Translate

சில குறுங்கதைகள் - 5

18/30 புதிய காகக் கதை 

------------------------------------------

அந்த அண்டங்காக்கை மாடிச் சுவரில் அமர்ந்திருந்தது.
தலையை ஆட்டி மூக்கில் இருந்த அப்புழுவை சுவற்றில் தட்டியது. 
மண் உதிர்ந்ததும் விழுங்கியது.

புல்வெளியில் சறுக்கி இறங்கி கூட்டத்தில் சேர்ந்தது. 
கோடை வெயிலேறும் முன் உணவு தேட வேண்டும்.
வெயிலில் பறப்பது ஆகாது.

தத்தத்தத்...தத் கோரைப்புல்லில் ஒன்றும் அகப்படவில்லை.

குப்பைத் தொட்டியில் விழுந்திருந்த உறிகுழாயை தூக்கி நிறுத்தியது.

சிறிதாய்ப் பறந்து தரையில் காய்ந்த குச்சியை அலகால் புரட்டிப் பார்த்தது. 
அருகில் இன்னொரு இலை உதிர்ந்த காம்பின் பக்கக் கிளைகளை வெட்டியது. 
கண் நேர்த்தி சரி என்றதும் தூக்கிப் பறந்தது. 
குழாயில் நளினமாக விட்டு சிக்கியிருந்த பழத்துண்டை வெளியில் எடுத்தது.

தத்தத் ...ஓர் புளியங்கொட்டை.
தாவிச் சென்று ரோட்டில்  போட்டது. 
கார்கள் ஏறி உடையக் காத்திருந்தது. வரவில்லை. 
வேகத்தடைத்  திருகின் இடுக்கில் வைத்துக் கொத்திப் பிளந்தது.

ஒருவர் சாளர நாற்காலியில் அமர்ந்தார். 
சிந்தனை என்று பூச்சிகளாய் தாளில் எழுதிக் கீழே போட்டார். 

காக்கை அதில் மூக்கைத் துடைத்துக் கடந்து சென்றது.



19/30 பட்ட மரம் 

--------------------------

எனக்கு மரம் ஏறத் தெரியாது.

ஆனாலும் அந்தியின் அழகு விடவில்லை. 

ஒரே தாவலில் அடிமரம் கடந்து விட்டேன்.


அது வீழ்ந்து கொண்டு இருப்பதுபோல் நிற்கிறது.
கையில் துளி ஈரம் ஒட்டவில்லை. தண்டுகள் சாம்பலும் கறுப்புமாய் இருந்தன.


உறைந்த மின்னல். 
விண்ணைத் துழவும் ஆயிரம் கைகள். 
மாபெரும் ஒற்றை இலையின் நரம்புகள் மட்டும். 

பார்வைக்காக கிளையொன்றில் வசமாய் அமர்ந்தேன்.


இரண்டு மைனாக்கள். 
பறவைக்கு இவ்வளவு அருகில் அமர்ந்ததே இல்லை.


கிளி ஒன்று வானில் இருந்து இறங்கியது.
தவிட்டுக் குருவிகள் கூட்டமாய் வந்து சால்வையென போர்த்தின.
புறாக் கூட்டம் கடந்தது.

என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
மாலையின் இசை கேட்கவே அங்கிருந்தேன். 


வாய் பிழந்து, விண் பார்த்து, வயிற்றிலும், தொண்டையிலும் எனப் பாடின.
மேலும் எங்கிருந்தோ வந்த குரல்கள் அதில் இணைந்தன. 
பாடல் தீரவேயில்லை. 


பறவைகள் இலைகளாய்த் துளிர்த்தன. இறுகிய எல்லாம் உருகத் தொடங்கின. 


தொலைநோக்கியை கீழே வைத்தேன்.



20/30 ஆமையைப் போல்

-------------------------------------------

ஒரு ஸ்திதப் பிரக்ஞன் வெளி உலகப் பொருட்களின் மீது ஈர்ப்பு வராமல், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி உள்முகமாகத் திருப்ப வேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆமையானது தனது உறுப்புகளை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்வது போல.

குரு கங்கை நதிக்கரையில் குளிரூட்டப்பட்ட அறையில் கீதைப் பாடம் சொல்லியபடி இருந்தார். 

மதிய உணவுக்கு முன் மாணவர்கள் பசி காட்டிக்கொள்ளாமல் கேட்டிருந்தனர்.

ஜன்னலுக்கு வெளியே ஆமை ஆற்றை நோக்கிப் போகிறது.


அது நினைத்தது.


எரிக்கும் வெயிலில் நீரை அடைய பல மணி ஆகலாம்.  
என் மேல் இருப்பது கல் என்பது யாருக்கும் தெரிவதில்லை. கனக்கிறது. சுடுகிறது.
நெருப்பைக்  கட்டி அலைகிறேன். 


கருங்கல்லை விட இந்த ஆற்று மணல் தேவலை. 
காலையும் தலையும் வெளியில் நீட்டினால் எப்போதும் வசதி.


21/30 செயற்கைத் தும்பி 

-------------------------------

கிபி-2036


மொபைல் நம்பரையும் போட்டோவையும் செயலியில் சிங்காரவேலன் பதிவு செய்தார்.
எப்போது கணக்கு இரண்டு இலக்கத்தைத் தாண்டும் என நினைத்தார்.


கண்ணாடியும், கவசமும் அணிந்துகொண்டார். 
ஜன்னலைத் திறந்து கணினியில் 'ஸ்டார்ட்' பொத்தானை அழுத்தினார்.
மேஜையில் இருந்த பத்து வண்டுகளில் வரிசை எண்:78 அதிர ஆரம்பித்தது.
அதன் புள்ளியளவே சிவந்த கண்கள் திறந்தன. 
'லோட் ' என்று காட்டியதும் வெள்ளைப் பவுடரை முதுகை விரித்துக் கொட்டினார்.


ஒரு கணத்தில் சாளரத்தை விட்டு தும்பி வெளியில் பறந்தது.


அக்ஷிதா சிக்கபேட்டையில் துணிக்கடைகளில் காதலனுடன் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். 
அக்கருவண்டு  அவளின் நிழற்படம் அனுப்பிவிட்டு,  சரியென உறுதியாக மரத்தில் பொறுத்திருந்தது.


அவளை எதிர்பார்த்து ஏற்கனவே வீட்டு நுழைவறையின் பூந்தொட்டியில் அமர்ந்திருந்தது.
சாளரத்தைத் திறந்தாள். இல்லத்தில் யாரும் இல்லை.
நாளை என்ற சொல் ஏனோ அவளுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.


பெருமூச்சுடன் திரும்புகையில் சில்வண்டு முகத்தின் முன்னால் ஆடியது .
மூன்று முறை வாய் விரித்து தூளைத் தெளித்தது. வெளியேறித் தப்பித்தது. 


எதுவோ விழுந்ததென்று கண்ணைக் கசக்கினாள். 


சோபாவைத் தேடி உட்கார்ந்ததும் மூச்சடங்கியது.






22/30 தன்னை  மறத்தல் 

-------------------------------

அது பெரிய வீட்டின் கிரகப் பிரவேசம். ஓர் விடுதி அளவு. 

ஒளிப் பாதை ,ஸ்கை பார், நூலகம் பற்றி பெருமையுடன் பேசினார்.  


பழைய பகுதியில் வசித்த நண்பர்கள் சிறு கூட்டமாய்  இருந்தார்கள். சென்று சேர்ந்து கொண்டேன்.
மனைவி குழந்தையுடன் ஒருவர் வந்தார்.
குழந்தையின் பெயர் நினைவில் இருந்தது. என்னைப் பார்த்தும் பயப்படாத குழந்தை.
மரபான முகமன்களை ஆரம்பித்தேன்.
இன்னொரு அம்மாள் இருவருக்கும் இடையில் உள்ளே புகுந்தார்.


'பந்தயம் கட்டுகிறேன். இவருக்கு உங்களைத் தெரியாது. பெயரைச் சொல்லச் சொல்லுங்கள்'
'இல்லை, சொல்லிவிடுவார்'
'ஐநூறு பெட்' என்று எடுத்து வைத்தார்.


என்னுள் எல்லாம் மறக்க ஆரம்பித்தது. பேச்சிடையில், பெயரைத் துழாவினேன்.
தலைக்குள் மின்னதிர்ச்சி, ஆனால் போதவில்லை.
சும்மா சிரித்தபடியே  நின்றேன். என்னை சங்கடத்தில் தள்ளாமல் விடப்போவதில்லை. 


' சேலஞ்ச் பிரதர், கம் ஆன்'
சடாரென வாய் அதுவாய் திறந்தது. 'துஷ்டியோட அப்பா' என்றேன்.

அப்போது என் பெயரும் எனக்கு மறந்திருந்தது. 


23/30 இரு காளை மாடுகளும், ஒரு மிஷினும்

---------------------------------------------------------

கிபி 1900


கொட்டத்தில் கட்டியிருந்த இரண்டு காளை மாடுகள் பேசிக்கொண்டன.

'டெக்னாலஜி போயிட்டிருக்க வேகத்த நினச்சா ரொம்ப பயமா இருக்கு'


'ஏன் இப்படி பயந்து சாவுற...நம்ம வரலாற கொஞ்சம் யோசிச்சுப்  பாரு..
முதல்ல கமலையும் கழுத்துமா, உழவு மாடா வயக்காட்ட சுத்தி வந்தோம்...
வண்டில நுகத்த மாட்டி ஊரெல்லாம் சுத்தினோம்...நீராவி என்ஜின் வந்துச்சு. 
அதனால் ட்ரெயின் விட்டாங்க... அப்ப இதே தான் சொன்ன..நாம பொழப்பு நடக்காமயா போச்சு..
நமக்கு வேல சுழுவாச்சா இல்லையா...பாதிப்பேர் ரயில் ஏறிப் போவலயா..'


'இப்போ மோட்டார் கார் ஒன்னு வருதாமே..

எல்லாரும் காரு பஸ் ஏறினா நம்மள சோறு போட்டு வளப்பங்களா..எனக்கும் உனக்கும் வேலை இருக்குமா '


'தொழில் புரட்சின்னா புது வேலைகள் பிறக்கும். நம்மால கற்பனை பண்ணிப் பாக்க முடியாது... 

அது தானா நடக்கும்...கவுர்மெண்ட் பாத்துக்கும்..வீணாப்  புலம்பாத...நல்ல எதிர்காலம் உண்டு'


24/30 இருளின் கண்கள் 

--------------------------------

மின்சாரம் அறுந்ததும் வாய்ப்பென மொட்டை மாடியில் ஏறினேன். 

வானம் கடல். கரை பூமி.வெளிச்சம் அலை.


அடிவானம் விளிம்புகளில் ஒளியைக் கசிய விட்டிருந்தது.
வழி தவறிய கொக்கு நடுவில் பறந்து கடந்தது. 
விமானமொன்று ஒற்றை ஒளியை உமிழ்ந்தபடி நகர்ந்தது. 


வெள்ளைக் காகிதப் பூக்கள் பல நூறு வெண் நாவுகள்.
பொன்னென தனிக்  கொன்றை ஒளிர்ந்தது. மறுகணம் மரமே பொன்னொளி கொண்டது.


தொலைவில் அடுக்கு மாடிகளில் ஒளிச் சதுரங்கள்.
வீடுகள் மரங்களுக்கிடையில் பதுங்கிக் கிடந்தன. கை விளக்கு கொண்டு காரொன்று எதையோ தேடி மறைந்தது.

சாலையின் வெள்ளைக்கோடுகள் வழியே என் கண்கள்  தெருமுனைக்கு நகர்ந்தன.


இரண்டு சுடர் உருண்டைகள் ஒன்றாய்த்  தரையில் மிதந்து வந்தன.
பின்னால் திசைகாட்டியென சிறிய வளைந்த கம்பி எழுந்து அசைந்தது.


அதன் வாயில் விரல் அளவு  ஒரு உடல். வில்லென வளைந்து தொங்கியது. 
நாண் அறுந்து அளைந்தது.

அதிலும் விழிகள்.

அந்த நொடி அது அணைந்து மீண்டும் எரிந்தது.

 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2