Skip to main content

ஷீரான்னம்

ஷீரான்னம்

------------





இப்போது மார்கழி மாதம் நடுவில் நிற்கிறது. பெங்களூரின் நிலைமையில் டிவி வழியாகத்தான் மார்கழி தெரியவர வேண்டும். டிவி இல்லாமல் பல வருடங்கள் தாண்டி இப்போது சில மாதங்களாய் டிவி வீட்டில் புகுந்திருக்கிறது. நடு வீட்டில் அது சிலுவையில் தூக்கி அறைந்தது போல் பரிதாபமாக நிற்கும்போது எப்போதாவது போட்டுப் பார்த்தே ஆக வேண்டியிருக்கிறது. மதுரையில் இருந்தால் மார்கழி தெரிவது வேறு விதம். காதில் யானைக் காதை குளிருக்கு மாட்டிப் பலர் நடமாடுவார்கள். அதிகாலை வீரமணியின் குரல் குழல் ரேடியோவில் கேட்கிறது. அய்யப்ப பக்தர்கள் சிறு கோவில்களை குத்தகைக்கு எடுத்து வேட்டி துண்டு காயவைத்து ,குளித்து சாப்பிட்டு கோயிலில் இருந்து கொண்டு வீட்டிற்கும் அவ்வப்போது போய் வருகிறார்கள்.  திருப்பரங்குன்ற முருகனும், அன்னை மீனாட்சியும் அய்யப்ப பக்தர்களுக்கும் , முருக பக்தர்களுக்கும் முழு நேர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். உள்ளூர்க்காரர்கள்இந்த இடைவெளி அறிந்து போகிறார்கள். 

ராஜகுலராமனின் மார்கழி இன்னும் வேறு விதம். மார்கழி முதல் தேதி ஆரம்பித்து பொங்கல் முடியும் வரை காலை மாலை குழல் ரேடியோ ஒலிக்கும். சரியாய் ஐந்து மணிக்கு சீர்காழி பாட ஆரம்பிப்பார். அடுத்து KP சுந்தராம்பாள் முருகனை நோக்கி எல்லாம் பாடி முடிப்பார்- 'ஏறுவது சினம் , ஆறுவது மனம், ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு, ஏற்றுக் கொள்வான் , கூட்டிச் செல்வேன் '  , அவரை அடுத்து டி எம் எஸ் , பின்னர் கடைசியில் வீரமணி. என்ன கேட்டாலும் இந்த மாதங்களில் சினிமாப் பாட்டுகள் போட மாட்டார்கள். படிக்கும் காலங்களில் காலை  645 பஸ் பிடிக்க வேண்டும். உள்ளேயும் இந்த ரகப் பாடல்கள் துரத்தும். டிரைவர் கண்டக்டர் எல்லாம் பெரும்பாலும் மாலை போட்டு மலை ஏறுவார்கள் . சாதாரமானவர்கள் தப்ப முடியாது. பாடல் நின்ற பின் ஏற்படும் கணநேர அமைதி சொல்லால் சொல்லி முடியாது.

எங்கள் வீட்டின் இரண்டு வீடு தள்ளி கிழக்கு நோக்கி நின்ற ராஜகோபாலனின் சிறு கோவில் இருந்தது. பெருமாள் கோவில் என்று சொல்வார்கள்.இதனால் தான் மார்கழி இன்னும் மனதிலிருந்து அகல மறுக்கிறது. பத்து கிலோமீட்டரில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்தது. சைக்கிளில் குறுக்கு வழியில் போய்விட்டு வரலாம். ஆழ்வார் திருநகரியும், திருக்குறுங்குடியும் தெரிந்தவர்கள் ஊரில் இருந்தார்கள். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பிறந்த ஊர். ஆக இந்த வாடை ஊரிலும் மார்கழியில் நன்றாய் அடிக்கும். 

கோவில் முன்னால் பெரிய தகரம் போட்டு சுதைச் சுவரில் எழுப்பப் பட்டிருக்கும். பத்துப்படிகள் , அதன் முன்னர் விரிந்த வெற்றிடமும் தூண்களும் உண்டு. அர்த்த மண்டபம், முக மண்டபம் எல்லாம் அது தான் . கோவிலும் அது தான் . கருவறை அதன் பின்னால் , ராஜகோபாலன் இருவர் சகிதம் நிற்பார். அர்ச்சகரை கோவில் தாத்தா என்று அழைப்போம். 'ஏன்டா அய்யா , இத்தனை சேட்டையா' என்பார். 

கோவில் முன்னால் பெரிய தகரம் போட்டு சுதைச் சுவரில் எழுப்பப் பட்டிருக்கும். பத்துப்படிகள் , அதன் முன்னர் விரிந்த வெற்றிடமும் தூண்களும் உண்டு. அர்த்த மண்டபம், முக மண்டபம் எல்லாம் அது தான் . கோவிலும் அது தான் . கருவறை அதன் பின்னால் , ராஜகோபாலன் இருவர் சகிதம் நிற்பார். அர்ச்சகரை கோவில் தாத்தா என்று அழைப்போம். 'ஏன்டா அய்யா , இத்தனை சேட்டையா' என்பார். 

'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்' என்றபடி செய்தவர் கடைசி நாள் வரை அங்கிருந்து என்று அறிந்தேன், இப்பொழுது அவர் மைந்தர். மார்கழியில் கிணறும் குளமும் நிரம்பியே இருக்கும். அவரே பாத்திரங்களை கழுவி , நீர் இறைத்து கோவில் சுத்தம் செய்வார். தினமும் காலையில்  பிரபந்த பாசுரங்கள் பாடுவார்கள். அதற்கென ஒரு ராகமும் தொனியும் இருக்கிறது. குறில் குறிலாய் , நெடில் நெடிலாய் என்று சொல்லலாம். இது எனக்கு காதில் புளித்து ஓரிரண்டு பாடல் வாயில் வந்தது. என்னுடைய பாட்டி இதைச் சொல்லக் கேட்பார். பெரியாழ்வார் திருப்பல்லாண்டு , திருப்பள்ளியெழுச்சி , பின்னர் திருப்பாவை பாசுரங்கள் கேட்ட நினைவிருக்கிறது. மார்கழியின் ஒரு சில தினங்களில் சில மணி நேரம் அமர்ந்து பாசுரம் சொல்வார்கள். அவர் என்றும் மனதில் இருந்தே சொன்ன ஞாபகம் இருக்கிறது. 'மார்கழித் திங்கள்' 'ஆழி மழைக் கண்ணா' மாலே மணிவண்ணா போன்ற சில வரிகள் தவிர மற்ற எல்லாம்  உள்ளே அடி ஆழத்தில் புதைந்து விட்டன.

இந்தப் பாசுரங்களின் நடுவே அவரே மடப்பள்ளியில் அன்றைய பிரசாதத்தை சமைப்பார். இதற்கு தமிழில் தளிகை என்ற ஒரு சொல் உண்டு, இறைவனுக்கு கொடுக்கும் சோறு என்று பொருள். இதைத்தான் சொல்வார்கள்.வீடுகளில் அவர்களாய் முன்வந்து மார்கழி முழுதும் பொங்கலுக்குக் கொடுப்பார்கள். இதுதான் என் போன்ற எல்லோரையும் கோவிலை நோக்கி ஈர்க்கும். பூஜை முடிந்ததும் அந்த வெண்கல மணி அடிப்பார்கள். தெரு முழுதும் கேட்கும். பொங்கல் ரெடி என்று அர்த்தம். முதலில் ஸ்லோகங்கள் சமஸ்க்ருதத்தில் ஆரம்பிக்கும். பின்னர் தமிழுக்கு வந்தால் பொங்கல் நெருங்கி வருகிறது என்று அர்த்தம். பல்லாண்டு பாடினால் இன்னும் பக்கம்.   

பெரும்பாலான நாட்களில் வெண்பொங்கல். மிளகு, ஜீரகம் , பெருங்காயம், கருவேப்பிலை தாளித்த , பாசிப் பருப்பு குறைந்த, பச்சரிசிப் பொங்கல். நாட்காலே நீராடி நெய்யுண்ணோம் என்று சொல்லி விழுங்க வேண்டும்  மற்ற நாட்களில் சர்க்கரைப் பொங்கல். பொன்னிறமும் , சிறிதே கருமையும் கலந்த பொங்கல். அந்த நிறத்தை எப்படி எழுத்தில் எழுதுவது. கரு வண்டலும் , தூய ஆற்று மணலும் கலந்தாற்போல் என்று சொல்லலாம். ஒட்டிய நெய் ஒளியில் பிரதிபலிக்கும். வெள்ளாற்றுப் படுகை போல், அப்போது பெய்த மழையில் நீர் ஓடி தடம் மிஞ்சிய கால் படாத மண் போல் நினைவுக்கு வருகிறது. ஒரு பித்தளை அடுக்குப் போகினியில் விநியோகம் செய்வார். இடது தோளில் சுமந்து , கோயில் சாவியை வலப்பக்கம் மாட்டி நாளெல்லாம் சுமந்து நடந்த அதே அடுக்குப் போகினி. இதை வைணவத்தில் சேவை என்கிறார்கள். இதே போல் மதுரை வீட்டுக்கருகில் ஒரு முதுகு கேள்வியாய் வளைந்த, வயிறே இல்லாத, ஒளி பார்க்க முடியாத , வயதானவர் பல வருட காலமாய் ஊழியம் செய்கிறார். கடவுள் மட்டுமே காக்கிறார் எல்லோரையும்.

மேலே சொன்ன டிவி வீட்டின் நடுவில் சிலுவையில் தொங்குவதை சகிக்காமல் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று சொன்னேன். அப்படி பார்க்கும்போது செஃப் தீனா'ஸ் கிச்சன் என்ற ஒரு சேனல் கண்ணில் பட்டது. மனிதர் ரொம்ப கூச்சமும் அடக்கமும் உள்ளவர். அவர் செஃப் என்றெல்லாம் காட்டிக் கொள்வதே இல்லை. ஊர் ஊராய் உணவைத் தேடிச் சென்று , படம் பிடிக்கிறார். அத்தை , மாமிகளின் வழமை போன்ற பதிவு இல்லை. யாராவது ஒரு பிரபலத்தின் பின் ஏறி நிற்கும் அம்மாவோ , பாட்டியோ இல்லை. அமெரிக்காவில் இருந்து பாஷ் கிச்சனில் கதை பேசி, இடையில் சமைத்து நம்மை ஏங்க வைக்கும் அம்மாவும் பையனும் இல்லை. நகமும் சதையுமாய் இருக்கிறது. ஒரு சில நாட்கள் விடாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
கும்பகோணம், சுவாமிமலை என்று தேடித் தேடி பதிவு செய்திருக்கிறார். கும்பகோணத்தில் பட்டாணி சுண்டல், சுவாமிமலையில் உளுந்த வடை. ஒரு பொட்டலம் ஐந்து ரூபாய். வரிசையில் நின்று வாங்கும் எளிய மக்கள். முப்பது வருடமாய் வாங்கி தொட்டுக் கொள்ளும் ஒரு பெரியவர் இருந்தார்.
ஸ்ரீரங்கம் சென்று கோவில் பிரசாதம் செய்யும் மடப்பள்ளி ஆட்களை வைத்து படம் பிடித்திருக்கிறார். ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் இரண்டே முறை சாப்பிட்டிருக்கிறேன். பூசி மெழுகிய விறகடுப்புகளும்  , பெரிய கண் கரண்டியும்  , பெரிய பித்தளை உருளிகளும் , வேர்த்து வடியும் முகத்துடன் பேசினார்கள். கோயிலின் புளியோதரை, சக்கரைப் பொங்கல், மாடியில் கோபுரம் தெரிய கோயிலின் சமையல் மூலவரை வைத்தே செய்ய வைத்திருந்தார். வெண்கலப் பாத்திரங்களும் , கரண்டிகளும் நினைவுகளைக் கிளறி மேலெழுந்து வரச் செய்தன. திட்டம் என்றார், மேல்பொடி என்றார். திட்டம் என்றால் பிளான், அளவு அவர் மொழியில். விளக்கெரிவது போல் அடுப்பு எரிய வேண்டும் என்றார். 

செய்து பார்க்க வேண்டும் போல் தோன்றியது. அவர் சொல்லிக்கொடுத்த ஷீரான்னம் என்பது அந்தப் பொங்கல். ஷீரா என்றால் பால் என்று அறிந்தேன்.பாலிலே வெந்த பருப்பில்லாத பச்சரிசிப் பொங்கல். ஊற வாய்த்த ஒரு பங்கு அரிசி , நாலு பங்கு பாலில் குழைய வேக வேண்டும். நீர் சேர்க்கக் கூடாது.வெந்த பதத்தில் இரண்டு பங்கு வெல்லம் போட்டுக் கிளற வேண்டும். எல்லாம் வெண்கலப் பானையில். ஏலக்காய், பச்சைக் கற்பூரம் மேலே தூவ வேண்டும். இடையில் ஒரு பங்கு பசு நெய் சேர்த்துக் கிளற வேண்டும். வீட்டில் சமைத்த மனத்தடையும்  தாண்டி , நன்றாய் இருந்தது. அவர் சொன்னது சரி, அளவு முக்கியம். கோவில் பிரசாதத்தில் எப்படி அவ்வளவு சுவை என்று கேட்டார். கோவிலில் சமைப்பதால் அவர் அருளும் சேர்கிறது என்று பதில் சொன்னார். இப்படிச் சொல்லித்தான் அது இவ்வளவு காலம் கடந்து வந்திருக்கிறது. 
இந்தப் பாற்சோறு பற்றிய குறிப்பு ஆண்டாளின் 27வது பாட்டில் வருகிறது. 
 
'சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய்'

இப்படி ஆரம்பித்தது இந்த வருடம்.

   

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...