Translate

சில குறுங்கதைகள் - 1. சோதனை ஓட்டம் 2.ஸ்க்ரோல் பேக் 3.மறுசுழற்சி

4/30 சோதனை ஓட்டம் 

--------------------------

அன்று மாலை ஏழு பேர் அறையின் கிழக்குச் சுவரில் சாய்ந்திருந்தான். 
எல்லோரும் டிகிரி பாஸ். நல்ல வேலையை எதிர்பார்த்திருந்தால், பிழைப்பு?

அவளுக்கு இப்போது அவசரம்.

பைக் டாக்சி அழைத்தாள்.


அவனுக்கு அழைப்பு வந்தது. சிரித்தபடி  ஏற்றுக் கொண்டான்.

சர்ச் ஸ்ட்ரீட் பப் சவாரி . 
பைக்கையும் இரண்டாவது தலைக் கவசத்தையும் எடுத்தான். அந்த யூனிபார்மை அக்கணம் வெறுத்தான்.


இப்போதெல்லாம் எல்லோரையும் அழகென்றே தோன்றுகிறது. 
பெர்ஃப்யூம் வாடை தலையை எட்டியது.
தாறுமாறாய் ஓட்ட எண்ணினான். புகார் செய்வாள்.   


பெரிய  வேலை கிடைத்து விட்டதென்று கற்பனை செய்தான். 
பின்னால் மனைவி. நடுவில் குழந்தை. இருவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள்.

இருவருக்கும் இடையில் தோள்ப்பை வேலி. 
கை  படாமல் இறங்கி UPI செய்து சாலையைக் கடந்தாள். 

 

வீடு திரும்ப இரவு பிடித்தது. 
கொடியில் தொங்கிய பத்து நிமிட டெலிவரி சட்டையில் வேறொன்றை மாட்டினான்.
அடுத்த மணி சரியாய் ஒலித்தது. 
டின்னர் டைம்.

5/30 ஸ்க்ரோல் பேக்  
------------------------------ 
ஒழுங்கற்ற சத்தம் பெருவிசையாய் தலையில் முட்டியது.
நாசியில் ரப்பர் வாடை. இருளற்ற முடிவில்லாத பொன்னொளிக் குகை.

கண் மூடிய அந்தக் கடைசி ஐந்து நொடிகளில், அவன் தன்னையே திரையில் கண்டான்.

தாயின் மார்பில் முலை உறிஞ்சினான்.  
அப்பாவின் தோளில் தூங்கினான்.
அக்காவின் கை பிடித்துத் தளர் நடை நடந்தான்.

விளையாட்டில் எப்போதும்  சண்டை போட்டான்.
பள்ளியில் ஆசிரியர் அடிக்கையில் பிரம்பைப் பிடித்தான்.
இள வயதில் யாரையோ துரத்தி அடித்தான்.
அம்மாவிடம் குரலெடுத்துக் கத்தினான்.

முதல் வேலை,கல்யாண மேடையில் சிரித்தான். 

சிகரெட்டுடன் நள்ளிரவில் ரீல்ஸ் பார்த்தான்.
மனைவி பேசுவதை அடுத்த அறையில் இருந்து கேட்டான்.
பணி  இழந்தான். விவாகரத்து ஆனது. 
நாளெல்லாம் குடித்தான்.

போதையில் வாகனம் ஓட்டினான்,
தூரத்தில் மை இருளில் கண்களில் ஒளி கொண்ட எருமை , பரிவுடன் தன்னை நோக்கி வந்தது.
அன்று முழு அன்புடன் ஓர் உயிரைத் தழுவினான்.

6/30 மறுசுழற்சி
---------------------
காலை ஒன்பதரை.

பிரதம மந்திரி மக்கள் மருந்தகத்தில் தலைவலி மாத்திரை வாங்கினான். 
நீரில்லாமல் ஒன்றை விழுங்கினான். 

டாஸ்மாக் எதிர் குப்பைத் தொட்டியில் மேய்ந்திருந்த இரண்டு மாடுகளை விரட்டினான். 
அவனைத் தெரிந்ததால் அவை எளிதில் அகன்றன.

குவியலைக்  கிளற ஆரம்பித்தான்.
அதற்கென நகராட்சி அலுவலகச் சுவரில்  குச்சி வைத்திருந்தான்.
பாட்டில்களை மட்டும் பொறுக்கி எடுத்தான்.  
பெரும்பாலும் உள்ளங்கையில் அடங்குபவை. 
கழி கிளறியபடி இருந்தது. பெட்டிகளின் ஓசையே வந்தது. 
ஈரமாக இருந்தவற்றை வரிசையாகக் கவிழ்த்து உலர்த்தினான்.  
எண்ணிக்கை போதும் என்று தோன்றியது.

பூங்காவின் கல் பலகையில் படுத்து எழுந்தான்.  

மூன்று தெரு தள்ளிய பழைய காகிதக் கடையை அடைய மணி நேரம் பிடித்தது.
தானாய் போத்தல்களை எடை பார்த்தான்.

தேநீர் அருந்தி பொழுதை இழுத்தான்.
வட்டமாய் அங்கு மீள பன்னிரண்டு ஆனது. 

கவுண்டர் திறந்தது. 
மர நிழல்களில் காத்திருந்தோர் சிலேரே எனினும் சிறு அவசரம்.

நீர் சேர்த்துக் குடித்து மீண்டும் ஒரு குப்பியை அப்பெட்டியில் சேர்த்தான். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2