Skip to main content

பழைய பெட்டி

நேற்று இருபத்தைந்து வருடத்திற்கு முந்தைய பழைய பெட்டியை எடுத்துப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. காரணம் கால்ச்சட்டை கிழிந்தது, எதாவது அதில் இருக்குமா என்று நீலா கேட்டதன் விளைவு. பழைய சட்டைகள் அடுக்கியிருந்தது. வாழ்நாளில் மேல்ச்சட்டைப் பிரச்னை வராது என்றே நினைக்கிறேன். பாண்ட் கிடைக்கவில்லை. சொல்ல வந்த விஷயம் வேறு. 

இந்தப் பெட்டி முதலில் படிப்புக்காக வெளியூர் புறப்பட்டபோது வாங்கியது.அக்காலங்களில் பெரியமனிதரின் அடையாளம் சூட்கேஸ் என்று சொல்வார்கள். கூரை, ஓலைக்குடிசை இன்னும் இருந்த கால கட்டத்தில் ஒரு குட்டி கான்க்ரீட் கட்டிடம் போல் கையில் தூக்கிக் கொண்டு , சூட் போட்ட மனிதர்கள் தூக்கிக் கொண்டு வருவதால் அப்பெயரோ என்னவோ?. 

அப்பா வீட்டின் நடுவில் இருந்த ஒரு இரும்புப் பெட்டியின் மேல் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார். இரும்புப் பெட்டி இன்னும் புதிரானது. அந்தக் கால MGR , சிவாஜி படங்களில் வரும் வில்லன் யாருக்கும் தெரியாமல் உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் அதே மாடல். அதுவே அதன் கவர்ச்சிக்கும் காரணம். அப்போது வாடகையில் இருந்த போது வீட்டுக்காரர் விட்டுச் சென்றது. ஏன் விட்டுச் சென்றது என்றால் அது கீழிருக்கும் கருங்கல்லில் சிமெண்டு வைத்து பூசப் பட்டது. எப்படியாவது அதை திறந்து பார்த்துவிட வேண்டும் என்பது என்னுள் இருந்த வேட்கை. சும்மா வரும்போது போகும்போது , அதிலிருக்கும் இரு கதவின் மேல் , குத்தும் தொனியில் இருக்கும் இரு கைப்பிடிகளை பிடித்துத் திருகி ஆட்டாமல் நாங்கள் செல்வதில்லை. பூட்டு எங்கிருக்கிறது என்று ஊகிக்க முடியாத இடங்களில் எல்லாம் இருக்கும். அது திறக்கும் போது மட்டுமே தெரியும்.  எப்போதெல்லாம்  ஓனர் வருவாரோ, அப்போதெல்லாம் அதை அவர் சாவிகளைப் போட்டு ஆற அமரத்  திறப்பார்.  என்னுடைய கழுத்துக்கு மேல் உயரம் இருக்கும். முழங்கால் அளவு திண்டின் மேல் நிற்கும். நடுவில் சாவித் துளை போக, மேலே கீழே என நாலு புறமும் கீல் போன்ற ஒரு தள்ளும் பூட்டு இருக்கும். அதை ஆப்பு போல் அடித்துக் கழட்ட வேண்டும். அது போக இரண்டு கதவிலும் தனியே பூட்டுகள் இருந்தன. திறந்தவுடன் கதவின் அளவுக்கு மஹாலட்சுமி கையில் இருந்து காசுகள் கீழே இருந்த குடத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. அவ்வளவு தங்கக் காசு இல்லை. உள்ளே இன்னொரு கதவில் ஒட்டியிருந்த படம்,  அப்புறம் அதன் உள்ளே பேப்பர் கத்தைகளை எடுக்க ஆரம்பித்தார். என்னை அப்புறம் போக விரட்டி விட்டார்.

இந்த இரும்புப் பெட்டியின் மேல் அப்பாவும் அவர் பங்குக்கு ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார், அவருக்கு சரியாய் கால் எட்டாது. எப்போதும் கால் எட்டியும் எட்டாத நிலையிலுமேயே அந்த சூட்கேசை கையாண்டார். இது இருந்த இடம் அந்தகாலத்தின் பணம் இருந்த இடத்தின் ஒரு குறியீடு என்றே சொல்லத் தோன்றுகிறது. எட்டியும் எட்டாமலும். பூட்டிய இன்னொரு லட்சுமியின் மேலே நின்று கொண்டிருந்தது. கை எட்டும் தூரம் , ஆனால் எளிதில் சிக்காத ஒன்று. அப்பா பெட்டியை பூட்ட மாட்டார். ஆனால் கிளறினால் கோபிப்பார். பக்கத்தில் படுக்கை அடுக்கிலோ , இல்லை இந்தப் பக்கம் தையல் மெஷினிலோ ஏறி நின்றால் சாவகாசமாய்ப் பார்க்கலாம். அதனுள் என்னைக் கவர்வது அவர் சேர்த்து வைத்திருக்கும் சாப்பாடு , ஸ்னாக்ஸ் டோக்கன்கள். இதை ஏன் இவ்வளவு ஓவர் பாலன்ஸ் வைத்திருக்கிறார், வாங்கிக்  கொடுத்து காலி செய்தால் என்ன என்று தோன்றும். மிளகுச் சேவும், காராபூந்தியும், மிச்சரும் அதைப் பார்த்ததும் மனதில் வந்துபோகும். பொட்டலத்தில் கொடுப்பார்கள். அவர் பழைய  சம்பள பில்கள் இருக்கும், அது போக டைரிகள் இரண்டு மூன்று இருக்கும். இவை ரன்னிங் டைரிகள் என்ற பிரிவின் கீழ் வரும். 

இதற்கும் மேல் இருக்கும் பெட்டியில் பழைய ஆர்கைவ்ட் டைரிகள் இருக்கும். நான் படித்த அளவில் மேலே சொன்ன இரண்டு டைரிகளுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் ஒன்றே. ஒன்று பரணில் பெட்டியில் இருக்கிறது, மற்றொன்று கீழே பெட்டியில் இருக்கிறது. மற்றபடி எல்லாமும் பணவிவரனை மட்டுமே. 

எப்போதும் உ போட்டு ஆரம்பிக்கும் மாதக் கணக்கு. அடுத்தது வெங்கடாசலபதி ரூ 1. அப்புறம் வாடகை , பால் , மளிகை, மாத வட்டி, நம்முடைய வயதை ஒட்டி பஸ் பாஸோ, மெஸ் பீஸோ, புத்தகமோ, துணியோ. முதலில் வரவு , கடைசியில் கூட்டி செலவு. பெரும்பாலும் இரண்டு இலக்க எண்கள், ஒரு சில மூன்று இலக்க எண்கள், எப்போதாவது நான்கு இலக்க எண்கள். பூதமாய் சாமியாய்  நான்கு ஐந்து இலக்கங்கள் எங்காவது பக்கங்களில் நுழைந்து , பல மாதங்களில் இடைவிடாமல் சீராக  மூன்று இலக்க எண்களால் தேய்த்து கரைக்கப்படும் . தேய்த்து என்பதை மன்றாடல் என்றும் சொல்லலாம். சிறிய இலக்கம் பெரிய இலக்கத்திடம் மண்டியிடல். இல்லை கரையும் , கரைக்கும் ஆலாபனை. இல்லை, தோற்கடிப்பது என்பதே சரி.  பின்னால் இருந்து படித்தால் ஒரு ஆற்றின் ஆரம்பம் துளி என்று என்பது புரியும். ஆம், துளி வெள்ளங்கள். 

நாட்குறிப்பில் நடுவில் அங்கங்கே சம்பவங்கள் தேதியில் கோர்க்கப்படும். இன்று பையன் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது என்று ஒரு வரி. மேலே கீழே ஒன்றும் இருக்காது. மனதில் எண்ணிச் சேர்க்க வேண்டும். சம்பவங்கள் தேதியில் சரியாக இருக்கும். மாதக் கணக்குகள் அவரே உள்ளே ஒரு வரிசையில் எழுதி இருப்பார். பேப்பர் சிக்கனம். மற்றபடி எல்லாமும் முகவரிகள். அடியில் எல்லாம் சிதறிய சில்லறைகள், அப்புறம் ஒரு தோல் பர்ஸ். உள்ளே மடித்த புது நோட்டுகள் சில. இது மனதிற்கு ஒரு சவால், என்ன இல்லாமல் போனாலும் எடுத்துச் செலவளிக்கக் கூடாத புது நோட்டு. பேங்க் பாஸ்புக் ஒன்று. அப்போதெல்லாம் சம்பளம் என்பது கையில் கொடுப்பார்கள். சம்பள பில் பக்கவாட்டில் நீண்டு போகும் ஒரு காகிதத்தில் அச்சாகியிருக்கும்.

இன்று ஒரு சில டைரிகளை எடுத்துப் பார்த்தால் ஒரு நீண்ட கதை போல் இருக்கிறது. மேலோட்டமாக ஒரு நாமாவளி படிப்பது போல் இருக்கலாம். லலிதா சஹஸ்ரநாமம் ஆயிரத்திற்கு கவிதையாய்ப் படித்து சித்பவானந்தர் ஒரு பெரிய புத்தகம் எழுதியிருக்கிறார். எங்கோ ஒரு கொத்தனாரோ, ஆசாரியோ பெயர் வந்தால் எங்கோ மனதை தூக்கிக் கிளப்பிவிடுகிறது. ஒவ்வோர் மாதமும் உருண்டு பிரண்டு தள்ளி, இருக்கும் இடம் வந்து சேர்ந்திருக்கிறோம். வாழ்வு என்பது நீண்ட பயணம், தனிப்பட்ட ஒன்றல்ல என்று தெரிகிறது. எங்கோ தேவைப் படும் வட்டிக்குக் கொடுத்தவரும் நம் வாழ்க்கையில் ஒரு துளி இடம்பெறுகிறார்.

அப்பாவின் பெட்டியைப் போல் சிறுவயதில் என்னை வசீகரித்த பெட்டி பெரியப்பாவுடையது. எங்கும் கையில் சூட்கேசுடன் மட்டுமே பயணிப்பார். அந்தகாலத்தின் திருவள்ளுவர் வண்டியில் பயணம் செய்பவர். வீட்டின் உள்ளே நுழைந்ததும் முதலில் வேட்டியை மாற்றி பூணலில் இருக்கும் சிறு சாவியை வைத்து  பெட்டியை இருபுறமும் திறப்பார். நன்றாய் மடிக்கப் பட்ட துணிகள் குறுக்கே வார்போட்டு நிறுத்தப் பட்டிருக்கும். துணிகளுக்கு அடியில் இருந்து எப்போதும் ஒரு பிஸ்கட் பாக்கட்டை எடுப்பார். பிஸ்கட் பாக்கட் சூட்கேஸுக்காக உருவாக்கப்பட்டது என்றே  எண்ணுகிறேன். மேலும் சாவியிருக்கும் இடத்தில் இருந்து பெட்டியின் பாதுகாப்பு புரிந்திருக்கும்.

இப்போது நம் பெட்டிக்கு வந்தாக வேண்டும், கிளைக்கதை நீண்டு விட்டது.

இவ்வாறாக, ஒரு நாள் மேற்படிப்புக்காக காரைக்குடி புலம் பெயர்ந்தபோது வாங்கிய பெட்டி (VIP).  ஊரில் இருந்து கிளம்பி எப்போதும் அம்மா பாட்டியை பார்த்தபின்னர் போக வேண்டும் என்று சொல்வார். ராஜபாளையத்தில் இருந்து மதுரையில் இறங்கி காரைக்குடி செல்லவேண்டும். என் பாட்டி எத்தனை பேரை பெட்டிகட்டி அனுப்பினாரோ தெரியாது. முதலில் காரைக்குடி செல்லும்போது, பெட்டியை திரும்பப் பிரிக்கச் சொல்லி, முதலில் பொட்டலத்தில் மஞ்சள் அரிசியைக் கட்டி மூடியின் கீழே  தொங்கிய மாடத்தில்  போட்டார். பின்னர் ஒரு கையளவு செந்தூர் முருகனை மூடியில் ஓட்டச் சொன்னார். எனக்கு அப்போது செந்தூர் முருகன் எதோ காட்டின் நடுவில், புதரில் முகம் காட்டி ஒளிந்திருப்பது போலவே தோன்றும். 'எல்லாம் கேலி பண்ணுவாங்க' என்று சொல்லிப்பார்த்தேன், ஆகவில்லை. பின்னர் இன்னொரு கண்ணாடி பிரேம் போட்ட படத்தையும் கொடுத்து ரூமில் மாட்டச் சொன்னார். எல்லாம் முடிந்து போகும் போது, அவசியமில்லாமல்  அம்மாவிடம் பணம் கேட்கக் கூடாது என்றார். 

இந்த ஒரு இரண்டடி பெட்டிக்குள் வைக்கும் பொருட்களுடன் சில வருடங்கள் ஓடியிருப்பது இன்று எனக்கு ஆச்சரியமாக படுகிறது. அன்று எல்லோருக்கும் அப்படியே. விடுதியில் நுழையும்போதும், வெளியேறும்போதும் பெரும்பாலும் எல்லோரும் ஒரு பெட்டி மற்றும் ஒரு கைப்பை.இதனுள் புத்தகங்கள் அடக்கம். இரண்டு மூன்று சட்டை, கால் சட்டைகள். சிலர் சீப்பு, கண்ணாடி, தேங்காய் எண்ணெய் போன்று வைத்திருப்பார்கள். பின்னர் முக்கியமாக பணம், இதற்காகவே பெட்டி மூடப்படுகிறது.

பெட்டிக்குள் செல்வது என்ன என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. வெளியில் இடம் விசாலமானதும் பெட்டிக்கு சூட்சுமம் அதிகரிக்கிறது. 
வேலை பற்றிய எதிர்பார்ப்புகள், முகவரிகள் சேகரிப்பதை எங்கோ முக்கியமாக்கியிருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் ஆட்களின் முகவரிகள், விசிட்டிங் கார்டுகள் , கம்பெனிகளின் முகவரிகள். பெரிய தொலைவைக் கடப்பது என்பது விலாசமும், கடிதமும் மட்டுமே. படிக்கும்போது அம்மா கடிதம் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். நடப்பும், சுகமும், ஓய்வும் , விடுமுறையும் எல்லாமும் இருபத்தைந்து வருடம் முன் எழுத்தில் இருந்திருக்கிறது. திரும்பத் திரும்ப கடிதம் ஏன் எழுதவில்லை,  கடிதம் வாங்க சோம்பலா , எத்தனை முறை சொல்வது என்று கடிதத்தில் வருகிறது. நான் என்று அமர்ந்து கடிதம் எழுதினேன் என்று நினைவில் இல்லை. ஆனால் பெட்டியில் இருக்கும் கடிதங்களில் இருந்து ஏதோ நான் எழுதியிருப்பது தெரிகிறது.
 
இரண்டு மூன்று பிளாப்பி டிஸ்க்குகள் இருந்தன. அப்போது கம்ப்யூட்டர் இதழ்கள் வரும், கம்ப்யூட்டர் டுடே , PC magazine போன்றவை. அவர்கள் நுகர்வோர்களை அதிகரிக்க எதாவது பிளாப்பியில் கொடுப்பார்கள். அதை அழித்து வேறு ஏதாவது பதிந்து கொள்ளலாம், வேறு என்ன ரெசுமே தான். 

பின்னர் நமக்கும் இங்கு  போன வருடம் படித்து வெளியில் வேலையில் இருப்பவர்களுக்குமான கடிதப் போக்குவரத்து. எல்லாமும் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆங்கிலம் எழுதிப் பழகியிருப்பது தெரிகிறது.  என் குழந்தைகளுக்கு படித்துக் காட்டினேன். Well and wish the same from you எல்லாக் கடிதத்திலும் முதல் வரி வருகிறதே வருகிறதே ஏன் என்று சிரித்தார்கள்.  ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என்று மகள் கேட்டாள்.   

பின்னர்  என்னுடைய சம்பள ஸ்லிப்புகள் சில கண்ணில் பட்டது. ஒரு ATM ஸ்லிப்பில்  அக்டோபர்  மாதக் கடைசியில் கையிருப்பு 47 ரூபாயாக இருந்திருக்கிறது. ஏனென்றால் ATM ல் அம்பது ருபாய் நோட்டு வராது. அன்றைய வாழ்க்கைமுறையையும் புகைப்படம் போல் காட்டுகிறது.

கால வரிசையில் இருக்கும் அம்மா எழுதிய கடைசிக் கடிதத்தில், வீட்டில் தொலைபேசி இணைப்புக்கு எழுதிப் போட்டிருக்கிறது. டிசம்பரில் போன் வந்துவிடும் என்று எழுதுகிறார். இதுதான் கடைசிக் கடிதக் கையிருப்பு. தொலைபேசி ஒரு காட்டாறு போல் புகுந்திருக்கிறது. 

ஊரில் இரும்புப் பெட்டி எப்படி காலத்தில் உறைந்து நின்று போனதோ, அதே போல் இந்தப் பெட்டியும் இருபது வருடம் முன் உறைந்து நின்று போனது. சில பழைய நினைவுகள் மட்டுமே உள்ளே பத்திரமாய் உறங்குகின்றன. ஏன் இன்றும் இடைப்பட்ட காலத்திலும் இதன் உள்ளே வைத்திருக்க காலத்தின் வேறு குறியீடுகள் இல்லாமல் போயின என்று யோசிக்கத் தோன்றுகிறது. 

எல்லோரும் ஏன் இவ்வளவு புத்தகம் என்று பொதுவாய்க் கேட்பார்கள். இருக்கும் புத்தகத்தை வைத்து காலத்தையும் நினைவுகளையும் அடுக்கிக் கொள்கிறேன். ஒரு புத்தகத்தில் சிலநாள் முன் திறந்ததும் என் பையன் எழுத ஆரம்பிக்கும் போது அவன் எழுதிய என் பெயர் இருந்தது போல். 

இல்லையென்றால், இரண்டு மூன்று வருடமாய் ஏதாவது இப்படி எழுதியும்.
 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...