Skip to main content

யோசிக்கும் வேளையில் - 1

யோசிக்கும் வேளையில்  - 1

---------------------------------




சென்ற சில நாட்களாய் யோசிப்பதைப் பற்றி படித்தும் , யோசித்தும் பொழுது போய்க்  கொண்டிருக்கிறது. எழுதிவைத்தால் வசதி என்று நினைத்து எழுதுகிறேன்.

நான் பிறந்து வாழ்ந்த வீடு மிக நீளமானது. தெருவின் எல்லா வீடுகளும் அவ்வளவு நீளம் தான். ஐம்பது மீட்டர் இருக்கும். ஒரு நாளில் எவ்வளவு முறை வாசலும் புறமும் கடக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன். எல்லோருக்கும் கால்களில் வலு இருந்திருக்கிறது. தெரிந்தோ என்னவோ தலை வாசலில் ஒரு திண்ணை உண்டு. சரியாக உடம்பின் அளவே இருக்கும் திண்ணை அது.இதைப் போல் புறவாசலில் ஒரு துவைக்கும் கல் இருந்தது. அதை ஒட்டியவாறு கிணறு. கிணற்றை சுற்றிக் கட்டிய சுவர் முடியும் இடத்தில் இன்னொரு உயர்ந்த கருங்கல் மேடை இருந்தது. பின்னால் எங்கும் கண் முட்டும் அளவுக்கு பச்சை நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் இருந்தன. அருகில் ஓங்கி அடர்ந்து வளர்ந்த முள் மரங்கள், மஞ்சணத்தி, முருங்கை, அகத்தி மரங்கள் உண்டு. மூன்றாவது வீட்டு சம்சாரியின் ஒரு காளையும் , எருமையும் அதன் நிழலில் அசை போட்டுக் கொண்டிருக்கும். அருகில் மலைபோல் ஒரு வைக்கப்போர் இருந்தது.

சிறு வயதில் வீட்டில் வசைகள் விழும்போதும், கண்டிப்புகள் முடிந்த பின்னும் போன்ற இக்கட்டான நேரங்களில் முன் திண்ணையிலோ அல்லது பின் வாசல் கல்லிலோ போய் தனியே அமர்வது என் வழக்கம். உள்ளிருந்து கிளைமாக்ஸ் முடிந்து இன்னும் தொடரும் வசைகள் காதில் விழாது. குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை, அது சௌகரியம். பின் கொஞ்சம் வயதான பின் , பொறுப்பும் தெரிந்த பின், எதிர்கால யோசனைகளை இந்தக் திண்ணையிலும், கல்லிலுமே அமர்ந்து செய்திருக்கிறேன். சாயங்காலம் திண்ணையில் அமர்ந்தால் அம்மா என்ன யோசனையோ, பேசாமல் என்று கோபிப்பார். காலை எழுந்ததும் புழக்கடை குத்துக்கல்லில் ஏறி உட்கார்ந்து பல் தேய்த்தால் தான் அன்றைய நாள் நன்றாய் வரும். என்ன யோசித்திருப்பேன் என்று சரியாய்த் தெரியவில்லை. ஒரு இடத்தில் எதிர்காலம் பற்றிய நினைப்புகள் வந்தது நினைவில் உள்ளது. 

யோசிப்பதற்க்கு என்று ஒரு இடம், சூழல் தேவை என்றே நினைக்கிறேன். இதுவே என்னளவில் யோசிப்பதின் அடிப்படை. ஒரு பக்கம் டிவி ஓட , இன்னொரு பக்கம் யாராவது பேசிக்கொண்டிருந்தால் எனக்கு யோசனை ஒருங்குவதில்லை. புலன்களும் , குறிப்பாக கண்ணும் காதும் , மனத்தை தூண்டுபவை. மனம் கிளை பிரிந்தபடி ஓடும் ஆறு. பழகினால் ஒழிய, சந்தையின் நடுவே ஒரு விஷயத்தில் கொஞ்ச நேரம் குவியாது. எனவே இடம் முக்கியம். ஒரு அமைதி லேபிளுடன் இருந்தால் , தெரிந்தால்  மனம் இன்னும் பழகிவிடும். இப்போதெல்லாம், சைக்கிளில் செல்லும்போது ஒரு விஷயத்தை நெடு நேரம் யோசிக்கப் பழகியிருக்கிறேன். அலுவலகத்தில் ஒரு மணி நேரம் எனக்கென்று ஒதுக்கி வைக்கிறேன். இந்த நேரத்தை யோசிப்பதற்கு செலவழிப்பது என் வழக்கம். காதில் ஹெட் போன் மாட்டிக்கொள்வேன். மற்ற நாள்களில் தனியே நடக்கும்போதும் சிந்தனை குவிகிறது.

எப்படிச் சிந்திப்பது என்பது தனி விஷயம். இதைப் பற்றி நிறைய யோசித்து எழுதியிருக்கிறார்கள். என்னளவில் ஒரு விஷயத்தை தியானம் போல் உருட்டிக் கொண்டே இருந்தால் புது யோசனைகள் கிடைக்கும். அன்றைய நாளின் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் முதலில் நின்றால் , மற்ற எல்லா விஷயங்களிலும் அதற்கான பொறி தட்டுவதை, புது வழிகள் பிறப்பதை நம்மால் காண முடியும். சிந்தனை என்பது விஷயங்களை இணைப்பது மட்டுமே என்று நினைக்கிறேன்.  

சிந்தனையை ஒரு உடல் என்று கற்பனை செய்தால் , அதன் கையும் காலும் , தனிமையும், நிதானமும் மட்டுமே என நினைக்கிறேன். முதலாவது கவனம் குவிக்க, இரண்டாவது நேரம் எடுத்து , கவனிக்க உற்று நோக்க. இது இரண்டும் கலை கற்ற ஒருவருக்கு தானாய்  கை கூடுகிறது என்று நினைக்கிறேன். ஒரு மூன்று நிமிட பாடலை காதால் கேட்டுவிட்டுப் போவது எளிது. அதைக் பாடுபவர் பல மணி நேரம் செலவழித்து, பல முறை பாடிப் பழகினால் தான் , நாம் கேட்கும் ஒரு முறையில் அவ்வளவு சரியாய்ப் பாட முடியும். பாடல் என்றால் ஒரு பல்லவி, அநுபல்லவி , இரண்டு மூன்று சரணம் என்று எல்லோருக்கும் தெரியும். ஒவ்வோர் வரிக்கும் ஆரோகணம் அவரோகணம் இருக்கிறது. ஆனால் பாடுபவர் ஒவ்வொரு சொல்லாய் கற்கிறார். ஒவ்வொரு எழுத்தின் இடையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லின் இடையில் நுட்பம் இருக்கிறது.அதன் ஒவ்வொரு வரியிலும் ஒரு பயணம் இருக்கிறது. கவனம் இருந்தால் மட்டுமே இது காதில் விழுகும். பாடலை எழுதியவர், தாளம் சேர்ப்பவர்கள் என பலர் அப்பாடலில் உள்ளனர். வேகமாய்ப் போகும்போது இது எதுவும் நம் மனதில் விழுவதில்லை.

கோவிலைப் பார்ப்பது நாம் அன்றாடம் செய்வது. ஒரு முறை  செல்கையில் சிற்பியின் பார்வையில் சிற்பத்தைப் பார்த்தால் நமக்குத் தெரியும் கோணம் வேறு. ஒரு நிமிடம் நம்மை சிற்பியாக எண்ணிப் பார்த்தால் வரும் கேள்விகள் ஏராளம். சிந்தனை என்பதும் நல்ல கேள்விகள் மட்டுமே. கேள்விகள் எழுந்தபின் விடை கொஞ்சம் எளிது. ஒரு கேள்வி மூலம் அடுத்த கேள்விகளுக்கு பயணிப்பது தான் சிந்தனை எனப்படுகிறது. மேலான ஆராய்ச்சியாளர்கள் பேசும்போது குறிப்பிடுவது அவருக்கு என்ன கேள்வி இருந்தது என்பதையே. தெளிவும், ஊகமும்,, கற்பனையும் கலந்து தான் சிந்தனைக்கான பயணம் அமைகிறது. 

சிந்திப்பதன் வழிகள் என்று எனக்கு உதவிய புத்தகங்கள் எட்வர்ட் டி போனோ வின் லேட்டரல் திங்கிங், six hat thinking  போன்ற புத்தகங்களைக் குறிப்பிடுவேன்.இவை படிக்கையில் எளிதாய்த் தோன்றும். ஆனால் செயல்படுத்த அனுபவம் வேண்டியிருக்கிறது. நெட்டுரு போட்டு அதில் சொல்லியவாறு செய்தால் தகர டப்பா சத்தம் வர ஆரம்பித்துவிடும். துறை சார்ந்த அனுபவம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கு மேலான அனுபவம் வாழ்வில் இருந்தே கிடைக்கிறது என்று நினைக்கிறேன். இரண்டாவதற்கு நூல் வாசிப்பும், ஆட்களிடம் பேசிக் கேட்ட அனுபவமும் உதவும். இது இரண்டும் இல்லாமல் சிந்தனையின் தரம் மட்டுப்படும். துறை அனுபவமும் வாசித்தும், கேட்டும் , அடி பட்டும் மட்டுமே வர முடியும். சிந்தனையைக் கட்டமைக்க கற்றுக் கொண்டால் பின்னர் தரத்தை போகப் போக உயர்த்தலாம். இவை இரண்டுமே சிந்தனையின் மூளையும், இதயமும் என்று நினைக்கிறேன்.

சிந்தனையில் மற்றும் ஒரு முக்கியமான விஷயம் தீர்ப்புச் சொல்லாமல் இருப்பது. சிந்திக்கும் போது பக்கம் சார்வது சிந்தனையைப் பாதிக்கும்.

சிந்தனை முடிவில்லா வளையம் போன்றது. காமெராவில் எடுக்கும் ஸ்னாப் ஷாட் கிடையாது. மனதில் பொருள் படுவதை அந்தகாரண விருத்தி என்று நம் சிந்தனை முறை சொல்கிறது. பொருள் நம் எண்ணங்களில், நினைவுகளில், உணர்வுகளில் பட்டு பிரதிபலிப்பதை இப்படிச் சொல்வார்கள். ஒரு பட்டாம்பூச்சி நாம் மகிழ்ச்சியாய் இருக்கும்போதும், துன்பத்தில் இருக்கும்போதும் வரும் நினைப்புகள் வேறு வேறு. மனதின் சிந்தனைக்கு முடிவென்பதில்லை.

எட்வர்ட் டி போனோ அவருடைய சிந்திக்கும் வழிகளை சில புள்ளிகளாய் குறிக்கிறார்.

1. ஒரு விஷயத்தைப் பற்றி கணிப்பு அல்லது அனுமானம் மனதில் உண்டு பண்ணுவது. முன் நகரும் சாத்தியம் இல்லாமல் சிந்தனை சிறைபட்டுப் போகும். அனுமானம் சாத்தியங்களை உண்டு பண்ணுகிறது. சிந்தனை முட்டி நிற்கையில் மாற்று வழிகள் எத்தனை என்றே யோசிக்க வேண்டும்.

2. சிறு தகவல்களை கருத்துருவமாக மாற்றுவது. சிறு தகவல்களில் உழன்று கொண்டிருந்தால் அடுத்த விஷயத்திற்கு தாவ முடியாது. எடுத்துக்காட்டாக நாற்காலி என்றால் ஒரு சொல். அது  கருத்தாகும் போது முதலமைச்சர் நாற்காலியில் இருந்து, பதவி என்ற அடுத்த விஷயத்திற்கு நகரும்.

3. ஒரு விஷயத்தை மனதில் முன்னால் நகர்த்தி முடிந்த  வரை ஓட்டிப் பார்ப்பது. வீடியோ காமெராவில் வாசல் படியில் கால் வைத்து நின்று விடாமல், நகர்த்தி எடுத்துக் கொண்டே மேல் மாடி வரை மனதில் சிந்தனையால் படம் பிடிப்பது.

4. விஷயங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து சிந்தனை செய்வது. ஏற்கனவே சொல்லப்பட்ட, நம் அனுபவ வளையத்தில் மாட்டியிருக்கும் விஷயங்களின் வழியே செலுத்தித் பார்ப்பது. அரசியல்வாதிகள் என்ன கேள்வி கேட்டாலும், தான் சொல்ல வந்ததை மட்டும் எப்படியாவது இடம் பார்த்துக் கோர்த்து விடுவதைப் பார்த்திருப்பீர்கள். இரண்டு விஷயங்களை எப்படியேனும் இணைப்பதற்கும் அரசியலில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

5.சினமூட்டும் வகையில் சிந்தனை செய்தல். அடிக்கடி வேலைகளை பட்டியல் போடும் போது, ஏன் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களும், செய்யாதே என்றால் செய்வேன் என்பவர்களும் எப்போதும் இருக்கிறார்கள். நாமே செய்யும்போது இவர்களை எப்போதும் முன்கூட்டியே தீர்க்க முடிகிறது.

6. ஒரு ஊரில்  நிதானமாக இறங்கி , சந்துகளில், தெருவில் காலாற நடந்து வருவது போல , ஒரு சொல்லின், ஒரு வாக்கியத்தின் இடையில் புகுந்து வருவது. இதைத்தான் பாடுபவர்கள் நிதானமாக மேடையில் அமர்ந்து செய்கிறார்கள். சங்கீதத்தில் நிரவல் என்றோர் சொல் நினைவில் வருகிறது.

7. பட்டியல் போட்டுப் பார்த்தல் , தொகுத்துப் பார்த்தல். எழுதிப் பார்ப்பதைப் போல சிந்தனையைத் தொகுத்துக் கொள்ள வேறு நல்ல வழி இல்லை. 

மேலே சொன்ன எல்லாமும் விஷய ஞானத்தை வெளியில் நிறுத்தி சொல்லப்பட்டவை. ஒரு விஷய ஞானம் இல்லாதவர் என மனிதரில் யாரும் இருக்க முடியாது. குறுகலான மனிதரா இல்லை அகன்றவரா என்பதை விரியும் வாசிப்பும் கற்றலுமே வித்தியாசப்படுத்தும். 

Dale Kahneman மனவியல் நிபுணர் ஆனால் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர். அவர் எழுதிய Fast and Slow Thinking என்ற புத்தகம் பிரபலம். இதை அடுத்த பதிவில் எழுதுகிறேன், 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...