Skip to main content

அஞ்ஞாடி - பூமணி , நூல் பதிவு






பூமணியின் அஞ்ஞாடி நாவலை ஒரு வரலாற்று புனைவு(Historiography) என்று வகைப்படுத்தலாம். ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றின் தரவுகளை மையமாக  வைத்து ,  வரலாற்றை கதை வழியாக ரத்தமும் சதையுமாக நம் கண்முன் கொண்டு வருவது. பூமணி நூல் எழுத பயன்படுத்திய தரவுகளைப்   பின் இணைப்பாக கொடுத்துள்ளார். எத்தனை நூலகங்கள், எத்தனை ஆவணக் காப்பகங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள், எத்தனையோ கோயில்கள், பணியாளர்கள், கள ஆய்வுகள், அயல் நாட்டு பல்கலைக்கழக நூலகங்கள்,  இன்னும் எத்தனையோ தனி மனிதர்கள். இந்த நாவல் 1900 பக்கங்களுக்கு மேல் நீள்கிறது . இது எவ்வளவு பெரிய உழைப்பைக் கோரியிருக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை, ஆசிரியரின் உழைப்பிற்கு பெரிய வணக்கம் .

நாவலின் கால அளவு 1860-களில் ஆரம்பித்து , 1984-ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படும் வரை. சில இடங்களில் கதைக்கு வலுவூட்ட  ஒட்டு மொத்த வரலாறும் சொல்லப் படுகிறது ஒரு பிளாஷ் பாக் போல. கழுகுமலை பற்றி சொல்லும்போது , சமணர் வரலாறு , கழுவேற்றம் வருகிறது. விரிவான பாளையக்காரர்கள் வரலாறு சொல்லப்படுகிறது . 

இக்கதையின் களம் இன்றைய தென் மாவட்டங்களின் ஊர்களாகும். கழுகுமலை, தூத்துக்குடி,கயத்தார் பாளையங்கோட்டை,சிவகாசி,ஏழாயிரம்பண்ணை, சிவகங்கை,மதுரை உள்பட பல சிற்றூர்,நகரங்கள் வருகின்றன. பள்ளர்,வண்ணார் ,நாடார்,தேவர் போன்ற பல சமூகங்களின் வரலாறு, எவ்வாறு கால மாற்றம் அவர்களை தொடுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி தனி மனிதர்களை , சமூகங்களை எவ்வாறு பாதித்தது. இது பொத்தாம் பொதுவாக வரலாற்று புத்தகங்களில் ஒன்றிரண்டு வரிகளில் வரும். இதில் வரும் மிஷனரிகள் வருடக் கணக்கில் சாப்பாடு தண்ணி இல்லாமல் அலைகிறார்கள், ஊர் விட்டு ஊர் மாட்டு வண்டியில் செல்கிறார்கள். ஏற்கனவே ராஜாவின் பக்கம் இருந்தவர்கள் , பிரிட்டிஷ் அதிகாரத்தின் பக்கம்  நகர்கிறார்கள். ஆங்கில வக்கீல்கள், நீதிபதிகள், கலெக்டர்கள்,பாதிரியார்கள் எல்லாம் மனிதர்களாக பெயருடன் நடமாடுகிறார்கள். பாளையக்காரர்களை வைத்தே அவர்கள் கோட்டையை இடிக்க வைக்கிறார்கள்.  

எவ்வாறு கட்டபொம்முவை தூக்கிலிட்டார்கள், எவ்வாறு ஊமைத்துரை இவர்களுக்கு சிம்ம சொப்பனமானார் என்ற கதை சொல்லப்படுகிறது. ஊமைத்துரைக்குப்  பேச முடியாது என்பது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இவருக்கு எல்லாமே சைகையில் தான் ஆக வேண்டும். ஒரு ராஜா ஊமையாய் இருந்தால் எப்படி நடக்கும்? . அண்ணனை தூக்கிலிட்டதும், இவரை, இவர் தளபதிகளையும் பாளையம்கோட்டை சிறையில் தள்ளுகின்றனர். சிறையில் உள்ளவர்களுடன் சைகையிலே பேசி தப்பிக்கிறார். வாழைக்குலைகளுக்கு நடுவில் ஆயுதம் வைத்து சிறைக்குள் சிலரை வரவழைத்து , இவர்கள் மூலம் தப்பிக்கிறார். தப்பிச் சென்று 4-5 தினங்களில் இடிந்த கயத்தாறு  கோட்டையை கட்டி எழுப்புகிறார். ஓர் இரு முறை ஆங்கிலப் படையை விரட்டுகிறார். பின்வாங்கிய அவர்களின் ஆயுத கிடங்குகளைத்  தாக்கி ஆயுத கிடங்கை பலப் படுத்துகிறார். மிகப் பெரிய முயற்சிக்குப் பின் பீரங்கிகளால் கோட்டை தகர்க்கப்பட்டு , தப்பிக்கிறார். யாரோ சில கிராம பெண்கள் அம்மை வந்தவர் போல் உடலைப் மஞ்சத்துணி போத்தி காப்பாற்றுகின்றனர். சிவகங்கைக்குத் தப்பி சின்னமருதுவுடன் மிகப் பெரிய படை திரட்டி மீண்டும் போருக்கு தயார் ஆகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு தலைவலி கொடுக்கிறார்.இறுதியில் தான் பிடிபடுவோம் என்ற நிலையில் சின்ன மருதுவை பிரிகிறார்.சிறுவயல் அருகே சின்னமருது காட்டில் துப்பு கொடுக்கப்பட்டு பிடிபடுகிறார். பெரிய மருது தம்பியுடன் உடன்படாமலே , தன் 5 மனைவிகளின் , பிள்ளைகளின் உயிருக்கு உயில் எழுதி , பிரிட்டிஷாருடன் கையெழுத்து வாங்கி தானே தூக்கிலிட்டு சாகிறார். ஊமைத்துரை வத்தலக்குண்டில் பிடிபடுகிறார். பின்னர் தூக்கிலிடப்படுகிறார். அவர் மகனை மலேசியாவுக்கு நாடு கடத்துகிறார்கள், இவர் அங்கேயே இறக்கிறார். ஒருவர் வாய் பேசாமல் இவ்வளவு செய்ய முடியுமா?   

ஆண்டியின் பாத்திரமே இக்கதையின் உச்சம் என்று சொல்வேன். இவரை ஒரு சிறு பையனாக ஆரம்பித்து, விளையாட்டில் திளைப்பவராக, தானே ஒரு மாபெரும் விவசாயியாக, ஊரில் எல்லோருக்கும் விதை நடுபவராக , விளைவிப்பவராக, அடைக்கலம் தேடி வருபவர்களை எல்லாம் ஆதரிப்பவராக, பஞ்சம் வரும்போது கொடுப்பவராக, சுற்றத்தை பறி கொடுப்பவராக, பின் எல்லாவற்றையும் மீண்டும்  கட்டி எழுப்புபவராக, ஊருக்கே நல்லவராக , கடைசியில் ஒரு ஞானி நிலையில்  இறக்கிறார். இவருக்கும் மாரிக்கும் உண்டான நட்பு கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனனுக்கும் இடையில் உள்ள நட்பு போல் தோன்றியது. ஒரே விளையாடுகிறார்கள் , கிடைத்ததை எல்லாம் சமைத்து உண்கிறார்கள், கழுதை ஏறி கீழே விழுகிறார்கள், பாடுகிறார்கள்.

தாதுப்  பஞ்சம் (1877) மிக நெகிழும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா காலங்களை எல்லாம் தூக்கி முழுங்கிவிடக் கூடியதாகவே தெரிகிறது.எங்குமே தண்ணி இல்லை. கிணறுகள் வற்றிப் போகின்றன. இரவில் தண்ணீர் திருடுகிறார்கள் .வைக்கோல் இல்லாமல் கால்நடைகள் சாகின்றன.செத்த கோழிகளை நாய்கள் தின்று , வெறி பிடித்து அலைகின்றன.ரெண்டணா ரோட்டு வேலைக்கு போகிறார்கள்.பெருங்கூட்டம் அங்கே வேலைக்கு காத்துக் கிடக்கிறது. கொழும்பு , ரங்கூன் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.

ஊரே திரண்டு கஞ்சித்தொட்டி நோக்கி செல்கிறார்கள். வெறும்  வாழைத்தண்டு கடித்துச் சாப்பிடுகிறார்கள். மாட்டுப்  பிண்ணாக்கு உணவாகிறது. எறும்பு புற்றில் சாப்பிட இருக்குமா பார்க்கிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுவது பெரும்பாடாக இருக்கிறது. கடைசியில் காலராவும் சேர்ந்து கொள்கிறது. முதலில் ஒவ்வொருவராக புதைக்கிறார்கள். பின்னர் நாளில் சிலமுறை பிணங்கள் புதைக்கப் படுகிறன்றன.கடைசியில் பெரிய குழி தோண்டி மூட வேண்டியதாகிறது.

நான் இவ்வூர்களுக்கு அருகில் பிறந்து,வளர்ந்தேன். கழுகுமலை மாமனார் அவர்களின் ஊர். குருவிகுளம், வாகைக்குளம் என்னும் பொன் எழுத்துக்களை நீலாவிடம் காட்டினேன். ஒரு நேரத்தில் சிவகாசிக்கு ஒரு வருடம் முழுக்க தினமும் போய்க் கொண்டிருந்தேன். முதலாளி என்னும் சொல் கேட்டு காது கிழிந்து விடும். ஆனால் அங்கு  இவ்வளவு புதைந்து கிடந்தது தெரியாது.

கழுகுமலை கலவரம் 1895-ல் நடக்கிறது. https://ta.wikipedia.org/wiki/கழுகுமலைக்_கலவரம்_1895 . அது பொங்கி எழுவது பல்வேறு நிகழ்வுகளின் மூலம்.

ஞானசம்பந்தர் சோழ நாட்டில் பாடிப் புகழ் பெற்று, ராணியின் அழைப்பில், கூன் பாண்டியனை மாற்ற மதுரை வருகிறார். சுண்ணாம்பு காளவாயில் அமர்ந்து 'மாசில் வீணையும், வீசு தென்றலும்'  பாடுகிறார். ஏடுகளை தண்ணீரில் எதிர் நோக்கி நீந்தச் செய்கிறார். கூன் பாண்டியன் சைவத்திற்கு மாறுகிறார். சமணர்கள் இன்னும் தெற்கே, அரைமலையில்(கழுகுமலை)  சென்று சேர்கின்றனர். இதற்கு நேச்சுரம் , திருநேச்சுரம் என்று பெயர் அப்போது. சமணப் பள்ளிகள் இருந்துள்ளன. 7ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் கட்டிக்கொடுத்த அரைமலை ஆழ்வார்/திருத்தக்க தேவர் கோயில் , சமணப் படுக்கைகள் இன்றும் உள்ளன. போட்டியாக சைவர்கள் கட்ட ஆரம்பித்த 'வெட்டுவான் கோயில்' முடியாத நிலையில் உள்ளது. மலையில் சதுரமாக வெட்டி , ஒரு வகை பாதளக் கோவில் போல் இருக்கும். 

பின் இன்னும் ஒரு குடைவரைக் கோவில் எழுகிறது. ஜம்புலிங்கேஸ்வரர் உதயமாகிறார்.வள்ளி மயில் முருகன் சேர்ந்து கொள்கிறார். முஸ்லீம் படையெடுப்பின் போது குகை மூடப் படுகிறது. பின்னர் எட்டயபுரம் ராஜா திறக்கிறார். கழுகாசலமூர்த்தி பிரசன்னமாகிறார். நாடார்களுக்கும், பிற கீழ் சாதியினரும் கோவிலினுள் நுழைய முடியாது. சுற்றியுள்ள ரத வீதியில் பல்லக்கில் செல்ல அனுமதியில்லை. நாடார்கள் முன்னேறி வருகிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள்.ரத வீதி பல்லக்கு அனுமதி கோரி ராஜாவை கோர்ட்டுக்கு இழுக்கிறார்கள். ராஜா மேல் ஜாதி சார்ந்து இருக்கிறார்.இது கடைசியில் மிகப் பெரிய கலவரத்திற்கும் , கொலைகளுக்கும் , தீ வைப்புகளுக்கும் , மத மாற்றத்திற்கும் இட்டுச் செல்கிறது. பூமணி இந்த இடத்தை நீதி மன்ற வழக்கு ஆவணங்களில் இருந்து மீள் புனைவு செய்திருக்கிறார். கடைசியில் மூல காரணம்  அரண்மனை அரசியல், நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் பழி தீர்க்க நினைப்பது இங்கு பொய் முடிகிறது. கலிங்களூர்காரர்கள் தேரோட்டம் பார்க்க வருகிறார்கள், பெண் கொடுத்தவர்கள் வீடு கொழுத்தப் படுகிறது.     

கழுகுமலைக் கலவரமே சிவகாசி கலவரத்திற்கு(1899) இட்டுச் செல்கிறது.நாடார்கள் வெளிப்படையாக, சொல்லி வைத்து  கொள்ளை அடிக்கப் படுகிறார்கள். நாடார்கள் மனு மேல் மனு போடுகிறார்கள். ஆட்சி எந்திரம்  நம்ப மறுக்கிறது.  ஒரு செவ்வாய்க்கிழமை , பட்டப்பகலில் கொலை கொள்ளை நிகழ்கிறது. போலீஸ் ஒளிந்து கொள்கிறது. இருக்கும் இருபது பேரில் , இரண்டு மூன்று பேர் லீவ் எடுக்கிறார்கள். கலெக்டர் முந்தின நாள் இருக்கிறார், கலவர தினம் ஸ்ரீவில்லிப்புத்தூர்  சென்று விடுகிறார். இந்த செவ்வாய் கிழமைக்கு முன்னும் பின்னும் கொள்ளை, திருட்டுகள். இன்று நாம் இருக்கும் காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.

பின்னர் வரும் கதை, இந்திய சுதந்திரத்தை ஒட்டி வருகிறது. கீழே இருக்கும் மக்களுக்கு இது எவ்வகையிலும் பெரிதாக இல்லை.காந்தியை மகா மனுசன் , நேருவை பூ மனுசன் , படேலை இரும்பு மனுசன் என்று குறிப்பிடுகிறார். சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிவினை எல்லாமே  ஒரு anti-establishment தொனியிலே இருக்க்கிறது. கலாச்சார வீழ்ச்சி சுட்டிக் கட்டப் படுகிறது. விவசாயிகள் ரோடு வேலை செய்யப் போகிறார்கள். பனையேறி நாடார்கள் வியாபாரிகள் ஆகிறார்கள்.மிகப் பலர் கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். பார்ப்பதும் , பேசுவதும் குறைகிறது. இந்த வீழ்ச்சி என்றுமே சொல்லி முடியப்போவது இல்லை.

https://www.amazon.in/Agngnaadi-Poomani/dp/B00HJT6QIU

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...