Skip to main content

வாழ்வின் மெய்யறிதல் : பண்பு எனப்படுவது (அ) மனிதன் என்பவன்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -3/1

சென்ற பகுதியில் ஒருவரின் தனிப் பண்பு என்பது அவரிடம் இருக்கும் செல்வத்தையும், புகழையும் விட மகிழ்ச்சிக்கு எவ்வளவு அவசியம் என்று அறிந்தோம். அதுவே அவரை இறுதி வரை தொடர்ந்து வரும். இதுவே பார்க்கும் விஷயங்களில் நிறங்களை உருவாக்கும்.

ஒருவர் பாரிஸில் மகிழ்ச்சியாய் இருந்தேன் என்று சொன்னால், உண்மையில் இதன் பொருள் என்ன?. இவர் பாரிஸில் 'தான்' மகிழ்ச்சியாய் இருந்தார் என்றே சொல்கிறார். பாரிஸ் என்ற  இடம் இரண்டாம் பட்சம், 'அவரே' முதல் இடம். வாயிலே புண் உள்ள ஒருவருக்கு அமுதமே ஆனாலும் சுவை இருக்காது. வாழ்வில் மகிழ்வும், துயரமும் அதை சந்திக்கும் விதத்திலும், அது எவ்வளவு தூரம் நம்முள் செல்கிறது என்பதிலேயே அடங்கி இருக்கிறது. இவ்விஷயம் ஒன்றுதான் நம் மகிழ்ச்சியை நேரடியாகப் பாதிக்கும். மற்ற இரண்டும் (பேர் , புகழ்)   மறைமுகமாகவோ , மற்ற பொருளின் வழியோ  அல்லது பிற மனிதர்களின் வாயிலாகவோ தான் நம்மை அடைய முடியும். மகிழ்ச்சி குணம் சார்ந்து இருப்பதனாலேயே தான் பிறரிடம் பார்க்கும் நல்ல குணங்கள் நம்மை பொறாமை கொள்ள வைக்கின்றன. நம் கெட்ட குணங்களை பிறரிடம் இருந்து மறைக்க வேண்டும் என நினைக்கிறோம்.    

நம்முடைய உள்ளுணர்வே ஒவ்வொரு கணமும் நாம் செய்யும் செயலின் பின் இருக்கிறது. எனவே விடாமல் பின் தொடர்கிறது. இதனாலேயே மகிழ்ச்சியின் பின்னும் நம் தனித்துவம் என்னும் உள்ளுணர்வே இருக்கிறது. மற்ற காரணங்கள் தற்செயலானவை, மாறுபவை. அரிஸ்டாடில் சொல்வது போல் “ It is not wealth but character that lasts”.

இதனால் தான் நம் குணத்தில் மேல் விழும் பழியையம் , இழிவையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. எனவே பெருந்தன்மை, பகுத்தறியும் திறன், குதூகலமும், ஒளியும்  நிரம்பிய மனம், ஆரோக்கியமான உடல் ஆகியவை தான் மகிழ்ச்சிக்கு முதலும், முக்கியமுமான காரணங்கள். இந்த குணங்களைத் தான் நாம் நாளும்  வளர்த்து எடுக்க வேண்டும். பணமும், புகழும் பின்னால் தான் வர வேண்டும்.  

இயல்பிலேயே மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு பெரிய வரம். தன்னளவில், காரணமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பவர் மகிழ்ச்சியைத் தேட வேண்டியதில்லை. எழுச்சியும் , இன்பமும் இயல்பாய் இருப்பவர் வேறு எவ்வித இழப்பையும் எளிதாய் ஈடு செய்வார்.


இளமையும், அழகும், பணமும், புகழும் உள்ள ஒருவர் மகிழ்ச்சியாய் இருக்கிறாரா என்று தெரிய வேண்டுமா? அவர் எழுச்சியும்,அன்பும் குதூகலமும் உள்ளவரா என்று பாருங்கள். ஆம், என்றால் அவர் ஏழையோ , பணக்காரரோ , கூனியோ,நிமிர்ந்தவரோ, எப்படியானால் என்ன?  'சிரித்தால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள். அழுதால் துயரத்தில் இருக்கிறீர்கள்'. நான் எங்கேயோ சிறு வயதில் படித்தது. எளிதான சொல், அதனாலேயே  என்னுள் ஆழமாய் நின்றது. மகிழ்ச்சி வரும்போது கதவை மூடக்கூடாது. ஆனால் பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியை சந்தேகப்படுகிறோம். அப்போது  திருப்தியாய் இருப்பதாக காட்டிக் கொள்கிறோம். சிரிக்க வேண்டுமா என்று கடுமையாக எடை போடுகிறோம். மலர்வுடன் இருப்பது ஒரு நேரடியான லாபம் போன்றது, கரன்சி போன்றது. இது காசோலை அல்ல வங்கியில் சென்று அப்புறம் மாற்றிக்கொள்வதற்கு. இரண்டு முடிவிலிகளின் நடுவே உள்ள புள்ளி நம் வாழ்க்கை, மகிழ்வென்பதே நம் குறியாய் இருக்க வேண்டும் .

உடல்நலம் போல் மகிழ்வுக்கு உதவுவது பிறிதொன்றில்லை. பணம் இல்லாத, கிராமங்களில் வாழ்கின்ற, தினமும் உழைத்து பிழைக்கும் மக்களே மிக மகிழ்ச்சியாய் , திருப்தியாய் உள்ளனர், இல்லையா? எரிச்சலும், சிடுசிடுப்பும் நகர மனிதர்களுக்கு பெரிதும் இருக்கிறது, இல்லையா? மிக நல்ல உடல் நலம் தான் சீரிய  மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். எதிலும் அதிகம் கூடாது, வன்முறை, வெறுப்பு, தலையில் குழப்பிக் கொள்வது, செய்யக் கூடாது. திறந்த வெளியில் உடற்பயிற்சி, குளிர்ந்த நீரில் குளித்தல் , தூய்மையாய் இருப்பது ஆகியவை கண்டிப்பாக செய்ய வேண்டியவை. உடற்பயிற்சி இல்லாமல் ஆரோக்கியம் இல்லை.

இயற்கை நம்மிடம் அசைவையே எப்போதும் கோருகிறது. ஒட்டுமொத்த இயற்கையும் ஒரு அசைவிலேயே உள்ளது. நம்  உடம்பின் பாகங்களுக்கும், முழு உடலுக்கும் இது பொருந்தும். அரிஸ்டாடில் சொல்வது, 'வாழ்வு என்பதே ஒரு அசைவு தான்'. வேகமான, இடையறாத இயக்கம் எல்லா  உயிரிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதயம் சுருங்கி, விரிந்து, தளராமல் அடித்து இயங்கிக் கொண்டே  இருக்கிறது; ஒவ்வொரு 28 அடியிலும் தமணிகளாலும், சிரைகளாலும்  உடலை ரத்தத்தால் நனைக்கிறது. நுரையீரல் ஒரு பொறி போல் ஓய்வே இல்லாமல் இயங்கிய வண்ணம் உள்ளது. குடல் தசைகள் குறுகி விரிந்துகொண்டே இருக்கின்றன. நாளங்கள் உறிஞ்சிக்கொண்டும், சுரந்து கொண்டும் உள்ளன. மூளையும் நம் ஒவ்வொரு மூச்சுக்கும், துடிப்புக்கும், இயங்கியபடி இருக்கிறது. நம் உடலை இயக்காத போது இந்த இயற்கை ஒழுங்கு தடை படுகிறது. வெளியில் இல்லாத இயக்கம், உள்ளே குழப்பத்தை விளைவிக்கிறது. மரங்களும் காற்றால் அசைக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

எவ்வளவுதான் மகிழ்ச்சி நம் மனத்தைச் சார்ந்திருந்தாலும், இதில் பெரும்பகுதி மறைமுகமாக நம் உடல் நலத்தையே சார்ந்துள்ளது. ஒரே சம்பவம் நாம் பலமாயும் நலத்துடனும்  இருந்தால் நல்ல விதமாகவும், சோர்வாய்  நலமில்லாமல் இருக்கையில் கசப்பாகவும் தோன்றுகிறது. வெளி விஷயம் எப்படி இருக்கிறது என்பது இல்லை, அது நமக்கு எப்படிப் படுகிறது என்பதே நமக்கு மகிழ்ச்சியோ , சோகமோ உண்டாக்குகிறது. Epictetus  சொல்வது போல் 'மனிதன் பொருளால் பாதிக்கப்படுவதில்லை; பொருளைப்  பற்றிய எண்ணங்களால்தான்'. 90% மகிழ்ச்சி உடல்நலத்திலே விளைகிறது. மற்ற எல்லாம்-சீரிய அறிவும், மனமும்-  இதன் முன் சிறிதாகின்றன.  இதனாலே தான் யார் இருவர் சந்திக்கும் போதும், நலத்தைப் பற்றியே முதலில் விசாரிக்கிறார்கள். பேரும் , புகழும் அடைவது உடல்நலத்தின் முன் தள்ளியே வைக்கப்பட வேண்டியது. 

உடல்நலம் மகிழ்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருந்தாலும், நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சோர்வும் , கவலையும் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணமும் முடிவில் உடல் இயல்பு சார்ந்ததே. அவனுடைய தசையும், ஆற்றலும் எவ்வாறு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதில் இருக்கிறது. அசாதாரண உணர்ச்சி கொண்டவர்கள், சோகம் அதிகமாகவும் , அவ்வப்போது வந்து போகும் மகிழ்ச்சி உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அறிவுஜீவிகள் அசாதாரண உணர்ச்சி கொண்டவர்கள். சிறந்த கவிஞர்கள், தத்துவ ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் கவலை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். இதைத்தான் ஷாக்ஸ்பியர் 'Merchant of Venice ' ல் சொல்கிறார் :

'இயற்கை தன் மடியில் விந்தையான மனிதர்களைப் பார்த்திருக்கிறாள்;
கண்களாலே எப்போதும்  கருணையால் ஊடுருபபவர்கள்;
கிளியைப் போல் குழல் ஊதி வருபவனைப் பார்த்து சிரிப்பவர்கள்;
மற்றொரு புளித்த வகையினர், 
பார்த்துச் சிரிக்க ஆயிரம் இருந்தாலும் 
வெள்ளைப் பற்கள் வெளியே காட்டாதவர்கள்'

பிளாட்டோ இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகிறார். Eukolos - எளிதாய் எடுத்துக்கொள்பவர்கள், dyskolos - கஷ்டம் என்று எடுத்துக்கொள்பவர்கள். முதல்வகையினர் 10 ல் இரண்டு சரியாய் வந்தால் , சரியாய் அமைந்த இரண்டையே பார்ப்பார்கள். மற்றவர்கள் 8 சரியாய் வந்தாலும் , சரிவராத இரண்டையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். முதல் வகையினர், சந்தோசத்திற்கு வழி பார்ப்பார்கள். பின் வகையினர் நோவதற்கு வழி தேடுகிறார்கள். ஆனால் ஒன்று உண்டு. பதட்டத்துடனும், சிடுசிடுப்பாகவும் உள்ளவர்கள் எதிகொள்ளும் பிரச்சனைகள் பெரும்பாலும் அவர்கள் கற்பனையிலேயே உள்ளது. இவர் எப்போதும் பிரச்னையை எதிர்பார்த்தபடி இருப்பதால், பிரச்சனையை வரும்போது எதிர் கொண்டுவிடுவார். ஆனால் இது உடல்நலத்தை விலையாய்  கொடுத்தே செய்ய முடியும். பிரச்சனைகளை எதிர்பார்த்து இருப்பது உடல்நலத்தை கெடுத்துக் கொள்வதாகும். ஒருசிலரில் தற்கொலையை கூட ஏற்படுத்தும். சந்தோசமாய் இருப்பவரும் செய்வதற்கு ஒன்றும் இல்லை என ஆனபின்  உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கலாம். இருவர்க்கும் உள்ள வித்தியாசம் இறப்பதற்கு முன்னர் படும் துன்பத்திலேயே உள்ளது. முன்னவர்க்கு அதிகம், சந்தோசமாய் இறப்பவர்க்கு குறைவு.

நேரடியாய் இல்லாவிட்டாலும், மறைமுகமாவது அழகு என்பதும் உடல்நலம் சம்பந்தப் பட்டதே ஆகும். ஆண்களில் கூட, அடுத்தவர்களை நம் அழகு பாதிப்பதால், நமக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்துவிடுகிறது. கடவுளிடம் இருந்து இருந்து நமக்கு நேராய்க் கிடைக்கும் பரிந்துரைக்கடிதம் போன்றது. ஹோமர் சொல்வது போல், கடவுளின் இந்த நேரடிப் பரிசை , தொலைத்து விடக் கூடாது.

மகிழ்ச்சிக்கு எதிரியாய் அமையும் இரு விஷயங்கள் : 1. வலி 2.சலிப்பு 

இன்னும் சொல்லப்போனால், நீங்கள் எவ்வளவு வலியில் இருந்து விடுபடுகிறீர்களோ அந்த  அளவு சலிப்பை நோக்கி நகர்கிறீர்கள்.  வாழ்வு என்பதே வலிக்கும், சலிப்புக்கும் இருக்கும் இடைவிடாத , வலிமையான ஊசலாட்டமே. ஒன்று உள்ளம் சம்பந்தப்பட்டது, மற்றொன்று வெளியுலகம் சம்பந்தப்பட்டது. ஒன்று உள்ளம் சம்பந்தப்பட்டது, மற்றொன்று வெளியுலகம் சம்பந்தப்பட்டது. வறுமையும், தேவையும் வலியை உண்டாக்குகின்றன.இதே தேவைகள் அளவுக்கு மேல் பூர்த்தியாகும் நேரம் சலிப்பு வருகிறது. ஏழைகள் புற தேவைகளுக்காக வலியில் இருக்கும் போது, பணம் உள்ளவர்கள் சலிப்புடன் போராட வேண்டியுள்ளது. 

வலியைத் தாங்கும் இயல்பு சலிப்பு கூடும் போது அதிகமாகிறது.மந்தமாக இருப்பவர் வலியை அதிகம் தாங்குகிறார் . இதில் குறிப்பாக புத்தியில் மந்தம் இருப்பவர் இன்னும் கீழே இருக்கிறார். இதை உள்ளத்தில் இருக்கும் வெற்றிடம் எனலாம். இந்த உள்ளே இருக்கும் வெற்றிடமே நம்மை ஒரே வெளியில் எட்டிப் பார்க்க வைக்கிறது. வெளியில் பார்க்கும் பொருள்களில் எழும் கிளர்ச்சி, ஏதாவது செய்து உள்ளிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்னும் ஆசையே . நாம் தெருவில் நடப்பதை பார்ப்பதும், வீண் வம்புகள் பேசி இருப்பதும் இந்த ஒரே நோக்கத்திற்காகவே. நாம் பொழுது போக்கு என்று சொல்லும்  விஷயங்களும், அடுத்தவருடன் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதும் -சமூகம், ஆடம்பரம், பொழுதுபோக்கு எல்லாம் - உள்ளே இருக்கும் இந்த வெற்றிடத்தை நிரப்பவே ஆகும்.  இவை எல்லாம் அதிகரிக்கும் விகிதத்தில் சலிப்பும் அதிகரிக்கிறது என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும். 

இந்தச் சுழலில் இருந்து நம்மைக் காக்க உள்நோக்கி மனதை சரிப் படுத்தும் காரியங்களில் ஈடுபட வேண்டும். இது ஒன்றே சலிப்பை இல்லாமல் செய்யும். எண்ணம் என்பதை ஒரு செயலாக்க முடியுமா?  அப்போது  அது முடிவற்றதாக இருக்கும் அல்லவா? நம் மனதையும் , இயற்கையும் கூர்ந்து நோக்கும் போதும், அவைகளை நம் எண்ணங்களால் இணைக்கும் போது நம்முள்ளே ஏற்படும் புதிய சாத்தியங்களும் மனதை கிளர்ந்தெழச் செய்து , சலிப்பை வெளியேற்றி விடும். சலிப்பால் இந்தக்  கற்பனையின் உச்சத்தை எட்டவே முடியாது.

மறுபுறம் அதிகமான விவேகம் என்பது  ,அதீதமான மனவலிமையில் ,உணர்ச்சிகளில் கட்டப் பட்டிருக்கும்.  உடல் வலி தாங்கும், எந்தத் சிறு தடையும் பொறுக்காத, செயலை தடை பட விடாத மனதாய் இருக்கும். இந்த குணங்களை உடையவர்கள் கற்பனை மிகுந்தவர்கள். எதையும் சார்ந்தும் , எதிர் நிலையில் இருந்து பார்ப்பவர்கள். ஒரு புறம் மூடனும், மறுபுறம் மேதையும் - இது தான் மனதின் அளவுகோல், எல்லோரயும் இதனால் அளக்கலாம். ஒருபுறம் இருப்பவர் வெளி உலகிலே இருப்பார் , மறுபுறம் இருப்பவர் தன் மனதால் புற உலகை தன்பக்கம் வளைப்பார். ஆனால் ஒரு விவேகமுள்ள மனிதர் , இரண்டுக்கும் உள்ள ஒரு நடுநிலையில் இருப்பார். வலிக்கும்  சிடுசிடுப்புக்கும், அமைதிக்கும் ஓய்வுக்கும் நடுவில்,வசதிக்கும் ஏழ்மைக்கும் நடுவே .  மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்துப் பின் கடைசியாய் பின்வாங்கி தனியொருவராய் எஞ்சுவார் எனினும் தன்னுள்ளேயே நிறைந்து இருப்பார்.  இதனால் தான் மேதைகள் கூட்டத்தில் சேராமல்,  தனிமையை நாடுகிறார்கள்.

(மேலும் 3/1)


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...