*50 நாள் மொழி விளையாட்டு*
"வணக்கம். நேற்று அறிவிப்பதாகச் சொல்லியிருந்த அடுத்தப் பயிற்சி விளையாட்டை இன்று அறிவிக்கிறேன்.
தலைப்பு: இன்றைய டைரி`
நிபந்தனைகள்:
1. அன்றன்று உங்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் முக்கியமானதென்று நீங்கள் கருதும் ஒன்றனைக் குறித்து மட்டும் விரித்து எழுத வேண்டும். நேற்று நடந்தது, என்றோ நடந்ததெல்லாம் கூடாது. அன்றன்று நடப்பவை மட்டும். குறிப்பிடும்படி ஒன்றுமே நடவாத நாள்களில் அன்று சாப்பிட்டது, அன்றைய உறக்கத்தில் வந்த கனவு போன்றவை குறித்தும் எழுதலாம். ஆனால் அடிக்கடி கனவு, உணவு குறித்தே எழுதித் தப்பிக்க நினைக்கக் கூடாது.
2. நீங்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் சம்பவத்தைப் புனைவு மொழியில் எழுத வேண்டும். கட்டுரைத் தொனி வரக்கூடாது. சிறப்பாக எழுதியிருந்தாலும் கட்டுரை மொழியில் இருந்தால் ஏற்கப்படாது.
3. ஒவ்வொரு நாள் குறிப்பிலும் அதிகபட்சம் பதினைந்து முற்றுப் புள்ளிகள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது.
4. ஒவ்வொரு சொற்றொடரிலும் அதிகபட்சம் ஏழு சொற்கள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது.
....
-பாரா
இன்றைய டயரி - 01/50
1 எழுந்ததும் மனதில் விழுந்த சொல் - பறக்கும் மலை.
அர்ஜுனன் இந்திரனிடம் பாசுபதம் பெற்ற இடம் இந்திரகீலம், பறக்கும் மலை.
கற்பனையைக் கிளறிவிட்ட சொல்.
விமானம் இன்றைய பறக்கும் மலை.
பூமியும் ஒரு பறக்கும் மலை என்று தோன்றியது.
மனிதர்களுக்கு இந்தச் சொல்லை போட்டுப் பார்த்தேன்.
ஒரு அதிகாரியின் நினைவு வந்தது.
2 எல்லோருக்கும் அடுத்த வீட்டுக்காரர் வாய்ப்பதில்லை. இல்லை யாருக்கும் வாய்ப்பதே இல்லையா?
அவர் பைத்தியக்காரர் என்றால் , ஆமாம் சிலர் வெளியே இருக்கிறார்கள், பார்த்தால் தெரியாது .
இப்படி ஒரு நடைமுறைச் சிக்கல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் ஒரு துளி.
இன்றைய டயரி - 02/50
மெட்ரோவைப் பிடிக்க ஐந்து மைல் சைக்கிளில் செல்கிறேன் .
காலைக்குளிர் மெல்லிய வெய்யில் வாழைத் தோட்டங்கள் வழியெல்லாம் ரம்மியம் .
ஆனால் சில நாய்களையும் கடக்க வேண்டும்.
இந்த ஒரு கூட்டத்தைத் தவிர பெரும்பாலும் அப்பிராணிகள்.
இரண்டு சகப்பு சகோதரர்கள் கருப்பான ஒன்றுவிட்ட அண்ணன்.
சைக்கிள் தெரிந்ததும் முதலில் அண்ணன்தான் தாக்குதலை உறுமி முன்னெடுப்பார்.
தம்பிகள் சில எட்டெடுத்து பின் வருவார்கள்.
தெரிந்த முதல் உபாயமாய் அவற்றின் கண் பார்க்காமல் சமாளிப்பேன்.
முன்னே போனதும் அதே வரிசையில் மூவரும் குலைத்துத் துரத்துவார்கள்.
இரண்டாவது உபாயமாய் நானும் அதற்கு இணையான சத்தமிட்டு விரட்டுவேன்.
அண்ணனை விரட்டிவிட்டால் அன்றைய பிரச்சனை முடியும்.
இல்லையெனில் அவர்களின் நில எல்லையை சைக்கிள் மீற வேண்டும்.
இன்று முன் யோசனையாய் ஒன்று செய்ய நினைத்தேன்.
இடம் வந்ததும் தொப்பியையும் முகமூடியையும் கழற்றி தொங்க விட்டேன்.
என்ன ஆகியிருக்கும் என நினைக்கிறீர்கள்?
நாட்குறிப்பு - 3/50 மந்திரம் முணுமுணுத்தல்
மந்திரம் முணுமுணுக்கும் ஒருவரையாவது ஒரு நாளில் கடக்கிறேன்.
இதோ எதிர் இருக்கையில் மூடிய கண்கள் கழுத்தில் துளசிமாலை.
வாய் முணுமுணுக்க வெள்ளைப் பைக்குள் எண்ணும் வலது கை.
பாட்டி இதை ஜபம் என்பார். தாத்தாவிடம் பெரிய சண்டைக்குப்பின் எப்போதும் கண்மூடி ஜெபமாலை உருட்டுவார்.
இவர்கள் மனத்தின் ஓயாத அலையில் ஏறி சவாரி செய்பவர்கள்.
ஆமாம் சமயங்களில் மனம் கடலும் பூதமுமாய் பெரிதாய் ஆகிவிடுகிறது.
ஒரு கதை நினைவில் வந்தது.
பேராசையுள்ள அரசர் கடவுளிடம் எல்லாம் கொடுக்கும் பூதம் பெற்றார்.
பிரச்சனை கேட்பதை நிறுத்தினால் பூதம் அரசரைத் தின்றுவிடும்.
எல்லாம் கிடைத்த பின் பூதத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை.
குரு பூதத்தை பிஸியாக்க ஒரு வழி சொன்னார் .
' மரஉச்சியில் உட்காரச் சொல் ஆனால் நீ கூப்பிடாமல் இறங்கக்கூடாது'
முணுமுணுப்பது மனத்தை மரத்தில் ஏற்றி உட்கார வைப்பது.
தூக்கம் வராமல் புரண்டால் எனக்கும் வாய் முணுமுணுக்கும்.
நாட்குறிப்பு - 4/50 கந்துவட்டித் தொழில் பார்க்கும் அரசியல் சிறுபுள்ளியுடன் உரையாடல் (-> அவன் <- சிறுபுள்ளி )
-> சார் சௌக்கியமா பக்கத்து வீட்டுக்காரரோட சொந்தக்காரர் பேசறேன்
<- ஞாபகம் இருக்கு சார் அன்னிக்கு பஞ்சாயத்துக்கு வந்திருந்தீங்க
-> மேல்கொண்டு எங்கிட்ட கேளுங்க அவர தொல்ல பண்ணாதீங்கன்னு சொன்னேன்
<- சார் யாரும் பிச்சை எடுக்கல.. பிடுங்கித் திங்கணும்னு தேவையுமில்ல
-> நான் அப்பிடிச் சொல்லலையே நீங்கதான் வார்த்தை விளையாட்டு பண்றீங்க
<- நீங்களும் நானும் பிஸி மேல சொல்லுங்க வழி என்னன்னு
-> டிக்கி உரசின இடத்தை திருப்பி பெயிண்ட் பண்ணிக்கிடுங்க
நான் ஆகிறத கொடுத்துறேன்னு அன்னைக்கு பேசினது
<- இல்ல சார்..வண்டி ஹிஸ்டரி ரீசேல் பிரச்சனை வரும்
-> ஷோரூம் வேண்டாம் 3Mல பண்ணா ஹிஸ்டரி பிரச்சனை வராது
<- வெளில டொயட்டா பெயிண்ட் வராது வேற வழி சொல்லுங்க
-> இதான் இப்ப இருக்கிற ரெண்டே வழி
<- இன்னோரு வழி இருக்கு (இடைவெளி).. புதுக்கார் எடுத்துக் குடுங்க
மௌனம்
<- நல்லா யோசிச்சு பிறகு சொல்லுங்க இப்ப வக்கிறேன் சார்
நாட்குறிப்பு - 5/50 இரண்டாவது ஆயுள்ரேகை
ஒருவர் வேலைபோய் தொடங்கவிருக்கும் தொழிலுக்குச் சின்ன முதலீடு கேட்கிறார்.
சென்ற வாரங்களை நினைத்தால் நடுவயதில் வேலை தேடுபவர்கள் பத்துப்பேர்.
வேலையில்லாமல் இருந்தால் மற்ற சோதனைகளும் கைகோர்த்துக் கொள்வது தெரிகிறது .
இப்போது பணியில் எந்த வயது அந்திமம் என்று தெரியவில்லை.
பார்க்கும் வேலைக்கும் நிறுவனத்துக்கும் தனித்தனி வயது இருக்கிறது.
வயதான நிறுவனத்தில் இளைஞரானாலும் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.
முதலீட்டாளர்கள் நிறுவனங்களில் முதலிட அதன் வாழ்வை காலத்தால் பிரிப்பார்கள்.
குழந்தைப்பருவம் பதின்மம் இளமை நடுவயது மூப்பு இப்படி ஐந்தாக.
நிறுவனங்களில் குழந்தை இறப்புகள் அதிகம். பிழைத்தால் அடுத்த இரண்டில் கூரை பிய்த்துக் கொட்ட வாய்ப்புண்டு.
நடுவிலும் மூப்பிலும் கையில் இருப்பதைக் காத்துக் கொள்வது அவசியம்.
கம்பெனிகள் ஒப்பனையாளர்களை வைத்துப் பருவத்தை பின்னே தள்ளப் பார்க்கின்றன. வயது இதையெல்லாம் மீறி தன்னை வெளிக் காட்டிவிடுகிறது.
எதிர்காலத்தில் கார்பொரேட் வேலையின் சராசரி ஆயுட்காலம் இருபதென்றால் அதிகம்.
உடலின் வயதை இதில் போட்டால் சரியாய் இருக்காது.
நாட்குறிப்பு - 6/50 (பெங்களூர்) கொம்மசந்திரா ஏரி மீனும் அத்திக்காய் சப்ஜியும்
அருகில் இருக்கும் ஏரிகளைத் தேடிப்போய் பார்ப்பது எனக்கொரு ஆசை.
போனமுறை சோழர் கால நாராயணகட்டா ஏரி போன்ற ஏமாற்றங்களுடன் .
கரடுமுரடான அப்பாதையில் நடக்கையில் எதிர்பாராமல் கொம்மசந்திரா ஏரி தட்டுப்பட்டது.
OMR ரோட்டில் தீடீரென்று சின்ன தெருமுனையில் கடல் தெரிவதுபோல.
கரையோரத்தில் இரண்டு தென்னைகள் குலையுடன் இன்னும்...எப்படி?
ஒரு சுற்று நடை முடித்தும் கழிவுநீர் கலப்பதை பார்க்கமுடியவில்லை.
மரங்களை வெட்டாமல் ஆழப்படுத்தியிருந்ததால் நீர் நடுவே தீவுபோல் மரங்கள்.
எல்லா மரங்களும் சோபா போட்டு உட்கார்ந்தாப்போல இருந்தது.
மீன்தூண்டில் போட்டுக்கொண்டிருந்த இருவர் பேச்சில் வங்காளமோ ஒரியவோ தெரியவில்லை.
அடுத்த சுற்றில் அவரில் ஒருவர் மரத்தில் மேலே இருந்தார்.
உயர போபியாவால் எனக்கு காலும் பல்லும் கூச ஆரம்பித்தது.
எப்படி இறங்குவார் என நினைத்து பறிப்பது என்ன என்றேன்.
இறங்கியவர் பைநிறைய இருந்த அத்திக்காய்கள் பழுக்குமா என்றேன்.
இரவில் அத்திக்காய் சப்ஜியும் மீனும் சப்பாத்தியும் என்றார்கள்.
ஜெமினையும் அத்திக்காய் சப்ஜி உண்டு என்று சோதித்துச் சொல்லியிருக்கிறது.
நாட்குறிப்பு - 7/50 பசியின் நுழைவாயில்
சமையல் ஆச்சு எப்பவேனா சாப்பிடலாம் என்றது மனைவியின் குரல்.
எனக்கோ பதினாறு மணிநேர இடைவெளிக்கு இன்னும் அரைமணி உதைக்கிறது.
இருந்தாலும் கால்கள் சமயலறைப் பக்கமே சென்றன.
உருளைக்கறியும் வெள்ளைப் பூசணிக்கூட்டும் இன்னும் பசியைக் கூட்டியது.
பசியைச் சமாளிக்க கறுப்புக் காப்பியை போட்டுக் குடித்தேன்.
பத்து நிமிடத்தில் மீண்டும் உள்ளே சீராய் இடிக்குமுறல்கள்.
வயிற்றிலிருந்து காற்று மேலேறி நாவின் ஈரம் கலந்து வெளியேறியது.
டிவியில் பெரிய செஃப் சொல்லும் உணவின் செய்முறை ஓடியது.
ரவை வெல்லம் கற்கண்டு நெய் சேர்த்த ஸ்ரீரங்கம் ஜீரா .
மேலும் நிமிடங்களைப் போக்க கதவைத் திறந்து வெளியில் நடந்தேன்.
ரெட்டைவால் குருவி மரத்தில் அடங்கி முழுநீல வானில் தனிப்பருந்து.
உச்சிவேளைக்கான நிசப்தத்தில் வேலைமுடிந்த முனிசிபாலிடி அம்மாவும் தெருநாயும்.
அப்பா என்ன பாக்குற என பையன் வந்து கேட்டான்.
பசியை என்று சொல்ல நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை.
பிடி மாட்டிற்கு திமில் என்பது மனிதனில் கண்.
ஆட்டத்தில் இல்லை
நாட்குறிப்பு - 8/50 ஒரே சொரூபம்
இன்று அப்பாவின் நான்காவது நினைவு நாள்.
திதியை ஏற்க வந்த மூவரில் அவர் முதியவர் .
வந்தவுடன் வாழையிலை அடுக்கியபின் தொன்னை மடக்க ஸ்டேப்ளர் கேட்டார்.
வீடே சேர்ந்து தேடியும் கிடைக்காததால் பொறுமை இழந்தார்.
தோளில் போட வேண்டிய எள்ளை அவர் தலையில் போட்டேன்.
முறைத்துக் கடுப்பில் தலையில் தடவி ஒன்றில்லாமல் கீழே தள்ளினார்.
முன்னால் சிந்தியிருந்த நீரை ஆள்விட்டுத் துடைக்கச் சொன்னார்.
புரோகிதர் நீர்வேலை முடியவில்லை சேர்த்து அழிக்கலாம் என்றார்.
மலைபோல் உணவை ஒதுக்கி ரசம் வேண்டாம் பாயசம் வேண்டுமென்றார்.
பூசல் வலுத்து புரோகிதர் இவ்விடத்தில் இதுமுறையல்ல என்றார்.
பெரியவர் முன்னரே தொன்னையில் ரசம் கேட்டது வரவில்லை என்றார்.
புரோகிதர் மேலிடத்தில் ரிப்போர்ட் செய்தால் வேலை போகும் என்றார்.
பெரியவர் குரலுடைந்த நிலையில் எல்லாமும் சரியாய்த்தானே நடக்கிறது என்றேன்.
வந்திருப்பது அப்பாவின் சரியான அதே சொரூபம், கோபமும் குறைந்திருக்கிறது.
இல்லையென்றால் என்னை 'கொஞ்சமாவது அறிவிருக்கா' எனக் கேட்டிருப்பார் என்றேன்.
நாட்குறிப்பு 9/50 : காலைத் தென்றல்
ஒரு நாளின் அதிகாலை ஏறத்தாழ நேற்றைய ஜெராக்ஸ்.
சமையல் , வேலை, ஒலிக்கும் பாடல்கள், ராசிபலன்கள் போல எல்லாம்.
அலுப்பெல்லாம் வீட்டில் பையன் கண் விளிக்கும் வரை மட்டுமே.
' ஏங்க எழுப்புங்க... ' எழுந்தவுடன் 'ஓகேப்பா எந்திரிச்சுட்டேன் எல்லாம் பாத்துக்கறேன்'
இடைவெளிவிட்டு குளியலறை திறந்தால் முகவாயை நெளித்து கண்ணாடி பார்த்துக்கொண்டிருப்பார்.
'எனக்கு சின் போன்ஸ் தெரியுது ..உன்னத காட்டு ' என்பார்.
'சீக்கிரம் கிளம்பி வாப்பா அம்மா திட்டறா'
கால்பந்தை சுவரில் உதைத்தபடி 'பெல்ட்டு மூச்சுப்பிடிச்சு போட்டுட்டேன்.'
டாம் டாம் என்று பந்து சுவரில் பட்டுத் தெறிக்கும்.
'கொஞ்சம் கால அகலமா வச்சுக்கோப்பா ...கோல் ப்ராக்டிஸ் பண்றேன்'
நாய்க்குட்டியாய் பந்து என் கால்களுக்குள் நுழைந்து வெளியேறும்.
'அம்மா ..நேரா நில்லு இன்னைக்கு ஒன்ன தூக்கமுடியுமா பாக்கறேன்'
தம்கட்டி அம்மாவை ஒரு அடி தூக்கி அடக்க முடியாத சிரிப்பு.
'பஸ் வந்துரும் விளையாட்ட நிறுத்திட்டு சாக்ஸைப் போட்டுக் கிளம்பு'
சைக்கிள் தெரு திரும்பியதும் மரக்கிளை வளைந்து பார்த்ததென நினைத்தேன்.
நாட்குறிப்பு 10/50 : அம்மாவின் மறதி
'அம்மா நான் எதிர்வீட்டம்மா பெங்களூர்லருந்து பேசுறேன்...கிளம்பும்போது டென்ஷன்ல சாவிய மறந்தாப்ல கேட்டுமேல வச்சுட்டு வந்துட்டேன்...'
'ஆமாம்மா காலேல உங்க மேலவீட்டம்மா என்னோட சாவியான்னு கேட்டுச்சு...இல்ல வேலபாத்த யாரும் வச்சுருப்பாக வந்து அவுகளே எடுத்துக்கிருவாகன்னேன்'
போனில் சொல்லி டீச்சரம்மா மறந்த சாவிக்கொத்தை நேரில் கண்டுபிடித்தார்.
'உங்களுக்கு நல்லநேரம் அத்துவானத்துல நாலு நாளா இப்படிக் கிடந்திருக்கே '
'நாலு நாலா யார் கண்ணுலயும் படல பாத்தீகளா... மலைல இருந்து முருகன் தான் நேரா பாத்துக் காப்பாத்திருக்கான்'
'இன்னைக்கு ஊர் ஞாபகம் வந்ததும் சாவி பளீர்னு நினைப்பு ...தெருவுல எல்லாரும் நல்லவுக யாரு அத தொடப்போறாக ...மறக்காம மேல வீட்டம்மாட்ட குடுத்துருங்க வந்ததும் வாங்கிக்கிடுதேன் '
எல்லாம் தெய்வாதீனம் என்ற நினைப்பில் சில நிமிடங்கள் இருந்தார்.
'ஒருவேளை எவனாவது ராத்திரி சுளுவா போய் எல்லாம் எடுத்துட்டு , அதே இடத்தில காலேல சாவிய திரும்பி வச்சுருப்பானோ'
இந்த யோசனைக்கு எனக்கும் பதில் தெரியவில்லை.
நாட்குறிப்பு 11/50 - 15 x 7 சேலஞ்ச் - செல்ப் ரெவியூ
15 x 7 சேலஞ்ச் இன்று பதினோராவது நாள்.
ஆரம்பித்தவுடன் மனைவி சொன்னது நினைவில் வந்தது.
'சிரமந்தான் ,ஏன்னா உங்களுக்கு எதையும் நீட்டித்தான் பழக்கம்'
Bounce புத்தகம் T.T சாம்பியன் மாத்தியூ சையத் எழுதியது.
இவர் சொல்வது ,விளையாட்டில் பெற்ற வரமென்று ஏதுமில்லை.
மனமொன்றிய சீரான 10000 மணிநேர பயிற்சி எல்லோரையும் சாம்பியனாக்கும்.
எந்நேரமும் விளையாட வீட்டிலேயே டென்னிஸ் டேபிள் இருந்திருக்கிறது.
பிரேசில்காரர்களுக்கு கால்பந்து ரத்தத்தில் இல்லை ,சூட்சுமம் மைதானத்தில் இருக்கிறது.
மிகச்சிறிய இடத்தில் நெருக்கி அடித்து அவர்கள் ஆடுவது futsal..
பெரிய மைதானத்தைப் போல் பந்தையே தொடாமல் லாந்தித் திரிய முடியாது.
சிறிய இடத்தில் பந்தைப் பிடியில் வைத்துக்கொள்வது இன்னும் கடினம்.
கால்பந்தில் சாமர்த்தியமாக பந்தை முன்தள்ளுவதை கடைதல் என்பார்கள்.
அப்படித்தான் இதுவும் காட்சியோ , சொல்லோ ஆன ஸ்னாப்ஷாட், dribbling .
ஆனால் ஒரு தீவிரமான விளையாட்டு என்று தான் நினைக்கிறேன்.
பந்தை கோட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறோமா என்பது ஆசிரியருக்கு வெளிச்சம்.
நாட்குறிப்பு 12/50 : ஒரு வார்த்தை
என்றும் போல் இன்றும் அவருடன் கருத்து வேறுபாடு .
-> நீங்க ப்ரோபோசல்ல அந்த வார்த்தையை போடக் கூடாது
<- இல்ல சார் ஈஸியா புரிய வைக்கலாம்னு போட்டேன்
-> அந்த ஒரு வார்த்தை புல்லரிச்சி அவங்கள நிமித்தி உட்காரவச்சுரும்...
அப்புறம் அவங்க செய்யறதும் நாம செய்யறதும் ஒன்னும்பாங்க ...
வாசனை கிளப்பிட்டா எதுக்கு புதுசா செய்யணும்னு கேப்பாங்க...
-> இந்த ஒரு வார்த்தை ப்ரோபோசல உடைக்கும்ங்கறீங்க இல்லையா ?
<- பெயர்கள் எல்லாம் லேபிள்ஸ் தான்..சொல்லப்போனா உலகமே வார்த்தையும் அதுக்கு அர்த்தமும்தான்
பாத்துப் புரிஞ்சத பேரு போட்டு மூட்டை கட்டி வைக்கிறோம்
பிறகு எப்பாவது பேரக் கேட்டா மூட்டை நினைப்பில வருது
குழந்தைகள் நம்ம லேபிளை போடறதில்ல அதனால நினைக்காததைச் சொல்லிடுவாங்க
விஷயத்தை புதுசா பாக்கணும்னா தெரிஞ்ச பேர் போடக் கூடாது.
மேகத்தைப் பார்க்கிற மாதிரி பாக்கவச்சா அவங்களே பேர் போட்டுப்பாங்க'
ஆட்டத்தில் இல்லை
டைரி 12/50- காலைக் காட்சி
பௌர்ணமி கழிந்து இரண்டாம் நாள் காலை ஆறேகால்.
பால்கனியில் காலை நிலவு சூரியன் போல் இருந்தது.
அரைமணியில், சூரியன் நிலவு போல் புகைகிளப்பி மேகத்தில் ஒளிந்தது.
துலங்க ஆரம்பித்த ஒளியில் மருதமரம் எழுந்து கையூன்றி அமர்ந்தது.
அதன் உடைந்த தக்கை கைவிரித்து உள்ளங்கை காட்டியது.
அதன் கிழிந்த நார்கள் தலைமயிராய் குத்திநின்றன.
இலைகள் சிறகுகள் எனப் பறந்தது.
பொன்னிழையாய் இலையோடும் நரம்புகள் என் உள்ளோடும் நரம்புகள்.
நானும் மரம் என உணர்கையில், ஒரு ரெட்டைவால் குருவி தன் கால்விரல் வேர் பற்றி கிளை அமர்ந்தது.
அதன் சிறகில் இரு மீன்கள் வளைந்து விழிபார்த்தன.
வளிக்கடலில் ஒரு அலை அடித்தது.
முழுமரமும் ஒரு கணம் பறந்தது.
டைரி 14/50.- முறுங்கி உடையும் தருணங்கள்
இன்று பூமியில் மூவரில் ஒருவர் இந்தியர் அல்லது சீனாக்காரர்.
இதே புள்ளி கம்பெனிகளில் இரண்டில் ஒருவர் , சமயங்களில் எல்லோருமே.
வேலையில் கருத்து வேறுபாடு இல்லாத (சண்டை) நாள் அரிது.
நம்மவர்கள் சண்டை வேறுமாதிரி.
உச்சிவரை போகும் ஆனால் கீழே உடனே இறங்கிவிடும்.
இது அவர்களுக்குப் பிடிபடுவதில்லை.
இப்படி ஒரு இரண்டு வாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டு இந்தியரும் இரண்டு சீனாக்காரரும் ஒரு பக்கம்.
ஐரோப்பிய இந்தியரும் ஐரோப்பியரும் இன்னொரு பக்கம், அதிகாரமும் கூட.
சமரசக் கூட்டத்தில் காரணங்கள் பேசப்பட்டு , பிரச்சனைகள் ஒத்துக் கொள்ளப்பட்டாயிற்று
சீனாக்காரர் எதிர்வீட்டைக் காலி செய்வதே பிரச்சனைக்கு முடிவு என்கிறார்.
அண்மையில் , இவருடைய நம்மவர்கள், கட்சி மாறியது அவருக்குத் தெரியாது .
ஆனால் அவர் இன்னும் தொய்ந்த கயிறை முறுக்கிக்கொண்டிருக்கிறார்.
அதாவது, பதில் வராத மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்.
ஐரோப்பியர் இன்னும் டேட்டா எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆட்டத்தில் இல்லை
டைரி 15/50.- ஒர்க் பிரம் ஹோம்
அவன் நெடுஞ்சாலைப் புறம்போக்கில் முதல் தலைமுறை புதுவிவசாயி.
வேலைபோக இருக்கும் நேரத்திலோ அல்லது மூன்லைட்டிங் செய்தோ விவசாயம்.
இன்று சோளம் அறுவடை, நாளை பார்க்கலாம் என்ற விஷயம் இல்லை.
ஒரே கடையில் வடைபஜ்ஜி தின்று பசி போக்க வேண்டும்.
சரியாய் ஒரு இடத்தில் நெட்ஒர்க் கிடைக்கும் போன் பேசலாம்.
போனை வைத்து மனைவியின் துணையுடன் வேலையை ஒப்பேற்ற வேண்டும்.
ஒரே ஒரு மரநிழல் , வானம் பார்த்த பூமி. எப்படியோ இந்த அறுவடை ஆகிவிடும்.
அவனும் ஒரு ஆளாய் அறுத்து, அறுத்த சோளம் குமித்தான்.
நாளும் பொழுதும் அவர்களுடன் சரியாய் நாட்டு நடப்புகள் பேசினான்.
பொழுது சாய குமித்ததை காவல் வைத்து வீடு சேர்ந்தான்.
நாளை வண்டியில் ஏற்றி வியாபாரியுடன் லாரியில் பழனி.
ஆளில்லாமல் வியாபாரியின் காசு வர மாதங்கள் ஆகும்.
அப்படியே பழனி கோவில் போனால் நல்லது.
இப்போது அவனுக்கு வியாபாரி ஆனால் என்ன என்று தோன்றியது.
-முத்து
டைரி 16/50 ரேடியோ செய்திகள்
நெடுநாள் கழித்து இன்று ரேடியோ செய்தி முழுதும் கேட்டேன்.
வால்வு ரேடியோ போன்ற பழைய நினைவுகளைக் கிளறியது.
கன்றுக்குட்டி அளவில் ரேடியோக்கள் இருந்திருக்கின்றன.
என் நினைவிருக்கும் முதல் செய்தி , இந்திராகாந்தி சுடப்பட்ட போது அம்மா கண் கலங்கியது
ஜெயாபாலாஜி வாசித்து அரைமணியில் சரோஜ் நாராயணஸ்வாமி முடித்தால் , ஐந்து நிமிடத்தில் பள்ளிப்பேருந்து என அம்மா சொல்லிவைத்திருந்தார்.
ஒருநாள் செய்திகளின் கட்டமைப்பை எனக்குக் காட்டினார்.
முதலிலும் முடிவிலும் சுருக்கம், இடையில் உள்நாடு, வெளிநாடு, விளையாட்டு.
உள்நாட்டில் அரசின் செய்திகள், எதிர்க்கட்சி செய்திகள்.
ஆனால் இன்று கேட்ட செய்தியின்படி கட்டமைப்பு மாறியிருக்கிறது.
நாடகம் போல் துவங்கி, ஐந்து நிமிடம் pariksha pe charcha.
அமைச்சர்கள் அவர்களை மென்மையாய்த் திட்டினர், வாசிப்பவரும் கண்டிப்பாய் வாசித்தார் .
'இவ்வளவு ஒரு பக்கமா ' என்றார் அம்மா.
'அதுக்கு அவங்க நியூஸ் கேட்டு நம்மளே ஒன்னா கலக்கிக்கிடனும்.'
டைரி 17/50 - இருளை விலக்குதல்
வீட்டில் சென்று இறங்கியதும் மதுரை நகருக்குள் செல்லத் தோன்றியது.
ஷேர் ஆட்டோவில் ஒரு பயணம், ஒரு கல்லூரி ஜோடி.
வழியெல்லாம் மாணவி அறிவுரையை அவன் கேட்டுக்கொண்டே வந்தான்.
சித்திரை வீதி தாண்டி தெற்கு வாயில் வழியாக நுழைந்தேன்.
கடம்பவனம் என்பார்கள், இன்று மனிதத் தலைகளின் கூடல் நகர்.
தெற்கில் யானைக் கொட்டிலும் ஒட்டகங்களும் இன்றில்லை.
உள்ளே நுழைவதையே கடினமாக்கி விட்டார்கள், ஆலயப் பணிகள் வேறு.
டபுள் டக்கர் வரிசை, எனவே உள்ளே செல்லவில்லை.
வெளிப்புறமாக கிழக்கு கோபுரம் தாண்டி புதுமண்டபம் சென்றேன்.
பல வருடங்களாக பூட்டியே இருக்கிறது.
யானைத் தோல் போர்த்திய சிவன் பார்த்து நின்றேன்.
திசையெட்டும் இருள் சூழ்கையில் , இருளைக் கிழித்து வெளிவரும் சிலை.
ஒளியென்றிருந்தால் நிழலும் இருளும் அருகிலேயே இருக்கும்.
ஒரு சந்தேகம், ஒரு தயக்கம், ஒரு பயம் போல் நாம் அறியாமல் .
இதைப் பார்க்கவே வந்தேன் , இருள் பார்க்காமல் வெளிச்சமில்லை
டைரி 18/50 - ஒரு பறவையைப் படம் பிடித்தல்
ஊரில் இருந்தால் காலைநடை திருமங்கலம் கன்னியாகுமரி சாலை சந்திக்குமிடத்தில்.
சாலையில் வண்டிகள் தோன்றிமறைய பரங்குன்றம் பரபரப்பின்றி என்றென்றும் அங்கேயிருக்கும்.
கீழே இருக்கும் கண்மாய் காவல் கோட்டம் நாவலில் வருவது.
நான் இந்த வழி வருவது மயில்கள் பார்க்க மட்டுமே.
மயில் தோகைவிரிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், தெரியாமல் பார்க்க வேண்டும்.
நாம் பார்ப்பதை அது அறிந்தால் ஆட்டத்தை நிறுத்திவிடும்.
இன்று குடும்பமாக மயில்கூட்டம் , சிறு குஞ்சு அம்மாவை ஒட்டி.
நடுக்குளத்தில் ஒரு கொக்கு , நிற்கும் வேலிக்கல்லில் ஒட்டியபடி மீன்கொத்தி.
கழுத்து நீரிலிருந்து வெளியே பெரிய நாடாப்புழுவாய் சுருங்கி நீண்டது.
சிலகணங்கள் அதன் அலகு அம்புபோல் நிமிர்ந்து விண்ணைக் குறிபார்த்தது.
ஒருகால் ஊன்றி மறுகால் காற்றில் விரைத்தபடி நின்றது.
அதன் கண் என்னைப் பார்ப்பதைப் பார்த்து கேமராவை இயக்கினேன்.
ஜுமை பெரிதாக்கியபடியே தேடியும் உள்ளே பறவையைக் காணவில்லை.
கேமரா உள்ளே அளைந்து ஒருகணம் கண்டேன்.
படம் விழுவதற்குள் குளம் கொக்கை அம்பாய் விண்ணில் வீசியிருந்தது.
ஆட்டத்தில் இல்லை
டைரி 19/50 : மெய் பொய்
சமீபத்தில் பெங்களூரில் ரியல் எஸ்டேட் பெரும்புள்ளி தற்கொலை செய்திருக்கிறார்.
IT சோதனை நடக்கையில் இதோ வருகிறேன் என்றவர் சுட்டுக்கொண்டார்.
நேற்று அசோகமித்திரனின் 'மெய் பொய்' என்று ஒரு கட்டுரை படித்தேன்.
இந்தத் தற்கொலை குறிப்பு அதை மீண்டும் என்னுள் திறந்தது.
நோய்வாய்ப்பட்டு எழுந்திருக்கமுடியாத நிலையில் எழுதிய மூன்று கதைகளைச் சொல்கிறார்.
மூன்றும் மரணம் சம்பந்தமாக இருக்கின்றன என்கிறார்.
மரணத்தை எழுதிக் கடந்ததாக சொல்லாமல் சொல்கிறார்.
அடுத்த பத்தி எர்னஸ்ட் ஹெமிங்வே தற்கொலை செய்தது பற்றி.
எழுத்துக்களில் ஒளியைப் பாய்ச்சியவரின் இறுதிநாட்கள் மனநல காப்பகத்தில் இருந்திருக்கின்றன.
இந்திய எழுத்தாளர்கள் நோய் நடுவில் தற்கொலை ஏன் செய்யவில்லை ?
நம் கலாச்சாரம் நம்மை காயம் பொய் என்று எண்ண வைக்கிறது. இதுதான் அவருடைய பதில்.
காயமே மெய் என்பது எங்காவது இக்கட்டில் முடிகிறதா?
இல்லையெனில் கோடிகளில் புரளும் ஒருவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?
விஞ்ஞானி முட்டாள்தனமாய் செய்தால், சொன்னால் கொதிக்கிறார்கள் ?
தற்கொலை போன்ற செயல்கள் ஆன்மிக மூடத்தனம் இல்லையா?
20/50 ஒரு வார்த்தை
என்றும் போல் இன்றும் அவருடன் கருத்து வேறுபாடு .
' நீங்க ப்ரோபோசல்ல அந்த வார்த்தையை போடக் கூடாது'
' இல்ல சார் ஈஸியா புரிய வைக்கலாம்னு போட்டேன்'
' அந்த ஒரு வார்த்தை புல்லரிச்சி அவங்கள நிமித்தி உட்காரவச்சுரும்...
அப்புறம் அவங்க செய்யறதும் நாம செய்யறதும் ஒன்னும்பாங்க ...
பழைய வாசனை கிளம்பிட்டா எதுக்கு புதுசா செய்யணும்னு கேப்பாங்க... '
' இந்த ஒரு வார்த்தை ப்ரோபோசல உடைக்கும்ங்கறீங்க ?'
'பேரு எல்லாம் லேபிள்ஸ் தான்..சொல்லப்போனா உலகமே வார்த்தையும் அதுக்கு அர்த்தமும்தான்
பாத்துப் புரிஞ்சத பேரு போட்டு மூட்டை கட்டி வைக்கிறோம்
பிறகு எப்பாவது பேரக் கேட்டா மூட்டை நினைப்பில வருது
குழந்தைகள் நம்ம லேபிளை போடறதில்ல... அதனால நாம நினைக்காததைச் சொல்லிடுவாங்க
விஷயத்தை புதுசா பாக்கணும்னா டக்குனு தெரிஞ்ச பேர் போடக் கூடாது. '
Comments
Post a Comment