கணிப்பொறியில் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண(Problem Solving ) நிரல்களை(Program) எழுதியாக வேண்டும். நிரல்களை வடிவமைக்கும் போது போது FSM(Finite State Machine) என்று ஒரு உத்தியைக் கையாள்வார்கள். இது கொடுக்கப்பட்டுள்ள பிரச்னையை ஒரு வரைபடத்தினுள் கொண்டுவர உதவும். FSM என்பதை ஒரு நிலை இயந்திரம் என்று சொல்லலாம். ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நிலைகளைக் கையாளும் ஒரு நிரலி. உள்வரும் ஒரு நிகழ்வை (input/event ) கணக்கிலெடுத்து அடுத்த நிலைக்குச் செல்லும். உதாரணமாக நீங்கள் 'நின்றல்' என்ற ஒரு நிலையிலிருந்து 'உட்காருதல்' அல்லது 'ஓடுதல்' அல்லது 'நடத்தல்' என்ற ஏதாவது ஒரு அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இது எது என்று இன்புட் தான் முடிவு செய்யும். மிகப் பெரிய செயலி என்பது எண்ணிலடங்கா நிலைகளையும், அவற்றை நகர்த்தும் நிகழ்வுகளையும் கொண்டிருக்கும். ஒரு தலை சிறந்த செயலி என்பது எவ்வளவு எதிர்பாரத நிலைகளைக் கையாள்கிறது என்பதிலேயே இருக்கிறது. ஆனால் இந்த எதிர்பாராத நிலையும், இதை எவ்வாறு கணக்கிலெடுத்து என்ன செய்வது என்பதையும் யாரோ ஓருவர் யோசித்தோ அல்லது அனுபவித்தோ ஏற்கனவே உள்ளிட்டிருக்க வேண்டும். இதனால் தான் ஆய்வகத்தில் வேலை செய்யும் நிரலிகள் நிஜ உலகில் வேலை செய்யாமல் போகின்றன. உதாரணமாக ஒரு இளைஞர் கைபேசியை உபயோகம் செய்யும் விதமும் , ஒரு வயதானவர் அதையே செய்வதும் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இவர் ஒரு பக்கத்தை நிரப்புவதற்குள் கரண்ட் போய் வரும், இடையில் இன்டர்நெட் போய் வரும். இதனால் தான் மனிதனை நிரலிகள் முழுதாக நிரப்பவே முடியாது. இன்றும் mission critical செயல்கள் மனிதனால் மேற்பார்வை செய்யப்படுகின்றன, முழுதாக செய்யப் படாவிட்டாலும். முடியாத நிலைகளைக் கையாள்வதற்கு , நிரலியை ஒரு பொதுவான பிழை கையாளும் பகுதிக்கு அனுப்புவார்கள். எல்லாக் காய்ச்சலுக்கும் பாராசெட்டமால் கொடுத்துப் பார்ப்பது போன்றது இது.
ஆனால் வாழ்க்கையையே ஒரு முடிவில்லா செயல்களின் சங்கிலி என்கிறார்கள். நமது ஒரு செயல் பல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. பலரின் செயல்கள் நம் செயல்களை தெரிந்தோ , தெரியாமலோ முடிவு செய்கின்றன. நாம் அனைவரும் செயல்களால் பின்னப் பட்டிருக்கிறோம். ஆனால் முன் சொன்னவாறு நம்மால் ப்ரோக்ராம் செய்ய முடிவதில்லை வாழ்க்கையில். வாழ்க்கையை Infinite State Machine என்று சொல்லலாம். எனவேதான் மேலே சொன்னதின் பெயர் 'முடிவுள்ள' செயல்களின் நிரலி. வாழ்க்கை முடிவில்லா செயல்களிலானது. குறுக்கே வரும் மனிதர்களும், அவர் எண்ணங்களும் முடிவில்லாதவை. ஒரு போதும் நம் செயல்களுக்கான காரணங்களை முழுதாய் புரிந்து கொள்ள முடியாது.
இதை வியக்கும் வகையில் , அழுத்தி , மிக அழகாக சொல்வதுதான் யுவனின் பகடையாட்டம். முன் காலங்களில் வீடுகளில் வயர் கூடைகள் பின்னுவார்கள். பல வண்ண வயர்கள் பைகளில் வாங்கி, ஒரு குறிப்பிட்ட அளவாக வெட்டி, ஒவ்வொரு வயரையும் , மேலும், கீழும், இடமும், வலமுமாய்ப் பின்ன ஆரம்பித்தால், வாத்து , மயில் போன்ற வடிவங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஒரு வயரை கண்ணால் பார்த்தால் முடிவும் , முதலும் பிடிபடாது.
இதன் வடிவமும் வயர் கூடையைப் போல் பின்னப் பட்டுள்ளது. முதலில் கூடை நாம் பின்னப் படுவதைப் பார்க்கிறோம். அப்புறமே கூடை என்ற உருவத்தைப் பார்க்கிறோம்.
இதை யுவனே பின்னுரையில் சொல்கிறார் : "புனைகதையின் உயிர் அதன் சாரத்திலில்லை. உருவத்தில்தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு நம்பிக்கை. சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறுகூறலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது."
முதலில் கிருஷ் என்ற மேஜர் வருகிறார் அவருக்கு ஸோமிட்ஸியா எல்லையில் காவல் பணி கிடைக்கிறது. இது ஒரு கற்பனை தேசம். திபெத், இந்திய எல்லையில் உள்ளது. கதை லால் பகதூர் சாஸ்திரி இறப்பின் போது நிகழ்கிறது. ஒரு இந்திய பாகிஸ்தான் போர் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் திபெத்தை சீனா முழுங்கி தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இன்னும் சிலவருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து முடிந்துள்ளது.
அடுத்து ,செல்லச்சாமி வாத்தியார் பேப்பரில் ஸோமிட்ஸியாவின் ஒரு வயதான ராஜதந்திரி இந்திய எல்லையில் கொலை செய்யப் படுவதை செய்தியாகப் படிக்கிறார். இவருக்கு ஒரு தம்பி இரண்டாம் உலகப்போரில் நேதாஜி படையில் சேர்ந்து , பிணமாக வந்து சேர்கிறார். அண்ணன் , தம்பிகள் எதையும் வீட்டுக் கொடுக்கவில்லை. இவர் வாழ்க்கையே கசப்பாய் தெரிகிறது. கட்டுரை நோட்டில் பிள்ளைகள் பேரை சுருக்கி எழுதுகிறார்கள். 'இதெல்லாம் யார்ரா , புதுசா சேந்திருக்குற ஆளுகளா?'. நோட்டுகள் பறக்கின்றன. கடைசியில் தற்கொலை செய்து சாகிறார்.
பின் லுமும்பா கதை சொல்லப்படுகிறது. இவன் அப்பா ஒரு ஆப்பிரிக்க கிராம தலைவர். காலனியும் , துப்பாக்கி நாகரிகமும் ஆஃப்ரிக்காவில் முடிவுக்கு வந்திராத நேரம். ஐரோப்பிய நாகரிகம் துப்பாக்கி வழியே நுழைவதை பார்க்கிறான். சொத்தை குடுத்து துப்பாக்கி வாங்கி வைக்கிறார் அப்பா . காட்டு எருமையை கையால் அடக்கும் அப்பா, குடித்துவிட்டு துப்பாக்கி என்னை என்ன செய்யும் என்று சிறு மகனை தன்னை சுட அழைக்கிறார் எல்லோர் முன்னிலையிலும். அப்பாவை சுட்டு விடுகிறான். பாதிரியார் எடுத்து வளர்க்கிறார். மேல் படிப்புக்கு ஆஸ்திரியா அனுப்புகிறார். நிறவெறி இவனுள் ஆழ்ந்து பதிகிறது. படித்து திரும்பியபின் தன் ஊரிலும் ஓட்ட முடியவில்லை. ஒரு மலையேறியாகிறான். இமாலயத்தில் ஹான்ஸ் வெய்ஸ்முல்லரை சாகும் தறுவாயில் பார்க்கிறான். இவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு சண்டை போடுகிறார். தோற்கும் நிலையில் ரஷ்ய போர் முனையில் இருந்து தப்பிக்கிறார். போரிலே விரக்தி கொள்கிறார். நாஜி பொதுப் பழி இவரையும் தொடர்வதாக நினைக்கிறார். லுமும்பாவின் கட்டற்ற , எதிர்பார்ப்பில்லா , நேர்நிலை வாழ்க்கை இவரை லுமும்பாவின் நண்பராக்குகிறது. இருவரும் மலையேறிகளாக வருடங்கள் நடந்தே பயணம் செய்கின்றனர்.
யுவன் இந்தப் புத்தகத்தை பிற புத்தகங்களை வாசித்தே எழுதியிருப்பதாக சொல்கிறார். சமீபத்தில் Walking The Himalayas என்ற டாக்குமெண்டரி படம் பார்த்தேன். நிலக்காட்சிகளை அவர் வர்ணிக்கும் விதம் பிரமிப்பை அளிக்கிறது.
இடையில் ஸோமிட்ஸியாவின் அறிமுகம் நடுப்பக்க செய்திக்கட்டுரையாக சொல்லப் படுகிறது. டிப்ளோமட் எழுதுவதாக நாடு , எல்லைகள், மக்கள், நாணயம், அரசியலமைப்பு ஒரு தற்போதைய வர்ணனை போல் வருகிறது. ஒரு மாறுபட்ட உத்தி என்று நினைக்கிறேன்.
ஈனோங் - இவரை இக்கதையின் சகுனி என்று தான் சொல்ல வேண்டும். மூன்று சோமிட்சு லமாக்களை கண்டவர். கடைசி ஆளைக் கொன்றவர் இவர்தான். எல்லோரையும் உளவு பார்க்கிறார். இவர் அடுத்த சோமிட்சுவை தேடுவதில் இருந்து இவர் கதை துவங்குகிறது.
இவர் 26-ம் சோமிட்சு. இவர் சோமிட்சுவிலிருந்து தப்பிக்க வைக்கப் படுவதில் இவர் கதை ஆரம்பம். ஈனோங் திபெத்தில் நடப்பதை ஒற்றர்கள் சொல்லி ஏற்பட்ட உயிர் பயத்தால் , இந்தியாவில் தஞ்சம் புக எண்ணி சோமிட்சு உள்பட எல்லோரையும் பெயர்த்து வழி நடத்துகிறார். இவருக்கு லாமாவாக சிறிதும் விருப்பம் இல்லை.
இடையில் ஈனோங்கின் இரண்டு உளவாளிகள் , அவர்களில் ஒருவன், இன்னொருவனை காட்டிக் கொடுக்கிறான். ஈனோங் அவனது அண்ணனைக் கொன்றிருக்கிறான். அண்ணன் சோமிட்ஸுவின் ராணுவ வீரன். ஈனோங் லுமும்பாவை இவனை ஏவி கொல்ல வைக்கிறான், பின் அவனும் கொல்லப் படுகிறான் . பழி தீர்க்க எண்ணி தம்பி ஈனோங் அருகில் வருகிறான்.
இந்த பகடையாட்டம் இவர்கள் எல்லோரையும் இந்திய எல்லையில் ஒரே இரவில் ஒன்று சேர்க்கிறது. மேஜர் கிருஷ் ஈனோங்கையும் , வெய்ஸ்முல்லரயும், சோமிட்சுவையும் சந்திக்கிறான். தங்கள் பக்கங்களை கொட்டித் தீர்க்கிறார்கள்.
ஈனோங் மறு நாள் காலையில் கொல்லப்பட்டு கிடக்கிறார். எல்லோரும் தப்பி விடுகின்றனர். கிருஷ் மேல் துறை விசாரணை நடக்கிறது. தற்காலிக சஸ்பெண்ட் ஆகிறார். துறை விசாரணையை சமாளிக்கலாம் என்று சொல்கிறார்கள். யார் சொல்லியும் கேளாமல் அந்த இள வயது சோமிட்சுவை வருடக்கணக்கில் தேடி அலைகிறார். இறுதியில் 6 வருடம் கழித்து ஊருக்கு வருகிறார். ஏன் செய்தோம் என்று அவருக்கே விளங்கவில்லை. இங்கும் சுற்றி ஆட்கள். வேலை தேடுவோர், பசியில் இருப்போர், அம்மா , மாமி, சித்திகள் , இன்னும் யார் யாரோ...
"இப்போ நெனைச்சுப் பார்த்தா எல்லாமே புதிர் மாதிரி இருக்குடா அம்பி. நான் ஏன் மிலிட்ரிக்கிப் போனேன். அத்தனை வருஷ ஸர்வீஸுக்கு அப்புறம், வேண்டாத விஷயத்திலே போய் ஏன் மூக்கை நொழைச்சேன். அத்தனை தூரத்தையும் அத்தனை வயசையும் பத்திரமாய்த் தாண்டி வந்த கிழவன், என்னோட இடத்திலே வந்து ஏன் செத்துப் போனான்... தற்செயல்கள். எல்லாமே தற்செயல்தான். கல்கியோட தொடர்கதை நகர்ற மாதிரி. நம்ம கணக்குகளெல்லாம் வெறும் ஆறுதலுக்குத்தான். நம்மளும் கணக்குப் போட்டோம்ங்கிற ஆறுதலுக்கு. மத்தபடி, நடக்கிறதெல்லாமே தர்க்கத்தை மீறித்தான் நடக்கறது. வெறும் சாப்பாடு, தூக்கம், துணிமணி, படுக்க இடம் இதோட மனுஷங்க தேவை நின்னுடுத்துன்னு வையேன். லோகத்திலே இத்தனை களேபரங்கள் நடக்க வாய்ப்பேயில்லைடா அம்பீ. யாரோ பைத்திரக்காரன் கைக்கு வந்தபடி கிழிச்சுப் போட்ட காயிதக் குப்பை மாதிரி இருக்கு வாழ்க்கை. நடக்கற எந்த ஒண்ணுக்கும் நிஜமான காரணம் புரியறதில்லே. என்னையே பாரேன். ஸெர்வீஸை விட்டு வெளியே வந்தவன், நேரா ஊருக்கு வந்து சேராமெ ஊர்ஊரா ஏன் அலைஞ்சேன், யாரோ ஒரு சின்னப் பயலைத் தேடி, பெத்த தாயோட கடைசி முகத்தைக் கூடப் பார்க்கக் குடுத்து வைக்காமெ.
"
கேட்கும் பையன் மேல் ஒரு சொட்டு மழை விழுகிறது. இது எங்கு முடியுமோ ?
இந்த கதைகளுக்கு நடுவில், இந்த கற்பனை நாட்டின் ஆதி கிரந்தம் வந்து செல்கிறது.இது ஒரு தனித் தொடர் போல, கவிதை மொழியில் வருகிறது.

Comments
Post a Comment