Translate

சில கவிதைகள்

சில கவிதைகள் 


Potholes 

=========


எங்கும் இல்லாத குண்டும் குழியுமான 

நீளமான சாலையில் 

பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன் 


நேற்று நடை வந்த குழந்தையாய் 

ஒரு கால் தரையிலும் 

மறு கால் காற்றிலுமாய் 

ஒரே சத்தமும் கும்மாளமுமாய் 

எதிரும் புதிருமாய் 

தத்தித் தாவி 

வீதியில் அசைந்தாடிச் 

செல்கின்றன   


ஒரு ரவுடிக் குழந்தையாய் 

டேங்கர் லாரி 

எல்லோரையும் முந்தியவாறே 

'க்ளக் க்ளக்' என  வழியெல்லாம் 

நீரை எல்லோர் மேலேயும்  

பீச்சியடித்துக் கடந்து  செல்கிறது 


உள்ளே இருக்கும் டிரைவர்கள் 

பெற்றவர்களாய்  

பல் கடித்துப் பார்க்கிறார்கள்


ஒற்றைத்  தாமரை 

==============

இந்தப் புதுக் குடியிருப்பில் 

தனித் தாமரையாய் அவள் 


தனிமை என்கிறாள் 

ஏகாந்தம் என்று சொல்லி 

தப்பித்துப்  போகிறேன்


தணலும் நீரும் 

==========

ஓரிரு நாளாய் 

உள்ளே தணலும் 

வெளியே குளிருமாய் இவ்வுடல் 


வழியெங்கும் கனலாய் எரியும் 

தாமிர இலைகள் 

அதன் மடியைப் பற்றி விழாமல் பிழம்பென நிற்கும்   

ஒரு உதிர்ந்த செங்கொன்றை 

இடையில் பிணைந்து சிறு நதியாய்

ஓர் பசலைக்  கொடி 


வீடு திரும்பும் என் 

காதில் தணல்

தோலெல்லாம்  சன்னமாய்ப் 

படரும் குளிர்

நதியாய் உதிரம் 

நீராய் மேனி 

  

இன்னும் சில அடி தூரத்தில் வீடு 

மஞ்சள் விளக்குகள் எரிய


இரவெல்லாம் 

==========

இரவெல்லாம் அலையலையாய் எண்ணங்கள் 

ஒன்றொன்றாய்ப் திருப்பிப் பார்த்து 

ரமணர் சொல்படி 

செல்லமாய்த் தட்டிச் சிலவற்றையும் 

பலமாய்த் தட்டிச் சிலவற்றையும் 

புறமாய்த் திரும்பிச் சிலவற்றையும் 

வீழ்த்திக்கொண்டே இருந்தேன்  

விடிந்தும் போனது


வட இந்தியாவும் தென்னிந்தியாவும் 

=========================

ஏறக்குறைய 

வட இந்தியாவும் 

தென்னிந்தியாவும் 

ஒன்றாகிவிட்டன 


ஒரே ஒரு 

கருவேப்பிலை மட்டும் 

துறுத்தி நிற்கிறது


கான் புகும் பாடல் - வானப்ரஸ்த கானம் 

============================

நரைகூடிய மைந்தர்களின் 

கையைப் பிடித்தபடி சிலர் 

லேசாய் அணைத்தபடி சிலர்

வண்டியில் சாய்ந்ததமர்ந்து சிலர் 

கண்ணை மூடியோ 

குத்திச் செருகிய பார்வையுடனோ 

இக்காட்டினுள் நுழைகிறார்கள் 


காட்டில் என்றென்றும் பாடப்படும் 

அவர்களின் துதிப் பாடலைப்  பாடி 

பச்சைச் பறவை அவர்களை வரவேற்று  

அவர்களுக்காக அன்று எழுதிய 

தனிப் பாடலின் முதல் வரியை எழுதுகிறது   


அதை ஒரு இளஞ்சிவப்பு  பறவை படித்து 

பாடலை மேலும் சில வரிகள் எழுதி 

நீலப் பறவையிடம் செலுத்துகிறது 


நீலப் பறவை தியானத்தில் அமர்ந்து 

அவர்களின் ஸ்பரிசம் தொட்டு 

அப் பாடலை முழுதாய் எழுதி முடித்து 

இன்னொரு வெள்ளைப் பறவையிடம்  அனுப்புகிறது 


வெள்ளைப் பறவை பாடலை  

சொல்லின் அளவு பார்த்தும்  

பதம் பிரித்தும்  சேர்த்தும்  

பழைய ராகத்தில் அழகாய்க் கட்டுகிறது 


பின்னர் எல்லாப் பறவைகளும் 

சேர்ந்து ஒன்று கூடி 

அந்த  தனிப் பாடலை  அவர்களுக்காக 

ராகத்தில் பாடிக் காட்டுகின்றன 


எண்ணிலாப் பாடல்கள் அங்கே 

ஆனால் அந்த ஒருவருடைய பாடல் அன்று 

உயர் ரத்த அழுத்தம் 


இப்படித்தான் 

என் தந்தையும் ஒரு பாடலுடன் 

வானப்ரஸ்தம் ஆரம்பித்தார்


அலுவலக அந்தாதி 

==================


சென்ற வருட கடைசிச் சொல்லில் 

இவ்வருடம் சரியாய்த் துவங்க வேண்டும் 


அப்படி ஆயிரம் ஆயிரம் அந்தாதிகள் 

ஒன்று கூடிப்  சீர்பார்த்து பாராயணம் செய்து 

ஊரே அந்தாதி பாடும்  ஓர்  பருவமிது 


சென்ற வருடத்தில் செயலான சொற்கள்  எல்லாம்  

திரும்ப மேலெழுந்து வந்து 

சொல்வது நிஜமே என்றன 

சில மிகையாகவே சொல்லிச் சென்றன 

சில சொல் ஏதும் இல்லாமல் மௌனமாய் நின்றன 

செயலாகாத சொற்களும் தோள் உயர்த்தி நின்றன 

செயல் இன்னும் வீரிய விதையாய் உள்ளே என்றன 

 

பின்னர் சிலர்  சொற்களை ஒன்று கூட்டி  காவல் நின்றார்கள் 

ஒன்று கூட்டிய சொற்களை குத்திக் கிழித்தனர் சிலர் 

சிதறிய சொற்கள் கைவிடப்பட்டன 


எஞ்சிய சொற்களை பிரித்து மீண்டும் அடுக்கினார்கள் 

மூன்று அடுக்காய் பிரித்தார்கள் ஜாக் வெல்ச் சொல்படி 


முதல் அடுக்கு விண்ணில் பறந்தது 

இரண்டாம் அடுக்கு கட்டிடமாய் ஆனது 

மூன்றாம் அடுக்கு மண்ணில் புதைந்தது 


அடுத்த வருடம் ஒரு பெரிய கவிஞன் 

புதைந்த அச்சொல்லுக்கும் சிறகளிப்பான்


ஆர்கெஸ்ட்ரா 

===========


ஆள் உயர 

ஒலிபெருக்கிகள் ஒலிக்க 

குரலெடுத்து பாடகர் பாடுகிறார் 


வாத்தியக்காரர்கள்  மைக்கின் முன் 

கதியாய் வாத்திய ஒலி எழுப்புகிறார்கள் 

எங்கும் பாடல்  பேரொலியாய்  கேட்கிறது 


புலனெல்லாம் நிரம்பி வழிகிறது 

பிற எல்லாம் செவியில் முட்டி

வெளியில் தெறிக்கின்றன 


இருந்தும் கேட்கும் எல்லோரும் 

ஏதோ சிறு ஒலியில் பேசிக்கொள்கிறார்கள் 

அதுவும் கேட்பவர் காதில் எல்லாம் சரியாய் விழுகிறது 

தலையாட்டி சிரித்துக் கேட்கிறார்கள் 


அவை எல்லாம் ஒன்றிணைந்து  

கஞ்சிராவின் சலங்கை மட்டும் போல் 

தாள கதியில் பாடலில் சேர்ந்து கொள்கின்றன   


ஒன்று ஆர் கடல் 

மற்றவை அதில் மிதக்கும் தோணிகள் 

இல்லை அதன் அலையும் நுரையும்

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2