கள் கிழக்கு ரத வீதி மற்றும் மேற்கு ரத வீதி. கோவிலின் படி இறங்கியதும் வலது புறம் பத்தடியில் தேரடி. 

தேரடியில் இருந்து கிழக்கே நடந்தால் சரவணப் பொய்கை , அதன் கீழே கிழக்கே மேலே  ஏறும் மலைப் பாதை காசி விஸ்வநாதர் கோவிலில் போய் முடியும். இதை ஒட்டி பச்சை வயல்கள் விரிந்த வானை முட்டும் நிலம் சட்டென்று சந்ததடியில் இருந்து அகண்ட உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோகும். மலையை ஒட்டி இன்னும் தெற்கே நடந்தால் , சரியாக முருகன் சன்னதிக்குப் பின்புறம் , சமணக் குடைவரை இருக்கிறது. இது முருகன் கோவிலுக்கும் பிந்தைய காலத்தது என்று சொல்கிறார்கள். இது எட்டு சமணப் பள்ளிகளில் முதல். இங்கு பின்னர் பாண்டியன் இந்து சமயத்தை தழுவியவுடன் நிறுவிய விநாயகர் , பராசர முனிவர் சிற்பங்கள் உள்ளன. இதை உமையாண்டவர் கோவில் என்று சொல்கிறார்கள். தென் பரங்குன்றம் என்றும் பெயர். இன்னும் கீழே நடந்தால் மேற்கே மலை மேலே  பஞ்ச பாண்டவர் படுக்கை அல்லது சமணப்பள்ளி வரும்.  அதற்கும் மேலே சிக்கந்தர் மலை என்று தர்கா. இதை இப்போது விளக்க வேண்டியதில்லை. சமீபத்தில் நிறைய விளக்கி விட்டார்கள்.

இன்னும் முன்னே வந்தால் வடக்கே ஒரு கிரிவலம் முடியும். வடக்கு பார்த்து கோவில் அபூர்வம். நுழையும் போது இருப்பது சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம். நாயக்கர் காலத்து 66 தூண்கள் , சஷ்டி மண்டபம் என்பார்கள். ஆறு நாள் விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாதோ , நொந்து, நைந்து, நொம்பலமாய் இருக்கும் பலர் பாவமாய் ஆறு நாள்களும் துணிகளை விரித்து படுத்தும், அமர்ந்தும் இங்கு தான் சஷ்டி விரதம் இருப்பார்கள். தூண்களில் மிக அழகான சிற்பங்கள் இருக்கின்றன. தெய்வானை திருமணக் கோலம். இதைக் கடந்தால் கல்யாண மண்டபம்,. இங்குதான் இப்போது டபுள் டக்கர் கியூ வரிசை இருக்கிறது. ஸ்பெஷல் தரிசனம் நேராய் செல்வது மகா மண்டபம் , வழியில் கீழே வேதவியாசர், பராசரர் சிற்பங்கள் உள்ளன. மகாமண்டபத்தில் நடராஜர், சோமாஸ்கந்தர் , தட்சிணாமூர்த்தி மூர்த்தங்கள் பார்க்கலாம். அதையும் தாண்டி ஆறு படிக்கட்டுகள் ஏறினால் இரட்டைக் கருவறை, இப்போது ஐந்து கருவறை. ஐந்தும் குடைவரை. ஆறு படிகள் பிரணவத்தை குறிக்கின்றன என்று சொல்வார்கள். கிழக்கே பார்த்த சத்திய கிரீஸ்வரர், மேற்கே பார்த்த பவளக் கனிவாய்ப் பெருமாள் அன்னை லக்குமியுடன்  , நடுவில் கொற்றவை , வலப்புறம் அமர்ந்த நிலையில் முருகன் தெய்வானை, இடப்புறம் விநாயகர்.

இப்படி ஒரு இடம் இருந்தால் பொழுது போகாதா? வெய்யிலைச் சகித்துக் கொள்ள வேண்டும். எப்போதும் கோடைதான், பகல் , இரவு, காலை, மாலை வித்தியாசம் கிடையாது. நிலமகள் வெயில் தாங்காமல் ஓட நினைத்தாலும்  எங்கும் ஓடிவிட முடியாது முடியாது; நிலத்து தெய்வங்களும் எங்கும் ஓட முடியாது; மேலே சூரியனும் எங்கும் ஓடாது; வெப்பம் தாளாமல் அவன் குதிரைகளும் ஓடாது; மேலே மேகமும் ஓடாது; வீசும் காற்றும் ஓடாது. எதிரில் இருக்கும் டீக் கடைகளில் நின்று மலையைப் பார்த்தால் கண் சிறிது கூசும். பெரிய சிவலிங்கம் போல் இருக்கும். முதலில் சிவத்தலமாய் இருந்திருக்கிறது. சம்பந்தர் சுந்தரர்  ஆளுக்கொரு பதிகம் பாடியிருக்கின்றனர்.   

“பாரொடு விண்ணும் பகலுமாகிப்
    பனிமால் வரையாகிப் பரவையாகி
நீரோடும் தீயு(ம்) நெடுங்காற்றுமாகி
    நெடு வெள்ளிடையாகி நிலனுமாகித்
தோரோட வரையெடுத்த அரக்கன்
    சிரம்பத்து இறுத்தீர்உம செய்கையெல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள் இது என்
    அடியோமுக்கு ஆட்செய அஞ்சுதுமே”

எல்லாம் முடித்து கீழே இறங்கி வந்து எப்பவும் டீயைக் குடிப்பது வழக்கம். அருகில் கோவிலைப் பார்த்து கைக் குத்தல் அவல் விற்கும் ஒரு பெரியவர் இருக்கிறார். கொரானா காலத்திற்கு முன் இருந்து அவல் ஒரு லிட்டர் நாற்பது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார். காலையில் எட்டு மணிக்குச் சென்றால், அடிதண்டா பூட்டை திறந்து , அடுக்கிய பலகைகளை வெளியே எடுத்து , உள்ளே ஆழத்தில் இறங்கி அவல் , பொரி , கடலை மூட்டைகளை உள்ளே இருக்கும் ஒரு பெஞ்சை வெளியே வைத்து மேலே  வைப்பார். 

அவர் கடைக்குப்பின் உப்புத் தண்ணி நாடார் கடை என்று ஒன்று இருக்கிறது. நூற்றுக் கணக்கான கண்ணாடி பாட்டில்கள் , தகர டின்கள், விசிறி , கயறுகளுக்கு நடுவே , கூர்ந்து பார்த்தால் தலை மட்டும் தெரியும்படி வார் பனியன் போட்டு , உடம்பெல்லாம் கல்லா பள்ளத்துள், அப்போது தின்ற கடலைப் பருப்பு ஓர வாயில் தெரிய உட்கார்ந்திருப்பார், கேட்டதையெல்லாம் அவர் ஒரு முறை வாயால் சொல்ல வேலையாள் எடுத்துத் தருவார். இவர் ஒரு கிளிப் மாட்டிய பேப்பரில் கூட்டிப் போட்டு காசு வாங்குவார். அந்த அம்மாள் பையனால் சமாளிக்க முடியாத கூட்டம் என்றால் மட்டும் பின்னால் இருக்கும் வீட்டில் இருந்து வந்து கை கொடுப்பார்.

கோயிலை ஒட்டி சாரை சாரையாக பிச்சைக்காரர்கள் கடைகளைப் பார்த்து அப்பன் முருகனின் பிரதிநிதிகளாய் அமர்ந்திருப்பார்கள். கோயிலின் கீழ் அடர்த்தியாய், போகப் போக உதிரியாய் , மேம்பாலம் வரை காவி அணிந்த யாசகர்ககளை, நாடோடிகளை, கைவிடப்பட்டவர்களை, முருகனிடம் அடைக்கலம் புகுந்தவர்களை நாளெல்லாம்  பார்க்க முடியும். பூக்கடைகளுக்கு மட்டும் ஒரு கேப் உண்டு. காலை பேப்பர் படிப்பவர்கள், புத்தகம் புரட்டுபவர்கள், பேசிச் சிரிப்பவர்கள், பிச்சை எடுத்த ரூபாய்களை எண்ணும் ஒரு அம்மாள், யாசிப்பின் நடுவே தேர்முட்டியை பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டு முடிப்பவர் என்று இந்த இடம் பிஸியாகவே இருக்கும். 

அந்த ஐந்து பத்து  நிமிடங்களில் ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். ஒரு புத்தி பேதலித்த அம்மா டீயை எடுத்துக் கொண்டு அடுத்த பூஜை சாமான் கடையின் முன் அமர்ந்துவிட்டார். விரட்டிய முதலாளியை வசை பாடினார். அவர் கோபத்தில் அடிக்க ஓங்கினார். இவர் இன்னும் அடக்க முடியாமல் கத்தினார். உள்மூச்சை இழுத்து வைது கொண்டே போக வர சேலையை முட்டி வரை தூக்கிக் காட்ட மிரட்டினார். எனக்கு படபடப்பு அதிகமானது. எல்லோரும் , போலீஸ் உட்பட அடிக்க வந்தார்கள். அவர் மேலும் கத்தினார், கடைசியில் கதறி ஓ என்று அழுது நடந்தபடி அப்புறம் சென்றார். இன்னும் ரெண்டு பிச்சைக்காரர்கள் யாரோ ஒரு காண்ட்ராக்டர்  போல ஒருவரிடம் சொல்லி கடையில் டீ வாங்கிக் குடித்தார்கள். இன்னொருவர் லூசான ஜீன்ஸ் பேண்டை ஒரு கையில் பிடித்து , மறு கையில் பற்றிய  சிகரெட்டுடன் ஒரு டீ வட்டைக் கப்பில் கேட்டார். கொடுத்ததை குடிக்க உட்கார எந்தக் கடையிலும் இடம் கிடைக்கவில்லை, விரட்டினார்கள். அவர் முகத்தில் ஒரு சலனம் இல்லை. சலனம் எல்லாம் கடைக்காரப் பையனிடம் இருந்தது. வட்டைக் கப் திரும்ப வருமா என்ற கேள்வியில் எட்டிப் பார்த்தார், அவர் கண்ணுக்கு வெளியே அவர் போய்விட்டார். வரும் பஸ்ஸில் தீப்பிடித்தால் வெளியே கண்ணாடியை உடைத்துக் குதிக்கச் சொல்லி எழுதி  கடைசி சீட்டின்   இருபுறமும் சிறு சுத்தியல் கண்ணாடிக்குள் இருக்கும். ஒரு பக்கம் இருந்த சுத்தியல் களவு போய் இருந்ததை கவனித்தேன் . அப்புறம் அடுத்த ஓரத்தைப் பார்த்தேன் , அதுவும் இல்லை. கடைக்காரர் வட்டைக் கப்பை எதிர்பார்த்து எட்டிப் பார்த்தபடி இருந்தார். நான் என்ன செய்ய முடியும்.

இப்போது டீயை சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு கையில் பஞ்சாமிர்தம் இருந்தது. டீயை அருகில் இருந்த குடிநீர் ட்ரம்மின் மேல் வைத்தேன். கால் சட்டையில் கைவிட்டு எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது, ரோட்டில் போய்க்கொண்டிருந்த இன்னொரு பிச்சைக்காரர் , கூடப் போன மற்றொரு பிச்சைக்காரரிடம் இருந்து பிரிந்து ' இரு ஒரு மடக்கு தண்ணிய குடிச்சுட்டு வாரேன் ' என்றபடி டீயின் அருகில் இருந்த டம்ளரை பார்த்து கைவைத்தார். ஆனால் அவர் கண் முழு டீ டம்ளரைப் பார்த்து விட்டது. கை உடனே டீயைத் தொட்டு விட்டது. கண்ணில் ஒரு நொடி பரவசம் பார்த்தேன். என்ன பசியோ, எப்பொழுது உண்டாரோ? என்னை அறியாமல் என் ஆழ்மனம் 'அது என்னோட டீ ' என்றது. 'அப்பிடியான்னே...தெரியாம.' என்றபடி அவர் கை தண்ணீர் டம்ளரைத் தொட்டது. இரண்டு மடக்கு குடித்து அப்பால் நடந்து போய் விட்டார்.

'கண் இலான்  பெற்று இழந்தான் '
 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...