7/30 மிடில் கிளாஸ் பிஸ்தா
----------------------------------
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருடங்கள் கழித்துச் செல்கிறேன்.
சென்ற முறை அங்கே எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸ் நினைவுகள்.
இந்த தடவை ஏர்போர்ட் ஞாபகம்.
குழந்தைகளுக்காக வந்திருந்தவர்கள் பலர். நடுத்தர வர்க்கம் - மேல் , கீழ் , நடு .
வெளிநாட்டு உச்சரிப்பில் பேசிய குழந்தைகள்.
எந்தப் பிள்ளைத் தமிழும் பாடலாம்.
உடனே என் டோக்கன் திரையில். இவ்வளவு எளிதாக இருக்காது.
ஒரே எண் மூன்று சுற்று வந்தது.
உட்காரும் இருக்கை பறிபோனபடி இருந்தது.
உள்ளே சோதனைக்கென காஃபி டே.
சாண்ட்விச்சை நினைத்து தேநீர் குடித்தேன். விலை அப்படி.
இன்னொரு அப்பா குழந்தை சாப்பிட்ட மீதி கப் நூடில்ஸை பத்திரப்படுத்தினார்.
உடல் அக்கறையுள்ள ஒருவர் கையளவான பிஸ்தா பாக்கெட் வாங்கினார்.
ஏற்கனவே பார்த்திருந்தேன். அவ்விலை ஒப்பவில்லை. கூடினால் பத்து இருக்கலாம்.
அவருடைய இரண்டாவது பருப்பு தவறிக் கீழே விழுந்து விட்டது.
தின்பதை நிறுத்தி கண்ணால் தேடியபடி இருந்தார். நானும் அவருக்காக நெடுநேரம் துழாவினேன்.
தோல் இருப்பதால் விடுவாதயில்லை. அக்கொட்டையும் பிள்ளைபோல் ஏமாற்றியது.
என்னுடைய கடைசி அழைப்பு தவறிப் போனது.
8/30 சொல் பெரிது
----------------------
ஒரே நாளில் எவ்வளவு நடந்தேறி விட்டது என தசரத ராமன் எண்ணினான்.
சுழல் முடிவில் பதினான்கு வருடம் வாழ வேண்டிய காட்டின் முன் நிற்கிறான்.
சுமந்திரனையும் திருப்பி அனுப்பிவிட்டால் ஓய்ந்தது.
அப்பாவிற்கு ஏனோ கிரீடம் அன்றே அலுத்துப் போனது.
ஊர் கூடி அரசன் என்றனர். நாளையே முடியேற்றம் .
அறிவுரைகள், கோயில், களிப்பு, விழாக்கள்.
பின்பு அந்த நாடகம்.
வரம் கொடுத்தவர் தைலக் காப்பில் சாகக் கிடக்கிறார்.
இதை தர்மம்,சொல் ,பெற்றோர் கட்டளை என்று தேய்த்து விளக்கி ஆயிற்று.
கடைசியில் இவன் நிறைய உருகுகிறான். ஏதாவது சொல்ல வேண்டும்.
'வசிட்டனுடன் போய் தயரதனை முடிந்தால் எழுப்பு.
பரதனை அன்னையிடம் கோபப்படச் சொல்லாதே. உனக்கும் எனக்கும் பரதனுக்கும் அறம் காப்பது தொழில்.
திரும்பிப் போ.'
தினம் முடிந்த நிம்மதி.
முடிவில்லா கானகம்.
பறவை ஒலிகள், குரங்குகள்.
ஆடையற்ற மார்பில் காலைத் தென்றல் பட்டது.
'அமைச்சரே ! என்னுடைய நாகனவாய்ப் புள்ளையும் , கிளியையும் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றது சீதையின் குரல் திரும்பி.
9/30 செட்டில்மென்ட்
-----------------------
ஹலோ..சார் உங்க தம்பி பேச்சுப்படி நடந்துக்கிடல
தெளிவாச் சொன்னாத் தான் புரியும்
போலீஸ் பஞ்சாயத்துல கை கட்டி தலைய ஆட்டுநாரு...
பணம் வாங்கறத வேணும்னு இழுத்தடிக்கிறாரு. ..
நீங்கதான் அவசரப்பட்டு ஸ்டேஷன் போனீங்க...அவங்க என்ன செய்யப் போறாங்க...
நம்ம ஆளுக தான...
சின்னக் கீறலுக்கு இம்புட்டு தூரம்... அடிதடி இன்ஸ்பெக்டர் வரைக்கும் வந்திருச்சு ...
வெளில வர முடியாத ஜாதிக் கேசா மாத்தினீங்க...
முடிவானபடி அம்பதாயிரத்தை வாங்கிட்டு விஷயத்த க்ளோஸ் பண்ணுங்க...
பழச விடுங்க...எனக்கு சண்டைக்குப் பொழுதில்ல..வசூலுக்குக் கிளம்பிட்டுருக்கேன் ...
பிரதர் கோவக்காரன்...சைக்கோவா ஆயிட்டிருக்கான்... பொஞ்சாதி கூட பேச்சில்ல...தண்ணியில்லாம உறக்கமில்ல...
ஒங்க கிட்டயும் நாலு தடவ போன்ல சொல்லிட்டேன்...
இதை இழுக்கறது நல்லதில்ல…
புரிஞ்சுக்குவீங்கன்னு பாத்தேன்...
நீங்க ரெண்டு பேரும் செட்டில் ஆயிட்டிங்க ...
நேரா சொல்றேன்... என்னைய இன்னும் கவனிக்கல...
...
ஒரு செல்போன் கூடப் பரவாயில்ல...
10/30 - பையளவு ...
---------------------------
பெண்ணை நிறைய கடன் வாங்கி கல்யாணம் பண்ணி வைத்தார்.
ஃபோன் செய்தால் மகளை ஊருக்கு அழைப்பார்.
ரோட்டில் வந்து கடைசி நிமிஷம் ஏதாவது வாங்கிக் கொடுப்பார்.
திடு திப்பென்று பஸ் பிடித்து வீட்டில் நிற்பார்.
மாம்பழங்கள் கொண்டு வருவார். இட்டிலியில் தயிர் ஊற்றி, மாம்பழம் தொட்டுத் தின்பார்.
செல்கையில் ரூபாய் நோட்டுகளை கையில் திணிப்பார்.
ஏதேனும் முடிவைக் கேட்டால், தெரியாததில்ல..பாத்துச் செய்யுங்க என்று விலகுவார் .
எனக்கும் அவளுக்கும் சண்டை வந்தால் , பால்கனிக்குச் சென்று வானத்தைப் பார்ப்பார்.
எதிலும் பெரிய பிடிப்பில்லாதவர் என்றே எண்ணினேன்.
அவருக்கும் ஒரு பற்று இருந்தது.
உள்ளங்கையில் சுருட்டிய காலித் துணிப்பை எந்நேரமும் வைத்திருப்பார். காதுக்குள் அவர் கட்டை விரல்.
நிரப்புவார். அளிப்பார் . மீதம் வைப்பார். துவைப்பார். தொங்க விடுவார். பிள்ளையென கை பிடிப்பார்.
ஆனால் யாருக்கும் அதைத் தர மாட்டார்.
என்றாவது வழியில்லாமல் தயங்கி அவளிடம் மட்டும் தருவார்.
'அடுத்த தடவ மறக்காம திருப்பிக் குடுத்துரு.. என்னம்மா' என்பார்.
அந்தப் பை இறுதியில் இவளிடம் நின்று போனது .
11/30 மலர்தல்
-------------------
நெடுஞ்சாலையில் சீறியபடி வண்டிகள் என்னைக் கடந்து கொண்டிருந்தன.
நீண்ட நேரம் வண்டியை ஓட்டிக் களைத்திருந்தேன்.
டீயை உறிந்து நிமிர்ந்த போது அவர்களைப் பார்த்தேன்.
நான்கு கன்னியாஸ்திரிகள். வந்திருந்த வேனில் கேரள நம்பர் இருந்தது.
மிக வேகமாக ஒருவரை ஒருவர் முந்திச் சென்று கழிப்பறையில் நுழைந்தனர்.
சிரித்தபடியே வெளியே வந்தனர்.
மூன்று பேருக்கு தென்னிந்திய முகம்.
ஒருவருடையது வட கிழக்கு.
அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை என்பதை கவனித்தேன்.
டிரைவருக்காகக் காத்திருந்தார்கள்.
பூவிற்கும் அம்மாள் அவர்களிடம் மல்லிகைச் சரத்தை நீட்டினாள்.
முதல் சிஸ்டர் முழப் பூவை வாங்கி இரண்டாமவர் தலையில் வைத்துப் பார்த்தார்.
எல்லோரும் வரிசையாய் பூச்சூடி படம் எடுத்தனர்.
ஓட்டுநர் தேநீர் குடித்து வந்திருந்தார்.
பணத்தைக் கொடுத்து மலரை எடுத்தபடி திரும்ப வைத்தனர்.
ஒரு சகோதரி மீண்டும் பூக்காரியிடம் வந்தார்.
ஒற்றைப் பூ எடுத்து, முழுதும் நுகர்ந்து, கையில் கொண்டு சென்றார்.
12/30 லிவிங் இன்
--------------------
எலிபோல் கதவின் இடைவெளியில் வீட்டினுள் புகுந்தான்.
'பைனல் வார்னிங்... நீ வேற வீடு பாத்துப் போ ...இல்லை 31ஸ்ட் நான் நிச்சயம் தனியாப் போயிடுவேன்...பாப்பாவ பள்ளிகூடத்துல விட்டுட்டு... '
கடனில் இருக்கும் வீட்டை குழந்தையை வைத்துக் கைப்பற்றலாம் என்பது அவளுக்குத் தெரியும். அவனுக்கென்று எவருமில்லை.
அடுத்த குறி சம்பளம்.
'என்னால பிழைக்க முடியும்...பொண்ணு பைனான்சியலா உன் கடமை.
எப்ப வேணா அவள தாராளமா பார்க்கலாம்... வெளில தெரிய வேண்டியதில்ல ...'
அவனுக்குப் பசித்தது, சமையலறையில் இருக்காது.
குடியே இவளால் வந்தது. அதில் ஏறித்தான் நிற்கிறாள். ஆனால் அங்குதான் அவன் நிம்மதி.
இருவரும் சுரண்டும் புள்ளி.
விவகாரத்து விலை அதிகம் என்று காட்டினான்
'வேலைக்குப் போறென்னு ஊர் சுத்துனா பைசா வராது...
ரீல்ஸ் ஃபேஸ்புக்ன்னு திரியறது சரிப்படாது...'
இன்னும் முறுக்கினாள்.
'எங்க கையெழுத்து போடனும்னு மட்டும் சொல்லு...'
அமைதி.
'நாளேல இருந்து ஹாஸ்டல். மூணு மாசம். வேலை ஜாஸ்தி'
அறைக்கதவை காலால் தள்ளி மூடினாள்.
Comments
Post a Comment