Skip to main content

மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால்

மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால் 



நேற்று வண்டியில் வேலைக்குச் செல்லும்பபோது ஒரு காட்சி. நல்ல கூட்ட மிகுதியான அகரா சிக்னல் தாண்டி U டர்ன் எடுக்கும் இடத்தில் எப்பவும் விட அதிக நெரிசல். நெரிசலான ஒரு சிக்னலைக் கடந்து இன்னொரு நெரிசலை நோக்கிப் போகும் வழியில் நெரிசல் . இங்கு எதிர் திசையில் வருவார்கள், இரண்டு திசைகளிலும் U டர்ன் செய்வார்கள், 

ஒரு பெரிய BMTC பேருந்து U டர்ன் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தது வெகு நேரமாய். எல்லோரும் ஒரு மாதிரி முடிந்த வரை நகர்ந்து கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறு அருகில் வந்தததும் தான் இந்த ஸ்பெஷல் நெருக்கடி விஷயம் புரிந்தது.

ஒரு தாய்ப் பசு அப்படியே U டர்ன் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்தது விஷேஷமில்லை. அதன் மடியில் இளம் கன்று பால் குடித்துக் கொண்டிருந்தது. இரண்டு கால்கள் பின்னால் இழுத்து முட்டி முட்டி உறிஞ்சிக் குடித்தபடி இருந்தது. நடத்துனர் கீழே இறங்கி விரட்டிப் பார்த்தார். டிரைவர் மேலே இருந்து சிரித்தார். யாருக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அன்னை ஓரடி அசைய மறுத்தாள். கன்று யார் தள்ளுக்கும் விடவில்லை.

எனது தாத்தா மாடுகள் பராமரிப்பவர், தினமும் தார்பாய்ச்சி வைக்கோல் பிடுங்குவார். சாணி அள்ளி தட்டில் போட்டு சுத்தம் செய்வார். மாடுகளை குளிப்பாட்டுவார். பகல் பொழுதுகளில் சுற்றி வந்து ஒட்டி உறிஞ்சும் மூட்டைப் பூச்சிபோன்ற பூச்சிகளை எடுப்பார். மாட்டு ஈக்கள் என்று பெரிய வகை ஈக்கள் காயங்களில் ஒட்டியிருக்கும் எடுத்து விடுவார். 

பால் எடுக்க கோனார் ஒருவர் வருவார். என்னிடம் மட்டும் ஊமை போல் ஆக்ட் செய்வார். எனக்கு ஊமைகளைக் கண்டால் ஒரு பயம். அப்புறம் சாயங்கால வேளையில் பாட்டியிடம் சாதாரணமாய் பேசுவார். அவரை பாட்டி காயாம்பு என்று அழைப்பார். மாட்டின் மடிக்கு காம்பு என்று இவர் சொல்வார். 

எனக்கு அன்றெல்லாம் இருந்த பெரிய சந்தேகம் இவர் தொட்டால் மட்டும் எப்படி மடியில் பால் வருகிறது. இரண்டு கால்களுக்கு நடுவில் ஒரு தகரக் கேனை வைப்பதற்கு முன் மடியில் விளக்கெண்ணெய் தடவுவார். விஷயம் இந்த விளக்கெண்ணெய் தான் என்று முடிவு செய்து ,மதியம் எல்லோரும் தூங்கும் வேளையில் கையில் எடுத்து மடியில் அப்பி பால் சிறிது கறந்து  பார்த்தேன். பலன் ஒன்றும் இல்லை. விளக்கெண்ணெய் என்றால் என்ன என்று தெரிந்தது, இந்த விளையாட்டெல்லாம் எருமையிடம் கொஞ்சம் செல்லுபடியாகும். அதுவும் ஒன்றிரண்டு முறை தொட விடும் பின்னர் உதைக்கும். பசுவின் பக்கம் போக முடியாது.

பின்னர் ஒரு நாள் இந்த விவரத்தை அவர் பையனும் என்னை விட பெரிய அந்த அண்ணனிடம் பணிவுடன் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் சொன்னதுதான் முதலில் கன்றை அவிழ்த்து அன்னை மடியில் சுரக்க வைப்பது. இதைப் போல கன்று இறந்தால் மாடு பால் கொடுப்பது சிரமமாகி விடும். கன்று இறந்தவுடன் தோலை மட்டும் வெளியே வைத்து, உள்ளே வைக்கோல் அடைத்து மாட்டின் முன்னே காட்டி கறப்பார்கள். இதுவும் பார்க்க கொஞ்சம் கலக்கமாய் இருக்கும். இதையும் வேறோர் வீட்டில் கூட்டிக் காண்பித்திருக்கிறார்.

அவரும் என்னைவிட கொஞ்சம் பெரிய பாலகன் அவ்வளவே. அவர் கன்றை அவிழ்த்து விடுவார், ஆனால் திரும்பக் கட்ட முடியாது. என்னவோ செய்து பார்ப்பார், கடைசியில் தம்பி இதைக் கொஞ்சம் இளும் என்று என்னையும் பணிப்பார். 

இன்று நடத்துனருக்கு இழுக்க கயிறு கிடையாது. நடுரோட்டில் மேலும் பாலுக்கும் ஆசையில்லை. அந்தக் காலையில் எல்லோரும் வேலைக்காக அல்லோல கல்லோலப் படும் 'உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் தாய்  முலை என்னும் அந்த டிராபிக் என்ற ஆற்றில் ஒரு அன்னைமடி உண்மையில் திறந்து விட்டது. அந்த ஆற்றில் மீன் போன்ற கண்களை உடைய வயல்களில் திரிகின்ற செங்கால் அன்னங்கள் தன் பிள்ளைகளை தாமரை மலர் படுக்கையில் கிடத்துகின்றன. அருகில் நீரில் ஊறிக்கொண்டிருக்கும்  காலில் ஒட்டிய சேறுடைய எருமைகள் தன் கன்றுகளை நினைப்பதால் பால் ஊறி நீரில்  பால் ஏறி அன்னங்கள் பருக ஆரம்பித்து , தேரை தாலாட்ட திரும்பித் தூங்கி விடுகின்றன. 

இந்தப் பசுவும் எதை நினைத்திருக்கிறதோ ஊற்று இன்னும் நின்ற பாடில்லை. செங்கால் அன்னங்கள் எல்லாம் வண்டிகளில் அவரவர் வேலைகள் பார்க்கச் செல்ல வேண்டியுள்ளது. அந்தக் கன்று அதுவாய் நிறுத்தினால் தான் உண்டு.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...