Translate

சைக்கிள் பதிவுகள் -3 - பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை

 பெங்களூர் -ஒரு ஜனவரி மாத காலை 




-விழித்து எழுந்தவுடன்  உள்ளங் கால் முதலில் டைல்ஸ்-ல் படும் தருணம் 

-தோலில் விழும் அன்றைய முதல் துளி தண்ணீர் 

--பிரிட்ஜ் கதவின் அன்றைய முதல் திறப்பு, முதல் இருமல், முதல் மூக்கு உறியும் ஒலி    

-பால் பாக்கெட்டை அன்று கை தொடும் நேரம்

-அன்றைய balcony கதவு திறப்பு...ரோட்டில் தெரியும் அமைதியில் எங்கிருந்தோ கத்தி  போல் பாயும் , ஒரே ஒரு ஆட்டோ எழுப்பும் நீண்ட ஒலி, எங்கோ சுவருக்குள் பிளாஸ்டிக் பைப்பில்  மோதும்  டாய்லெட் தண்ணீர், அடுத்த வீட்டின்  பாத்ரூம் flesh ஒலி, திறந்தவுடன் குழாய்த் தண்ணீர் சிங்க்-ல் எழுப்பும் ஓலம், சில மணித்துளி மழையும், இடியுமாய், மேல் வீட்டில் தரையில் இழுக்கப்படும்  நாற்காலி 

- ஜனவரி ஒலிக்கான மாதமும் கூட.       







-தவறி சைக்கிளின் சில்வர் பாகத்தில் கைகள் பட்டு கலையும் தூக்கம்  

-உள்ளங்கையில், விரல்களுக்கிடையில் பரவிச் செல்லும் காற்று. உடம்பின் ஜன்னல்களும் , கம்பிகளும்

-உரசும் உள்ளங்கைகள், ஊதும் வாய்கள் , கால்ச்சட்டைக்குள் ஒளியும் கைகள் 

-வெள்ளைக் கேரி பாக்கிற்குள் போட்டு மேலே லேசாக முடிச்சிடப்பட்டுள்ள நகரம்.  நிதமும் தானாகவே தளரும் முடிச்சு

-முக்கோணம்  - டீ , சிகரெட் , வெயில்

-வெயிலுக்கு முகம் காட்டி, குத்த வைத்து சும்மா உட்காந்திருக்கும் ஒரு நேபாளிக் குடும்பம்

-இட்லி வடை சாம்பாரில் இருந்து எழும் வெள்ளை ஆவி, பிரிட்ஜின் குளிரை விடாத தேங்காய் சட்னி

-ஒரு முதியவர் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டு , சக்கர நாற்காலியில் ஏற்றப்பட்டு மருத்துவமனையினுள் நுழைகிறார்.

-அதிகாலைக் குளிரில் பறவைகள் ஏனோ சத்தமிடுவதில்லை, பறப்பதில்லை. நிதானமாக எட்டு மணிக்கு சிறிது பறக்கின்றன. திரும்பி வந்து வந்து வயர் கம்பியில் அமர்கின்றன. உடம்பைக்  குறுக்கி இறக்கைகளை  ஜாக்கெட் போல் ஊத வைக்கின்றன...முகத்தை சிறகிலே நுழைத்து எடுத்த வண்ணம் உள்ளன 

-பருந்துகள் வானத்தின் யானைகள். இறகுகள் அசைவதே இல்லை. நீல நிற வானத்தில் , பனியில் சறுக்குவது போல் சறுக்கி , திரும்பி மேலேறி திரும்பி சறுக்கி....

-புறாக்கள் குதிரை போல் படபடத்தபடியே இருக்கின்றன. விர்ரென்று வானில் பறப்பு, மறுநிமிடம் கீழிறங்கி சில தத்தித் தாவல்கள், பின் மறு பறப்பு...

-காணக் கிடைக்காத பனித்துளி ...    


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2