Translate

சில கவிதைகள்

வார் தளர்ந்த உள்ளாடை


எப்போதும் ஜூம் அழைப்பில் முதலில் அவரே பேசத் தொடங்குகிறார்


இடைநிறுத்தி எங்கும் மீண்டும் மீண்டும் பேசுகிறார்


உள்ளோடும் பதட்டத்தை எதோ ஒரு சொல்லால் மீண்டும் வெளிப்படுத்துகிறார்



எப்போதும் தளர்ந்த உள்ளாடை


முதலில் போடும் போது  சரியாக நிற்கிறது


பின்னர் நடக்கும் போது


காலுக்குள்  அதுவும் என்னுடன்  நடக்க ஆரம்பிக்கிறது


அப்புறம் சிறு பிள்ளை போல் மூடிய கதவில் முட்டி நிற்கிறது


அதன் பின் அங்கேயே  பிள்ளையாய்  உறங்கி  விடுகிறது



வார் தளர்ந்த உள்ளாடை உள்ளே இருப்பதால் ஒரு சௌகரியம் இருக்கிறது


பின் தேவைப் படும் போது இடம் மாற்றினால் போதும்


வெளியில் வார்  போட்டு இறுக்க வேண்டாம்


அடிக்கடி புதுப்பிக்கத் தேவையில்லை


எதோ உள்ளே இருக்கிறது என்று அமைதி கிடைக்கிறது




இது போல் எல்லாம் நாம் முன்னரே  செய்திருக்கிறோம்


உங்களில் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி முடிக்கிறார்.


வார் தளர்ந்த உள்ளாடையும் வராது காண் நம் வழிக்கே !


Date: 19 June 2025  




வானின் கீழ் இரவை எதிர்பார்த்தல்



செவ்வானம் பின்னிருக்க


கட்டபொம்மன் சிலை முன்னிருக்க


ஒரு செருப்புத் தைப்பவர்


நடக்கும் ஆட்களுக்கு வழிவிட்டு


ஒரு கருப்பு நூல்கண்டு


ஒரு வெள்ளை நூல்கண்டு


ஒரு குத்தூசி


ஒரு முனைக்கத்தி முன்னிருக்க


தலையில் பையுடன்


உறங்கிவிட்டார்



இன்னொரு எவரோ ஒருவர்


காலமாய் நிற்கும்


மதுரை கோட்டைவாயிலில்


சுவர் பார்த்து


நடப்பவர் யாரையும் பாராமல்


ஒரு பாலிதீன் பையில் மூன்று இட்லி


ஒரு காகிதப் பொட்டலத்தில் கையளவு வறுத்த வேர்க்கடலை


தலைவைக்க கைப்பை


இரவுக்காக சுவர் பார்த்து காத்திருக்கிறார்


Date: 14 June 2025 



காயம் ஆகாத தீ


காலில் தெறித்த


எண்ணெய்ப் பொக்களங்களுடன்


நாள் முழுதும் வேலை செய்து


ஓய்ந்து உட்கார்ந்தாள் அம்மா



'உஸ்..  அப்பா சண்முகா


வலியுள்ள சுடலைத் தீ ஏன் எனக்கு இப்போது ?


வலியற்ற சுடலைத் தீ போதாதா?'


Date: 15 June 2025



பூ தூரம்



பெங்களூக்கும் மதுரைக்குமான


தூரம் என்பது


பேருந்தில்


மல்லிகைப்  பூ


நீண்டு 


ஆடும்  


தலைகள் தான்  இல்லையா ?


Date: 15 June 2025



ரிமோட்டின் மொழி




தான் ஊரில் இல்லாமல் போனால்


நியூஸ் பேப்பர் பால் போக


கேபிள் இணைப்பையும் நிறுத்திவைத்து இருப்பாள் அம்மா



திரும்ப வரும் வழியில்


போனில் அழைத்து முதலிரண்டையும் மீண்டும்  வரவைக்கிறாள்



ஆனால் ஒவ்வொரு முறையும்


கேபிளின் மொழி மாறிவிடுகிறது



அதில் பத்தாயிரம் சானல்கள்


ஒரு மாபெரும் அடுக்கு மாடிக் கட்டிடம்


சில நூறு ப்ளாக்குகள்


பல நூறு மாடிகள்


உள்ளே பல நூறு வீடுகள்



ஒவ்வொன்றாய்த்  தேடித் தேடி


அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது



தேச உலக மொழிகளில்


பரிச்சயமான  மொழியின் வார்த்தைக்காக


அலைய வேண்டியிருக்கிறது



கதவு எண் போன்ற நிறைய நான்கு இலக்க எண்களை


நினைவில் வைக்க வேண்டியிருக்கிறது



போனமுறை திறந்திருந்த நிறைய கதவுகள்


இம்முறை சாத்தப்பட்டிருக்கின்றன




வேண்டுவது எப்போதும் தூரத்திலும்


வேண்டாதது கையிலும் சிக்கி விடுகிறது


எப்போதும் ஊர் பரிச்சயமாகும் போது


ஊரை மாற்ற வேண்டியிருக்கிறது



Date: 19 June 2025




கேட்பவர் இருக்குமிடத்தில் கேட்காமல் இருப்பது



நான் இது போதும் என்று சொல்லும்போது


அவர் எப்போதுமே இன்னும் வேண்டும் என்கிறார்



இப்போதும் உனக்காகத்தான் கேட்கிறேன் என்கிறார்


உன்னால் கையிருப்பில் பிழைக்க முடியாது என்கிறார்


கேட்காதவன் என்றும் ஏமாளி என்கிறார்



நாகரிக உலகம் என்பது இன்னும் கேட்பது தான் என்கிறார்


பார் எல்லோரும் கேட்டுக்கொண்டே இருக்கிறர்கள் என்கிறார்


கேட்பவர்கள்  இல்லாமல் கொடுப்பவர்கள் ஆகுமா எனக் கேட்கிறார்


உனக்குக் கீழே கேட்பவர்கள் எவருமே இல்லையா எனக் கேட்கிறார்



சுருங்கி வெற்றிடமாவாயா இல்லை விரிந்து வான் தொடுவாயா என்கிறார்


முனிவனில் ஜனகனும் வீரனில் துரோணனும்


என்றுமே விதிவிலக்கு என்கிறார்



இன்னும் உன்னால் சிறிதாவது  கேட்க முடியவில்லையானால்


நான் சொல்வதையே திருப்பிச் சொல்



அதுவும் முடியவில்லையானால்


இப்போது நீ எனது வழியை மறித்து நிற்கிறாய்


சரி ,இவ்விடத்தை தயை கூர்ந்து காலி செய் என்கிறார்


Date: 10 June 2025 at 00:00:00 GMT

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2