Skip to main content

சைக்கிள் பதிவுகள் -5 - சாலைப்பறவைகள்



வாரத்தில் இரண்டு நாட்கள் காலை 9:30 க்கு மீட்டிங் இருக்கிறது . கொஞ்சம் கிளம்ப தாமதம் ஆனால் சைக்கிளை விரட்ட வேண்டியுள்ளது. சைக்கிளை விரட்டு நம்மை விரட்டுவது தான். டீக்கு நிறுத்தாமல் போவது போன்ற சமரசங்களுடன் சென்று நேரத்தில் சேர்வேன். இது கோடை காலம் ஆதலால், உடுப்பை மாற்றி , கொஞ்சம் மேக்கப் முடித்து தான் உள்ளே செல்ல முடியும்.  

அன்று நான் சென்று கொண்டிருக்கும் போது, முன்னே ஒரு பெரியவர் ஹீரோ ஹோண்டா splendor-ல் போய்க்கொண்டிருந்தார்.  splendor -ஐ இப்போது vintage என்றே சொல்ல வேண்டும். இவரைப் போல் ஆட்கள் இல்லாவிட்டால் , வண்டிகளுக்கென்று வேறு ம்யூசியம் உண்டா என்று தெரியவில்லை. பின்னால் இருந்து அவர் அணிந்து இருக்கும் கண்ணாடி சட்டம் தெரிந்தது. அரைக்கை சட்டை, அடர் பழுப்பு கால்ச்சட்டை. பாட்டா தோல் செருப்பு, இதுவும் இப்போதெல்லாம் வருவதில்லை. தேடித்தான் வாங்கியிருப்பார். நேராய் நிமிர்ந்து ஒரு தேர்ந்த சாரதி போல் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் பார்வை முழுதும் சாலையிலேயே இருந்தது. 

நாம் நகரத்தின் மையத்திற்குள் செல்லச் செல்ல சாலையில் பள்ளங்களின் வீரியம் குறைந்த வண்ணம் இருக்கும். வீட்டின் அருகே உள்ள முதல் சிக்னலை கடக்கும் முன் , நம் நெஞ்சில், வயிற்றில்  கை வைத்து தான் செல்ல முடியும். அங்கு பக்கவாட்டில் இருக்கும் பள்ளங்கள், நாம் அதில் இறங்க வேண்டியிருந்தால் , பின் முதுகு, வயிறு, இதயம் , தோள் தண்டி தலை வரை ஒரு கண அதிர்வை உண்டாக்கும். நடுவில் இருக்கும் டிவைடர்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. தற்போதைக்கு தார் இல்லாமல் இருக்கிறது, பின்னர் வரும் என எதிர் பார்க்கிறேன். இதில் இறங்குவதும் இறங்காததும், நம் கையில் இல்லை, பின் வரும் கூட்டமே இதை முடிவு செய்யும். இதையெல்லாம் கடந்து கோரமங்களா பக்கம் போனால், ரோடு இருக்கும் , ஆனால் வேறு மாதிரி. இங்கு பெரிய கருப்பு போர்வைகள்  விரித்தது போல் ரோட்டில் ஒட்டுப் போட்டிருப்பார்கள். இந்த மாதிரி பிளாஸ்டர்கள் அருகருகே வந்துகொண்டே இருக்கும். இல்லை என்றால் , ஒரு கருப்பு நீரோடை போல் ரோட்டில் ஒரு  பாதி இருக்கும். இன்னொரு பாதி, பழைய  , வறண்ட ஆறு போல் தோற்றமளிக்கும். அப்போது பெய்த புது தார் இதை ஒரு செழிந்த நீரோடை போல் தோன்றச் செய்யும்.  ஒரு சில இடங்களில் இதுவே ஒரு மேல் கீழ் திண்ணை , தாழ்வாரம் என்று சொல்லும் அளவு இருக்கும். இன்னும் சில பகுதிகளில் நாம் பாத்ரூம் மேட் அளவுக்கு அழகிய சதுர , நீள்சதுர விரிப்புகள் சாலையெல்லாம் வந்து கொண்டே இருக்கும். அந்த காலங்களில் அடை மழை வரும்போது, வீட்டிற்குள் அங்கங்கே பழைய துணிகளை ஒழுகிய தண்ணீரில் நீர் உறியப் போட்டிருப்பார்கள். லேசான மழை பெய்யும் போது இவ்விரிப்புகள் இன்னும் துலங்கும்.   

 நான் இவரைப் பார்த்தது கோரமங்களா கேம்ஸ் வில்லேஜ் முன்னர். இவர் இந்த ஒட்டுப் போட்ட ரோட்டில் splendor ஒட்டிக்கொண்டு சென்றது தான் நினைவுகளை எங்கோ தட்டிச் சென்றது. நன்றாக வண்டி ஓட்டக்கூடிய ஒருவரை , அவர் பிரேக் போடும் விதத்தை வைத்து கணித்து விடலாம். நல்ல ஓட்டுனர்கள் பிரேக்-ஐ கடைசியாகவே பயன்படுத்துவார்கள். ஆக்ஸிலரேட்டர் இல்லாத பிரேக்கும் இல்லாத ஒரு நிலை இருக்கிறது. இதில் வண்டி ஓடும். மூச்சை உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இடையே உள்ள அந்த இடைநிலை. இதை கும்பகம்(பானை) என்று சொல்கிறார்கள். பானையை நிரப்புதல், வெளியேற்றுதல் ஆகிய இரண்டுக்கும் நடுவே உள்ள, தேக்கி வைத்தல் என்னும் நிலை. ஆக்ஸிலரேட்டர் கொடுப்பது  மூச்சை உள்ளிழுப்பது என்றால் ,  பிரேக் பிடிப்பது என்பது மூச்சை வெளியேற்றுவது. இந்த  இரண்டும் இல்லாத நிலையே மூச்சையும், ஆற்றலையும்  பிடித்து வைப்பது போலாகும்.  

இவர் இந்த ஒருவொரு விரிப்பிலும் ஒரே சீராக , ஆக்ஸிலரேட்டர் இல்லாமல், பிரேக்கும் இல்லாமல் சென்றபடி இருந்தார். மிக லாவகமாக ஒரு பஞ்சில் ஏறி இறங்குவது போல் வண்டி போய்க்கொண்டிருந்தது. பின்னால் உள்ள சிவப்பு விளக்கு எரியவோ , ஆக்ஸிலரேட்டர் உறுமலுக்காகவோ பின் சென்றபடி இருந்தேன். தள்ளி இருந்த முச்சந்தியில் வழி இல்லாமல், குறுக்கே வந்த வண்டிக்கு பிரேக் அடித்து வழி விட்டு, சந்திற்குள் சென்று மறைந்தார்.

இவரைப் போல் பலரை அவரைக் கண்ட அந்த நாளில் நினைக்கத் தோன்றியது. ஊரில் அவர்கள் அந்நாட்களில் சைக்கிளில் வருவார்கள்.

சோ. தர்மன் அவர்களின் சூல் கதையில் வரும் நந்தவனம் நடத்தும் பாட்டி. நாளெல்லாம் ஆற்றைத் தாண்டி  இருக்கன்குடி செல்லும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறார், விளைத்த அரிசியை சோறாக்கிப் போடுகிறார். நந்தவனத்தில் நாளெல்லாம் வேலை செய்கிறார், விளைவதையெல்லாம் யாரென்றே தெரியாதவர்களுக்கு கொடுத்து விடுகிறார். 

வீட்டில் அவரது பேரப்பிள்ளைகள் முட்டைகளைத் திருடி தெருவில் சைக்கிளில் வரும் வியாபாரியிடம் அவர் ஈடு தரும் மிட்டாய்க்காக கொடுக்கிறார்கள். பாட்டிக்கு சாப்பிடும் பொருளை ஒருவர் விலை வைத்து விற்பது புரியவே இல்லை. இவ்வளவு முட்டைகளை ஏன் இவர் வாங்கிச் செல்கிறார் என்பதும் விளங்கவில்லை. இதை அவர் இன்னொருவருக்கு , இன்னொன்றுக்கு ஈடாக கொடுப்பார் என்கிறார்கள். இது நியாயமில்லை என்று நாளெல்லாம் புலம்பித் திரிகிறார். 

இவரைப் போலவே , எங்கள் ஊரில் இருந்து பத்து கிலோமீட்டரில் இருக்கும் பக்கத்து ஊரிலிருந்து  பாத்திரங்கள் விற்க ஒரு நடு வயது  அண்ணனும், தம்பியும் மாறி , மாறி வருவார்கள். அண்ணன் அங்கு கடை வைத்திருப்பதாக சொல்லுவார். 'முக்கு ரோடு அங்கிடிகி ரெண்டம்மா' என்று கடைசியில் சொல்லிச் செல்வார்.  பெரிய ஒற்றை நாமம் போட்டிருப்பார். வெள்ளை வேட்டி சட்டை  அணிந்து இருப்பார் .  நாமம் அழியாமல், வேட்டியும் அவிழாமல்  அந்த வெயிலில் எப்படி சுற்றித் திரிகிறார் என்பதே என் ஆச்சரியம். கடையில் இருக்கும் பாத்திரங்கள் எல்லாம் காலி செய்து சைக்கிளில் ஏற்றி விட்டாரா,  இல்லை சாயங்காலம் சைக்கிளை அப்படியே வீட்டில் வண்டி மாட்டை கழட்டுவது போல் கழட்டி நிறுத்தி விடுவாரா, என்பதே என் மண்டையில் ஓடும். வண்டியில் கால் போட்டு ஏறவும் இறங்கவும் பெரும்பாடு பட வேண்டியிருக்கும். ஏறும்போது ஏறி நின்று கொண்டு முன் பைகளை வாங்கி மாட்டுவார். இறங்குவது கம்பியில் தொடைகளின் நடுவை நிறுத்தி,  அங்கிருந்து காலை கீழே வைத்து, காலின் இடையில் எதிர்பாராமல் நுழைந்திடும் சிறு குழந்தையை தொடைக்கும் சேதமில்லாமல், குழந்தைக்கும் சேதம் இல்லாமல் எடுப்பது போல் காலை  எடுப்பார்.   ஒரு பெரிய மூங்கில் கூடையில் பாத்திரங்களை வைத்து, ஒரு கனத்த வெள்ளை நூல் வலையால் இறுக்கிக் கட்டி இருப்பார்.  பொறுமையாக திண்ணையில் உட்கார்ந்து  , தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, குசலங்கள் விசாரித்து பாத்திரக் கடையை திறக்க ஆரம்பிப்பார்.'அம்மா , போயின மாட்டி அடுக்கு, தட்ட அடிகிசிரி...மரிசிபோகண்ட கொஞ்சி ஒச்சய , பலக்கா உண்டு, சூடண்டா  ' என்று சொல்லி கூடையைப் பிரிப்பார் . அந்தக் கூடையிலும் முன் தொங்கும் இரு பைகளிலும் பாத்திரங்கள் வந்த வண்ணம் இருக்கும்.  அம்மாக்கள் , அக்காக்கள் இன்னும் கூடி விடுவார்கள். பாத்திரங்களில் இருந்து வேறு பாத்திரங்களை எடுப்பார். விலையை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். வாங்கும் முன் வரை விலையை சொல்லவே மாட்டார். கடைசியில் மாத தவணையில் பேசி முதல் தவணையைக் கொடுப்பார்கள். இல்லாத பாத்திரங்களை அடுத்த முறை தருவிப்பதாகச் சொல்வார். சைக்கிளை மெதுவான இரண்டே மிதிகளில், இறக்கத்தில் பிரீவீலிலேயே, பால்ரஸ் குண்டுகள் லேசாக ஒலிக்க   கோவில் வளைவில் மறைந்து செல்வார்.       

இன்னொருவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20 கிமீ சைக்கிள் மிதித்து காப்பித் தூள் விற்க வருவார். சற்று குள்ளம், தடித்த சட்டம் உள்ள சோடாபுட்டி கண்ணாடி  அணிந்து இருப்பார். முன்னாள் சிறிது வழுக்கை, முழுதுமாக கால் எட்டாது , ஒரு மாதிரி புட்டங்களை அசைத்தே  ஓட்டுவார்.  அவர் வரும்போதே சைக்கிள் செயின் அதன் உறையில் உரசும் ஒலி விட்டு விட்டுக்  கேட்க ஆரம்பிக்கும். ரெங்கா காப்பி என்று நினைக்கிறேன். அதிகம் பேசவே மாட்டார். சாயங்காலம் போல் வருவார், சில வீடுகளில் நேராக விற்று உடன் திரும்புவார்.

தினமும் ராஜபாளையத்தில் இருந்து தினசரி பேப்பர், வார இதழ்கள் போடும் சோமு என்று ஒருவர் இருந்தார். சைக்கிளில் 11 மணிக்கு மேல் ஹிந்து பேப்பர் கொண்டு வருவார். லைப்ரரிக்கு frontline போன்ற அரிதான மாத இதழ்கள் கொண்டு தருவார். மிக மெல்லிய குரலில் பேசுவார். பேப்பர் போடுவது போக போஸ்ட் ஆபீஸ் தபால் கட்டுகளை கொண்டு செல்வார்.  

எல்லோருக்குமான ஒரு தனிப் பாதை இங்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது. வேகம் என நாம் நினைப்பது நம்மைச் சார்ந்த விஷயமே ஆகும். இவர்கள் யாரின் வேகமும் பிறர் சார்ந்து இல்லை. இதை நாம்  பிறர் மேல் வைத்துப் பார்ப்பதினால் தான் நம் சிக்கல்கள் எழுகின்றன.   

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...