பாட்டிலும் மூடியும்
--------------------
அவரவர் பாட்டில்கள்
அவரவர் மூடிகள்
அவருடைய ஒரு பாட்டிலை
என் மூடியை
வைத்தும் மூடலாம்
என்கிறேன்
என்னுடைய ஒரு பாட்டிலை
எப்போதும் ஒருவர்
மூடியை மாற்று
என்கிறார்
எனவே என்
எல்லா பாட்டில்களும்
கசிந்து கழுத்து நடுங்கியபடியே
இருக்கின்றன
ஓர் கணத்தில்
எல்லா மூடிகளையும் கழற்றி
விண் பார்க்க
பாட்டில்களை வைத்தேன்
கையில் இருந்தது பெரும்பாலும்
காலி பாட்டில்கள் என்றறிந்தேன்
மேலும் சிலவற்றை ஒளி வற்றியது
சிலவற்றை காற்று இல்லாமல் ஆக்கியது
கடைசியில் ஒன்றை
நானே ஓர் மிடறாய்
குடித்துக் கவிழ்த்தேன்
பாடபேதம்
-------------
தொலைபேசிக் கூடுகையில்
அந்தச் சீனாக்கார பெண்மணி
இன்னொருவரை லகுவாய் மதம் மாற்றினார்
ரவி என்ற ஒரே சொல்லை
ரஃபி என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி
எதிர்காலம் என்பது
---------------------
இளமையின்
எட்டுத் திசையும் அவரை
உள்ளிறங்கி மீதமின்றி
உறிஞ்சியபின்
மேல் குத்திய விழி
சூப்பிய கன்னம்
நீர் வற்றிய தோல்
குச்சிக் கை கால்
தினம் ஊசியால்
எழுதிய முழங்கை
மூடப்பட்ட
லேசர் துளைகள்
உடம்பில் கருணையுடன்
குறுவாள் ஓடிய தடம்
மூன்று வேளை
காசி மூலிகை
கூறாக்கி பிறர்
கையில் உடல்
செய்வதை செய் என
ஆட்டும் தலை
இரண்டு வால்யூம்
மெடிக்கல் ஹிஸ்டரி
அரை போத
அரசியல் ஆன்மிகம்
எங்கு சரிகிறது
இந்த எதிர்காலம்
இப்பாடலின் முதல் வரி
என்று எழுதப்பட்டது
என்னுள் எங்கோ
பீடத்தில் அமர்ந்துவிட்டது
இந்த நிகழ்காலமும்
இதே கழிமுகம் சேரவே இல்லையா
கை நழுவி கணத்தில்
உடைந்த கண்ணாடி போல்
கடல் மேலே விழும்
மழைத்துளியாய் கடல் சேர
வழி ஏதும் இல்லையா
பாலையாய்த் திரிந்து
வழியில் வற்றினாலும்
வேண்டாம் இந்தக் கடல்
எதிர்காலம் என்பது
---------------------
இளமையின்
எட்டுத் திசையும் அவரின்
உள்ளிறங்கி மிச்சமின்றி
உறிஞ்சியபின்
மேல் குத்திய விழி
சூப்பிய கன்னம்
நீர் வற்றிய தோல்
குச்சிக் கை கால்
தினம் ஊசியால்
எழுதப்பட்ட முழங்கை
காற்றில்
பிடி தேடி
எந்நேரமும் அளையும்
கைகள்
உடம்பில் கருணையின்
குறுவாள் ஓடிய தடம்
மூன்று வேளை
அகிபீனா
கூறாக்கி பிறர்
கையில் உடல்
முடிந்ததைச் செய் என்றே
ஆட்டும் தலை
இரண்டு வால்யூம்
மெடிக்கல் ஹிஸ்டரி
அரை போத
அரசியல் ஆன்மிகம்
எங்கு சரிகிறது
இந்த எதிர்காலம்
இப்பாடலின் முதல் வரி
என்று எழுதப்பட்டது
என்னுள் என்றோ எங்கோ
பீடத்தில் அமர்ந்துவிட்டதா ?
நிகழ்காலத்தின் கழிமுகப்
பயணம் துவங்கிவிட்டதா ?
கை நழுவி கணத்தில்
உடைந்த கண்ணாடி போல்
கடல் மேலே மட்டும் விழும்
மழைத்துளியாய் கடல் சேர
வழி ஏதும் இல்லையா
பாலையாய்த் திரிந்து
வழியில் வற்றினாலும்
வேண்டாம் இக் கடல் சேர்தல்
என்றால்
'பரந்ததன் பரவையுள்
நீர்தொறும் பரந்துளன்'
என்றொரு குரல்
கழிமுகத்தில் கேட்கிறது
பெருவிசை
--------------
தள்ளாடும் குழந்தைக்கு
சேலை நுனிப் பிடி
கிடையில் ஓடும் ரயிலுக்கு
மின்சாரம்
விண்ணெழும் விமானத்திற்கு
உந்தும் பெருவிசை
தென்திசை நோக்கும் நெஞ்சுக்கு
அதிகாலை வெளிச்சம்
பயணம் சீராய்ப் போகையில்
விசை இல்லை
துன்பத்திற்க்கே
யாழ்
விடுதலை
—————
வேலைக்குப் போகும்
வழியில்
கழுத்தில் கயிறு
இல்லாமல்
கழுத்தறுக்கும் அந்தக் கையின்
பிடி இல்லாமல்
முன்னங்கால்கள் உயர்த்தி
தலை நிமிர்த்தி
நா நீட்டி சிங்கமென
யோகத்தில் அமர்ந்து
இன்று என்னை
நேர்கண் பார்த்த
தூய வெண்
பொமரேனியன்
இறப்பும் பிறப்பும்
————————-
அருகில் அமர்ந்திருக்கும்
அவர்
அதன் பழைய
உடலின் கீறல்கள்
மேல் தொட்டுத் தேடி
அதன் வழியே
மீண்டும் ஒரு
புது போன்
வரவழைக்கிறார்
கருவில் உறங்கும் நேரம்
----------------------------------------
காது குத்தில் பிறந்து
எங்கோ பூப்புனித நீராடலில் வளர்ந்து
சில கல்யாணங்கள் கடந்து
பெயர்சூட்டல்கள் பார்த்து
இன்று அறுபதாவது கல்யாணத்தில்
இந்த அம்மாவின் அருகில்
இருக்கிறது ,
அதே
கிப்ட் கவர் பிரிக்கப்படாத
சுவர்க் கடிகாரம்
Comments
Post a Comment