Skip to main content

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ?

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ?




நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. காலால் நடந்து என்ன ஆகி விடப் போகிறது? தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் ஏழாயிரம் என்கிறார்கள். இது அவசியமா? எதாவது உடல் வேலை செய்வது முக்கியமா? ஆரோக்கியத்திற்கும் , கையையும் காலையையும் அசைப்பது சம்பந்தம் உண்டா ? அதிலும் தினமும் நடப்பது அவசியமா?

அண்மையில் ஹுபெர்மன் வலையொலி மூலம் மனிதனின் நிணநீர் மண்டலம் குறித்து அறிய நேர்ந்தது. இது எனக்கு கண்திறப்பாய் அமைந்தது. எனவே அதைப்பற்றிய சிறு குறிப்பு. 

நான் என்னுடைய பாட்டியின் ஊருக்கு முழுப்பரிட்சை விடுமுறையில் செல்லும் போது, காலை ஆறரை மணிக்கு வெளியே தெரு பார்த்து போடப் பட்டிருக்கும் திண்ணையில் முதுகு சாய்த்து உட்கார்ந்து பேப்பர் படித்தபடி , தெருவை வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஊர் கண் விழிக்கும் அந்த வேளையில், மணிகள் லேசாக குலுங்க, கன்றுகள் முன்னாலும் பின்னாலும் ஓட , அவ்வப்போது கம்பு மாட்டின் முதுகில் உறையும் ஓசையுடன் , எருமையும் , பசுவும், காளைகளும் தெருவில் சாணியும், மூத்திரமுமாய் ஒரு பக்கம் ஊரணி பார்த்துச்  செல்லும். மறு பக்கம் தேய்த்துக் குளித்து பள பள வென திரும்பி வரும். குளித்த மாட்டுக்கும் ஒரு சுறுசுறுப்பு முகத்தில் இருக்கிறது.போகிற வேகமும், திரும்பும் வேகமும் வேறு வேறு. சுத்தமும், நீரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. ஆம் புறத்தூய்மை நீரால் அமையும்.

இதே போல் இன்றைய நகரத்தின் மாடுகள் என்ற கார்களையும் தினமும் தெருவில் கழுவிக் குளிக்க வைக்கிறார்கள். அது குளித்து வழிந்தோடிய நீர் ஒரு சிறு வழியமைத்து , அடுத்த வீட்டின், பாதாளச் சாக்கடையில் கலக்க வேண்டும். ஆனால் அடுத்ததில் சேர்ந்து கொள்ளலாம் என்று இன்னும் வழிந்தோடுகிறது. இப்படி அடுத்ததும், அடுத்ததும் என்று கைகோர்த்து வழிந்து ஒரு சிறு பச்சைத்திட்டு உருவாகியிருக்கிறது. சுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கழிவுநீர் , கழுவிய உடலில் இருந்து வெளியேறுவது. கழுவிய நீரில் என்னவெல்லாம் இருக்கும், அது அப்படியே உடலில் பாசி போல் தங்கினால் என்ன ஆகும் என்று கற்பனை செய்ய முடிகிறது.இந்த வேலையைத்தான் மனித உடலின் நிணநீர் மண்டலம் செய்கிறது.

நிணநீர் மண்டலத்தை அறிந்து கொள்ளும் முன் , நம்முடைய ரத்த ஓட்ட மண்டலத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்தம் ஓடும் நரம்பு மண்டலத்தை தமனிகள் , சிரைகள் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். தமனிகள் வழியாக நாம் சுவாசிக்கும் வெளிக்காற்று தமனிகளால் எடுத்துச் செல்லப்பட்டு திசுக்களுக்கும், செல்களுக்கும் பிரிந்து சென்று சேர்கிறது. ஆக்ஸிஜன் மட்டும் இல்லை, மற்ற புரதங்கள், ஹார்மோன்கள் எல்லாமும் தமனிகள் வழியே மட்டுமே திசுக்களை அடைகின்றன. நரம்புகள்(vessels)  இன்னும் சிறிதாக ஆகி செல்களை அடையும் இடத்திற்க்கு கேபில்லரிஸ் அல்லது நாளங்கள் என்று பெயர். 

இப்படி ஒவ்வொரு செல்லும் ஊட்டத்தைப் பெற்று அதை உடலில் செலவழிக்கும் போது கழிவு உண்டாகிறது. இதை கார்பன் டை ஆக்சைட் என்று படித்தே நம் படிப்பு நின்று விட்டது. இதற்க்கு மேலே கழிவுகள் பல, பிஸிக்கல் டேபிரிஸ் , திடக்குப்பைகள் எனலாம். யூரியா, அம்மோனியா, லாக்டிக் ஆசிட், கிரேட்டினின் போன்ற எல்லாம் உடலின் கழிவுப் பொருள்கள். இதற்கெல்லாம் மேல் நீர் என்ற கழிவு. இவற்றை சுத்தப்படுத்தும் முக்கிய உறுப்புகள் என்று சிறுநீரகம், கல்லீரல் , நுரையீரல், தோல் ஆகிய நான்கையும் சொல்லலாம்.

இவற்றை சுத்திகரிக்க நம் உடலில் இரண்டு பாதைகள். முதல் பாதை  சிரை நாளங்கள் மற்றும் சிரைகள் வழியாக நுரையீரலை மீண்டும் அடையும். அங்கு சுத்திகரிக்கப் பட்டு மீண்டும் தமனிகளுடன் இணைகின்றன. கரியமில வாயுவும், யூரியாவும் , கொஞ்சம் அசுத்த நீரும் இப்பாதையில் சுத்தமாகின்றன.

இரண்டாவது பாதையே பொதுவாக நாம் அறியாதது. 

செல்கள் உருவாக்கிய , ரத்த நாளங்களால் மேலே சொன்ன முதல் பாதையில் எடுத்துக் செல்ல முடியாத கழிவுகள் திசுக்களுக்கு இடையிலான திசுவிடை பகுதியில் நீராய் தேங்கி நிற்கும். இதற்கு interstitial fluid என்று பெயர். இதன் இன்னொரு பெயரே நிணநீர் என்பது. இந்தக் கழிவுகள் அளவில் பெரியவை, நீரில் கரையாதவை எனவே கடவுள் படைப்பில் இவற்றிற்கெல்லாம் தனி வழி. இந்தக் கழிவில் விஷக் கழிவும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால், இன்று மனிதனின் முன்னேற்றத்தால், பிளாஸ்டிக் போல என்னவெல்லாம் உள்ளே போகிறதோ கடவுளுக்கு மட்டுமே தெரியும். நம் உடலால் கிரகிக்க முடியாத வேற்று உலக பொருள்களும் இங்கேயே நிணநீர் என்று விடப்படுகின்றன. சுவாசிப்பதால் வரும் கிருமிகள் உள்பட. இவற்றிக்கெதிரான வைரல் காய்ச்சல் , வயிற்றுப் போக்கு போன்ற  உடலின்  போரும் இந்தப் பாதையிலேயே ஆரம்பம் ஆகிறது. 

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த இரண்டாவது பதையுடனேயே சேர்த்துக் கட்டப் பட்டிருக்கிறது. உடம்பில் நோய் எதிர்க்கும் ப்ரோடோகால் ஆரம்பம் ஆக வேண்டும் என்றால் , இந்த இரண்டாவது கழிவுப் பாதை சரியாக இருக்க வேண்டும். 

இப்போது இரண்டாவது கழிவுப் பாதையை சிறிது  விரிவாகப் பார்க்கலாம். இதை நாம்  தமனி, சிரை போன்ற ரத்த ஓட்ட மண்டலங்களை போல் ஒரு மூன்றாவது நெட்ஒர்க் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டும். இதுவும் செல்களின் திசுவிடைப் பகுதியில் நிணநீர் தந்துகிகள்  (Lymphatic capillaries ) என்று ஆரம்பிக்கிறது. இவை பெரிதாகி நிணநீர் நாளங்கள் (lymph capillaries) என்று ஒன்றாய் இணைந்து நிணநீர் முடிச்சு(lymph nodes) என்று பந்து போல் ஆகின்றன. நம் உடம்பில் 500-700 இந்த மாதிரி பந்துகள் உள்ளன என்கிறார்கள். ஆனால் உடம்பில் நான்கு பகுதிகளில் இவை கூட்டமாய் இருக்கின்றன. தலை கழுத்துப் பகுதி, மேல் மார்பு, வயிற்றுப் பக்கம், இடுப்புப் பகுதி என்ற நான்கும். காய்ச்சல் என்றால் கழுத்தில் கை வைத்துப் பார்ப்பது இதனால் தான். இங்குதான் முன்னூறுக்கும் மேலான நிணநீர் முடிச்சுகள் இருக்கின்றன. அடுத்தது வயிற்றுப் பகுதி. மூன்றாவதாக கைக்குப் கீழ்ப் பகுதி. நோய்த்தொற்று வரும் போது இங்குதான் உண்மை வெளி வருகிறது. 

நிணநீர் முடிச்சு தான் கழிவுப் பாதையும் , நோய் எதிர்ப்பு மண்டலமும் சந்திக்கும் புள்ளி. இந்த இடத்திலேயே உடல் கிருமிகளுக்கு , உடம்பில் சேராத கழிவுகளுக்கு பரிசோதனை வைக்கிறது. இவை கண்ணில் பட்டால் உடனே , நோய் எதிர்ப்புப் பாதையின் வெள்ளை அணுக்கள், ஆன்டி பாடிஸ் வரழைக்கப் படுகின்றன. இது தனியாக வேலை செய்யும். ஆனால் தொடக்கம் கழிவில் இருந்தே ஆக வேண்டும்.

இந்த இடத்தில் தேக்கம் ஏற்பட்டால் , மேல் சொன்ன ஊரே தெருவில் கார் கழுவும் படலத்தில்  , நீர் வெளியேறும் ஒரு ஓட்டை அடைபட்டால் என்ன ஆகும் என்று யோசித்தால் விளங்கும். தண்ணீர் திணறி போக வழியின்றி நிற்கும். சூரியன் போல உறிஞ்ச இயற்கை வழியில்லை என்றால் , நாளடைவில் அதில் பாசி ஏறி பச்சை ஆகும் , இல்லையா?

நிணநீர் மண்டலத்தை ரத்த ஓட்ட மண்டலத்துடன் ஒப்பிட்டு எல்லாம் ஒன்று என்று சொல்லலாம். ஆனால் இரண்டு முக்கிய வித்தியாசங்கள்  உள்ளன . இந்த இரு  வேறுபாடுகள் தான் , எல்லா தலைவலிக்கும் அஸ்திவாரம். அது என்ன? 

முதலாவது, ரத்தத்தை அழுத்தி வெளியேற்ற , ஓட வைக்க இதயம் இருக்கிறது. இதயம் தானாய் துடித்து ரத்தத்தை உடலில் சாகும் வரை ஓட வைத்தபடி இருக்கிறது.  கழிவு நீர்ப் பாதை தானாக ஓட முடியாது. கழிவு  நம் கை கால் பகுதிகளை நகர்த்துவதன் மூலம் மட்டுமே சுத்தம் செய்யப் பட முடியும். மேலே சொன்ன மூன்றாவது நெட்ஒர்க் நடக்காமல், வேலை செய்யாமல் , நின்று போகும். சரியாய் வேலை செய்யாது. இதனால் தான் இப்போதெல்லாம் இத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மூன்றாவது பாதை வழியே, ஒரு நாளில் நாலு லிட்டர் நிணநீர் உடம்பில் சுத்திகரிக்கப் படவேண்டும். நிண நீர் முடிச்சுகள் எங்கே அதிகம் இருக்கின்றன என்று மேலே பார்த்தோம். பொதுவாக கால் உளைச்சல் போன்ற அறிகுறிகள், தேங்கிய கழிவையே குறிக்கின்றன. இவை வேலை செய்தால் , தானே போவதைப் பார்க்கலாம். நம்மால் , நெடுநேரம் அமர்ந்திருந்த பின், படுத்திருந்த பின்னர் வரும் அழற்சியும் தேங்கிய நிணநீரையே காட்டுகிறது. நாள்பட்ட கழிவை inflammation என்று சொல்வார்கள். தமிழில் வீக்கம் என்று பெயர். இதன் உச்சம் நாள்பட்ட வலிகள், திடீர் வீக்கங்கள் போன்றவை. வீக்கம் உள்ள செல்களின் சிதைந்த கழிவுப் ப்ரோடீன்கள்  நிணநீர் முடிச்சுகளில் நுழையும் போது அவைகளை வேற்று உடம்பின் கழிவுகள் என்று பிழையாக எண்ணி விட வாய்ப்பிருக்கிறது. இதனால் தன் உடம்பே தன் எதிரி என எண்ணி அப்பகுதியில் வெள்ளை அணுக்கள் சேர்கின்றன. அவை மேலும் சிதைவடைகின்றன. கழிவு மீண்டும் தவறாக எண்ணப் படுகிறது. வீக்கம், வலி அதிகமாகிறது. இதை auto immune disease என்கிறார்கள். rhuematoid arthiritis போன்ற நோய்கள் கழிவில் இருந்தே ஆரம்பமாகின்றன. சுருக்கிச் சொன்னால், முதலில் நிணநீர் முடிச்சுகள் உடம்பின் வாட்டர் பில்டர்கள், முதலுதவி டாக்டர்கள். இரண்டும் பழுது பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கலாம்.

ரத்த ஓட்ட மண்டலத்திற்கும் , நிணநீர் மண்டலத்திற்கும் இடையில் உள்ள இரண்டாவது வேறுபாடு என்பது ரத்தம் செல்வது இருவழிப் பாதை. கழிவுக்கு ஒருவழிப் பாதை. பெரும்பாலும் ஈர்ப்பு சக்திக்கு எதிராய் மேல்நோக்கி கழிவு பயணம்  வேண்டும். இப்பயணம் உடல் நகர்வதால் மட்டுமே சாத்தியம். காலில் இருந்து கழுத்துக் கீழ் இருக்கும் நிணநீர் முடிச்சை அடைய என்ன செய்ய வேண்டும் எண்ணிப் பாருங்கள். நடக்கலாம், ஓடலாம், தலைகீழாய் நிற்கலாம், காலை உயர்த்தி வைக்கலாம், குதிக்கலாம். ஆனால் இருந்த இடத்தில் இருந்தால் பிரயஜோனமில்லை. மசாஜ், கையால் சிறிய அழுத்தம் கொடுத்தல் போன்றவையும் உதவலாம். பெரும்பாலும் மேல்நோக்கிய பயணம், கால் கடுத்து நடந்து மட்டுமே செய்ய வேண்டியது. கழிவுநீர் உடலில் தாங்கும் வியாதிக்கு lymphaedema என்று பெயர். எடை இருப்பவர்களுக்கு கொழுப்பால் நிணநீர் மண்டல வேலை இன்னும் கூடுகிறது. கொழுப்புக்கென்று உடம்பு தனியாய் வேலை செய்ய வேண்டும். அதைப் போலவே கழிவு மண்டலமும். உடலெல்லாம் கழிவைத் திரட்டியபின் நிணநீர் மண்டலம் மீண்டும் ரத்த மண்டலத்தில் இணையும் இடங்கள், இரண்டு நிண நீர்க் குழாய்கள் (duct). கழுத்துப் பகுதியில் , தொண்டைப் பகுதியில் இருக்கிறது. தொண்டைப் பகுதிக் குழாய் மிகப் பெரியது. சுமார் இரண்டடி நீளம். தலையின் வலது பக்கம் , கழுத்து போக மற்ற எல்லா பகுதியின் சுத்திகரிக்கப்பட்ட நிணநீர் இந்தக் குழாய் வழியே ரத்தத்தில் மீண்டும் கலக்கிறது. ஆன்டிபாடீஸ் , புரதங்கள் , மீண்டும் உடலில் உபயோகமாகின்றன. 

மூன்றாவதாக ஒன்றைச் சொல்லியே இதை முடிக்க வேண்டும்.

மூளைக்கு என்று தனி நிணநீர் மண்டலம் இருப்பதை பத்து வருடங்கள் முன்னர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை Glymphatic system என்று சொல்கிறார்கள். இதிலும் ஒரு புதிர் இருக்கிறது. மூளைச் சுத்திகரிப்பு தூங்கும்போது மட்டுமே நடக்கிறது. ஒரு இரவு சரியாகத் தூக்கம் இல்லாமல் போனால் , முகம் வீங்குவது, கருவளையம் தெரிவது, நாமே கண்ணாடியில் வேறாவது , brain fog போன்ற எல்லாமும் கழிவு வெளியேற்றம் தூக்கத்தில் நடப்பதால் மட்டுமே. ஓட்டமும், நடையும் போல் தூக்கமும் முக்கியம். மூளை உடலில் இருபது சதவீத ஆற்றலைக் கோருகிறது என்றால் , அதன் கழிவை எண்ணிப் பார்க்கலாம். கால் கை வீங்கி  வலிப்பது போல் மூளை செய்வதில்லை. ஆனால் படுத்து உறங்கு என்று சொல்கிறது. தூக்கம் இல்லையென்றால் மூளை எதையும் காது கொடுத்துக் கேட்காது, பார்க்காது என்பது தெரியாததல்ல. மூளை உடலுக்கு ஸ்டேரிங் வீல், வேறு என்ன சொல்ல முடியும். தூங்காமல் ஓட்ட முடியாது, தூங்கிக் கொண்டும் ஓட்ட முடியாது.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...