Translate

சில குறுங்கதைகள் - 1.பச்சோந்தி, 2.% குறி, 3.சலிப்பு

குறுங்கதை - பச்சோந்தி  (1/30)

-------------------------------------------

இரண்டு மாதத்தில் அவனைப் பதினாறு முறை சந்தித்திருக்கிறாள்.


எட்டுத் திரைப் படங்கள்.

நாலு நீண்ட தூரப் பஸ் பயணங்கள்.


மூன்று தடவை கோவில்கள். 

தவறாமல் பூ வாங்கிக் கொடுத்திருக்கிறான். அர்ச்சனையும் உண்டு.


தன்னுடைய அலுவலக வளாகத்தில் கடைசியாய்ப்  பார்த்தது .


ஏப்ரல் 1.

இன்றைய  திட்டம் கப்பன் பார்க்.


சிவப்புக்  கொன்றை மரத்தடிப் புல் தரையில் சட்டைப்  பொத்தானைக் கழற்றிக் காண்பித்தான். 

நெஞ்சில் நேற்று வரையப்பட்ட டாட்டூ. 

செம்மையும் பச்சையுமாய். 

துப்பட்டாவை  வாயில் பொத்தினாள் . அழுகை வரவில்லை. 

ரொம்ப வலித்ததா எனக் கேட்டாள்.


கிளியின் படம் . பக்கத்தில் அவள் பெயர். ரோகிணி.

முன்னரே இருந்த   'ச' காலும்  மூக்கும்  முளைத்து அமைதியான பறவையாய்  நின்றிருந்தது . கண் விடுபட்டிருந்தது.


முந்தைய காதலி சரோ.. அது நடந்தது வேறொரு விருட்சத்தின் அடியில்.

'ஏமாத்தலியே?'  என்று கேட்டு வைத்தாள்.


 2/30    % குறி

--------------------------

என்றும் போல் அதிகாலை கண்ணாடியைத் தேடுவதில் துவங்கியது.

வெளிச்சம் தெரிய தூக்கிப் பிடித்தார்.

  

சூரிய உதயம் முன்னால் பரந்த புல் வெளி.

நடுவில் கிழக்கே பார்த்த மூன்று மாடி வீடு. வெயிலில் பொன்  தகடாய் ஜொலித்தது.

நீல வானில் வெள்ளை மேகங்கள் உறைந்து நின்றன.

வாசலில் அல்லி பூத்த தடாகம். 

அன்னங்கள் நான்கு. இரண்டு நீந்திய படி. 

மற்றது கரையேறி மலர்ச் சோலையில் நடந்தது. 


தண்டலைச் சுற்றி வளையத்தில் வயதான தம்பதிகள் நடை பழகினர்.

மணமான ஜோடிகள் மெது ஓட்டம் சென்றனர்.

நாயைப் பிடித்து ஒருவர்  சாலை கடந்தார்.

ஒரு கார் போனது . மற்றொன்று அதை எதிர்ப் பக்கம் கடந்தது.

தெற்கே யோகப் பயிற்சிக் கூடம். ஒரு அணி கண் மூடி புஜங்காசனம் செய்தது.


கீழே புள்ளி போட்ட எண்கள்,  சதவீதக் குறிகள் , கடன் கொடுக்க வங்கிப் பெயர். 


பேப்பரை மடித்து மேஜையில் வைத்தார். 


என்னங்க காபி இந்தாங்க என்றாள். 

ஒரு வாய் குடித்து, சக்கரை பத்தல என்றார். 


3/30 - சலிப்பு 

-------------------------------

நாற்காலியில் புத்தகம் படிக்கும் போது ஏதோ காலில் கடித்தது.

அவன் கை வலித்த இடத்திற்குச் சென்றது.


உண்ணி.


நசுக்கும் முன் கறையாகும் என நொடி நிறுத்தினான்.

பூச்சி பேசியது.


கொன்று விடு.  அவளைக் காணாமல் அலுத்து விட்டேன். 

இங்கு எங்கோ இருக்க வேண்டும்.

பொழுதுக்கும்  ஊர்ந்தபடி உடல் தேடிப்  பைத்தியமாய் அலைகிறேன். 


ஆனால் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஒரே சமயத்தில் மரணத்தையும்  தேடிச் செல்கிறேன் . 

எனக்கு இச்சை தீர்தலும், இறப்பும் ஓர்  கணத்தில்.

அது அன்றி அழிவில்லை  எனும் வரம்.


நடுவில் தீராப் பசி. உன் மயிர்க் கால்களை அடைந்தேன். 


ஒன்று என்னை காலத்தின் மேல் ஏற்று. இல்லை எங்கேனும் எருமை கண்டு சேர்த்து வை.  

தயங்காதே, இரண்டில் ஒன்றாய் விடுதலை அளி. 


உலகில் ஓயாத தேடுதல் போரடிக்கிறது.


யோசித்தான்.

வி...ர...ல்...அ..ழு


பாவி மீண்டும் கீழே விட்டான். 

படிப்பவன் முடிவெடுக்க மாட்டான் என்று சொல்லி நகர்ந்தது.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2