Skip to main content

சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு காற்புள்ளி

சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு அரைப்புள்ளி



இன்று திரும்பிப் பார்க்கும்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக சைக்கிள் குறிப்புகள் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய எழுதும் பழக்கத்தை துவக்கி வைத்தது இந்த மிதிவண்டி. 

இந்த வார இறுதியில் வீடு மாற வேண்டியிருக்கிறது. அலுவலகம் இன்னும் தூரம் ஆகிறது, ஒரு பக்கம் 30 கிலோமீட்டர். ஆகவே சைக்கிளை நிறுத்த வேண்டியிருக்கிறது, வேறு வழி கண்டுபிடிக்கும் சில நாட்களுக்காகவாது. 

மிதிவண்டிக்கும் ஆறு வருடம் ஆகிவிட்டது. ஓய்வு கேட்கிறது என்று நினைக்கிறேன், சர்வீஸ் முடிந்து சில நாட்களில் பால்ரஸ் குண்டுகள் ஓடும் சத்தம் வர ஆரம்பிக்கிறது.

வீடு மாறுவதில் எனக்குத் தோன்றும் இழப்பாகத் தெரிவது இந்த சைக்கிள் பயணமே. நம் வழியில் நாமாக சலனப் படாமல் போக முடிந்தது. பெரிய போட்டி ஒன்றும் இல்லை.நேரம் ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அதிகம் ஆகலாம் , அவ்வளவே. பாடல்கள் கேட்கலாம், பதிகங்கள் கேட்கலாம், பேச்சுக்கள் கேட்கலாம். வேடிக்கை பார்க்கலாம். எல்லாமும் மேலே எதவாது உடற்பயிற்சி உடம்பை ஆட்டும் முயற்சி. என் பார்வையில் இது பெரிதல்ல. இது உடற்பயிற்சி என்பது சில நாட்கள் விட்டுச் செய்யும்பொழுது உண்டாகும் தசை இழுப்புகளில் தெரிகிறது.

தூரம் என்றால் என்ன என்பது நடக்கும் போதும், ஓடும்போதும், சைக்கிள் ஓட்டும்போது மட்டுமே தெரியும். எந்த ஒரு மாபெரும் தூரமும் முதல் காலடியில் மட்டுமே ஆரம்பிக்க முடியும். கொரோனா கால கட்டங்களில் பலர் பீஹாருக்கும் வங்காளத்திற்கும் இங்கிருந்து சைக்கிளில் போனது ஞாபகம் வருகிறது. உண்மையில் நானும் அவ்வாறு போகமுடியும் என்று அப்போது நினைத்தேன். ஒரு நாளில் ஐம்பது கிலோமீட்டர் கடப்பது சாத்தியம். அப்போது ஒரு இளைஞர் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியா பயணத்தை சைக்கிளில் துவங்கி தினமும் ஒளிப் பதிவுகள் காட்டிக் கொண்டிருந்தார். சென்னையில் இருந்து இமயமலை வழியே பூட்டான் கடக்கும் வரை அவரைத் தொடர்ந்தேன். பின்னர் கம்போடியா மலேஷியா எல்லாம் போயிருக்கிறார். இப்போது அவரைத் தேடிப் பிடித்தேன். எல்லாம் முடிந்து விட்டது, இதை வைத்துப் பிழைப்பதை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று அவரே பதிவு போட்டிருக்கிறார்.தொலைவுக்கு பழக்கப் படுவது என்பது இதுவே.

காரிலோ பைக்கிலோ, ஆக்ஸலரேட்டரை ஒரு முறை முறுக்கிக் கடக்கும் இரு மேம்பால தூரமோ, இரு சிக்னல் இடைப்பட்ட தூரமோ காலால் நடந்தால், சைக்கிள் மிதித்தால் அவ்வாறு இல்லை என்று தெரியும். உலகம் மிகப் பிரம்மாண்டமானது. தனி மனிதன் எவ்வளவு சிறியவன் , மனிதக் கால்கள்  எறும்பைப் போல் சிறியவை என்று தெரியும். 

அதே போல் தொலைவு, தூரம் என்பது எல்லோர் வாழ்விலும் வாழ்வில் ஒரு குறியீடு. போகும் எஞ்சியிருக்கும் ஒருவரின் வாழ்நாளைப்போல. அந்தத் தொலைவு என்னவென்று தெரியாமல் இருக்கும்போது இன்னும் பதட்டம் அதிகமாகிறது. நாள், மாதம், வருடம் என்று அழகாய் மடித்து வைத்துப் பார்த்தாலும் உள்ளே எதோ ஒன்று ஒப்ப மறுக்கிறது. அன்றைய குருகுலங்களில் மாணவராய்ச்  சேரும் ஒருவர் காலால் இந்தியாவில் முழுதும் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. ஒரு முறை திருப்புல்லாணி கோவிலில் திருவண்ணாமலையில் இருந்து நடந்தே வந்திருந்த ஒரு முதியவரைப் பார்த்தேன். அவருக்கு எந்தப் பயமும் இருக்கவில்லை. எல்லாம் எளிதாகவே நடந்தது என்றார்.நடந்து கொண்டே இருந்த சங்கரர் பிறந்த ஊரின்  பெயர் அழகானது - காலடி. ஒரே ஒரு  காலடி என்பது தான் அது சுட்டுவது. இது தத்துவார்த்தமான சொல் என்றே நினைக்கிறேன். எவ்வளவு பெரிய தூரமும் ஒரு காலடி தான். இல்லையென்றால் ஒரு சைக்கிள் மிதி மட்டும் தான். 

ஏகாந்தம் என்றால் ஆங்கிலத்தில் solitude என்று பொருள். எல்லோருக்கும் தனிமையில்லாத ஒரு தனிமை நிச்சயம் இருக்கும். ஆழமான வேலையில் ஈடுபடுவது, பாடுவது, வரைவது , படிப்பது , எழுதுவது போல் எதாவது ஒன்று. என்னளவில் சைக்கிள் ஓட்டுவதும், நீண்ட நடையும் இதில் சேரும்.ஒரு நாள் அடுத்த வண்டியின் டயர்களை மட்டும் பார்த்தபடி சைக்கிளை ஓட்டினேன். உலகமே சக்கரங்களால் தான் இயங்குகிறது. உயிரின் புழு போன்றது பொருள் உலகின் சக்கரம். வேகமாய் ஊர்வனவும், பறப்பனவும் எப்போதும் புளுவாலும் , சக்கரத்தாலும் கட்டப் பட்டுள்ளன. சக்கரங்கள் ஓடுவதை மட்டும் குபேர மூலையில் இருந்து வீடியோவில்  படம்  எடுத்துப் வைத்துக் கொள்ள  வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். 

மனுஷ்யபுத்திரன், வண்ணதாசன், விக்ரமாதித்யன் போன்றோரின் கவிதைகளைப் பார்த்து கவிதை எழுதத் தோன்றிய பொழுது சைக்கிள் பயணத்தில் பார்த்த காட்சிகளையும் , எண்ணங்களையுமே கவிதையாக்கி எழுதிப் பார்த்தேன். எழுதிப் பார்க்கும்போதே கவிதை கடினம் என்பது தெரிந்தது. இதை ஏன் சொல்கிறேனென்றால், மிதிவண்டி ஒட்டிச் செல்லும் போது பார்த்த பல காட்சிகள் இன்னும் மனதில் நிற்கின்றன. கம்பர்  கார்முகப் படலத்தில் சிவதனுசை வர்ணித்துச் சொல்லும்போது, திரண்ட தோளினர் அறுபதினாயிரம் பேர் தறி மடுத்து இடையிடை தாங்கி தூக்கி வந்தனர் என்று சொல்கிறார். நிலமகள் முதுகில் நின்று , வடவரை இமயம் நாண நீண்டு நின்று , இன்னும் நீள இடமில்லாமல் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. கனகக் குன்று, வான் கடல் மத்து இவையெல்லாம் ராமன் முறிக்கவிருக்கும் வில்லைப் பற்றி கம்பன் சொல்வது. இதைப் படிக்கையில் எனக்கு என் மனக் கண்ணில் தோன்றியது , ஒரு மாலை மழைநாளில் சைக்கிளில் நின்று கார்கடல் வானில் பார்த்த விரிந்த  வானவில் ஒன்று. அவ்வளவு அருகில் தூய வானில் வானவில்லை அன்றுதான் பார்த்தேன் என எண்ணினேன். கம்பன் வானவில்லை மனதில் வைத்தே இப்பாடல்களை எழுதியிருப்பான் என நினைக்கிறேன்.

சில மாதம்  முன் ஒரு நாள் ஒரு தட்டி போட்டு மூடி வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கதவுகள் அப்போது மட்டும் திறக்கப் பட்டிருந்தன. ஆழ்ந்த பெரிய கட்டிடத்தின் தோண்டப்பட்ட கீழ் வானம், மிகப்பெரிய பிலம் , அகழ்வாராய்ச்சி செய்யப்படும் இடம் போல். அதன் மேலே தூயவானில் , சரியாய் இரண்டு கதவுகள் அளவில் அந்திச் சூரியன். கையில் போனை எடுத்துப் படம் பிடிக்கும் முன் கதவு மூடப்பட்டது. பின்னர் திரும்ப ஒவ்வொரு முறையும் இன்றுவரை அந்தக் கதவும், அந்தி வானமும் அங்கு வரும் என்று அவ்வேளையில் என்னையறியாமல் தலை தூக்கிப் பார்ப்பேன். 

ஒரு ஆற்றை ஒரே ஒரு முறை தான் கடக்க முடியும். இன்னொரு முறை கடப்பது இன்னொரு ஆற்றை மட்டுமே.

இன்றும் மழையில் நனைந்தே வீடு வந்து சேர்ந்தேன். ஒரு டிராபிக் போலீஸ்காரரும் ஒண்ட இடம் இல்லாமல் என்னுடன் நின்றுகொண்டிருந்தார். முழுதும் நனைவது உறுதி என்று தெரிந்துவிட்டது, பின்னர் ஒண்டுவதில் பயனில்லை.

பிரேக் மீண்டும் லூசாகியிருக்கிறது. இதன் சூட்சுமம் எனக்கு இப்போதெல்லாம் விளங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாக் கடைகளிலும் எதாவது ஒன்று சொல்லி பிரேக் பாட் , டிஸ்க் பிரேக் எல்லாம் மாற்றியும் , இதற்கெல்லாம் வெளியிலேயே அது நிற்கிறது. சூட்சுமம் என்னவென்றால் , அந்தக் காலத்தில் பெரியவர்கள் எதையும் கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும் என்பார்கள். அதுவே இது. அழுத்திப் பிடித்துக் கொண்டே இருந்தால் வழுக்கி ஓடும். விட்டு விட்டுப் பிடித்தால் நிற்கும். 

ஆக, கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...