மரணத்தை நடித்தல்
--------------------------
அற்ப வயதில் ஒருவரைப்
பறிகொடுத்த அந்த
வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும்
முடிவின்மையின் சுவரில் மோதி
செய்ய ஒன்றும் இல்லாமல்
நடித்துப் பார்க்கிறார்கள்
கணவர்கள் கணவராய்
மனைவிகள் மனைவியாய்
அன்னைகள் அன்னையாய்
தந்தையர் தந்தையாய்
அந்த உடலாய்
அதன் நோயாய்
ஒத்திகை முடிந்து
இழப்பின் அருகில் இருக்கும்
அவர் கை பிடித்து
ஓரிரு சொல்லில் மற்றோர் முறை
சொல்லிற்கு அப்பால்
மற்றுமோர் முறை அவ்வுடல்
-----------------------------
அந்தப் பறவை
உச்சிக் கிளையில்
அமர்ந்திருந்தது
கீழிருந்து
நீரில் மிதக்கும் பறவைகள்
உற்றோர் உறவோர்
வங்கி கடன்
கூடல் பிரிவு
பயம் துணிவு
தயவு தாட்சண்யம்
உண்டு இல்லை
என இன்னும் பல
நாளும் பொழுதும்
கூறிய படி இருந்தன
கிளையில் இருந்த பறவை பெரும்பாலும்
மொழியில்லாமல்
தலையை மட்டும் ஆட்டிக் கேட்டது
பின் ஒரு கணம்
விடுதலும் மெய்மையும்
இரு சிறகுகளாய்
விண்ணேறி சிறகடித்துப் பறந்தது
பின்னர் எதோ ஒரு கணம்
மீண்டும் கிளை வந்து அமர்ந்தது
பாற்கடலும் குமிழிகளும்
---------------------------
நீளமான விடுமுறையென்றதும்
திசையெங்கும் காற்றில் மிதந்து
ஒன்றென பலவென
அக்கோயிலுக்குள் வந்து கொண்டேயிருந்தன
ஒரு நூறாயிரம் குமிழிகள்
எழுந்தும் தாழ்ந்தும் வளைந்தும் சென்று
கோயிலைச் சுற்றிய வழிக் கம்பிகள்
பாற்கடல் கடையும் கயிறென்றாகின
எவ்விலையேனும் கொடுத்த பெரிய பசையுள்ள குமிழிகள்
கடல் கடையும் கயிறின் தலை பற்றின
முடிந்த விலைகொடுத்து காற்றில் காய்ந்த குமிழிகள் கயிறின் இடை பற்றின
பொதுவில் ஒன்றும் செய்ய இல்லாத குமிழிகள் கயிறின் வால் பற்றின
கோயிலின் உயர்ந்த கோபுரம் மத்தென்று ஆனது
பெரிதும் சிறிதும் பொதுவும் ஆன குமிழிகள் சேர்ந்து
மூடும்வரை மூச்சுமுட்ட கடைந்தன அக்கோயிலை
அயர்ந்து வழியில் அமர்ந்தன சில
முடியாமல் திகைத்து எதிர் வழியில் வெளியேற நினைத்தன சில
வழி கடிது என்று சரியாய் தெரிந்தவைகளின் உதடுகள் மட்டும் ஏதோ முணுமுணுத்தன
குமிழிகள் தத்தம் பாதையைக்
பிறர் களவாடிய போது
எப்போதும் எழுந்தது விடம்
உடனே ஓர் நீலகண்டனும்
கழுத்தும் உடலும் வாலும் சேர்த்து
சரியாய் இறுக்கிய ஒரு புள்ளியில்
தெரிந்தது தெய்வம் அந்தச் சந்நிதியில்
தூரத்த்தில் ஒரு சிறு வெளிச்சமாய் துளி அமுதமாய்
வெடித்துக் கலந்தன முன்னிருந்த சில குமிழிகள் காற்றில்
நுரைத்துப் பின் சேர்ந்தன இன்னும் ஒரு நூறாயிரம் குமிழிகள்
ஆயுள் ரேகை
------------------
நெடுநாள் வாழ்வது எப்படி என்பது
விடையில்லாமல் நிற்கும் கேள்வி
நெடுநாள் என்பது
எழுபதல்ல
எண்பதல்ல
தொண்ணூறல்ல
நூறுமல்ல
விஞ்ஞானிகள் தோற்கடிக்க வேண்டியது
அந்த 122 வயது வாழ்ந்தவரை
ஒரு உயிரணுவின்
ஊன் குருத்தின்
பிறப்பெங்கே
இறப்பெங்கே
நோய் எங்கே
என்று ஆராய்ந்த பின் அவர்கள்
ஒரு மனிதன் வாழ்வில்
எப்போது என்ன உண்ணலாம்
எப்போது என்ன செய்ய வேண்டும்
ஒரு நெருக்கடியை எப்படிப் பார்க்க வேண்டும்
என்று சொல்லியிருக்கிறார்கள்
அவன் இதை ஓடும் ரயிலில்
படித்துப் பின் ஆசையில் அந்த
122 வயது வாழ்ந்தவரை தேடினான்
தினமும் சாப்பிட்டதும் புகை பிடித்திருக்கிறார்
வாரம் ஒரு கிலோ சாக்லேட்
உழைத்துச் சம்பாதிக்கவில்லை
கோட்பாடுகள் எதுவும் இல்லை
ஜிம் உடற்பயிற்சி எதுவும் இல்லை
கணவர் இல்லாமல் 55 வருடம்
மகள் இறந்து 63 வருடம்
பேரனுக்குப் பின் தனியாய் 34 வருடம்
தினமும் கடவுளைப் நன்றியுடன் பிரார்த்தித்து
தன்னை ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்
122 வயதானவர் கதை இப்படி
தடம் புரளும் போது
அவனது ரயில் நிலையம் வராமலேயே
அவன் தவறாக இறங்கிவிட்டிருந்தான்
நமக்குத் தெரிந்த காலம்
----------------------------
நியூட்டன் சொன்னார் :
கால நேரம் ஒரு தனிப் பாதை
வற்றாமல் கடல் சேராமல்
என்றென்றும் ஓடும் நதி
நாம் எல்லாம் அதன் கரையில்
கால் நனைத்து வெளியேறும் துகள்கள்
காலநதியில் என்றும் நமக்கு முன்னால்
நீர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
ஐன்ஸ்டீன் சொன்னார் :
காலமும் நேரமும் நாமும்
சேர்த்து மடித்த துணிப் பொதி
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு துணிப் பொதி
கேட்டால் கிடைக்கும் என்றார்
அவரவர் துணிப் பையில் அவரவர் காலம்
காலத் துணியில் எல்லாமும் முன்னரே நடந்துவிட்டது
ஆனால் நமக்குத் தெரிந்த காலம்
வியர்த்தால் துடைக்கும் வெள்ளைக் கைக்குட்டை
இல்லை , வரையப்படாத ஒரு வெள்ளை ஓவியத் துணி
இல்லை, எழுதப்படாத ஒரு வெள்ளைக் காகிதம்
இல்லை எல்லாமும் தான்
பன்னிரண்டு மடிப்பில்
வயதாகும் ரசம்
----------------
இப்போதெல்லாம் அம்மா நாளுக்கு
ஒரு முறையாவது இப்படி ஒன்றை
எப்படியும் சொல்லிவிடுவாள்
இப்போதெல்லாம் வைத்த இடம் நினைவில் இல்லை என்பாள்
கண் சரியாய்த் தெரியவில்லை என்பாள்
கைப் பழக்கம் முன்போல் வேகம் இல்லை என்பாள்
கால் நின்றால் உடல் கேட்கிறது கேள்வி என்பாள்
அன்று வருவது அறிந்து
கொதிக்கும் ரசத்தில் அமைதியாய்
உப்பையும் புளிப்பையும்
சரியாக்கினான் மகன்
அமரர் பூங்கா
---------------------------------------
ஊன்றிப் பார்த்ததும் கதை புலப்பட ஆரம்பித்தது
இன்றைய செய்தித்தாளில் ஒருவரின் இறப்புக்கு
இரண்டு இரங்கல் அறிவிப்புகள்
ஒரு பக்கம் பூதேவி மறுபக்கம் ஸ்ரீதேவி
இருவரும் ஆசிரியர் இறந்தவர் தலைமை ஆசிரியர்
பூக்கள் எனப் பெயர்கள்
தாமரை மல்லி முல்லை என்ற கிளாசிக் முதல் தலைமுறை
செவ்வந்தி கனகம் செம்பருத்தி என்ற இறுக்கமான இரண்டாம் தலைமுறை
துலிப் ஆர்ச்சிட் பேபிஸ் பரீத் இது கலைத்துப் போட்ட மூன்றாம் தலைமுறை
எங்கிருந்தோ இவர்களை எல்லாம் மீறி
ஒரு ரமீலா
ஜன்னல் உள்ளே பட்டாம்பூச்சியாய் இடைவிரிசலாய்
இரு கட்டங்களில் ஒரு வாழ்வு
கடவுளின் கோப்புக்குள் அழகிய சிறு ஆவணம்
சில சொற்களும் பெயர்களும் மற்றும் ஒரு படமுமாய்
இப்படித்தான் எரிமேலியும் பழனியும் ...
----------------------------------------------
ஒரு பின் கால் முன்
ஒரு முன் கால்
என்றோர் கணத்தில்
தொடங்கி
பின் கால் முன் முன் கால்
பின் கால் முன் முன் கால்
பின் கால் முன் முன் கால்
என்ற ஓயாத ஒரே சீரடியாய்
அப்போது
அந்த மலையும் முகடும்
ஊரும்
பேருமாய்
அவர்கள் கால் கீழ் வந்தன



Comments
Post a Comment