Skip to main content

இந்த நாள்

இந்த நாள்...

--------------

நவம்பர் 1 என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். இன்றுடன் கல்யாணம் ஆகி பதினெட்டு வருடம் ஆகிறது. ஒரு வயதில் கல்யாண நாள் மறந்துவிடும் என்பார்கள். இப்போதெல்லாம் பெயர்கள் மறக்கின்றன. நேற்று ஒரு அம்மாள் போனில் நான் பையனை வகுப்பில் பேர் போட நினைவில் நிறுத்த வேண்டிய இரண்டு பெயர்கள். அப்புறம் அவர் பெயரை அவர்களிடம் சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். நல்ல வேலையாக அவர் பெயரை மீண்டும் சொன்னார். ஆக மூன்று பெயர்கள் அரைமணிக்கு நினைவில் நிற்க வேண்டும். மூன்று பெயர்கள் போக அந்தப் பள்ளியின் பெயர் மறந்து போனது, ஒரு மாதிரி பெயரில்லாமல் சமாளித்து முடித்தேன். இப்போது வருகிறது, ஆண்ட அம்மாள் பெயர் ஸ்நேகல்.

திருமண நாள் அன்று என்றைக்கும் பெங்களூரில் விடுமுறை. கர்நாடகா தனி மாநிலமாக மாறிய நாள். ஆக மறப்பது கடினம். அப்படி ஒரு தானாய் அமைந்த அமைப்பு.

அப்படித்தான் வாழ்க்கை சுவரில் கிழித்த இந்த 18வது மணக் கோடும் ஆரம்பித்தது.  காலை காபிக்கு பால் சுட வைக்கும் வேலை முதலில், ஏனோ பித்தா பிறை சூடி என்று வாயில் வந்தது. பின்னர் தெரிந்த இன்னும் சில தேவாரப் பதிகங்கள் காபியுடன் கரடு முரடாய்ச் சொன்னேன். 'அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரோ' என்ற வரியின் நேர்மை என்ற சொல்லை அவள் கேட்கமாலே வலுக்கட்டாயமாக விளக்கினேன்.

பின்னர் மீண்டும் சந்தீப் நாராயணின் வருவாரோ வரம் தருவாரோ தொடங்கி சில பாடல்களை அவர் குழந்தைகளுடன் பாடுவதைக் கேட்டேன். இடையில் புதுப் பாலை வாங்கி காய்ச்சச் சொல்லியிருந்தாள். பால்க்காரர் ஹாரன் அடித்தார். பின்னர் சஞ்சயின் துன்பம் நேர்கையில் தானாய் வந்தது, அதையும் பார்த்தேன். மேலிருந்து பால் காய்ச்சியாச்சா என்ற ஒலி வந்தது. எனக்கு பாலை அடுப்பில் வைத்த ஞாபகம் மட்டுமே இருந்தது. பால் பொங்கினால் வேறு சகுனத் தடைகள் அந்த நாளின் தலையில் ஏறி அமரும். அந்த நாளை நம் தோளில் சுமப்பது இன்னும் சிரமம். ஓடிப் போய் அடுப்பைப் பார்த்தேன். அதற்க்கு முன் அவள் நின்றிருந்தாள், 'சரி காய்ச்சிருக்கு'. எனக்கு எப்போது அடுப்பை அணைத்தோம் என்ற நினைவு இல்லை. இதுவே படைப்பின் செயல் என்பது.

அப்புறம் பக்கத்து சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிவன் கோவிலில் சரியாக திரை போட்டிருந்தார் அர்ச்சகர். சிறிது வெளியே அமர்ந்தேன், பின்னர் அவரே வெளியில் வந்து திருமண நாளா என்று கேட்டார். எதிரில் இன்னொரு தம்பதியர், அவர்கள் மண நாள் போலும் இன்று. 

அமர்ந்து நிதானமாய் மலர்களால் சிவனைப் பூசித்தார். சரியாய் இரண்டடி மேல் நின்ற லிங்கத்தின் பூவை அம்பாய் அவர், ஏறிய மேல் பறவையாய் ஒவ்வொரு பூவும் சென்று சரியாய் வான் பார்த்து சிரித்தது. அவர் தட்டில் போட்ட விழுந்த தாள்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவருடைய உலகம் வேறு, சிரத்தை என்ற சொல் மனதில் தோன்றியது.

இன்று வரை இப்படி எளிதாகத்தான் மண வாழ்க்கையும் என்று எண்ணிக்கொண்டேன். மொத்த வாழ்க்கையும் என்றும் சொல்லலாம்.

அவளை முதலில் பார்த்த நாள் நினைவில் வந்தது. 

பத்துப்பேர் நாற்காலியிலும் கீழுமாக அமர்த்திருந்தார்கள். காபியை என்னிடம் கொடுப்பது அவளுடைய அந்தக்கண அசைன்மென்ட். கடல் வண்ணப் பட்டும்,  சிரிப்பில் தனித்து வெளி நின்ற முன் பல்லும் , முன் முடியும், தளிர் கை விரல்களும் இன்றும் நினைவில் வந்தன. எழுந்து போகும் போது என்னுடைய பின் பையில் இருந்த கத்தைப் பணம் கீழே விழுந்திருக்கிறது. அதை எடுத்து என் பாட்டியிடம் கொடுத்திருக்கிறாள். மணிக்கணக்காய் சத்தமில்லாமல் இருந்து என் பாட்டி , திரும்பும் வழியில்  எல்லார் முன் போட்டு உடைத்தார். என்னுடைய பெரியம்மா இந்தத் தலைமுடிக்கு அந்தப் பெண் சரியென்று சொல்ல மாட்டாள் என்றார்கள். அப்போது நாலு திசையும் தோளில் தொங்கும் முடி இருந்தது. பின்னர் அதுவும் நடந்தது. அவளுடைய அப்பாவைப் பார்த்ததும் புகழ் பெற்ற பொதிகை டிவி செய்தி வாசிப்பாளர், இசை ரசிகர், எச்.ராமகிருஷ்ணன் நினைவு வந்தது. இரண்டு நாள் முன் ஒரு பழைய காணொளியை அவளுக்கு போட்டுக் காட்டினேன். அ.ச.ஞான சம்பந்தம் அவர்களை அவர் எடுத்த நேர்காணல். என் அப்பாவின் பெயர் விஸ்வநாதன் , அவர் பெயர் ராமமூர்த்தி. பெரும்பாலும் இருக்கும் வரை தலை, மட்டும் செய்கையிலேயே பேசிக்கொள்வார்கள். என் தந்தை போல் கொடுப்பதெல்லாம் கொடுப்பார் , ஆனால் பையை மட்டும் கண்டிப்பாய் திருப்பிக் கேட்பார். இல்லை , பையில் இருந்து எடுத்த பின்னரே கையில் கொடுப்பார். 

இப்படித்தான் என் பார்வையில் எல்லாம் வழுக்கிய வண்ணம் செல்கிறது . ஆனால் அவள் பார்வை இவ்வளவு எளிதாக இருக்காது. அதில் நாம்  ஒன்றும் செய்வதற்கில்லை.

வீட்டின் நிம்மதி வேலையில் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். வீட்டில் சிக்கல் இல்லை என்பதாலேயே, எதோ ஒரு அளவு வேலை பார்த்து பிழைக்க முடிகிறது. என்னுடைய பொறுமையின்மை வேலை விஷயத்தில் பைத்தியம் என்றும் சொல்லும் அளவில் வீட்டில்  இருக்கிறது. எப்படியோ நம்மை வைத்து வண்டி ஓடுகிறது. பிள்ளைகள் படிப்பிலும் என் ஈடுபாடு இல்லவே இல்லை. ஏனென்றால் அவைகள் எனக்கு இன்று சோர்வை அளிக்கின்றன. கதைகள், எழுத்து, கலை என்று குழந்தைகள் இருந்தால் நன்று என நினைக்கத் தோன்றுகிறது. இன்று எவ்வளவு தூரம் இது சாத்தியம் எனத் தெரியவில்லை. பிள்ளைகளுக்கும் செய்து காட்டினாலும், இதில் பிடிப்பு வருவதில்லை. படிப்புக்கும் பிடிப்புக்கும் இடையில் இடிபடுவது அவள் மட்டுமே.

இன்று திரும்பிப் பார்க்கையில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இன்று வரை வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. ஒரு முறை வந்த சண்டையில் , அவள் பாணியில் சண்டையை நிறுத்த போனை, பர்ஸை வீட்டில் வைத்துவிட்டு கோவிலுக்கு போய் ரெண்டு  மணி நேரம் அமர்ந்திருக்கிறாள். நான் பீதி கிளம்பி இரண்டு முறை மடிவாலா , சில்க்போர்ட சுற்றி, பஸ்களை எல்லாம் ஏறிப் பார்த்து, அவள் வீட்டில் , என் அம்மா எல்லாரிடம் சண்டை தெரியாமல் சூசகமாக விசாரித்தும் ஒன்றும் தெரியாமல் , தொண்டை கனத்துப் போய் , அவள் இல்லாத எதிர் காலம் பற்றிய கேள்விகள் மனதில் துளிர் விட, கண்கள் பனித்து இருக்கும் வேளையில் , என் பெண்ணிடம் இருந்து போன் வந்தது, 'அப்பா, அம்மா கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துட்டா...' என்றதும் எனக்கு பேச்சு வரவில்லை. கயிறை இரண்டு பக்கமும் முறுக்கினால் ஒரு இடத்தில் தெறித்துத் தான் ஆக வேண்டும் , தளர்த்துவதின் அவசியம் தெரிந்து கொண்டேன்..

க.நா.சு சொல்லியதாக சுந்தரராமசாமி எழுதியது என நினைக்கிறேன். அவர் இலக்கியதற்காகவே வாழ்ந்தவர். நல்ல இலக்கியம் என்றால் என்ன என்று தரம் பிரித்தவர். புதுக்கவிதைகளை தமிழ் உலகுக்குக் காட்டியவர். அவர் சொன்னது லௌகீகம் விரட்ட விரட்ட கையில் சிக்காது. நீங்கள் மெனக்கடாமல் இருக்கும்போதே கையில் விழுகிறது. இவரின் வாழ்க்கை பற்றி வரும் அவர் மாப்பிள்ளை பாரதி மணி எழுதிய அழகிய  புத்தகம் இருக்கிறது. இது உண்மை என்றே நினைக்கிறேன். திருமண வாழ்வும் , வாழ்வைப் போலவே, காற்று, வெய்யில், மலை, குளிர் எல்லாம் கலந்ததே. எல்லாமும் பருவம் போல் இயற்கையானதே. 

அம்மாவையும், அப்பாவையும் பிறக்கும் யாரும் தெரிவு செய்வதில்லை. ஆனால் துணையைத் தான் தெரிவு செய்கிறார்கள்.இதுவும் நமக்கு நாம் செய்வது போல் தோன்றினாலும் ஆழமாய் நினைக்கையில் , எந்த ஒரு செயலையும் போல்,  இதுவும் நமக்கு வெளியே கடவுள் கையில் இருப்பதாகவே படுகிறது. இன்றைக்கு அந்தப் பால் பொங்கி அடுப்பில் விழாதது போலவும் , அந்தப் பூக்கள் சரியாய் பறந்து சிவனின் கழலில் விழுந்தது போலவும். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...