Skip to main content

நல்லார் இருவர் உளரேல்


நல்லார் இருவர் உளரேல் (புனைவு)

--------------------------------------------

கூற்றுவன் யமன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனென்றால் குற்றமே இல்லை;

யாரிடமும் கோபமும் இல்லை ; ஏனென்றால் எல்லாரிடமும் மேலான எண்ணங்கள் இருப்பதால்;

நல்லறம் அன்றி செய்ய ஏதும் இல்லாததால் , நற்செயலின்றி தீய செயல் இல்லை;


மேலே சொன்னது கம்பனின் பின்வரும் பாடலுக்குப் பொருள். 


'கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;

சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;

ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,

ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.'


இதை அயோத்தி நகர் மக்களைப் பற்றி கம்பன் சொல்லும் போது வரும் பாடல். இது போல் கம்பன் எங்கு பார்த்து எழுதியிருப்பான் என்று தெரியவில்லை. இல்லை செய்ய வேண்டியதன் உச்சத்தைச் சொல்லும் பாடலா ? அவர் பார்த்த உண்மை என்னவாக இருக்குமோ கடவுளுக்கு மட்டும் வெளிச்சம்.

ஆனால் இன்று நடந்த அனுபவம் போல் கடைசியில் என்று நடந்தது என்று நினைவில் இல்லை. ஒளியை விளக்க இருள் தேவை, இல்லையா? அடுத்த சிறு பத்திகளில் எனக்கு ஏற்பட்ட ஒரு அடர் இருள் சம்பவத்தை உதாரணமாக  விளக்கி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன். 

பதினைந்து வருடங்களுக்கு முன் தெருவில் இரவில் நின்ற கார் காலையில் தொலைந்து போய் விட்டது. ,பத்து நாள் காய்ச்சல் வந்து எழுந்த உடலுடன், நோ பார்க்கிங் என்று சங்கிலி போட்டு கொண்டுபோய் விட்டார்களா என்று BDA காம்பிளக்ஸ் போன்ற இடங்களில் தேடி ஓய்ந்து போய் , பெரிதாய் ஏதோ நடந்து விட்டது என்று மனதிற்கு தெரிந்து, கடைசியில் போலீசில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ஆழ்மனம்   சொல்லி விட்டது. இது இடது மூளைக்குள் பதிவானதும், வலது மூளை உடனே சொன்னது, 'அப்பா, உன் கன்னட மொழிச்சிக்கலை எப்படிக் கடப்பாய்' என்றுதான். இரண்டொரு வரிகளில் HAL போலீஸ் ஸ்டேஷனில் என்னுடைய மொழிப் பிரச்சனை , போலீசுக்கு சாப்ட் வெப்பன் ஆக மாறியது. ஒரு போலீஸ்காரர் அடுத்த ஆறு மாதம் கேஸ் முடியும் வரை என்னிடம் தமிழே பேசினார். மொழிவலையில் சிக்கியிருந்தேன் என்பது பின்னரே எனக்குத் தெரிந்தது. கார் பறிபோன அன்று இன்னும் ஒருவாரத்தில் திரும்பக் கிடைக்கும் என்று FIR போடும் முன் விசாரிக்க வந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் உறுதியாகக் கூறினார். நான் அதை முழுதும் நம்பினேன். இடையில் வாருங்கள் போய் டீ குடித்து வரலாம், என்று என்னையும் சேர்த்துக் கூப்பிட்டார்கள். நான் டீ வாங்கும் முன் , அவர்கள் ஆளுக்கு ஒரு இட்லி வடை வாங்கினார்கள். அவர்கள் சாப்பிட, நான் நின்று பார்த்து, கடைசியில் ஒரு டீயை குடித்து , என்ன நடந்தாலும் வாழ்க்கை ஒரு டீ குடித்து முன் செல்லும் என்று உணர்ந்தேன். நமக்கு என்ன ஆனாலும் எதிரில் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் என்றும் புரிந்தது.   

அவர்கள் முன்னால் போக, நான் பின்னால் போய் ஸ்டேஷனில் FIR எழுதியதும், வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். வேலைக்குப் போய் பத்து நாளுக்கு மேல் ஆகியிருந்தது. ஜெர்மனி சென்று திரும்பியிருந்தேன். பறவைக் காய்ச்சல் என்று நினைத்து கட்டாய விடுப்பில் விட்டிருந்தார்கள். எனக்கும் எழ முடியாத காய்ச்சல். சோ எழுதிய மஹாபாரதம் பேசி , பொழுதைக் கழித்தேன். முதல் பெண் அம்மாவின் வயிற்றில் , ஊரில். அம்மா சேதி கேட்டு வந்திருந்தார்கள். யானை தொலைந்த கதை போல், கார் தொலைவது சாத்தியமா, எப்படி, என்ற கேள்வியே எல்லோரும் கேட்டார்கள். கார் எனும் பேரிருளைத் தொலைப்பது, தேடுவது எங்ஙனம்? எனக்குள் எஞ்சியதும்  கேள்வியே, அதனால்  வேலைக்குப் போய் அமைதி தேடலாம் என நினைத்தேன். ஆனால் ஸ்டேஷனில் உட்காரவே முடிந்தது. எல்லோரும் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நோட்டை எடுத்து, பார்த்து , வேறொரு நோட்டில் எழுதுகிறார்கள். பின்னர் யாராவது போய் கம்மிய குரலில் பேசுவார்கள். அவர்களும் கம்மி பதில் சொல்வார்கள். இதில் குற்றம், குற்றவாளிகள் என்று எதாவது இருக்கிறதா என்றே எனக்குள் சந்தேகம் எழுந்தது. சாப்பிடாமல் சாப்பிடும் வேளை முடிந்ததில், எனக்குள் உண்டான பதற்றம் , கார் தொலைந்த அதே தேதியில் இருக்க வேண்டிய FIR. இது இன்சூரன்ஸ் சரத்துகளில் இருக்கும் முக்கியமான சரத்து. இது ஆகவில்லை என்றால் , இன்சூரன்ஸ் கோறுவது பலமில்லாமல் ஆகும். ஐந்து ஆறு மணிக்கு அரசாங்கத்தில் எழுத்து வேலை முடித்து விடுவார்கள். விஷயம் என்னவென்றால் , இவை எல்லாம் முன்னாலே நடந்திருக்கிறது. நம்மைத் தவிர எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. 

கோப்பை நகற்றத் தெரியவில்லை என்றால், இந்தியன் பட மனோரமா போல் இந்தியன் தாத்தா வர காத்து இருக்க வேண்டியது தான். இந்தியன் தாத்தா வந்தாலும் , கையால் எழுதி, கோப்புகள் வழியே மட்டுமே சண்டை போட முடியும்.

இன்சூரன்ஸ் கம்பெனி என்ன செய்யும் என்பது ஸ்டேஷனில் தெரியும். கடைசியில் இன்றைக்குள் FIR எழுதிக் கோப்பில் வைக்க வேண்டும் என்று நான் கெஞ்சும் தொனியில்  சொன்னவுடன், தமிழ் பேசும் போலீஸ் உதவிக்கு வந்தார். SI ரெண்டாயிரம் கேட்பார் என்றார். கார் எப்படியும் கிடைக்கும் என்றார்கள். FIR போட்டு ஒரு வாரத்தில் சில முறை ஸ்டேஷன் சென்றேன். வெளி மாநிலங்களில் கார் இருப்பதாக சந்தேகிப்பதை போலீஸ் சொன்னார். இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் கேஸ் முடிவு சான்றிதழ் கேட்டு வாங்கி வரச் சொன்னார்கள். தேடாமல் கேஸ் முடியாது என்று போலீஸ் பக்கம் பதில் வந்தது. கார் தொலைந்ததே லோன்காரர்களுடன் ஏதேனும் தள்ளுபடி கிடைக்குமா என்று முயன்று பார்த்தேன். வட்டி பாக்கியில்லாமல் கட்ட வேண்டிவந்தது. அடிக்கடி நடந்து வீங்கி ஆறு மாதம் கழித்து , இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் பேரம் பேசினார்கள். முடிவுச் சான்றிதழ் இல்லாமல் இவ்வளவு குறைத்து என்று முடிவானது. வெட்டிய இதில் ஒரு பகுதி எங்கு பாயும் என்று சொல்ல வேண்டியதில்லை. மேலே சொன்ன கம்பன் வரிகளை திரும்பப் போய் படிக்கவும். 'கூற்றம் இல்லை , ஓர் குற்றம் இலாமையால்'...இதில் நடைமுறையில் யார் குற்றவாளி என்ற முடிவை  உங்கள் யோசனைக்கே விடுகிறேன். உங்களுக்கும் எப்படி காரை ஒருவர் தொலைக்கலாம் என்று தான் தோன்றும், அதை விடுத்து  மேல் யோசிக்கவும்.

ஆக ,தனக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தது என்று முறையிடுபவர்க்கு தண்டனை என்றால் , நாட்டில் குற்றம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்போது குற்றம் இலாமைதான் இல்லையா?

இப்போது இன்று நடந்த விஷயத்திற்கு வருகிறேன். 
எந்த ஒரு கவர்மெண்ட் ஆபீசும் மேல் சொன்ன கட்டுக்குள் வரும். ஆனால் முறையும், அளவும் வேறு.எல்லாமும் போலீஸ் ஸ்டேஷன் போல் மேல்ப் பாகையில் இல்லை. ரெஜிஸ்டர் ஆபீஸ், வருவாய்த் துறை போன்ற அலுவலகங்கள் வெவ்வேறு கீழ்ப் பாகையில் இருக்கும். தண்டனை முறைகள் வெவ்வேறு. உதாரணமாய் , முனிசிபாலிட்டியில் இருந்து குழாய் வரி வருடா வருடம் போடுவார்கள். ஆனால் வீட்டில் குழாய் இல்லை. ஒவ்வொரு வருடமும் மல்லுக்கட்டி புரிய வைக்க வேண்டும். கட்டாமல் விட்டால் அதற்கு பைன் உண்டு, பைனுக்கு வட்டி உண்டு.

நான் இன்று சொல்லவேண்டியது, மின் வாரியம். இந்த முறை ஊரில் இருந்து வரும்போது பெங்களூரில் இருந்து சேலம் வரும் வரை அம்மா மின்வாரிய அலுவலகத்தில் இருந்தார். போய் சமைத்துச் சாப்பிடு, நான் வந்து பார்க்கிறேன் என்றேன். மின் வயர்கள் கடந்த வார மழையில் தொய்ந்து விட்டன. ஒன்றோடொன்று கை சேர்த்து, ஆடிப்பாடி, மௌன ராகம் ரேவதி போல் ஜாஸ்தி மழையாடிவிட்டன. பியூஸ் போய் விட்டது. போஸ்ட் கம்பியில் பியூஸ். நிவாரணம், நீண்ட நாள் தோல் வியாதி வந்த வயர்களுக்கு , தோலுரித்துக் கட்ட வேண்டும். சிவனுக்கு யானைத்தோல் உரித்த மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி என்று ஒரு பெயர் உண்டு. தாரக வனத்தில் பிச்சாண்டவர் ஆக வந்த அவர் அழகில் மயங்கி அங்கிருந்த மனைவி மார் , பெண்கள் , அன்னையர் அனைவரும் , பிச்சையிட்டு அவர் பின்னால் போய்விடுவார்கள். முனிவர் தலைவர் சொல்ல , அதர்வ வேதம் சொல்லும் ஒருவரைக் கூட்டி, திசை யானைகள் என்னும்  இருளை, கங்காளன் மேல் ஏவுவார்கள். எட்டுத் திக்கும் சூழ்ந்த இருளைக் கிழித்து வெளியே வருவார். அவர் அஞ்ஞானம் என்ற இருள் கிழித்தார், மின்வாரியம் வழி அவ்வப்போது வரும்  இருள் இப்போது கிழிக்க வேண்டும். 

சேலத்தில் இருந்து மதுரை வரை கம்பராமாயணம் அலைபரப்பு ஒன்று கேட்டேன். ஆனந்தமாய் இருந்தது. தேர்ந்த அனுபவக் குரல், காரைக்குடி செட்டியார், கம்பராமாயணத்தில் ஊறியது, 'பாட்டு புரிய எப்பவும் கடைசி வரில ஆரம்பிக்கணும்..அப்புறம் கேள்விகள் வழியா மேல போகணும் '   

வந்து இறங்கியதும் நேரே மின் அலுவலகம் சென்றேன். அம்மா என் பெயரில் தோலுரிக்க விண்ணப்பம் கொடுத்திருந்தார். இந்த முறை, 'நீங்க யாரும்மா? முத்து வெங்கட சுப்பிரமணியனா? அவர நேர வரச்சொல்லுங்க'. இதற்கு சுவரில் தலையை சாப்டாக முட்ட வைப்பது என்று பொருள்.   ஏற்கனவே இன்னொருவர் கேட்டு ஆதார் அனுப்பியிருந்தேன். அன்று ஒரு பகுதி பாடம் முடிந்திருந்தது. நான் போய் அன்று இரண்டாவது பாடம் ஆரம்பித்தேன். 
' AE பீல்ட் ட்ரிப் போயிருக்கார் சார்? காலையில ஒன்பது மணிக்கு வாங்க...AE இருப்பாரு'
'ரூவா ஏதும் கட்டணுமா'
'சார் கையெழுத்துப் போட்டு உள்ள ஏத்துனதும் பணம் கட்டணும்..காலைல தான் எல்லாம் '

பேப்பரை வாங்கி அந்த அழகான மேசையில் , கண்ணாடி பேப்பர் வெய்ட்டின் அடியில் வைத்தார். AE காலையில் வந்ததும் செய்தித்தாள் படிப்பாரோ இல்லையோ, அதைப் படித்தாக வேண்டும். எந்த அரசாங்க அலுவலகத்திலும் இருக்கும் இருபுறமும் இருந்த இரண்டு பைல் பாஸ்கட்கள். பழங்கள், ரொட்டிகள் போல அப்ளிகேஷன்களால் நிறைந்து இருந்தன. ஸ்டேப்ளர் போட்டவை, போட்டோ ஒட்டியவை. இந்த பேப்பர்கள் செயலாய் மாற வேண்டும். எதிரே இரண்டு காலி நாற்காலிகள். இந்த மேஜை நாற்காலி ஒரு செவ்வியல் படிமம்.   

மீண்டும் காலை ஒன்பது மணிக்குச் சென்றேன். இரண்டாவது அறையில் இரண்டு பேர் இருந்தனர். முதல் அறையில் எனது பேப்பர் , வெயிட்டின் கீழ் தவத்தில் இருந்தது. விவரம் சொல்லித் தவக் கோலத்தைக் காட்டினேன். 

'சார் கிரீவன்ஸ் போயிருக்கார் சார்'
'எப்ப வருவாரு'
'இன்னைக்கு முடியாது'
வரச் சொன்னாங்க' 
எரிச்சலுடன் ' சார் கிரீவன்ஸ் போயிருக்கார்..பைலை தூக்கிட்டு நான் அங்க போய்ட்டிருக்கேன்'
'நம்ம அப்ளிகேஷன் சேத்து கொண்டுபோவீங்களா' என்று கேட்டுவிட்டேன். அவர் எதிர்பார்க்க வில்லை.
'சார், இனிஷியல் அங்க போட மாட்டார்..இங்கதான் உள்ள ஏத்த முடியும் '  என்று முடித்து விட்டார்.
'நாளைக்கு முடியுமா'
'இன்னைக்கு முடியாது..அவ்வளதான் சொல்ல முடியும்' . இன்று முடிந்தது என்று அர்த்தம். இது தான் அரசாங்கத்தில் அன்றைய கடைசி ஓவர். நேர்த்தியான டைட்டான டிபன்ஸ் , என்னால் ஊடுருவ முடியவில்லை.

'உண்மையில்லை பொய்உரை இலாமையால்' - கம்பனின் அயோத்தியில் உண்மை என்பது இல்லை; ஏனென்றால் பொய்யே கிடையாது. மேலே பொய் இருக்கிறதா, உண்மை இருக்கிறதா, அலகிலா மௌனம்தான் இருக்கிறது.

அன்று சாயங்காலம் மறுபடியும் ஒரு முறை போய்த்தான் பார்க்கலாமே என்று தோன்றியது. போனேன் , அதிர்ஷ்டமும் இருந்தது, AE யும் இருந்தார். 
'முத்து வெங்கட சுப்ரமணியன் , நீங்களா ' என்றார். வயர்மேனைத்  குரல் கொடுத்துத் தேடினார். 
'மணி என்ன' என்றார்.
'நாலே கால் ' என்றேன். தலை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தார். மூன்றரை காட்டியது. நாம் தப்பாக சொல்லிவிட்டோமோ என்று சந்தேகம் வந்துவிட்டது.
'ஏன்யா..அதுக்கு ஒரு செல்ல போட்டு வைக்க முடியாதா? '
'சார் , இப்பதான் நின்றுக்கு..இந்தா இன்னைக்கு போற்றுவோம் ' என்றார் ஒருவர் மிகப் பணிவுடன்.
'இது நேத்து மூன்றரை' என்றார் AE.  இரண்டு பக்கமும் மௌனம்.
'சார் காலேல ஒம்போது மணிக்கு வாங்க...வயர்மன் பாத்து கணக்குச் சொல்லுவாரு..அப்புறம் பணத்தைக் கட்டுங்க..'  என் வழக்கமான பணத்தைக் கட்டும் கேள்விக்கு பதில். இன்னும் கமிட்மென்ட் தொங்கியவாறு இருந்தது. 
இனிமேல் நாளை. 'கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே' - குலசேகர ஆழ்வார் திருப்பதியில் படியாய் இருந்தாலும் நல்லதே என்றார். மின் அலுவலக படியாக இருந்தாலும் ஆகி விடுமா தெரியவில்லை.

அடுத்த நாள் நடைப் பயிற்சியின் இறுதியில், வழியில் வரும் மின் அலுவலகம் எட்டிப் பார்த்து வேலையை முடுக்கி விடலாம் என நினைத்தேன். நான் சென்று பார்த்தபோது அப்ளிகேஷன் காணாமல் போய் விட்டது. முதலில் பார்த்தவர், என்னையே தேடி எடுக்கச் சொன்னார். அது நகன்று விட்டது. என்னை விலக்கி அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் அழகான தமிழ் கையெழுத்துப் போட்டு விட்டு, 'சார் வரணும்..உட்காருங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். உட்கார அங்கு இடமில்லை, வராதவர் இருக்கைதான் இருந்தது. ஒரு வேலை அரை டிராயரில் இருக்கும் என் கோலம் சிக்கலாகுமோ என்று தோன்றியது. உடனே வீட்டுக்குப் போய் மாற்றிவிட்டு திரும்பி வந்தேன்.

வந்து ஒரு கூட்டமாய் இருந்த வயர்மன்கள் நடுவே போய் விசாரிக்கலாம் என நினைத்தேன். அவர்களின் தலைவர் போனில் பேசிக்கொண்டிருந்ததால் எனக்கு இடைவெளி கிடைக்கவில்லை. இந்த இடைவெளியில் தான் அந்த இருவரில் ஒருவர் என்னை உள்ளே  கூப்பிட்டார்.  ஐம்பதுக்கு மேல் வயதிருக்க வேண்டும். அவ்வளவு நயமாக உள்ளே அழைத்து அமர வைத்தார். 'உங்களைத்தான் சார் பத்து நிமிஷமா தேடுறோம்' என்றார். எதிரில் நாற்காலியில் இருந்தவர் பாய். 'எத்தனை சர்வீஸ் சார், அஞ்சா..இங்கேயே உட்காருங்க..ஒன்னொன்னா உள்ளே ஏத்தி முடிச்சுருவோம்..சார் எந்த ஊரு ..அம்மா பாவம் ரெண்டு தடவ வந்தாங்க...அம்மாக்கு எத்தன வயசு சார்..எழுபது இருக்குமா ... '  என்றார். இதற்குள் பாய் முதல் சர்வீஸ் நம்பரை உள்ளே தட்டி அவர் கையில் ஒரு நம்பரை எழுதிக் கொடுத்தார். இவர் அடுத்த ரூமில் போய் கணினியில் ரசீது பெற்று வருவார். 

இப்போது எதிரே கணினியில்  உள்ளிட்டுக் கொண்டிருந்த பாய் பேச ஆரம்பித்தார். 'சார் எந்த ஊர் ...பெங்களூரா..' .  பொண்ணு மரைன் இன்ஜினியரிங் படிக்குது..பெங்களுர் போகணும்ங்குது ..அனுப்பலாமா சார்.' ஏன் கூடாது என்றேன். 'எங்காளுங்க விட மாட்டாங்க'. 'கப்பல்ல போணுமா' என்றேன். இல்லை மரைன் டிசைனிங் ' என்றார். அதற்குள் அவர் வந்து விட்டார்.  'ரூவா கேஷ் வேணும் சார்..ரசீதெல்லாம் வந்தவொடன போய் எடுத்துட்டு வாங்க...ரசீது பிரிண்ட் ஆனதும் வயர்மன் வந்து வயற கட் பண்ணிட்டா அவங்க வேல முடிஞ்சது...ஒங்க எலெக்ட்ரிஷியன் ரெடியா வச்சுக்கோங்க ..சி 320 வயற அளந்து வாங்கிக்கோங்க..மூணாவது கட ...' . 

நடுவில் இரண்டாவது நம்பர் வெளியே வந்தது. இந்தப் பகுதி எம்.பி சு. வெங்கடேசன் பெயர் என் வாயில் வந்தது. 'சார்..அடுத்த தெருவுல அவர் வீடு சார்..இப்ப போனா பனியன் போட்டு பேப்பர் படிச்சுட்டு இருப்பாரு..அவரே வந்து கதவத் திறப்பாரு...'நம்மாளுக்கு தோழர் சார் அவரு '. என்றார்.

இதற்குள் அவர் வந்து விட்டார். 'சார்...எனக்கு சின்ன வயசிலருந்து அவர் பழக்கம் சார்...யூனியன்ல இருந்தாரு...கட்சி கொடுக்குற பதினெட்டாயிரம் தான் அவர் சம்பளம்...' ஆமா பெரிய எழுத்தாளர் என்றேன். அவர் முகம் மலர்ந்தது. 'வேள்பாரி படிச்சிருக்கிறீங்களா' 'காவல் கோட்டம் படிச்சிருக்கேன்'  'மதுரையோட வரலாறு' என்றேன். கள்ளர் வரலாறு என்றார். கன்னம் போடுவது என்றதும் , அவருக்கு புளகாங்கிதம் ஆகி விட்டது.'சார் இவ்வளவு தெரிஞ்சுருக்கே...உங்களுக்கு ஜான் ஜோசப் தெரியுமா..அவர்தான் இவங்களுக்கு வெளிச்சம் போட்டது...இவங்க வைக்கிற ரோஸ் மேரி , தாஸ் எல்லாம் அவரு பேரு தான் ..ஆனா இன்னைக்கு ஒன்னும் தெரியாம சண்ட போடுதான் பாத்தீகளா..எங்காளுக திருமாவ திட்டுதான் சார் ..நாடு விளங்குமா '

வெளி வந்த மூன்றாவது கோப்பு எண்ணை எடுத்துக் கொண்டு அவர் உள்ளே போனார். பாயை பார்க்க இன்னும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் தினமலர் பத்திரிகையாளர், மற்றவர் டிவியில் வேலையில் இருக்கிறார். ஒரு அப்ளிகேஷன் கொடுத்ததும், கவரிங் லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்டார். இன்னொரு அம்மா போனில் சிக்கலைப் பேசினார். செவ்வாய் அன்று முடியும் என்று சொன்னார். 
'சார், ஒரு சோசல் சர்வீஸ் தான் சார்...நமக்கும் திருப்தி தான் சார்...வயர் மேன் கிட்ட மாட்டினீங்க வீட்ட எழுதி வாங்கிருவான் சார்..கீழ அஞ்சு பேரு சம்பளம் கொடுத்து வச்சிருக்கான்...மாசம் பத்தாயிரம் சம்பளம்...யாரு கொடுக்கது ... உங்கள மாதிரி ஆளுக தான் ..இல்லாதவங்க கிட்ட வாங்கலாமா சார்...'

அவர் உள்ளே வந்தார். ' சார்...உங்கள உள்ள கூட்டி வந்ததுக்கு என்கூட சண்டை போடுதான் சார்...எதுக்கு பதியிறீங்க, நாங்க பேசி வச்சது...மிரட்டறான் சார்..தினம் இதே அக்கப்போரு சார்...நம்ம மேல பெட்டிஷன் போடுதான் சார்...நமக்கு கை சுத்தம்...யூனியன்ல இருக்கேன் சார்...ரெவெனு டெபார்ட்மெண்ட்ல நாலு ஓட்டண்ணா இங்க ஆறு ஓட்ட சார்...யூனிட் பதினைஞ்சுக்கு வாங்கி ஒத்த ரூவாய்க்கு விக்கோம் சார்..உற்பத்தி இருந்தா தொழிலாளர் வேணும்..நம்ம டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தான்..எல்லாத்தையும் A A கைல எழுதிக் கொடுத்துட்டு அவன் கேக்கத கொடுத்துட்டுப் போவேண்டிதான்..இன்னும் நாலஞ்சு வருஷத்துல ஸ்மார்ட் மீட்டர், பிரைவேட் எலக்ட்ரிசிட்டி ஆளுக எதுக்கு..'

இதற்குள் அடுத்த எண் வந்தது, 'அவங்க கையில கொடுத்தா கறந்துருவாங்க பாத்துக்கோங்க...மொத்த ஆபீசுக்கும் இவெங்களால கெட்ட பேரு ..நமக்கு கவர்ன்மெண்ட் சம்பளம் கொடுக்கு.. போதும் சார்...ஜனவரில ட்ரான்ஸபெர் ..அப்புறம் இந்தச் சிக்கலும் இல்ல..ரூவா கொடுக்க ஆளு ரெடியா இருந்தா இப்படித்தான் நிலம தலைகீழா போகும் ...' எனக்கும் சேர்த்து ஐந்து டீ சொல்லி அனுப்பினார்.

ஐந்து பில்லும் வந்தது , இடையில் ஆண்ட்ராய்டு போன், செகண்ட் ஹாண்ட் போன் பார்ட்ஸ் தொழில் வாய்ப்பு என்று பேச்சு ஓடியது. IT ல் யூனியன் எப்போது என்று கேட்டார். அவர்களும் கூட்டங்களுக்கு வருவதாகச் சொன்னார். காலையில் கம்யூட்டர் திறந்ததும், உன் வேலை காலி என்று அது சொன்னதாக ஒருவர் சொன்னதை நினைவு கூர்ந்தார். 'அவன் என்ன சார் செய்வான்..பிள்ள குட்டிக பாவம் இல்லையா' என்றார்.

இரண்டு பேர் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய இப்படி சிக்கல் பட வேண்டியிருக்கிறதே.  சாதாரண உண்மை , நேர்மை என்பது எதிர் நீச்சலா , இல்லை ஆற்றின் திசையில் போவதா என்ற சந்தேகம் என்னுள் வந்துவிட்டது. முன்னெல்லாம் நூற்றில் இரண்டு பேர் விதி விலக்காக இருப்பார்கள். இப்போது நூற்றில் தொன்னூற்றி எட்டு பேர் விதி விலக்கு என்றால் மீதி ரெண்டு பேர் என்ன செய்வார்கள். அதனால் தான் பெட்டிஷன் இவர்கள் மேல் விழுகிறது. 

'உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்' - உண்மை இல்லை , ஏனென்றால் பொய் என்பதே இல்லை. எல்லாமும் வெளிச்சம் என்றான பின் இருள் என்பது தெரியாதில்லையா ? 

எட்டுத் திசையும் இருள் என்றான பின் , ஒளி அடையாளம் தெரியாமல் போகும் இல்லையா?

'பொய் இல்லை, உண்மை உரை  இலாமையால்' இது இப்படி அல்லவா இருக்க வேண்டும். உண்மையே இல்லாத இடத்தில் பொய்யென்று ஒன்று இருக்க முடியுமா.நாளடைவில் உண்மையென்றால் என்னவென்று தெரியாமல் போய் விடும் இல்லையா? அந்த இருவரும் திண்டாடுவது இந்தப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுதான் இல்லையா? எட்டுத் திசையும் காரிருள் என்றபோது, திசை யானைகளை தோல் கிழித்து மேல் போர்த்து வரும் தோலுரித்த சிவனே ஆனாலும் அவரும் மின் வாரிய இருளில் தான் இருக்கிறார். .   

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...