சொல்லில் அடங்காத வலி
கடந்த சில தினங்களில் மீண்டும் தேவாரப் பாடல்கள் ஒன்றிரண்டு காணொளி பார்த்து கற்றுக் கொண்டேன்.
நாவுக்கரசரின் வீரட்டானதுறைப் பதிகம். குறிப்பாக கீழே உள்ள மூன்று.
'கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே '
'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடுயிசை பாடல் மறந்தறியேன்
நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்நாவில் உன்நாமம் மறந்தறியேன்
உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலந்தேன் அடியேன் அதிகைக் கடில வீரட்டானத்துறை அம்மானே '
'போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே."
திருவதிகை கடலூர் பண்ருட்டி வழியில் இருக்கிறது, நான் பல வருடங்கள் முன் போயிருக்கிறேன் என்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் வேறெதுவும் உருப்படியாய் இல்லை. இங்கு வந்து அப்பர் தன் வயிற்று வலியை ஆற்றுப் படுத்த பதிகம் பாடியிருக்கிறார். அவர் சமண சமயத்தை தழுவியதால் , அவரை வழி திருப்ப அக்கா திலகவதியார் இங்கிருக்கும் இறைவனிடம் முறையிட அவர் சோதனைக்குக் கொடுத்த வயிற்று வலி என்பது தொன்மம்.
பல நேரங்களில் இந்த வகைப் பாடல்கள் படிக்கும் வேளையில் , அதைச் சுற்றிக் கட்டப்பட்ட பரிகாரங்கள் எல்லாம் காதில் படும் போது , இவையெல்லாம் நடந்திருக்குமா என்ற ஒரு எண்ணம் வருவது நியாயமே.
எது எப்படியோ அவர் பாடலில் அந்த வலி தெரிகிறது.
'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய்' என்று துடித்துப் போய் கேட்கிறார் போல் பட்டது. வயிற்று வலி எனக்கு தாங்க முடியாத வலிகளில் ஒன்று. எப்போதும் வருடம் ஒரு முறையாவது வரும், எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று எங்கோ இருந்து ஒரு விசை வயிற்றை இழுத்துப் பிடித்து காற்றில்லாமல், கயிறால் இறுக்கக் கட்டி, மெதுவாய் நன்றாய் வலி உச்சிக்கு ஏறி , பின்னர் மெதுவாய் மூச்சுப் போல் நிதானமாய் கீழே வரும். வயிரென்ற மத யானையின் பிளிறல் தான் வயிற்று வலி என்பது. மத யானைக்கு நினநீர் சொரியும் என்பார்கள். நமக்கும் நிணநீர் சொரிந்து வெளியேறினால் வயிற்று வலி போகப் போக நிதானமாகும். ஆனால் வெறும் வலிதான் தங்குவதற்கு கடினம். அதன் துதிக்கை தூக்கி அடுத்த முறை பிளிறுவது தெரியும் என்பதால், இன்னும் கடினம். சரியாய் இடைவெளி விட்டு எதிர்பார்த்து வரும் வலி தாங்க முடியாது. வாத்தியார் கையை நீட்டி அடி வாங்குவது போல். வயிற்றோடு துடக்கி முடக்குகிறது என்கிறார். துடக்கு என்றால் இறந்தால் பரவாயில்லை என்ற வலி என்று ஒரு பொருள் இருக்கிறது. பல பாடல்களில் வயிற்றின் அகம்படி என்று சொல்கிறார். அகம்படி என்றால் கீழ் வயிறு. சூலை சுடுகின்றது என்று எழுதுகிறார் , சூலை என்றால் முடக்கிச் சுருக்கும் வலி. கலித்தேயென் வயிற்றின் அகம்படியே , வயிறு உப்பி வரும் வலி.
இதன் மேல் அவர் வலியை வர்ணிக்கும் விதமும் அலாதியானது.
'தோற்றாதென் வலி' , நான் இதுவரை காணாத அறிந்திராத வலி என்று பொருள். எலும்பு முறிவின் வலி, எலும்பிலிருந்து எழும் வலியே அறிந்தவற்றுள் காணாத வலி, கேள்விப்பட்டு அறியாத வலியாக இருக்கும். தீயால் பட்ட வேதனை இதற்கும் மேலாய் இருக்கலாம், அதனாலோ என்னவோ சுட்டெரித்தது என்கிறார்.
நஞ்சாகி வந்தென்னை பற்றிய வலி , சுடுகின்ற சூலை, சலிப்புற வைக்கும் வலி , வேர்த்து, புரண்டு , விழுந்து மாளாத வலி.
வலித்து மலத்தை கிளறி அதையே கவர்ந்து தின்னும் அந்த வலி. வயிற்றைக் கலக்கி வெளியே தள்ள வேண்டிய வேளையில் மீண்டும் உள்ளே போவதைத்தான் மலம் கிளறி அதையே உண்ணும் வலி என்று சொல்கிறார் என நினைக்கிறேன்.
ஒரு டாக்டரிடம் சொல்லும் விவரணைக்கு பல மடங்கு மேலே சிவபெருமானிடம் முறையிடுகிறார். இதையெல்லாம் உட்கார்ந்து கேட்கும் டாக்டர்களும் யாரும் இல்லை. பின்னர் மற்றொரு முறை , அலுக்கும் வலி. பட்டுப் பட்டு அலுத்துவிட்ட வலியா ?
அனுபவிக்காத வலியை இவ்வாறு எழுத முடியுமா? முடியாது என்றே நினைக்கிறேன். விட்டால் இன்னும் பல பாடல்கள் வருணித்து வலியையும் நாவுக்கரசர் கரைத்திருப்பார் , இல்லை வலிக்கே வலி வர வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் பத்துடன் நிறுத்திக் கொண்டார்.
ஆனால் இதையெல்லாம் சொல்லி வலியின் கொடுமை காட்ட இன்னும் ஒன்றையும் சொல்லிச் செல்கிறார்.
அது சொல்லில் அடங்காத வலி, இது தான் அந்த வலியின் உச்சமாக இருக்க முடியும்.
இப்போது கண்ணை மூடி ஒரு முறை கேசாதி பாதம் மனக்கண்ணால் பார்த்தால் பல இடங்களில் தற்காலிக வலிகள் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் இவையெல்லாம் எழுதிவிடலாம்.
Comments
Post a Comment