இதில் வந்த 'rumination' என்ற வார்த்தை தான் என்னை இப்புத்தகத்தை(Stop Overthinking : Nick Trenton) படிக்கத் தூண்டியது. இந்த வார்த்தை தான் எருமை மாட்டை நினைக்க வைத்தது.
அப்பா எப்போதாவது கடிந்து கொள்ளும் போது 'எருமைப் பால் குடிச்சு வளந்தா?' என்பார். இல்லை 'எருமைமாட்ல மழை பெஞ்ச மாதிரி' என்பார். பாட்டி வீட்டில் மாடுகள் உண்டு. தாத்தா மழை வந்தால் எப்போதும் பசு மாடுகளை உள் கொட்டத்தில் பிடித்துக் கட்டுவார். ஆனால் எருமையை வெளியேயே நனைய விட்டு விடுவார். என்ன மழைக்கும் எழுந்து கூட நிற்காது. அதிக பட்சம் கண்களை உருட்டிப் பார்க்கும். வலது பக்கம் தாத்தாவின் வைக்கோல் போரும் , எதிர்த்தாற்போல் பக்கத்துக்கு வீட்டு மாடுகளும் , வைக்கோல் போரும் இருக்கும். இரண்டு வைக்கோல் போர்களின் நடுவே உள்ள வெற்றிடத்தை பார்த்தவாறு அசை போட்டவாறே இருக்கும். பசுமாடு தோலின் மேல் கொஞ்சம் தண்ணீர் விழுந்தால் தோலை மட்டும் தோகையைப் போல் சிலிர்த்து , வாலை ஒரு முறை ஒடித்து தன் முதுகில் லேசாய் அடித்துக் கொள்ளும். எருமை தோல் சிலிர்ப்பது அரிது , அதைப் பார்ப்பது அதிலும் அரிது.
அதிகாலையில் மாடுகளை தெரு வழியாக கயிறு பிடித்து , ஊரின் வெளியே இருந்த ஊரணியில் குளிப்பாட்ட கூட்டிச் செல்வார்கள். காளைகளும் , பசுக்களும் தலைகளை அசைத்தபடி செல்லும். வேகமாய் மணிகள் ஒலிக்கும். கயிறின் மறுமுனை சுருட்டி கையில் வைத்தவாறு, அடிக்கடி பின்பக்கம் தொட்டு வேகம் கொடுப்பார்கள். கன்றுகள் ஒட்டியபடி பின் செல்லும். இதையெல்லாம் ஒரு திண்ணையில் உட்கார்ந்து பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஒரு ஊர்வலம் போல் மாடுகள் சென்றவண்ணம் இருக்கும்.
காளை மாடுகளை கால் அளவு நீரில் நிறுத்தி, தண்ணீரைக் கோரி ஊற்றி வைக்கோலால் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள். எருமை நீர் கண்டவுடன் அதுவே உள்ளிறங்கிவிடும். பெரும்பாறை ஒன்று நீரில் சரிவது போல் இருக்கும். தெளிந்த ரசத்தைக் கரண்டி விட்டு நன்றாய் கலக்கியபின் குடிப்பதற்கு ஒரு சிலர் போல், இல்லை கரி அடுப்பில் சமையலின் நடுவே பாத்திரத்தை இறக்கி வைத்து, ஒரு முறை ஊதுகுழலால் கிளறி விட்டவுடன் , கரியின் கீழே அடைபட்ட காற்று பொன் துளிகளாய் சில மேலே பறக்கும் அது போல. கலங்கிய நீரே ஏனோ அதற்குப் பிரியம் போலும். கலங்கலில் திளைப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். தலைமட்டும் வெளியில் தெரியும் படி தண்ணீரில் நின்று கொண்டே இருக்கும். காலை ஒளியில் சிறு சிறு கரும்பாறைகள் போல் அங்கங்கு தோன்றும். கண்கள் மட்டும் திறந்து மூடிய வண்ணம் இருக்கும் - கல்பொறு சிறுநுரை. நீர் பாறாங்கல்லில் மோதும் போது ஏற்படும் சிறு நுரை இல்லையா ?. எல்லா மாடுகளையும் குளிப்பாட்டி முடித்து எருமையை நீரை விட்டு வெளியேற்ற படாத பாடு படுவார்கள்.சாதாரணமாக வெளியே வராது , அதுவாக வந்தால் தான் உண்டு. நீருள்ளே இருக்கவே அது படைக்கப்பட்டது என நினைக்கிறேன். கருமை என்பது குளுமையே ஆகும்.
பசுக்களிடமும், காளைகளிடமும் அருகில் நாம் எல்லோரும் செல்ல முடியாது. கொம்பைத் தொடவும், வால் பிடித்து முறுக்கவும், பால் கறக்கவும் முயற்சித்திருக்கிறேன். இதெல்லாம் சிரமம், உதை, வால் அடி போன்ற அபாயங்கள் உண்டு. எருமை இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. மிக அகலமான , திடமான கொம்புகள், சுவர் போன்ற தோல், கம்பி போன்ற வால் , எங்கு தொட்டாலும் உறுதி ஒன்றுதான். மிகவும் துன்புறுத்தும் போது தன்னுடைய சிறுநீரில் ஊறிய வாலைச் சுழற்றி நம் மேலே தெளிக்கும்.
மற்றபடி எருமை வாயில் அசைபோட்டபடி இருக்கும் -இது தான் rumination.
பழைய நினைவுகளை மீட்டியபடி இருத்தல். துன்பமான , பயம் தரும் , எதிர்பார்ப்புகள் கூடிய நினைவுகள் மன உளைச்சலின் முக்கிய காரணம்.இவ்வகை நினைவுகளை எவ்வாறு வழியில் கொண்டு வருவது. நிக் ட்ரெண்டன் ஒரு மனநல மருத்துவர். ஒரு சிலர் பிறவியிலேயே அதிக யோசனை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்போது யோசனை செய்வது ஒரு வேலையாகவும், முன்னேற்றமாகவும் கருதப் படுகிறது. செயலில்லாத யோசனையில் பிரயோஜனம் இல்லை. இது மன உளைச்சலுக்கே வழி வகுக்கும். இறுதியில் உடலில் சென்று முடியும். நேற்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வாட்சப் குரூப் சண்டைகளாய் ஆயின. யோசனையை நிறுத்துவதற்கு சில நல்ல யோசனைகளை சொல்கிறார். மனக் குமுறல்களை எழுதி வைப்பது, 4-A ரூல் (avoid, alter , accept , adapt , மேலே சொன்னது avoid-ல் விழுகிறது) போன்ற பல .
எனக்குப் பிடித்தது இரண்டு . முதலாவது 5-4-3-2-1 விதி என்று ஒன்று . நீங்கள் பதட்டமாய் உணரும் போது 5 புலன்களையும் யோசனையில் இருந்து வேறு விஷயத்தில் செலுத்துவது இது . 5- பொருள்களை கண்ணால் நோக்குவது, 4 - பொருள்களை கையால் தொட்டு உணர்வது, 3-சப்தங்களை காதால் உணர்வது , 2-வாசனைகளை நுகர்வது (உப்மா வாடை இப்போது வருகிறது), 1- பொருளை நாவால் உணர்வது. இதில் எதாவது ஒன்றே பலன் தருவதை உணர்ந்திருக்கிறேன்.
மற்றொன்று கவலைப் படுவதை தள்ளிப் போடுவது. எதாவது உடனே செய்ய முடிந்தால் அலசிப் பார்ப்பது, அவசரம் இல்லையென்றால் நாளை பத்து மணிக்கு மேல் யோசிக்கலாம் என்று நாமே சொல்லிக் கொள்வது. நாளடைவில் இது பழகிவிடும் என்கிறார்.
ஆனால் பதட்டமில்லாத ஒரு பிறவி என்றால் அது எருமை என்றே எனக்குப் படுகிறது. எருமையை ஒரு கணம் நினைத்தால் பதட்டம் தணியும் என்றே நினைக்கிறேன். அதன் rumination அதற்கு ஒரு தியானம் போல் என்றே எண்ணத் தோன்றுகிறது. புலன் ஒடுக்கி இருக்கும் நிலை போல் அல்லவா அது. கடைசியில் நாம் அடையும் விடுதலையும் இதன் மேல் அல்லவா வருகிறது. அவரும் இதன் கழுத்தில் இருக்கும் கயிற்றை கழற்றி அல்லவா நம்மைக் கட்டுகிறார்.
ஒட்டு மொத்தமாக எருமையாய் இரு என்றே இப்புத்தகத்தில் இவர் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்.

Comments
Post a Comment