Skip to main content

ஒரு செல்லின் பார்வையில்

ஒரு செல்லின் பார்வையில் 
----------------------------------




                                                                                     [1]
இன்று நீங்கள் கால் கீழே ஒரு எறும்புப் புற்றையோ அல்லது ஒரு கரையான் புற்றையோ மிதித்தோ , இல்லை பார்த்தும் பார்க்காமலோ என்றும்  போல் கடந்து சென்றிருப்பீர்கள். எப்போதும் மலையை வியக்கிறீர்கள், இது எனக்கு விளங்கவில்லை . மாபெரும் மலையும் யுகம் யுகமாய் பெருகிக் கரையும் ஒரு புற்றே, இல்லையா.? நீங்கள் வியப்பதை மலைத்தல் என்கிறீர்கள். எப்போதும் மேலே பார்த்துத்தான் மலைக்க வேண்டுமா? உங்கள் உடம்புக்குள்ளே , உங்கள் கால் கீழே, பூமியின் உள்ளே மலைகள் இல்லையா? அதைத்தான் நான் இன்று சொல்லியாக வேண்டும். மார்கழி டிசம்பரில் சங்கீத, கலை கச்சேரி நடுவில் இப்படி ஒரு உபதேச வார்த்தைகள் சொருகினால் எடுபடாதா என்ற ஆசையும் தான்.

செல் என்றதும் நீங்கள் உடனே செல்போனை நினைப்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் வேறு. பேட்டரியை செல் என்று சொல்லி வைத்திருக்கிறீர்கள்.சரி , நான் இல்லாத இடம் இல்லை, குழப்ப வேண்டாம் என்று விடுகிறேன். அதுவல்ல நான் சொல்ல நினைப்பது .உங்கள் உடம்பில் இருக்கும் 37 லட்சம் கோடி செல்களில் ஒரு செல் நான். உங்களின் ஒரு மயிர்முனையின் ஐந்தில் ஒரு பாகம். இப்போது என்னை மயிரினும் கீழாக நீங்கள் எண்ணுவது புரிகிறது. ஆனால் ஒரு மரம் வேருடன் சரிவதை நீங்கள் எண்ணிப் பார்க்க முடிகிறதா? ஒரு மலை துண்டு துண்டாக இறுதியில் இல்லாமல் போவதை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா?  ஒரு வாழ்ந்த வீடு உங்கள் கண்முன் ஒளியிழந்து, செல்லரித்து , களை பற்றி முள் காடாகி , ஒரு நாள் சரிந்ததை நீங்கள் கண்டதில்லையா? 

ஹெமிங்வே சொன்னார் , எதுவும் இல்லாமல் அழிவது எப்போதும் இரண்டு படிகளில் நிகழ்கிறது.  முதலில் மெதுவாய் , பின்னர் திடீரென. மெதுவாய் நடக்கையில் எதுவும் உங்களுக்கும் எனக்கும் தெரிவதில்லை. ஒரு மெல்லிய தென்றலும் , ஓசையற்ற ஓடையும், ஒரு தளிர் அசைவதும், கண்ணில் படுவதில்லை. அது சரித்து வீழ்த்துவதும், கரை புரண்டு ஓடுவதும், கடலில் கலப்பதும் நமக்குத் தெரிகிறது. ஆம் முதலில் எல்லாமும் மெதுவாய். வீட்டின் மூலையில் சேரும் தூசி போல. விரல் நகக்கண் அழுக்கு போல.

என் அளவை மயிரின் முனையில் ஐந்தில் ஒரு பங்கு என்றேன், என் உயர அகலத்தை நீங்கள் எண்ணிப் பார்க்கலாம். ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மைக்ரோமீட்டர். அப்படி ஒரு ஆறு கூறு சேர்ந்தால் ஒரு செல் அளவு. நீங்கள் பார்க்கும் 55 இன்ச் டிவியில் தெரியும் படத்தை நிறுத்தி ஜூம் செய்தால் கடைசியில் கிடைப்பது ஒரு கலர் புள்ளி அல்லது பிக்ஸல். ஒரு சென்டிமீட்டரில் முப்பது புள்ளி இருக்கலாம்.  மொத்தமாய் ஒரு 55 இன்ச் டிவியில் 90 லட்சம் புள்ளிகள் இருக்கலாம். ஒரு கோடி என்று வைப்போம். இந்த ஒரு கோடிப்  புள்ளிகள் அணைந்தும் , எரிந்தும் , நிறம் மாறியும் உங்கள் கண்ணில் காட்சி தோன்றுகிறது. உங்கள் உடம்பை 37 லட்சம் கோடி செல்களின் இடைவிடாத ஆட்டம் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறதா? திமிங்கலங்களும் , யானைகளும், பெரிய காட்டு மரங்களும் மட்டுமே இதை விட அதிக எண்ணிக்கையில் செல்கள் கொண்டிருக்கின்றன. 

இயற்கை ஒரு பெருநடனம் என்றால் , உடலுள் தினமும் நடப்பதும் பெரு நடனம் இல்லையா? டிவி திரையில் தெரியும் படத்தில் எந்தப் புள்ளி எப்போது எரிய வேண்டும், எப்போது அணைய வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. ஒரு நொடியில் லட்சக்கணக்கான புள்ளிகள் அணைந்தும் , எரிந்தும் , நிறம் மாறும்போதும் மட்டுமே காட்சி கண்ணுக்கு கோர்வையாக புலப்பட முடியும்.இடைவிடாத இந்த புள்ளிகளின் நடனம் நடைபெறும் போதே காட்சி நன்றாய் அமைகிறது. மழை பெய்கையில், இணையத் தொடர்பு சரியாய் அமையாத போது ஏற்படும் காட்சித்தடையை நீங்கள் கண்டிருப்பீர்கள்.ஒரு கணம் நீர் வழிந்து காட்சி கரைவதை, முகங்கள் அழிவதை, முடிவில் எல்லாமும் கருப்பாய் திரையாய் மாறுவதை பார்த்திருப்பீர்கள். என்றேனும் இந்தக் காட்சிக்குப் பின் என்ன நிகழ்கிறது என்று யோசித்ததுண்டா? இந்தக் காட்சியில் ஒரு புள்ளியின் மதிப்பு என்ன என்றும் , புள்ளியின் வண்ணங்கள் எத்தனை என்றும், அது எங்கு பிறந்து எங்கு மறைகிறது என்றும் எண்ணியதுண்டா? அந்த ஒரு புள்ளி இல்லாமல் போனால் என்ன தான்  ஆகிவிடும்? அந்தப் புள்ளியை அங்கே தோன்றச் செய்வதும், மறையச் செய்வதும் யார் என்று சிந்தித்ததுண்டா?

இந்தப் புள்ளி ஒன்றொன்றாய் குறைபட்டு , பெரிதளவில் புள்ளிகள் பழுதானால் அது காட்சிப்பிழை. பிழையுள்ள காட்சி பார்த்து பழகிப் போய்விட்டீர்கள் என்று நான் சொன்னால் என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நாள் முழுதும் கருந்திரை விழுந்தால் , இது எப்படி என்கிறீர்கள்? 

இந்த இடத்தில் என் பிறப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். உலகில் எப்போது முதல் செல் தோன்றியது என்பது இன்னும் தீர்வாகவில்லை. நாலாயிரம் கோடி வருடங்கள் முன் ஒரு ஆதிகுழம்பில் முதல் செல் தோன்றியது என்கிறார்கள். ஏன் அது இரண்டாவது செல்லாக பிரிந்தது என்று தெரியவில்லை. பிரஞை என்ற சொல்லுக்கு பதில் ஆற்றல், விசை என்ற சொல்லே அறிவியலில் செல்லும். ஏனோ அது இரண்டாகப் பிரிந்தது. அன்று பிரிந்தது தான் இன்று என் வரையில் வந்திருக்கும் சங்கிலி. உங்கள் உடலில் இருக்கும் செல்களும் கோடி கோடி செல்களாய் வெளியே வாழ்ந்து கொண்டிருந்த செல்களின் கூட்டமே. உங்கள் உடலில் பிறந்து , உடலில்  மடியும் செல்கள் பாதி என்றால் , உங்கள் உடம்பில், உங்கள் உடம்பிற்கு முன் தோன்றி உங்கள் உடலில் குடியேறிய செல்கள் பாதிக்கும் மேல். 37 லட்சம் கோடி என்ற எண்ணை  மீண்டும் நினைவுறுத்துகிறேன். இதையும் சேர்த்தால் லட்ச லட்சம் கோடி செல்களால் கட்டிய மலை மனித உடல்.

எல்லா மனித செல்களும் என்னைப்போல் எங்கோ ஒரு செல் என்ற விதையில் இருந்தே தொடங்கின. ஆலமரம் விதையில் உறங்குவது போல அந்த ஒரு செல் முழு உடலையும் உள்ளே கொண்டிருந்தது. அதன் பின் ஒரு ஓவியம் போல் அது தன்னைத்தான் வரைந்து கொள்ள ஆரம்பித்தது. உணவும் , காற்றும் அதைப் பெருக்க வைத்தன. ஒன்றொன்றாய் பிரிந்து காலும், கையும் ஆனது. மேலும் பிரிந்து வயிறும், மூளையும், இதயமும் ஆனது. அவை தோன்றும் இடம் அவைகளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் ஒரு அன்னை இருந்தாள். அவற்றின் பெயர் சூட்டி, மூதாதையர் , கொடிவழி எல்லாம் மந்தனமாய் அதற்குள்ளேயே எழுதி வைத்தாள் அவள். அதை எங்கள் தலைவிதி என்று சொல்லலாம் தான். இல்லை, எங்கள் தலைவிதி உங்கள் விழைவைப் பொறுத்தே அமைகிறது. உங்கள் விளைவு முடிவிலியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சிரிப்பவரும், அழுபவரும், முடிவில்லாமல் ஓடுபவரும் எங்களையும் சிரிக்கவும், அழுகவும் , ஓடவும் வைக்கிறார். உங்களில் தினமும் செத்துப் பிழைப்பவர் எங்களையும் செத்துப் பிழைக்க வைக்கிறார்.

உங்களில் ஒவ்வொருவரும் நூறாண்டு என்று வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆமை இருநூறாண்டு வாழ்கிறது. திமிங்கலங்கள் நானூறு வருடம் வாழ்கின்றன. மனிதரில் அதிகம் வாழ்ந்தவர் 122 வயது பிரெஞ்சுப் பெண். இப்போது புரிந்திருக்கும் வருடம் என்பதும் ஒரு எண் மட்டுமே. உங்கள் உடலில் வாழும் செல்களுக்கு வயது வெவ்வேறு. வெள்ளை அணுக்கள் ஒரு நாள் முதல் நாலு நாள் வாழ்ந்து மடிகின்றன. உங்கள் வயிற்றின் தோல் பகுதி பாக்டீரியா அரித்து ஐந்து நாளில் இறந்து புதிதாய்ப் பிறக்கிறது. தோல் நாலு வாரத்தில் வேறொன்று. ரத்த செல்கள் நான்கு மாதம், எலும்பும் கொழுப்பும் பத்து வருடம் வரை வாழும். மூளையில் பிறந்த செல்களும், கண்விழி செல்களும் , இதயத்தின் பெரும்பாலான செல்களும் மட்டுமே உங்கள் உடம்புடன் அழிகின்றன. எத்தனை மரணம், எத்தனை ஜனனம் என்று பாருங்கள். இதில் எது அழிந்தால் நீங்கள் அழிகிறீர்கள் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன். இதற்கும் இன்னும் விடையில்லை. மூளைச்செல்களுக்கு மறுபிறப்பு இல்லை. மறுபிறப்பு இருந்திருக்குமானால் நினைவு என்பது இருந்திருக்காது, ஏனெனில் நினைவு என்பது செல்களின் இணைப்பே அறிவியலின் இன்றைய கூற்றுப் படி. இதயம் நின்றால் , சுவாசம் நின்றால் உடம்பார் அழிவார். 

புதுப்பித்தல் என்பது உங்கள் உடம்பின் முக்கியமான இடங்களில் அவ்வளவு இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். செல்களுக்கு உணவும் , ஆற்றலும் ரத்தத்தின் மூலமே வருகிறது. இதயம் சீர்கெடுவது, செல்கள் சீர்கெடுவதே ஆகும். எங்கு ரத்த இணைப்பு தடைபட்டாலும் செல்கள் வேலைசெய்வதில் தொய்வு ஏற்படும். உங்களுடைய மூளையை வெளி உலக ஆண்டெனா என்றே சொல்ல வேண்டும். நீங்கள் உற்சாகம் அடைந்தால் நானும் உற்சாகம் அடைகிறேன். நீங்கள் பயமும், கோபமும், வன்மமும் கொண்டீர்கள் என்றால் இது உடலின் எல்லா செல்களுக்கும் தீயாய் பரவுகிறது. உங்கள் ஆண்டெனா வெளி உலகில் எதை அலையாய் வாங்குகிறது என்பது , உங்கள் உடலின் மின்னணுச் சுற்று முழுதையும் பாதிக்கிறது. IC -ல் பாட்டெரியின்  ஒரே கரண்ட் கடைசி டிரான்சிஸ்டர் வரை பாய்வது போல. அழுத்தும் சுவிட்ச் வெளியிலேயே இருக்கிறது, அது எல்லா செல்களுக்கும் பொது. கயிறா , பாம்பா என்பது பார்வையைப் பொறுத்தது. ஆனால் இந்த சிறு அலை கடைசியில் கரை சேராமல் மீளாது. கடலால் யுகம் யுகமாய் அலையடிக்க முடியும். உடலின் செல்கள் தாங்குமா, எவ்வளவு தாங்கும் என்பது பெரிய கேள்வி.

ஆக , இந்த இடைவிடாத இறப்பும் பிறப்பும் ஏன் ஏற்படுகிறது? ஒரு உடலின் வளர்ச்சி என்பது செல்லின் மரபணு குறியீட்டைப் படித்து அந்த இடத்திற்கேற்றாற்போல புரதம் உற்பத்தி செய்வதே ஆகும். பிறந்த பின் தகவலைப் பரிமாறுவதும், தன் வழியில் வரும் கட்டளைகளைக் கேட்பதுமே ஆகும். ஒரு செல் பிரிந்து மற்றோர் வளர்வது என்பது மிகப்பெரிய பிரதியெடுத்தலும் ஆகும். கோடிக்கணக்கான பக்கங்களை பிரதியெடுத்து போல. இதை DNA காப்பி என்பார்கள். இதில் பிழைகள் ஏற்படலாம். இங்கு பிழையானால் பின் எல்லாம் பிழை ஆகிறது. அதனால் உங்கள் உடம்பே ஒரு இடத்தில் இந்த செல்லை அழிக்கும் . மேலும் வெட்டு ,குத்து , காயம்  போன்ற விபத்துக்கள் செல் அழிவை ஏற்படுத்துகின்றன.

இதற்கெல்லாம் மேலே, ஒரு செல் 40 முதல் அறுபது வரை மட்டுமே பிரியலாம் என்ற இயற்கை விதியிருக்கிறது. இந்த மேல் அளவை எல்லா இடத்திலும் எட்டுவதையே வயதாதல் என்று சொல்ல வேண்டும். நரைமுடி, மூட்டு வலி, தசை சுருங்கி தளர்தல், நகங்கள் மெலிதாகி, கோடுகள் தெரிவது, பார்வைப் பிரச்சனைகள்  போன்றவை. இந்த கட்டுப்பாடு ஏனென்றால் வயதான செல்கள் கட்டுப்படாமல் பிரிவதையே புற்றுநோய் என்கிறோம்.
செல் வயதடைவதே உடல் வயதடைதல் ஆகும், நீரிழிவு, இதயநோய் போன்ற எல்லா நோய்களுக்கும் காரணம் இதுவே. செல்கள் வயதடைவதற்கு ஓரிடத்தில் அவைகள் தன்னை மறப்பதே காரணம். தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் வேலை அவைகளுக்கு இருப்பதால், இடைவிடாத தேய்மானம். அவைகளை பழுது பார்க்கும் வழிகள் அவைகளுக்குள் இருந்தாலும், இதைச்  செய்ய நேரமும் சூழலும் அமைவதே இல்லை. இறுதியில் செல் இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. 
                                                                              [2]
செல்களான எங்கள் வாழ்வைப் பற்றி ஆராய்ந்து சாகாமல் இருப்பது எப்படி என்று ஆராய்வது இன்று உலகின் பணக்காரர்களின் முக்கியத் தலைவலி. வேறு எல்லாம் அடைந்த பின் எட்டுவதற்கு இறவாமை ஒன்றே மிச்சம்.  வயதடையாமல் இருப்பது எப்படி என்று ஆராய்ந்து மருத்துவம் தேடும் மார்க்கெட் 88 பில்லியன் என்று கணக்கிடுகிறார்கள். இது இன்னும் ஐந்து வருடங்களில் பல மடங்கு வளரும்  என்று சொல்கிறார்கள். இப்போதே ஓஸிம்பிக் போன்ற நோகாமல் தின்னும் மாத்திரைகள் சந்தையில் இருக்கின்றன. இரண்டு புத்தகங்கள் முக்கியம் 1) Life Span - Why we age and why we dont have to . 2) வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய Why we die என்ற புத்தகம்.

இவர்கள் இருவரும் சொல்வது இறவாமை என்பது சாத்தியமில்லை. இயற்பியலில் சமநிலை குலைதல் என்பதை entropy என்பார்கள். சமநிலை அப்படியே நிலைகுலையாமல் இருப்பது சாத்தியம் இல்லை. நிலைகுலைவை அறிந்து கொள்ளலாம் , பின்னர் தாமதப் படுத்தலாம். இயற்கை ஜீன்களை பரிணாமத்தில் முன் நகர்த்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ளது. அதற்க்கு உடல் முக்கியமில்லை, அது ஒரு படகு அவ்வளவே.நீங்கள் வாழ்வது என்பது உங்கள் குழந்தைகள் உடலில் உள்ள உங்கள் மரபணு  வாழ்வதும் சேர்ந்துதான் ஆகும். எல்லா உடல்களும் மரபணுக்களை  முன் தள்ளும் முயற்சியிலேயே இருக்கின்றன. இறப்பில்லாமல் எல்லோரும் தேங்கிவிட்டால் இயற்கை முன் நகராது. நான் உள்பட எந்த உயிர்க்கும் போகும் தேதி தெரிந்து விட்டால் மேற்கொண்டு செய்ய ஒன்றும் இல்லை. என்ன செய்து என்ன ஆகப் போகிறது. 

நான் நிலைகுலையாமல் , சமநிலையில் இருக்கும் சத்வ நிலையை ஹோமியோஸ்டேஸிஸ் என்று சொல்கிறார்கள். இங்கு வளர்ச்சியும், செப்பனிடுதலும் சமநிலையில் இருக்கும். இந்த இடத்தை ஒவ்வொரு நாளும் தியானம் போல் எய்தினால் , ஒட்டு மொத்த உடலும் சமநிலையில் நீடித்து இருக்கும்.

இந்த நிலையை எட்ட அவர்கள் தினமும் செய்ய வேண்டியதாக குறிப்பிடும் வழிகள் பின்வருவன.

1. அளவாகச் சாப்பிடவேண்டும். சாப்பிட்டுக் கொண்டே இருப்பது செல்கள் செப்பனிடுவதைத் தடை செய்கிறது. முன்னே சொன்ன ரிப்பேர் ஸ்டேட் உடலில் சர்க்கரையில்லாமல் இருக்கும் நிலையிலேயே ஆரம்பிக்கிறது. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதைவிட எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். மூன்று வேளை உணவு உடலுக்கு அதிகம். இரண்டு அல்லது ஒரு வேளை போதுமானது. இரண்டு வேளையில் ஆரம்பித்து ஒரு வேளைக்கு வரலாம். 8 முதல் பனிரெண்டு மணி இடைவெளி இருந்தல் நல்லது. நடுவில் எதுவும் உண்ணக்கூடாது. நேற்று அண்ணாமலை அவர்கள் autophagy  என்ற சொல்லைச் சொல்லியிருக்கிறார். ஊரே அல்லோல கல்லோல படுகிறது. இதற்கு மேல் விரித்துச் சொல்லவேண்டியதில்லை. மூன்று மாதம் ஒரு முறை சில நாட்கள் (ஒரு வாரம்) உண்ணாமல் இருப்பதும் இதற்க்கு நிகர். உண்ணாமல் இருக்கும்போது  நீரும், உப்பும், வைட்டமின் கிடைப்பதும் முக்கியம். எலுமிச்சை சேர்த்த நீர் அல்லது, எலெக்ட்ரோலைட் நீர் அடிக்கடி குடிக்கலாம். இதை உடலில் சோதித்துப் பார்த்து நெடுநாள் வரும் வகையில் ஒரு பார்முலாவை தன்னளவில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இரவு உணவு எட்டு மணி , பின்னர் அடுத்த உணவு அடுத்த நாள் 12 மணி என்பது நல்ல ஆரம்பம்.

2. உடம்பை நெருக்கடியில் சிறிது நேரம் வைக்கும் உடற்பயிற்சிகள் முக்கியம். இன்றைய மனிதன் உடல் நெருக்கடியில்லாமல் சொகுசாய் வாழ்ந்து பழகிவிட்டான். உபயோகம் செய்யாத பகுதி கரைந்து போகும். மாரத்தான் ஓட்டம் ஓடியபின் செல்களில் மைட்டோகாண்ட்ரியா பல மடங்கு அதிகரிப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். எதாவது விளையாட்டு, நடத்தல், ஓட்டம், எடைப் பயிற்சிகள் அவசியம்.

3. மேலே சொன்னது உடல் நெருக்கடி, மன நெருக்கடியல்ல. தியானம் மிக அவசியம் என்று மைட்டோகாண்ட்ரியாக்களை ஆராயும் Matt Picard சொல்கிறார். நீங்கள் உலகை எப்படிப் பார்க்கிறீர்கள், நேர்மறையாக நமிக்கையுடனா, இல்லை எதிர்மறை கசப்புடனா  என்பது உங்கள் முழு உடலையும் பாதிக்கிறது. இந்தப் பத்தி இவ்வளவு டெக்னிக்கலாக போவது எனக்கும் ரசமாகவில்லை. எல்லாம் ஏற்கனவே சொன்னது போல் தான் இருக்கிறது. எல்லாம் சொல்லியும் படித்தும் பின்னர் வாழ்க்கை இதற்க்கு வெளியே பீறிட்டு இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது. உலகில் 122 வயது வாழ்ந்தவர் 117 வயது வரை புகை பிடித்திருக்கிறார். 100 வயது வரை சைக்கிளும் ஒட்டியிருக்கிறார். கடைசி நாற்பது வருடம் நர்சிங் ஹோமில் தனியே இருந்திருக்கிறார். மன அழுத்தம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இதுவல்லாமல் வேறு எப்படி இருக்கும் நெருக்கடி? அவர் பார்க்கும் பார்வையில் இருந்திருக்கும் சூட்சுமம். கைகேயி கேட்ட வரத்தால் தயரதன் மயங்கி விழுந்து விடுகிறார். இதனால் கட்டளையை கைகேயி ராமனிடம் நேரடியாக பட்டம் துறக்கவும் , காடு செல்லவும் சொல்ல நேர்கிறது. இதைக் கேட்ட ராமன் சொன்ன சொல், ஏன் இதை அப்பாவிடம் சொல்லி என்னிடம் அப்புறம் சொல்ல வேண்டும்? நேரடியாக என்னிடம் சொன்னால் அப்பாவும் மயங்கியிருக்க மாட்டாரே? என்பது. பார்க்கும் பார்வையில் எல்லாம் இருக்கிறது. நீங்கள் சொன்னால் மறுப்பேனா?  இதை அறிந்த லக்குவனன் கைகேயியைக் கொன்று உனக்கு பட்டம் சூட்டுவேன் என்று புறப்படுகிறான். உனக்குக் கொடுத்துப் பின் இல்லை என்று சொல்லிய தயரதன் போல் வாழ்வேனா என்கிறான்.  லக்குவனை ஆற்றுப் படுத்தும் ராமனின் பதில். நான் ஆராயாமல் அரசாள ஒப்புக் கொண்டது என் தவறல்லவா? அன்றி வேறு எவர் பிழை என்கிறான். கைகேகியின் பிழையற்றவள் என்கிறான்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்

காடு சென்று முனிவனாவது நான் பெறப்போகும் செல்வம் என்று சொல்கிறான். துறவறம் இன்னும் பெரிது என்று மகிழ்ந்து செல்வதாக கம்பன் சொல்கிறான். ஏன் இவ்வளவென்றால் பார்வையில் இருக்கிறது உலகம் என்பதைச் சொல்ல. இலக்கியம் படித்தால் பார்வையும் உலகமும் விசாலம் ஆகும்.
  
உங்கள் உடலின் தற்காப்பும், வேலையும், வளர்ச்சியும், செப்பனிடுதலும் எல்லாமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றை வீட்டுக் கொடுத்தே மற்றொன்றை வாங்க முடியும். நோயிருந்தால் பசிப்பதில்லை, உண்ணலாகாது. நோயிருக்கையில் செரிப்பதற்கு விலையிருக்கிறது. நாளெல்லாம் உண்டுகொண்டே இருந்தால் செப்பனிடுதல் நடப்பதில்லை. இந்தச் சமநிலை பார்வையை விசாலம் செய்தால் கிட்டும்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...