நெய் தவழ் வயிரப் பாறை
எப்பொழுதும் தனியாய்ச் செல்லும்பொழுது பேருந்தில் செல்வதே என் வழக்கம். நான் செல்லவேண்டியது ஈரோடு அந்தியூர் பக்கம். சென்றமுறை மேட்டூர் வழியாக , முந்தய நாள் இரவும் அல்லாத பகலும் அல்லாத அந்தியில் வேலை முடித்து ஆரம்பித்து , சரியாய் நள்ளிரவின் பின் சென்று சேர்ந்தேன். சென்று சேர்ந்தது மேட்டூர், செல்ல நினைத்திருந்ததோ அந்தியூர். இந்த ஊர்களெல்லாம் நள்ளிரவில் எப்படி இருக்கும் என்ற நல்ல அனுபவம் கிடைத்தது. இருட்டில் மூத்திரம் பெய்பவர்கள், மப்ளர் அணிந்து வான் வெளியில் நிற்பவர்கள், உட்கார இடமில்லாமல் குத்த வைத்திருப்பவர்கள், வரும் ஒரே வண்டிக்காக காத்திருக்கும் எல்லோரும் போல் அந்த வண்டிக்காக அவர்களில் ஒருவராய் நானும் நின்றேன். கடைசியில் இருட்டில் மூத்திரம் பெய்து முடித்த அந்த ஒரு பெரியவரிடம் 'அந்தியூர் அடுத்த வண்டி எப்ப வரும்' என்றேன். 'இந்த இப்ப வந்துரும்' என்றார். 'எத்தனை மணிக்கு' என்றேன். 'அஞ்சரைக்கு' என்று என்றார். மணி இரவு பன்னிரெண்டே முக்கால். பின்னர் ஒரு விடுதியில் தங்கி காலையில் வயலில் வேலைக்குப் போகும் பெண்களுடன் மீண்டும் பயணம் ஆரம்பித்தேன் என்று வையுங்கள்.
இந்த முறை ஏனோ ரயிலில் போக நேர்ந்தது. டிக்கெட் எளிதில் கிடைத்தது. கோவை செல்லும் உட்காரும் ரயில், ஈரோட்டில் இறங்க வேண்டும். கே ஆர் புறம் ரயில்வே ஸ்டேஷனில் ஏற வேண்டும். வண்டியை விடக்கூடாது என்ற நினைப்பு ஒரு மணி முன்னதாக உள்ளே போயாகிவிட்டது. சரியாக உள்ளே நுழைந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு மணி நேரம் இருக்கிறது , எவ்வளவு நேரம் அடக்குவாய் தீர்வு காண் என்று ஒரு குரல் ஒலித்தது. ஜென்ட்ஸ் என்னும் போர்டை கண் தேடும் பொழுது , ஒரு லேடி வெளியே வந்தார். இரண்டுக்கும் வித்தியாசம் ஒரு தொங்கும் துணித்திரை மட்டுமே.
பின்னர் பெஞ்சில் உட்காரும் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். இரண்டொரு முறை முழு நடைபாதையையும் நடந்தேன். முதுகில் பை கணத்தது. இறக்க இடம் தேடினேன். பெஞ்சில் உட்கார்ந்தால் எளிது என்ற நினைப்பில் உட்கார இடம் தேடினேன். இரக்கம் உள்ளவர்கள் உமையொரு பாகன் போல் , இன்னொருவர் புட்டங்கள் தங்கள் புட்டங்கள் பின்னால் ஒட்டி அமர அனுமதித்திருந்தார்கள். வேறொரு ரயில் வந்தது. பெஞ்சுகள் கொஞ்சம் காலியானது. சீட்டு கிடைத்தது. உட்கார்ந்ததும் ரயிலின் உள்ளே சீட்டைப் பற்றிய நினைப்பு வந்தது. ரயிலில் ஈரோடு வரை நின்று கொண்டு போவது போல் ஒரு கற்பனை வந்தது. எதாவது ஒரு கிழவி சீட்டுப் பிச்சை கேட்டு கொடுத்து விடுவேனோ ?
திரும்ப ஒருமுறை நடைபாதையை நீள நடந்தேன். தமிழ்நாடு சுற்றுலாத்துறை விளம்பரங்களைப் பார்த்தேன். அழகர் கோவில் விளம்பரம் மனதைக் கொள்ளை கொண்டது. பின்னர் மதுரை மீனாட்சியின் பொற்றாமரைக் குளம், அகோர வீரபத்திரரின் கோபக் கண்கள் ஒரு கணம் வந்தது. எல்லாமும் ட்ரோன் காமெராவில் எடுக்கப்பட்டது. பறவை பார்க்கும் பொற்றாமரைக் குளமும், அழகர் மலையும், அதன் பின்னால் அவ்வாறே வளைந்து பறக்கும் குழலும் நாதஸ்வரமும்.
பின்னர் சிறிது நேரம் அங்கிருந்த ராமகிருஷ்ணா மிஷனின் புத்தகக் கடையைப் பார்த்தேன்.புத்தகங்களின் பின் ஒரு வயதான பெண் அமர்ந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் ராமகிருஷ்ண விஜயம் வாங்கிப் படித்தேன். ஆடிப் பூரம் ஆண்டாள் படம் ஒன்று முதல் பக்கம் .
'திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே'
ஒரு நிமிடம் திருவில்லிபுத்தூரும் , ஆண்டாளின் நந்தவனமும் சன்னதியும் மனதில் ஓடின.
இந்தப் புத்தகத்தில் வேறேதும் இல்லை. ஒரு காலத்தில் இது வீட்டில் வாங்கும் ஆன்மீகப் புத்தகம். இப்பொழுது முழுதும் வலதுசாரி ஆகி விட்டிருக்கிறது. ஆபரேஷன் சிந்துர் பாதிக்கு மேல் பக்கங்களை பிடித்திருந்தது.அப்புறம் ஒரு சில கதைகள். வேறென்ன, எதிர் பார்த்தலின் பின் வரும் ஏமாற்றம்.
ஆனால் சரியாக மணிக்கு வண்டி வந்து விடுகிறது. உள்ளே ஏறினேன் , முதல் மாடியில் இருக்கை.
எதிரெதிர் பார்த்த இருக்கைகள். வரிக்கு ஐந்து இருக்கைகள். ஒரு பாதி மூன்று இன்னொரு பாதியில் இரண்டு. நமக்கு வாய்த்தது மூன்றில் நடுவிடம். இடது பக்கம் ஓர் இளைஞர். எதிரில் ஒரு மூவர் குடும்பம், வேலை பார்க்கும் மகள் மற்றும் பெற்றோர். வலது பக்கம் TTR. இன்னும் இருவர் புலம் பெயர்ந்த ஊர் செல்லும் பெற்றோர். மற்றும் இரு வட இந்திய வேலை பார்க்கும் இளைஞர்கள்.
வண்டி கிளம்பியது.
வண்டியின் மேல் மாடியில் இருப்பது பறப்பது போல் இருந்தது முன்போல் தண்டவாளமும் சக்கரமும் கம்பிகளும் மோதும் ஓசையேதும் இல்லை. கண்ணாடி போட்டு சீல் வைத்திருக்கிறார்கள். இல்லை சத்தம் இல்லாத வண்டிகளோ. எல்லோர் பேச்சும் தெளிவாய்க் கேட்கும் போல் இருந்தது. கீழே ஒரு லாபி , பார் போன்று இருக்கைகள். ஏற்கனவே ஆட்கள் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
எதிர் எதிர் இருக்கும் இருக்கைகளை பிரிக்கும் பாலம் போல் ஒரு பலகை.இது ரீடிங் டேபிளா என்னவோ? அந்தக் காலத்து ஆசாரிகள் மரம் இளைக்கும் பலகை ஒன்று ஞாபகம் வந்தது. பலகையை நடுவில் போட்டு சுற்றி வந்து கண்பார்த்து அளந்து பலகை இளைப்பார்கள். எதிரில் பெண்மணி காலை கொஞ்சம் நீட்டினால் இடிக்கும். அவர் ஏற்கனவே என் கால் பகுதியை ஆக்கிரமித்து விட்டார். என் கால் சீட்டுக்கு அடியில் குறுகி விட்டது. இரண்டு புறமும் கைப்பிடியும் ஆக்கிரமிக்கப்பட்டு முடிந்தது. நடுச் சேருக்கு மட்டுமே இரண்டு கைப்பிடி, மற்ற இரண்டிலும் ஒன்றே. ஆனால் நடுவரே பிடியை இழப்பவர்.
போனில் சார்ஜ் போட வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் இருக்கும் 2கே கிட் ஏற்கனவே அதையும் பிடித்து விட்டார். ஏதோ ப்ரைம் வீடியோ படம் பார்த்துக் கொண்டிருந்தார். 100% சார்ஜ் இருந்தும் அவருக்கு விட மனமில்லை , சேலம் தாண்டித்தான் வயரை வெளியே எடுத்தார்.
பையை மடியில் வைத்திருந்தேன் , மேலே பரணில் இடமில்லை. பக்கத்தில் இருந்த TTR 'ஹௌ லாங் யூ வில் கீப் இட் இன் யுவர் லேப் ..கீப் இட் தேர் ' என்று பலகையைக் கை காட்டினார். 'டபுள் டக்கர் இஸ் எ பெயிலியர்' என்றார். விபத்து ஏற்பட்டால் கீழே இருக்கும் பெட்டியில் இருப்பவர்கள் சேதப்பட வேண்டும் என நினைத்தேன். வேலைக்கு கோவை இன்று சென்று, காலை வேலை அங்கிருந்து தொடங்க வேண்டும் என்று சொன்னார். அவர் காட்டிய இடத்தில் பையை வைத்தேன். ஸ்டேஷனில் வாங்கிய 1947 ரயில்வே தண்ணீர் பாட்டில் வாயில் இருந்து ஒழுக ஆரம்பித்தது, 1947 என்ற பெயர் சுதந்திரத்தின் குறியீடு அல்லவா?.
வண்டி வேகம் எடுத்தது. ஒயிட் பீல்ட் , மாலூர் , பங்கார்பேட் வழியாக கர்நாடகம் கடந்து குப்பம் வழியே ஆந்திராவில் நுழைந்து கிருஷ்ணகிரியில் தமிழ்நாட்டில் இணையும். கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் பயணம். மாலூர் என்பது கோலார் மாவட்ட தலைநகரம். சிக்க திருப்பதி இதனருகில் இருக்கும் கோவில். கங்கர்களின் முக்கியமான நகரம். சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்ற இடம். விஷ்ணுவர்த்தன் சோழர்களைத் தோற்கடித்து சாளுக்கிய அரசை மீண்டும் நிறுவினார். இறுதியில் விஜய நகர ஆளுகைக்குள் வந்தது.
அவனி , முல்லேபாகல் போன்ற அழகிய குன்றின் மேல் அமைந்த கோவில்கள் இருக்கும் இடம். சுக்ரீவன் அரசாட்சி செய்த பகுதி, சீதை ராமனைப் பிரிந்து இருந்த இடம், லவ குசர்கள் வளர்ந்த பகுதி போன்ற தொன்மங்கள் உண்டு. பரசுராமருக்கும் கர்த்தவீரியனுக்கும் இடையில் அன்னை சுரபிக்காக மாபெரும் போர் நடந்த இடம் அந்தரகங்கே என்று கோலார் அருகில் இன்று இருக்கும் பகுதி என்று நம்பப் படுகிறது. கோலார் என்னும் பெயருக்கு வெற்றிக் கூவல் என்ற பெயர்க் காரணம் சொல்கிறார்கள். பரசுராமரின் அன்னைக்கு அமைந்த கோவிலே இன்றிருக்கும் கோலரம்மா ஆலயம் என்று தொன்மம் உள்ளது. அவனியில் இருக்கும் அவனிபெட்டா சீதை ராமனால் அவப்பெயர் கருதி திருப்பி அனுப்பப்பட்டு , வால்மீகியின் குடிலில் வாழ்ந்த இடம். ராமன் லவ குசர்களிடம் தோற்று அவர்களை திரும்ப அழைத்த இடத்தில் ராமலிங்கேஸ்வரர் கோவில் இதன் அருகே இருக்கிறது.

வண்டி சென்ற பாதையெல்லாம் குன்றுகள் வந்துகொண்டே இருந்தன. அயர்க்க வைக்கும் தனிமையில் பாறைகள். பாறைகள் .மேலும் பாறைகள். ஒரு கணம் உறைந்த சோப்பு நுரை எனத் தோன்றும். சிறிதும் பெரிதுமாய் குமிழ்கள் அடுக்கி உறைந்து நின்று விட்டவை. இமயம் போல் பனி மூடியவை அல்ல. பசும் காடு சூழ், ஒளி புகா மலைகளும் அல்ல. மதம் கொள் வேழமும் , சிங்கமும் , புலியும் வாழும் மலையும் அல்ல. ஆயரும் , ஆய்ச்சியரும் , மலைக்குற மகளிரும் யாரும் இல்லை. மலை பிளந்து வரும் அருவிகள் இல்லை. புனல் கலக்கும் மான்கள் இல்லை. ஓங்கி உயர் கற்பகமும் , கொங்கையும், தேவதாருவும் இல்லை. தும்பியும், மிஞிரும் , வண்டும் மொய்க்கும் மலர்கள் இல்லை. அவை பூவென நினைக்கும் நிலவும் அருகிலில்லை. கல்லாய் நின்ற தனிமை. பிறிதொன்றிலாத மகத்தான தனிமை.
அருகில் இருந்த TTR இடம் மாறிவிட்டார். இந்தப் பக்கத்தில் இருந்த 2கே பாறையாகத்தான் இருந்தார்.முதலில் மசால் வடை வந்தது வாங்கினார். அடுத்தது கட்லெட் வந்தது வாங்கினார். பின்னர் சமோசா வாங்கினார். இடையில் பார்சல் வாங்கி வந்த எலுமிச்சம் பழ கட்டுச் சாப்பாடை தின்றார். பின்னர் என்னுடன் சேர்ந்து டீயைக் குடித்தார். படம் பார்த்தார், வேலைகளுக்கு வந்த இன்டெர்வியூ மெயில் செய்து கொண்டிருந்தார், ஒரு முறை பாத்ரூம் சென்றார்.
எதிரில் இருந்த குடும்பம் எல்லாமே வாங்கி வந்திருந்தது. வந்தவுடன் ஒரு பாக்கெட்டைப் பிரித்து டம்ளரில் போட்டு வெந்நீர் ஊற்றி டீயாகக் குடித்தார்கள். பின்னர் அம்மாவும் மக்களும் ஒரு சீஸ் பால் பாக்கட்டை சாப்பிட்டார்கள். அப்பா பெரும்பாலும் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தார், அளவாய்ச் சாப்பிட்டார். பின்னர் லேஸ் சிப்ஸ் எடுத்து ஆளுக்கொன்றாய் சாப்பிட்டனர். அடுத்தது இளக்கி வாழைப்பழம் குடும்பமாய். அப்பா கழிவுகளை ஒரு தனிப்பையில் போட்டுக் கொண்டே வந்தார். அப்புறம் ஆளுக்கொரு ஸ்நிக்கெர்ஸ் கடலை சாக்லட். அப்புறம் மீண்டும் அதே பாதுகாத்த டம்ளரில் ஒரு ரவுண்டு டீ.
எனக்கு உடம்பு ஏறிக்கொண்டிருக்கிறது என்ற கவலை இப்போதெல்லாம். அதனால் இதை இப்படி நினைக்க வைக்கிறது, இல்லாத ஏக்கம்?.
தி ஜாவின் அக்பர் சாஸ்திரி கதையில் மெட்ராஸ் மதுரை ரயிலில் ஏறும் ஒரு மருத்துவர் குடும்பத்தோடு பயணிக்கும் பார்த்துப் பேச ஆரம்பிப்பார். பிள்ளைகள் ஏன் இப்படி இளைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார். அவருடைய பிள்ளைகளை கண்ணைக் காட்டச் சொல்லிப் பார்க்கிறார். வயிற்றைத் தூக்கிக் காட்டச் சொல்லி பரிசோதிக்கிறார். கொள்ளை ஊற வைத்து நீராய் கொடுத்துப் பின்னர் அதையே சுண்டலாய் சாப்பிடச் சொல்கிறார். இதுவரை டாக்டருக்கு ஒரு நெல்லுக் காசு கொடுத்ததில்லை என்கிறார். வயதென்ன என்று கேட்டு 50 என்று சொல்லும்போது, 68 என்று சொல்கிறார். அவர் மனைவியின் தீராத தலைவலிக்கு மருந்து சொல்கிறார். எழுதி வாங்கிவைத்துக் கொள்ளச் சொல்கிறார் வேப்பக்கொட்டை , வெள்ளை மிளகு , சுக்கு பாலில் உருண்டையாக்கி பின் பாலில் கரைத்து தலையில் சேர்த்துக் குளிக்க வேண்டும் . என்றுமே பேசாத அவர் மனைவி பேசி நம்பிக்கை கொள்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் தீரவில்லையென்றால் மதுரையில் வந்து பார்க்கச் சொல்கிறார். இவருக்கு எல்லாம் தெய்வாதீனமாகப் படுகிறது. தனக்கு எப்படி இவ்வளவு நல்லது இன்று ரயிலில் நடக்கிறது, கதை சொல்பவருக்கும் தீராத வயிற்று வலி. எப்படிக் கேட்பது என்ற தயக்கம். எப்படியாவது இறங்கும் முன் கேட்டு விட வேண்டும் என்று இருக்கிறார். திருவிடைமருதூர் ஸ்டேஷனில் மகிழம்பூ மாலை கிடைக்கும் என்று டாக்டர் எழுந்திருக்கிறார். 'மகிழ மகிழ ' என்று நெஞ்சைப் பிடித்து சரிந்து அங்கேயே உயிர் விடுகிறார். இன்னும் டாக்டருக்கு ஒரு நெல் கூட கொடுக்காமல் உயிர் விட்டார் என்று கதை முடியும், அக்பர் எல்லாமே உன்னதம் என்பதை மட்டுமே செய்தவர். எனக்குப் பட்டது பலபேருக்கு வைத்தியம் சொல்லிக்கொண்டிருத்தவர் அடுத்த கணம் இல்லாமல் போனார்.
எவ்வளவு உண்டால் சரி , எவ்வளவு தப்பு என்பது இன்னும் விளங்காமலேயே இருக்கிறது. எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் வெளியில் , மீறி செயல்கள் நடந்த வண்ணமே இருக்கிறது.
நாலு மணிப் பயணம் முடிவுக்கு வந்தது. தலையில் வைத்து பிரியாணியும் , இட்லி வடையும் வந்தது, 2கே இட்லி வடையையும் வாங்கி விட்டார். எதிரில் இருந்த பெண் நான் போன் எடுக்க அவசியம் இல்லாமலே அடுத்த ஸ்டேஷன் எத்தனை மணி என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் அப்பா இதை ஏனோ கேட்டுக் கொண்டே வந்தார், எனக்காகவே என நினைத்தேன். 7.11 ஈரோடு.
இறங்கிய பின்னும் , அந்தப் பாறைகள் மனதை விட்டு அகலவில்லை.
நாலைந்து நாள் கழித்து வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லாய் முளைத்தது.
ஆம் , நெய் தவழ் வயிரப் பாறை !
Comments
Post a Comment