சில கவிதைகள்
ஒரு மறுசுழற்சி
============
வெள்ளை வெய்யில் அடிக்க ஆரம்பிக்கும்
இந்தக் காலையில் அந்த மாபெரும் குப்பைத் தொட்டியை
ஒருவர் கிளறிக் கொண்டிருக்கிறார்
நான்கைந்து பாட்டில்களை குப்பைத் தொட்டியின்
சுவரில் தலைகீழாய் வடிய வைத்து
சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்
இன்னும் ஆழமாய் கிளறி பாட்டில்களை மட்டும்
தோளில் தொங்கும் கோணிப்பையில்
ஒவ்வொன்றாய் சேர்க்கிறார்
அன்றைக்கு தேவைப்படும் அளவு சேர்ந்தபின்
எடை மதித்து குப்பையை வாங்கும் கடையில்
அதை பணமாய் மாற்றுகிறார்
அதே மாபெரும் குப்பைத் தொட்டிக்கு எதிர் கடையில்
வேறொரு பாட்டிலை கூண்டின் வழியே
வலது கைவிட்டு வாங்குகிறார்
தலை மேலே தட்டி
டம்ளர் நீர் சேர்த்து
ஒரு வாயில் உள்ளே ஊற்றுகிறார்
காலி பாட்டிலை
அந்த மாபெரும் குப்பைக் தொட்டியில்
வீசியபடி நிழலில் மறைகிறார்
அந்த ஒரு முடிவின் மேல் உள்ள சுமை
==============================
இப்போது இந்த நேரத்தின் பிற எல்லா முடிவுகளும்
அந்த ஒரே ஒரு முடிவின் மேல் ஏறி நிற்கின்றன
அந்த ஒரு முடிவின் பின்
எண்ணற்ற முடிவுகள்
பதுங்கி ஒளியலாம்
அந்த ஒரு முடிவு வென்றால்
எண்ணற்ற முடிவுகள் முன் வந்து
தன் பங்கைக் கோரலாம்
அந்த ஒரு முடிவு தோற்றால்
வேறு சில முடிவுகள்
கல்லாய் உறைந்து போகலாம்
அந்த ஒரு முடிவு தோற்றால்
வேறு சில முடிவுகள்
அழுகி நாற்றம் எடுத்துப் போகலாம்
அந்த ஒரு முடிவு தோற்றால்
வேறு சில முடிவுகள்
கண்ணீர் விட்டு கதறி ஓலமிடலாம்
அந்த ஒரு முடிவு தோற்றால்
வேறு சில முடிவுகள்
கை தட்டிக் களிக்கலாம்
அந்த முடிவு மஞ்சள் நீர் கோர்த்து
புடைத்த புண்ணாய் வீங்கி
வெடித்து விட இருக்கிறது
கிளை ஆறுகள் தேடிக் கலக்க
போக வழி இன்றி
திமிறி நிற்கிறது
விழ இருக்கும்
மாடிக் கட்டிடத்தின்
அடித்தளமாய் பிதுங்குகிறது
பின் அது ஒரு கணம் எழுந்து நின்று
தன் தோளில் நின்ற
சிறு முடிவுகளையெல்லாம்
உதறி உலுப்புகிறது
உடைந்து வழியும் சீழாய்
கரை மீறும் நதியாய்
நிலை குலையும் கட்டிடமாய்
ஒரு பிரளயமாய்
ஒரு இனிய பாடலாய்
விண்ணில் தெரியும் வானவில்லாய்
கை கூப்பும் பேரிருப்பாய்
உள்ளிருக்கும் நீதிபதி
================
உள்ளிருக்கும் நீதிபதியின்
இன்றைய தீர்ப்புகளை எண்ணினேன் - 2098
இன்னும் முடியவில்லை
அதனால் எழுத்தில் வடிக்கிறேன்
நாளெல்லாம்
நாம் அவன் அவள்
இவன் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர்
அவை இவை உவை
நாளெல்லாம்
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
ஏன் இந்த வேகம்
ஏன் இந்த பாரபட்சம்
ஏன் ஒரு நாளில் இத்தனை தீர்ப்புகள்
எப்படி சாத்தியம் என்றேன்
என் செவி மன மொழி மெய்யெலாம் நீயே
என் விழி உன் விழி
என் எழுதுகோலின் மொழியும் அதுவே
உன் மொழி மட்டும் உன்னுள் உள்ளவரை
இது எண்ணித் தீராது என்றார்
மழை நம்மைத் துரத்தித் தழுவும் போது
-----------------------------------------
மழை ஓய்ந்த பின்னும் மழை
எங்கோ இன்னும்
நமக்காய்க் காத்திருக்கிறது
எங்கோ ஒரு கடையின் தார்ப்பாயில்
குச்சியால் நெம்பியதும்
மேலிருந்து பொத்தென்று விழுகிறது
எங்கோ ஒரு மரம் கடக்கும் போது
யானையின் துதிக்கை நீராய்
மொத்தமாய் கொட்டுகிறது
நீங்கள் அமரும்
ஜன்னலோர இருக்கையில்
உங்களுக்கு முன்னே அமர்ந்திருக்கிறது
யாரோ உதறும் குடையில்
கூர் வாளாய்க் கிளம்பி
நிலம் வெட்டிப் புதைகிறது
சில துளியேனும் சாக்ஸ்களில் புட்டங்களில்
ஒரு இலையில் பூ இதழில்
உள்ளங்கையில் ஒட்டி இருக்கிறது
எல்லாம் தப்பிப் போனாலும்
சாலையில் தன் ஆயிரம் கைகள் விரித்துக்
காத்திருக்கிறது உங்கள் கால் படவேனும்
இதுவும் இல்லயென்றான போது
சாலையில் ஆள் வைத்து துரத்தி
வளைத்துத் தழுவிக் கொள்கிறது மூச்சு முட்ட
மெட்ரோவில் நீந்தும் மீன்கள்
-------------------------------------
அகன்ற நீலத் தரைவிரிப்பில்
நீந்த இடமற்று நிற்கின்றன
இந்தச் செப்பல்கள்
பார்மல் பான்டின் தூண்டிலில் சிக்கி சில செருப்புகள்
சலனம் தவிர்த்து அசைவற்று நடித்தன
சுட்டியும் ராக்கொடியும் பூவும் கொண்டையுமாய்
நளினமாய்த் தயங்கியும் ஆடியும் சில செருப்புகள்
ஒரு தளிர் செருப்பு செருப்புக் குடும்பம் சூழ
தலை கவிழ்ந்து நிற்கிறது
உடலெல்லாம் கண்களுடன் ஒரு crocs
எதிர் நிற்கும் மற்றொரு crocs -ஐ
கண்ணுடன் கண் பார்க்கிறது
ஒரு சிறு அலை வீச கதவு திறந்து
ஒன்றை ஒன்று நெருக்கி வளையமாய்
கோர்த்தும் தழுவியும் நடனமிடுகின்றன
பின்னர் எல்லாம் சிற்றலைகளுக்கும்
மீன்கள் கூட்டாய் சேர்ந்தும் பிரிந்தும்
என்றும் போல் தாள கதியில் ஆடின
அலை சற்றே ஓய
பேரலை வருகிறது (மெஜஸ்டிக் நிறுத்தம்)
மீன்கள் பிதுங்கி சிதறி
வெடித்து வெளியேற முயல்கின்றன
மெட்ரோ சொன்னது :
'நானே நகரின் பெரிய திரட்சி மீன்
நீங்கள் தினமும்
என் வயிற்றினுள் நீந்துகிறீர்கள்
நான் நீந்திக் கொண்டிருப்பது
இந்த நகரின் காலக் கடலில் '
வெளியேறிப் பின்
இப்போது தரையில் மீன்கள்
மின்னலைக் கையில் பிடித்தல்
-----------------------------------
இன்றைய சிக்கலை சற்றேனும் முன்னே நகர்த்த தேவையான
நம்மை தனித்து துலங்க வைக்க வேண்டிய
தலையினுள் எரியும் பிழம்பில் கையளவு நீர் ஊற்றக்கூடிய
என்னுடைய அன்றைய பாடலாய் ஆக வேண்டிய
அரை மணி முன் என்னுள் தோன்றி மறைந்த அந்த
முக்கியமான யோசனையைத்தான் சலித்துத் தேடுகிறேன்
மரக்கிளையில் கண் பார்த்து முடிக்கும் முன்
எங்கோ பறந்து மறையும் பறவை போல்
கருவறையில் கைகூப்பி நிற்கையில்
முன் விழும் திரை போல
காலில் இடறும் கல்லாய்
உதிர்ந்து கீழே விழுந்த
அந்த சொல்லைத்தான்
மீண்டும் மீண்டும் தேடுகிறேன்
அறிகிறேன் முளைக்காத விதைகள்
இப்புவியில் ஏன் இத்தனை என்று
Comments
Post a Comment