25/30 ஒன்றாய் பலவாய்
---------------------------------------
ஆதிமூலம் பேரில்லாத அந்தக் கடையைத் திறந்தார்.
---------------------------------------
ஆதிமூலம் பேரில்லாத அந்தக் கடையைத் திறந்தார்.
அறுபடை வீட்டின் பிரகார சஷ்டி மண்டபத்தில் போட்டோ அங்காடி.
தோரண வாயில் போல மேலே காவல் நின்ற ஒன்பது தெய்வங்கள்.
நடுவில் பித்தளை செம்பு மூல உருவங்கள்.
சிறிய பெரிய தேய்க்கப்பட்ட விளக்குகள் சுற்றி வரிசையில் மின்னின.
அதே தெய்வம் குழந்தையாய், வீரனாய், மகனாய், துணையாய் ஒளிப்படங்களாய்த் தொங்கியது.
பின் அவைகளே தனியாய் சுவரெங்கும் மீண்டும் இருந்தன .
ஒன்றில் ஒன்றென நான்கு சுவர்களிலும் வெவ்வேறு வண்ணங்களில் பிரதிபலித்தன.
முருகா என்று இரு கை கூப்பி தன்னையே ஒருமுறை சுற்றினார்.
கடைசியாய் ஆலயத்தினுள் எப்பொழுது சென்றார் என்பது அவருக்கு நினைவிருக்காது.
ஒருவர் சன்னிதி உள்ளிருந்து , கடைக்குள் ஏறி நிதானமாக ஒரு வலம் வந்தார்.
உள்ளங்கை அளவான அக்கடவுளை வாங்கி மேல்சட்டைப் பையில் வைத்தபடி வெளியேறினார்.
26/30 கதிர் அரிவாள்
---------------------------
இரண்டு கதிர் அரிவாள்கள் நிலத்தைக் கிளறிக்கொண்டிருந்தன.
நகரின் புழக்கடை. ஊரின் கழிவுகள் கடைசியில் சேரும் இடம்.
அது கறுத்து இன்னும் புகையை விட்டபடி இருந்தது. எரிந்து அப்போதுதான் முடிந்திருக்க வேண்டும்.
அறுவடைக் கொக்கிகளைப் பிடித்திருந்த இரு பாட்டிகளின் உடல்கள் நிமிர்ந்தன.
நேர் நிற்க முடியாமல் வளைந்தபடியே நின்று விட்டன.
மீண்டும் அவை நிலத்தில் கிண்ட ஆரம்பித்தன.
காலி இளநிகள், தம்ளர்கள், நெகிழிப் பைகளை களை போல் புறந்தள்ளின.
பிளாஸ்டிக் பாட்டில்களையும், வெந்து ஓய்ந்த இரும்புகளையும், வயர்களையும் மட்டும் கொத்திச் சேர்த்தன.
கால்கள் அவற்றை நசுக்கித் தட்டி, போத்தீஸ் பைகளில் அடைத்தன.
எரிந்தபின் மீறும் எலும்புத் துண்டுகளைக் கிண்டிப் பிரட்டி ஒன்றொன்றாய்.
எரிந்தபின் மீறும் எலும்புத் துண்டுகளைக் கிண்டிப் பிரட்டி ஒன்றொன்றாய்.
இருவரின் பிக் ஷாப்பரும் கித்தான் சாக்கும் எளிதில் நிரம்பியது.
விடியல் மகளிர் பேருந்து வந்தது. இருவரையும் ஏற்றிச் சென்றது.
27/30 முதல் நாள்
-----------------------
அன்று காலை அந்த மடாலயத்தின் தலைமையேற்க அத்துறவி வந்தார்.
-----------------------
அன்று காலை அந்த மடாலயத்தின் தலைமையேற்க அத்துறவி வந்தார்.
பல வருடங்கள் இதே பள்ளியில் படித்தவர். எல்லாம் படித்துத் தேர்ந்த சிறந்த மாணவர்.
இதை வழி நடத்த இன்று வருகிறார்.
உதவியாளர் பேசினார்.
ஞானகுருவே, தலைவருக்கான அறை உங்களுக்கு ஒருங்கியிருக்கிறது, மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
இவர் அவ்விடத்தைப் புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்தார், நகரவில்லை.
தெளிவாய்ச் சொல்லுங்கள், நான் எங்கு செல்ல வேண்டும்?
குருவே, இங்கு உங்களுக்குத் தெரியாத இடமில்லை
அப்படியா, எனக்குத் தெரியுமா?
இல்லை, நீங்கள் எங்களுடன் விளையாடுகிறீர்கள்
ஆசிரியர் அவர் உள்ளங்கைகளை விரித்துப் புதிதென கவனித்தார். மூச்சை உள்ளிழுத்து காலைக் காற்றை உடலில் அனுபவித்தார்.
விகாரையின் கூரையை, அதன் கீழ் விழும் நிழலை நோக்கினார்.
வினோதம், எனக்கு இன்றுதான் முதல் நாள் எனப் படுகிறது என்றார்.
எதுவும் பேசாமல், போக வேண்டிய இடத்தைத் தாண்டி நடந்தார்.
பள்ளி மணி அடித்தது. பிக்குகள் மௌனமாய் நின்றனர்.
28/30 விருப்பப் பாடல்
-----------------------------
கோடைப் பண்பலை 100.5...வணக்கம்மா... உங்க பேர், ஊர் சொல்லலாமா
-----------------------------
கோடைப் பண்பலை 100.5...வணக்கம்மா... உங்க பேர், ஊர் சொல்லலாமா
தாயி பேரு வெள்ளாளங்கோட்டை ஆவுடயம்மா.. தூத்துக்குடி மாவட்டம்...
சொல்லுங்க அம்மா...இன்னைக்கு வெய்யில்ல இருந்து தப்பிக்க வழிகள் என்னன்னு பேசிட்டுருக்கோம்...
வெள்ளனம் எந்திரிக்கணும்..என்னைக்கும் போல நீராகாரம்... மாடு கன்னுக்குத் தண்ணி காட்டி...வெயிலுக்கு முன்ன காட்டுக்கு போயிரனும்.. பொறகு வந்து வீட்டு வேலய பாக்கணும்...சீலையை தலைக்குப் போட்டுக்குடனும்..காலுக்கு செருப்பு மறக்காம போடனும்...சூடு பிடிச்சா வெள்ளம் நிறய குடிக்கணும்...நிழல்லயே இருந்துக்கிடனும் பாப்பா...
நன்றிங்கம்மா...நல்லாச் சொன்னிங்க....வீட்ல யாரெல்லாம் இருக்கா..
பேரப் புள்ளைகெல்லாம் மெட்ராஸ்ல இருக்கு...லீவுக்கு கூப்புட்டா இப்ப வெயிலுனு சொல்லி வராதுக..மத்த நேரம் படிப்பு..
கோடைக்கு இதமா ஒரு தரம் கொடைக்கானல் வாங்கம்மா...
கண்டிப்பா வரணும்...எருமையும் கன்னயும் என்ன செய்ய தாயீ...
சரி, உங்களோட விருப்பப் பாடல் சொல்லுங்கம்மா
யூத் படத்துல முட்ட கலக்கி போடு கண்ணு...நேத்து பேரன் போன்ல கேட்டான்...
29/30 அக்கரை
---------------------
ஆறு அகன்று விரிந்து ஓடிக்கொண்டு இருந்தது.
அதன் மடிப்புகள் மேல் ஒளியலைகள் மிதந்து சென்றன.
மறுகரை ஆலமரம் மூதன்னை போல் தலை விரித்து அமர்ந்திருந்தது.
ஆற்றைக் கடப்பது எவ்வாறு என்று இளந்துறவி கவலை கொண்டார்.
பாலமோ, படகோ, ஆட்களோ யாருமில்லை.
பல மணி நேரம் ஆகியிருந்தது. இனிமேல் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை..
பாறையில் அமர்ந்து கையால் முகத்தை மூடினார்.
ஆழத்தில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.
நதியில் ஆசிரியர் முகத் தோற்றம்.
ஏன் இப்படி முகம் கவிழ்ந்திருக்கிறாய்? எதற்கு இந்தத் துயரம்?
எப்படிக் கரை சேர்வேன் தெரியவில்லை.
நீ தேடிக்கொண்டிருக்கும் கரையில் தானே எப்போதும் இருக்கிறாய். நேற்று அங்கிருந்து அலைந்தது இதற்காக இல்லையா?.
நீரில் இன்னும் அலைகள் அடித்துக்கொண்டு இருந்தன.
அகலம் இப்போது குறைவாகத் தெரிந்தது.
அவர் விழித்திரையில் பெருமரத்தின் பிம்பம் சலனமற்று நின்று கொண்டிருந்தது.
30/30 முடிவற்ற நிழல்
--------------------------------
தொடுவானைத் தொடுவது அவருடைய லட்சியம்.
தினமும் கதிரவனுடன் விழித்து, விண்ணும் வானும் சந்திக்கும் இடம் நோக்கி நடப்பார்.
வருடங்கள் ஓடின. ஆறுகளும், மலைகளும் முன்னால் தோன்றிப் பின்னால் மறைந்தன.
ஆனால் நடை வேகம் கூடியது. முகத்தில் கோடுகள் தெரிந்தன.
ஒவ்வொரு நாளும் அவர் நிழல் குறுகியது. குறிக்கோளின் எடை குறையவில்லை.
ஓர் மாலை, அத்துவானம் கை எட்டும் தொலைவில் இருந்தது.
பயணம் முடிவிற்கு வருகிறது. வானின் நிசப்தம். கடைசித் துளி பூமி காலின் கீழே.
என்றுமில்லா சோர்வு பற்றியது.
இறுதிக் காலடி என்றெண்ணி ஓரடி எடுத்து வைத்தார்.
அடிவானம் மேலும் சிறிது நகன்றது.
அன்று முதல் முறை, திரும்பிப் பின்புறம் நோக்கினார்.
குன்றுகளும், காடும், நதிகளும்,கண்ணில் பட்டன. உலகம் ஒளியால் நிறைந்திருந்தது.
அதற்கெல்லாம் பின், ஒரு வான எல்லை தெரிந்தது.
Comments
Post a Comment