Translate

சில குறுங்கதைகள் - 4

13/30 ரோபோட்  3.0 (2034)

-------------------------------------

பாலசந்தர் v2 மென்பொருளே பெரும்பாலான தமிழ்ப் படங்களை இன்று இயக்குகிறது.

சன் நிறுவனம் நம் மொழிக்கான கட்டமைப்பு நுண் செயலியை வடிவமைத்திருக்கிறது. 


இப்படமும் அப்படித்தான்.


இயக்குநர், கதை, திரைக்கதை, நடிகர்கள்  எல்லாமும் பெயருக்கு.

கால்ஷீட், புரொடக்ஷன் பிரச்சினைகள் அடியோடு இல்லை. திரையுலகில் கலங்கிப் போயிருக்கிறார்கள்.

பழைய சினிமாக்கள் பார்த்து நிரலியைப் பழக்கி விடுகிறார்கள். எந்தப் படமும் உலகப் படமாக மாறுகிறது.


ரோபோட் 3.0 , அண்ணாமலை கோபம், பாட்சா ஸ்டைல் , எந்திரன் தொழில்நுட்பம்  சேர்த்த கலவை.

சமூக வலைத்தளக் காணொளிகள், பிரபலங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றைக்  கச்சிதமாய் இணைக்கிறது.

கதாநாயகியின் உச்சரிப்பும் பிழையுடன் அசலாக வருகிறது.

வேலை செய்வது AI ஏஜெண்டுகள். 


வசூல் 3000 கோடி, காதல் 50% , சென்டிமென்ட் 15%, சமுதாய நல்லிணக்கம் 10% என்று உள்ளிட்டால் போதும்.

மொத்த சினிமா வீடியோ கோப்பாக வெளி வரும். 


நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் சூப்பர் ஸ்டாரும் , ஹீரோயினும், நிச்சயமாய் நடித்தது போல் பேசுவார்கள்.

பேக் ஸ்டேஜ் வீடியோக்களும் திரையிடப்படும். 


ரசிகர்களுக்காக அவர் மௌனம் காக்கிறார்.


14/30  மெக்கானிக் குழந்தை

-------------------------------------

ஸ்கூட்டரை ஸ்டாண்ட் செய்ததும் மூன்று முகங்கள் என்னைக் கவனித்தன.

நாற்காலியில் முதலாளி. பைக்குகள் நடுவில் வேலையாயிருந்த முக்கிய மெக்கானிக். 

பெட்டியைத் தேடியபடி நிமிர்ந்த சிறிய தலை.


கழன்று கிடந்த சக்கரங்கள், சிதறிய ஸ்பானர்கள், எழுந்தபடி இருந்த இரும்பின் ஒலி. 

இருள் படர்ந்த தரை. அதைக் கடித்து மென்றபடி வெய்யில்.


பின் பார்க்கும் கண்ணாடி சரி செய்ய வேண்டும்.  

கேட்டதும் எஜமானுக்கு ஆர்வம் போய்விட்டது. 

கண்ணால் பொடியனை அனுப்பினார்.


அதிருப்தியில் திருகியை எறிந்தான். பஞ்சாய்க் கீழே விழுந்தது.

பெட்டியை உதைத்து என்னிடம் வந்தான்.


தளவாடத்தில் இருந்து குறடுடன் திரும்பினான்.


வண்டிச் சாவி கேட்டு , இருக்கையில் ஏறி முழுதுமாய் அமர்ந்தான். 

அணைந்த வண்டியை முறுக்கினான். திருக்கக்  கை பிடித்துக் கொள்ளச் சொன்னான்.

ஆடி முகத்துக்கு நேராய் வந்ததும் தலையைச் சீவினான். 

எல்லாம் ஓகே என்றான். 

கூலி வேண்டாம் என மறுத்தான்.


நேற்று முறுக்கிய திருகாணி இன்று மீண்டும் நெகிழ்ந்து விட்டது.

சிறு பள்ளமும் அவன் பெயரைச் சொல்கிறது.


15/30 பிணி நிழல் 

----------------------

வீட்டில் நுழைந்ததும் நோயின் வாடை முகத்தில் அறைந்தது.

மூலையில் விடப்பட்ட துணியின் மணம். வாயின் நாற்றம். வேர்வை காய்ந்த உடல்களின் வாசம்.

அனைத்திலும் படர்ந்திருந்த அமிர்தாஞ்சன்.


சுவரோர சோபாவில் கண்மூடிப் படுத்திருந்தார். ரவிக்கையில் உப்பு படம் வரைந்திருந்தது. 


'உங்க இடது கால் அதுவா ஆடுது'

'இல்ல...நாந்தான் ஆட்டறேன்' 


மருமகள் நீர் கொடுத்தார். 'நேத்துலேர்ந்து மாமி அனத்தல் அதிகம்' -  அவருடைய அம்மா. 


'எங்க வலிக்குது ' என்றேன்.

'சொல்லத் தெரியலேயே...இன்னிக்குப் பரவால்ல...புரள முடியல்ல...கீழ விழுந்திருக்கப்பிடாது..'


இமைகள் மூடின. வலி விழித்தது. 

மீண்டும் இடப்பாதம் நடுங்கியதைக்  கவனித்தேன்.


'சாப்ட்டா உடனே வாந்தியெடுக்கறாங்க...' வீட்டுப் பெண்.

'அதெல்லாம் இல்லியே'

'இவர் வர முன்ன எடுத்தீங்களே...சொன்னதையே சொல்றீங்க' 

வாங்கிப் போயிருந்த மிச்சரை பெரியவர்கள் உண்டார்கள்.

பையன் வேலையிலிருந்து வந்தார். ஐபிஎல் ஆரம்பித்தது.


'ஆஸ்பத்திரியில காட்டினா நல்லது'

'நாளைக்கு வேல...நாளன்னிக்குப்  போனும்'


வர்ணனையில் ஒரு சிக்ஸர். 

அவர் கணுக்கால் இன்னும் ஆடுகிறது. 


'சித்தைக் கண்ண மூட ஆகல' என்றார்.


16/30 கத்தி முனை 

---------------------

டாக்சி ஏறும்போது அலைபேசியில் மூன்று மணி மீட்டிங் அழைப்பு முளைத்தது.

அலுவலகத்தில் அந்த மாதப் பிறந்த நாள் கொண்டாட்டம். 

's**t' என தலையில் அடித்தாள். வீட்டிலிருக்க மனமில்லை. 


வரிசையில் பெண் பெயர் தேடினாள். காணவில்லை. 

இம்முறை கோபத்தில் பல்லைக் கடித்தாள்.


ஐம்பது பேரும் உணவுக் கூடத்தில் கூடினார்கள்.

மேஜையில் சமோசா அடைக்கப்பட்ட பெட்டிகள் அடுக்கி இருந்தன.

கோக், பெப்சி பாட்டில்கள் கொக்குகள் போல நின்றிருந்தன.


மேலாளர் பெயர்களை வாசிக்க ஹீரோக்கள் முன்னால் வந்தனர்.

பெர்த்டே பம்ப் என்று அதில் இளையவனை சிலர் புட்டத்தில் செல்லமாய் அடித்தனர்.


வாழ்த்துப் பாடலை எல்லோருக்கும் மொத்தமாய்ப் பாடினார்கள்.

கைகள் கோர்த்து இனிப்பை வெட்டினர்.

கிரீமை பூசி விளையாடினர்.


துண்டுகளை யாரவது எடுத்துத் தட்டில் பரிமாற வேண்டும். 


ஒரு நிமிடம் ஆழ்ந்த மௌனம்.


ஆண்கள் தலை கவிழ்ந்து தரை பார்த்தனர். சில காலடி ஓசைகள்.

தலைவர் பெண்களைப் பார்த்தார்.


இன்று வெட்டிப் பகிர்ந்தளிக்க வேண்டியது அவள்.

புன்னகைத்து மேஜை முன் வந்தாள்.

கத்தியில் தன் தோற்றம் தெரிந்தது. 

சிரிப்பில்லை.


17/30 சிலந்தி வலை   

--------------------------

அந்த வலை காலைச் சூரியனில் வெள்ளைப் பட்டென மிளிர்ந்தது .

உள்ளே இரண்டு சிலந்திகள். ஒன்றில்  நாலு கால்கள். இன்னொன்றில் எட்டு.


பெரியது சிறியதை எப்போதும் துரத்தியது. 

விளையாட்டில்லை.சற்றும் ஓய்வில்லை. 

விரட்டுவது ஓய்ந்தால்  இது ஒரு மூலையில் நின்று கொள்ளும்.


உணவும் கண்ணியில் மாட்டினால் , எதிரி பார்க்கத் தவறினால் உண்டு. 


அன்று துரத்தும்போது விந்தையாக ஒன்று நிகழ்ந்தது.

வருடத்திற்கெல்லாம் சேர்த்து ஒரே நாளில் பெய்யும் மழை போல, அதன் தாள்கள் பல்கிப் பெருகின. 

பதினாறு, முப்பத்திரண்டு, ... ஆயிரத்து இருபத்திநான்கு , காலடிகள் பெரிதாய்க் கேட்டன.


தன் கால்களை எண்ணிப் பார்த்தது. எண்ணிக்கை மாறவில்லை. 


பயத்தில் குறுக்கிலும் நெடுக்கிலும் பொழுதெல்லாம் மூச்சு வாங்க ஓடியது. 

நிறுத்தினால் எதுவும் உத்திரவாதமில்லை. 

தலை கனத்தது. 


ஓர் கணம் நின்றது. இனி ஓடப் போவதில்லை.

வலைக்கு வெளியே உலகத்தில் குதித்தது.  


தூங்கியவன் விழித்தான் . 


போனில் இன்றும் வேகமாய் ஓடச் சொல்லி  குறுஞ்செய்தி வந்திருந்தது.


Mr.கிளாட்  - திறன் மேம்படுத்தல்.

very excited என்று பதில் அனுப்பினான்.

 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2